தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து

Go down

விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து Empty விஜய், சூர்யா போல புகழ் பெற வேண்டும் – பேரனுக்கு கருணாநிதி வாழ்த்து

Post  ishwarya Thu Apr 25, 2013 1:52 pm

முதல்வர் கருணாநிதி யின் இளைய மகன் மு.க.தமிழரசு. இவரது மகன் அருள் நிதி ஹீரோவாகியுள்ளார். தமிழரசின் மோகனா மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வம்சம் படம் மூலம் நாயகனாகியுள்ளார் அருள்நிதி.

பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சுனைனா அருள் நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வம்சம் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். விஜய், சூர்யா ஆகியோர் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். டிரெய்லரை இயக்குநர் சசிக்குமார், வாலி ஆகியோர் பெற்றனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியாவது…

நான்கு நாட்கள் தொடர்ந்து கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே பேசிவிட்டு, இன்று இந்த விழாவிலே நீண்ட நேரம் பேச இயலாத நிலை இருந்தாலும்கூட, தமிழரசைப் பற்றி, தமிழரசின் மகனைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பில், நான் உங்களையெல்லாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. காரணம், யாரும் அதைப் போட்டுக் காட்டவில்லை. “படத்தை போட்டுக் காட்டினால், ஏதாவது குறை சொல்வாரோ? அதை நாம் நிவர்த்தி செய்யாவிட்டால், வருத்தப்படுவாரோ?” என்ற எண்ணம் நடித்தவருக்கு, படம் எடுத்தவருக்கு, இந்தப் படத்திற்காக உழைத்தவர்களுக்கு ஏற்படும் என்று எனக்குத் தெரியும்.

என்னைப் பொறுத்தவரையில், வயது 86. நான் எழுதிக் கொண்டிருக்கிற படம் 76. 76-வது படத்திற்கு நான் இப்போது திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்று, “இளைஞன்”; மற்றொன்று, “பொன்னர்-சங்கர்”. இந்தப் படம் வெற்றிகரமாக; தயாரிப்பாளர்களுக்கு, பங்கு பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கின்றது. எப்படியென்றால், நான் இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ஏற்கனவே எடுத்த திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றேன். அவரை எனக்கு தெரியாதே தவிர, அந்த படத்தின் மூலமாக எனக்கு அறிமுகமானவர் அவர். நான் கேட்டேன் – “யார் இவர்? நன்றாகப் படம் எடுத்திருக்கிறாரே?”- என்றெல்லாம் கேட்டு, அவரைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கின்றேன். அவர் இந்த படத்தின் மூலமாக எதிர்காலத்திலே கலை உலகத்தில் புகழ் பெறக்கூடிய ஒருவராக விளங்குவார் என்பது மாத்திரமல்ல; அவர் பேசியதைப் பார்த்தால் ஒரு நீண்ட நேரப் பேச்சாளராகவும் வருவார் என்று நான் கருதுகின்றேன்.

உண்மையிலேயே, இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடன அமைப்பாளர்கள், பெரிய நடிகர்கள் அதிக நேரம் பேசுவதில்லை. ஆனால், இங்கே நம்முடைய பாண்டிராஜ் நீண்ட நேரம் பேசி, சில விளக்கங்களைத் தந்ததற்கு என்ன காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. முதல் முயற்சி; இரண்டாவது முயற்சி – இவற்றில் கிடைக்கின்ற வெற்றியின் காரணமாக, அந்த வெற்றியிலே கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்காகத்தான் அவர் சற்று அதிகமாகப் பேசினார்.

நம்முடைய வாலி இங்கே பேசும்போது – “தமிழுக்கு ஆற்றுகின்ற தொண்டில், இதுவொரு பகுதி” என்று குறிப்பிட்டார். தமிழ்த் தொண்டு ஆற்றுவதற்குத்தான் நானும், வாலியும், மற்றும் தமிழ் உலகத்திலே இருக்கின்ற பல புலவர் பெருமக்களும், ஆன்றோரும், சான்றோரும், பெரியவர்களும், கோவையிலே கூடி, மிகப் பிரம்மாண்டமான, ஆர்வம் மிகுந்த, ஆற்றல் வாய்ந்த, அனைவரும் போற்றக்கூடிய, அனைத்து நாடுகளிலே உள்ளவர்களெல்லாம் மகிழக்கூடிய ஒரு மாநாட்டை- தமிழ்த் தாய் மேலும் வலுப்பெற – தமிழ்த் தாயின் புகழ்க் கிரீடத்திலே இன்னும் பல மணி முத்துக்களை பதிய வைக்கின்ற வகையில், அந்த மாநாட்டை நடத்தியிருக்கின்றோம்.

மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்தபடியாக நான் கலந்துகொள்கின்ற நிகழ்ச்சி; இந்த “வம்சம்” பட இசை வெளியீட்டு விழாதான். “வம்சம்” என்று பெயர் வைத்து, அதிலே என்னுடைய மகன் தமிழரசுவினுடைய மகன் அருள்நிதி – என்னுடைய பேரன் நடித்தால் – “ஏற்கனவே நம்முடைய அரசியல் பகைவர்கள் – குடும்பம், கோத்திரம் இவற்றைப் பற்றியெல்லாம், பேசிக் கொண்டிருக்கும்போது, இதுவும் “வம்சம்” என்ற பெயரிலே வருமேயானால், “கருணாநிதி வம்ச”த்தினுடைய படங்களிலே ஒன்று என்று அவர்கள் சொல்லக்கூடும். எனவே, “வம்சம்” என்ற பெயரைக் கொஞ்சம் மாற்றக்கூடாதா?” என்று நான் அவர்களைக் கேட்டபோது, அதை மாற்றுவதற்கு இயலாத காரணங்களை இயக்குநரும், முக்கிய நடிகரும் என்னிடத்திலே எடுத்துச் சொன்னார்கள்.

ஒரு படத்தினுடைய பெயர் – அந்த படத்தினுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடுவதுண்டு. இங்கே வீற்றிருக்கின்ற நம்முடைய விஜய், சூர்யா இருவரும் நடித்த படங்கள் இன்றைக்கும் நம்முடைய நினைவுகளில், நெஞ்சங்களில் மறக்கமுடியாத காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். அதற்குக் காரணம்-”வம்சம்” அப்படி. நம்முடைய சிவக்குமாருடைய குடும்பம் அந்த “வம்சம்”. அதைப்போலவே, இயக்குநர் சந்திரசேகருடைய “வம்சம்” – இந்த இரண்டு வம்சங்களும் எனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகின்றீர்கள்.

“வம்சம்” என்பதிலே ஒரு எழுத்தைச் சேர்த்தால், இதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றார்களே, இப்படிப்பட்ட படங்களை வெளியிலேயிருந்து கேலி செய்து கொண்டிருக்கிறார்களே – இவர்களையெல்லாம் “துவம்சம்” செய்ய வேண்டும் என்ற கோபம் வரலாம். அவர்களையும் நம் “வசம்” ஆக்கவேண்டும் – “வம்சம்” என்பதிலே உள்ள “ம்”-யை எடுத்துவிட்டு, “வசம்” ஆக்கவேண்டும். “வம்சத்திலே” – “ம்” இல்லையென்றால், “வசம்” என்றாகும். அவர்களையும் நம் “வசம்” ஆக்கவேண்டும். எப்பொழுதுமே நம் கருத்துக்கு எதிர்ப்பாளர்களை, நம்முடைய கொள்கைக்கு எதிர்ப்பாளர்களை, நம்முடைய லட்சியங்களுக்கு எதிர்ப்பாளர்களை “துவம்சம்” செய்வது என்பது சாதாரண விஷயம். அதை யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால், அவர்களை “வச”ப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.

நாங்களெல்லாம் அண்ணாவினுடைய வழியிலே வந்தவர்கள் என்ற காரணத்தால், மற்றவர்களை வசப்படுத்துவது எப்படி- நம்முடைய கொள்கைக்கு அவர்களை ஈர்ப்பது எப்படி – நம்முடைய லட்சியத்திற்கு அவர்களை ஈர்ப்பது எப்படி – என்று வசப்படுத்துகின்ற அந்த செயலிலேதான் இந்த இயக்கம் கடந்த 50, 60 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. அதனால்தான், பலரும் எங்களுக்கு வசமாகிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்திலே ஏற்பட்டிருக்கின்ற மறுமலர்ச்சியை நான் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. நம்முடைய காவியக் கவிஞர் வாலி பேசும்போது – அவரை யார், யாரோ விமர்சித்ததை – நண்பர்களாக இருந்தவர்களே கேலி செய்தார்கள் – பத்திரிகையிலே எழுதினார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டார். இந்த இடத்திலே அது தேவையில்லாத விஷயம் என்றாலும்கூட, அவருடைய மனதிலே ஏற்பட்ட புகைச்சலை, வேதனையை பத்து பேர்களிடத்திலே சொல்கின்ற காரணத்தால், ஒரு ஆறுதல் ஏற்படும் என்ற முறையிலே அதைச் சொல்லியிருக்கின்றார்.

எப்பொழுதுமே, என்னதான் நாம் தாக்கப்பட்டாலும், என்னதான் ஏசப்பட்டாலும், என்னதான் பழி கூறப்பட்டாலும், அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது என்பது ஒன்று; பொறுத்துக்கொள்ள முடியாத சூழலில், பொது மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி மன ஆறுதல் பெறுவது என்பது மற்றொன்று.

நான் இந்த படத்தை முழுவதும் பார்த்திருந்தால், படத்திலே வருகின்ற கருத்துகளைப் பற்றி உங்களிடத்திலே ஏதாவது சொல்லியிருக்க முடியும். எங்கே சொல்லிவிடப்போகிறேனோ என்ற பயத்திலேதான் – முழுப் படத்தை அவர்கள் என்னிடத்திலே காட்டவில்லை என்று கருதுகின்றேன். படம் விரைவிலே முடிவுற்று, நான் அதைக் காணுகின்ற வாய்ப்பு விரைவில் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தைத் தயாரிக்கப்போவதாக தமிழரசு என்னிடத்திலே எடுத்துச் சொன்னபோது, “யார் நடிக்கப் போகிறார்கள்” என்று கேட்டபோது, புன்னகை புரிந்து, கையைக் கட்டிக்கொண்டு, எனக்கு நேராக வந்து நின்றவர் அருள்நிதி – என் பேரன். நிற்கும்போதே, “ஏயப்பா! பெரிய நடிகன்” என்கின்ற அந்த எதிர்பார்ப்போடு அவர் நின்றது எனக்கு புரிந்தது. “விளையும் பயிர், முளையிலே…” என்பதைப்போல, இது விளையக்கூடிய பயிர் என்று தெரிந்துதான், நான் என்னுடைய பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தபோது, இந்த பிள்ளைக்கு “தமிழரசு” என்று பெயர் வைத்தேன். ஏனென்றால், “தமிழரசு” விளையக்கூடிய பெயராக இருக்கின்ற ஒரு “அரசு”. தமிழரசு – தமிழர்களுக்காக இருக்கின்ற அரசு – நீ கலைஞர்களுக்கு மாத்திரம் இருந்தால் போதாது; கலைஞர்கள் உள்ளிட்ட, தமிழர்களுக்கான அரசாக தமிழரசு இருக்க வேண்டுமென்பதற்காகத்தான், அவர் படத்திலே நடிக்க வேண்டும் என்றுகூட நான் சொல்லவில்லை. “நடிக்கலாமா?” என்றுகூட என்னிடம் கேட்கவில்லை. நடிக்கப்போகிறேன் என்ற செய்தியைத்தான் சொன்னார்.

அப்படித்தான், நம் வீட்டுப் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தாங்களே ஒரு இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு, “இந்த இலக்கிலே நாங்கள் போக முடிவு செய்திருக்கிறோம்” என்று நம்மிடத்திலே சொன்னால், அது நல்ல இலக்காக இருந்தால், அதை நாம் தடுக்க முடியாது; தடுக்கக் கூடாது; தடுக்கத் தேவையும் இல்லை. தடுக்காமல் இருந்தால்தான், அவர்களுடைய வாழ்வு நிலைக்கும். நம்முடைய “வம்சம்” தழைக்கப் பயனுள்ளதாக அமையும் என்பதை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

இந்தப் படத்திலே உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரையும் நான் பாராட்டுகின்றேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விஜய் அவர்களும், சூர்யா அவர்களும் இந்த குறுந்தகடுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்த குறுந்தகடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றால் – நான் என்னுடைய பேரன் அருள்நிதிக்கு சொல்வேன் – “அந்த இருவரும் பெற்றிருக்கின்ற புகழைச் சேர்த்து நீ பெற வேண்டும்” என்று அருள்நிதிக்கு நான் என்னுடைய வாழ்த்துகளைக் கூறி இந்த அளவில் என்னுடைய வாழ்த்துரையை நிறைவு செய்து, படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நல்வாழ்த்துகளைக் கூறி விடை பெறுகின்றேன் என்றார் கருணாநிதி.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோரும் பேசினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum