வன்முறைக்கு காரணம்
Page 1 of 1
வன்முறைக்கு காரணம்
எல்லா குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாக பிறக்கின்றன என்பதைவிட, எல்லாக் குழந்தைகளும் குழந்தைகளாக பிறக்கின்றன என்பதுதான் உண்மை. ஒன்றும் அறியாத பச்சை மண் போன்ற மனநிலையில் பிறக்கும் நமது குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் எதைக் கொடுக்கிறோமோ குழந்தைகள் அதை ஏற்றுக்கொண்டு அதுவாகவே ஆகிப் போகிறார்கள்.
நாம் அன்பானவர்களாகவும், பண்பானவர்களாகவும் வாழும்போது அன்பும், பண்பும் குழந்தைகளுக்கு நம்மால் ஊட்டப்படுகிறது. நாம் குழந்தைகள் முன்னால் சண்டையிட்டால், அவர்களுக்கு வன்முறை உணர்வு வந்துவிடும் என பயந்து, கணவன்- மனைவி கருத்துவேறுபாடு இருந்தால்கூட அதை குழந்தைகளின் கண்களில்படாத அளவுக்கு பார்த்துக்கொள்கிறோம்.
குழந்தைகளிடம் வன்முறை எண்ணம் வந்துவிடக்கூடாது என்று அவ்வளவு கவனம் எடுத்துக்கொள்ளும் நாம், விஷம் போல் அவர்கள் மனதில் ஏறிக்கொண்டிருக்கும் ஒரு வன்மத்தை உணர்கிறோமா இல்லையா?! கார்ட்டூன் சேனல்களை குழந்தைகள் விரும்பிபார்க்கின்றன. அதில் பல வன்முறைக் களமாக உள்ளன. குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு ஏற, நாம் வீட்டிற்குள்ளே களம் அமைத்துக்கொடுக்கிறோம்.
குழந்தைகள் அழுதாலோ, அடம்பிடித்தாலோ உடனே `அழாதே கார்ட்டூன் சேனலை போட்டுத்தருகிறேன்.. பார்த்துக் கொண்டிரு..' என்று சொல்கிறோம். அதை பார்த்துக்கொண்டே குழந்தைகள் சாப்பிட அனுமதிக்கிறோம். அதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு சாப்பாடு ஊட்டுகிறோம். குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ, எதை கேட்கிறார்களோ அந்த `தகவல்கள்' அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த தாக்கத்தின் அடிப்படையிலே அவர்கள் மனதில் எண்ணங்கள் உருவாகும். அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்தி, அதையே தன் பழக்கம் ஆக்கிவிடுவார்கள். பின்பு அதை தங்கள் நிஜவாழ்க்கையில் நடத்திக்காட்ட விரும்புவார்கள். இன்று குழந்தைகள் பார்க்கும் காட்சிகளில் வன்முறை மட்டும் இல்லை.
சதி, உறவுச் சிக்கல்கள், நம்பிக்கைத் துரோகம் போன்றவைகளும் நிறைந்திருக்கின்றன. இந்த உலகம் மோசமானது- சமுதாயம் சிக்கலானது- உறவினர்கள் நம்பக்கூடாதவர்கள்- உடன்பிறப்புகளும் ஏமாற்றுவார்கள்- பெற்றோர்கள் ஒருதலைப்பட்சமானவர்கள்- உண்மை, நேர்மை, நியாயத்திற்கு மதிப்பு கிடையாது என்பன போன்ற எதிர்மறையான எண்ணங்களை குழந்தைகளின் மனதில் திணிக்கும் விதத்திலான காட்சிகளை பார்க்கும் சூழலை குழந்தைகளுக்கு நாம் உருவாக்கிக்கொடுக்கிறோம்.
இந்த மாதிரியான காட்சிகளை பார்க்கும் குழந்தைகள் இந்த உலகம் மோசமானது- சமுதாயம் சிக்கலானது- பெற்றோர்கள் நம்பக்கூடாதவர்கள்- உறவினர்கள் பிரச்சினைக்குரியவர்கள்- நீதி, நியாய சிந்தனைகள் பயனற்றது- எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்று நம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.
இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் குழந்தைகளுடன்தான் பார்க்கிறோம். நம்மாலே ஜீரணிக்க முடியாத காட்சிகளை, அவர்களும் பார்க்கிறார்கள். `அடிக்கடி டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்காதே அதனால் உனது கண்கள் கெட்டுவிடும்' என்று சொல்லும் நாம், அந்த காட்சிகளால் குழந்தைகளின் மனது கெடுவதற்கு (நம்மை அறியாமலே) காரணமாகிறோம்.
இன்று நமது சிந்தனை எப்படி இருந்துகொண்டிருக்கிறது. நினைத்துப் பாருங்கள். நெஞ்சம் கனக்கும். எந்தெந்த விஷயங்கள் சமூகத்தில் வெட்கக்கேடானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த விஷயங்களை டி.வி.யில் பார்த்துவிட்டு பொது இடங்களில் விவாதம் செய்கிறோம்.
`அது ஒன்றும் தப்பில்லை' என்று மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறோம். தவறான விஷயங்களை சரி என்று பள்ளி, கல்லூரி, பொது இடம், அலுவலகம் என்று எல்லா மட்டத்திலும் பேசிப்பேசி, நம்மை சுற்றியிருக்கும் வாயு மண்டலத்தில் எதிர்மறையான எண்ண அதிர்வலைகளை பரப்புகிறோம். ஒருசில டெலிவிஷன் சேனல்களில் நடனப்போட்டி நடக்கிறது.
இளைஞர்களான நடிகர்- நடிகைகள் சினிமாவில் ஆடிய நடனத்திற்கு, டெலிவிஷனில் சிறுமிகள் ஆடுகிறார்கள். பெரிய நடிகைகளைப் போன்று அரைகுறை ஆடைகள் அணிந்து, பெரிய நடிகைகளைப் போன்ற அங்க அசைவுகள் நிகழ்த்தி, அதுபோன்ற சிணுக்கல்களை வெளிப்படுத்தி குழந்தைகள் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தை அம்மாக்களாகிய நாம் பார்த்து, கைதட்டி மகிழ்கிறோம்.
அந்த ஆடைக்கு, அந்த ஆட்டத்திற்கு, அந்த அங்க அசைவுக்கு குழந்தைக்கு அந்த இடத்தில் பாராட்டு தெரிவிக்கும்போது நமது குழந்தைகள், `அது சரியானதுதான்' என்று, அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுகின்றன. அதே எண்ணத்தோடு வளர்ந்து வரும் மகள், வயதுக்கு வருகிறாள். கல்லூரிக்கு செல்கிறாள்.
அன்று பாராட்டு கிடைத்ததே அதுபோன்ற உடையை, அது போன்ற உடல் வெளிப்பாட்டை கடைபிடிக்கும்போது, `இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?' என்று, துள்ளிக்குதித்து மகளை குறை சொல்கிறோம். அவளை குழந்தை பருவத்தில் இருந்தே சரியான முறையில் ஆடை உடுத்தி, சரியான முறையில் ஆட பழக்கி இருக்கலாமே! அன்று அந்த குழந்தையை குற்றம் செய்ய தூண்டிவிட்டு, இன்று அதையே குறையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோமா, இது நம் தவறுதானே?! எந்த ஒரு செயலையும் நாம் ஆரம்பிக்கும்போது அது பிரச்சினையாகத் தெரியாது.
அதையே திரும்பத் திரும்ப செய்யும்போது அது நமது பழக்கமாகிறது. அந்த பழக்கத்தை தொடராமல் இருந்தால் நாம் அசவுகரியமாக உணருவோம். அப்போதே நாம் உணர்ந்துவிடலாம் நாம் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்று! சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி உருவாகிறது என்று நினைத்துப் பாருங்கள். முதலில் தயங்கித் தயங்கி நண்பர்களுடன் ஆரம்பமாகிறது.
பின்பு எப்போதெல்லாம் நண்பர்களுடன் இருப்போமோ அப்போதெல்லாம் தொடர்கிறது. பின்பு எல்லா நேரமும் தொடர்ந்து, சிகரெட் பிடிக்காமலே இருக்கமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். பிரச்சினைகளில் இருந்து சிறிது நேரம் விடுபட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறோம். சிலருக்கு காபி குடிப்பது, சிலருக்கு டீ குடிப்பது, சிலருக்கு போதை பொருட்கள் சாப்பிடுவது...
இதே போன்றதுதான் ஷாப்பிங், சினிமா, டி.வி.எல்லாம்! அரை மணிநேர டெலிவிஷன் நிகழ்ச்சி என்றாலும், இரண்டரை மணி நேர சினிமா என்றாலும் அதில் மூழ்கிவிடாமல் ஒரு பார்வையாளராக மட்டும் இருங்கள். இடை இடையே உங்கள் மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம். நாம் பொழுதுபோக்குக்காக செய்யும் விஷயங்கள் எப்போதும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கவேண்டும்.
அதுவே வாழ்க்கையாகிவிடக்கூடாது. எல்லோருக்குமே துக்கம், மகிழ்ச்சி இந்த இரண்டும்தான் பிடிக்கிறது. இவை ஏன் பிடிக்கிறது என்பதற்கு நம் உடல்தான் காரணம். உடலில் துக்கம் சார்ந்த உணர்வுகள் ஏற்படும்போதும்- உடலுக்குள் மகிழ்ச்சி சார்ந்த உணர்வுகள் ஏற்படும்போதும் அது அதற்கென்று இருக்கும் ஹார்மோன்கள் சுரக்கின்றன.
அதில் நாம் எல்லைமீறாமல் கவனமாக இல்லாவிட்டால், அந்தந்த ஹார்மோன்கள் சுரந்தாகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நம் உடல் அடிமையாகிவிடும். அப்போது தன் தேவைக்காக படம் மூலமோ, சினிமா மூலமோ, டெலிவிஷன் தொடர்கள் மூலமோ உடல் தூண்டப்பட்டு, மனம் அந்த உணர்வை அனுபவித்து, அந்த ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. அதனால்தான் சிலருக்கு அழுகை படம் பிடிக்கும்.
சிலருக்கு காமெடி தொடர் பிடிக்கும். சிலர் வெட்டுகுத்து காட்சிகளைப் பார்த்து திருப்தியடைவார்கள். சிலருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் அந்த திருப்தி உருவாகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அரை மணி நேரம் உங்களை அழவைத்த டெலிவிஷன் தொடரை, கைக்குட்டையை நனையவைத்த தொடரை, `அருமையான தொடர்' என்று பாராட்டுகிறீர்கள்.
உங்களை அழவைத்தது எப்படி நல்லதாக இருக்கும்? உங்களை அழவைத்தது எப்படி உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அழும்போது அதற்குரிய ஹார்மோன் சுரந்தது. அது உங்களை அந்த நேரத்திற்கு திருப்தியாக்கிவிடுகிறது. அதுதான் உண்மை. தினமும் அந்த ஹார்மோன் சுரப்பதற்காக நீங்கள் அழுகை தொடர் நேரம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கத் தொடங்குவீர்கள்.
அந்த நேரத்தில் கரண்ட் கட் என்றால் உடனே உணர்ச்சிவசப்பட்டு மின்சார இலாகாவை திட்டுவீர்கள். நீங்கள் குறிப்பிட்ட தொடரை பார்க்க ஆரம்பித்ததும் உங்கள் அலுவலகம், வீடு, குழந்தைகள், உணவு போன்ற எல்லா நினைவுகளும் மறந்துபோகும். உங்கள் மனம் அமைதியாகி, அந்த காட்சிகளில் லயிக்கும். முதலில் பார்வையாளராக இருந்த நீங்கள் பின்பு தீர்ப்பு சொல்பவராக மாறுவீர்கள்.
`அவள் அப்படி செய்திருக்கக்கூடாது. இவள் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாள்' என்றெல்லாம் தொடருக்குள்ளே மூழ்கி பேசுவீர்கள். அடுத்த கட்டத்தில் நீங்களும், அந்த காதபாத்திரங்களாக மாறிவிடுவீர்கள். அந்த கதாபாத்திரம் அழுதால் நீங்களும் அழுவீர்கள். அந்த கதாபாத்திரம் எத்தகைய உணர்வுகளை அனுபவிக்கிறதோ, அதே உணர்வுகளை நீங்களும் அனுபவிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
அப்போது நமது சிந்திக்கும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்றவை நம்மிடம் குறைந்துவிடும். சில நேரங்களில் இந்த திறன் இல்லாமலும் போய்விடும். அந்த நிலைக்கு சென்றுவிடாமல் நம்மையும், நம் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்வோம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மலட்டுத்தன்மைக்குக் காரணம்
» மலட்டுத்தன்மைக்கு காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
» மலட்டுத்தன்மைக்கு காரணம்
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» தும்மலுக்கு காரணம்
» தும்மலுக்கு காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum