தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அய்யா வைகுண்டர்

Go down

 அய்யா வைகுண்டர் Empty அய்யா வைகுண்டர்

Post  amma Fri Jan 11, 2013 4:37 pm

தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் ஒரு சம்பிரதாயம் கன்னியாகுமரியில் ஒரு
சாராரிடம் உள்ளது. தன்னைத்தானே எப்படி வணங்கிக் கொள்வது? கருவறைக்குள்
நிலைக்கண்ணாடியை வைத்து அதில் தெரியும் தங்கள் உருவத்தையே வணங்குகிறார்கள்.
அவர்கள் - அய்யா வழியினர்.

கன்னியாகுமரி சாஸ்தான் கோவில்விளையில்
வாழ்ந்து, சரித்திரமாய் மறைந்த அய்யா வைகுண்டர் கட்டமைத்த
தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவோரே அய்யாவழி மக்கள்.
மாபெரும் சமூக சீர்திருத்தவாதியாக அடையாளம் காட்டப்படும் வைகுண்டர்,
திருமாலின் அவதாரமாக கருதி வணங்கப்படுகிறார்.

மஹாவிஷ்ணு தசாவதாரம்
எடுத்தவர். அதோடு, கலி மாயையில் சிக்கி வேதனைக்குள்ளாகும் மாந்தர்களை காக்க
நாராயணன் எடுத்த மற்றொரு அவதாரமே வைகுண்டவதாரம் என்று அய்யாவழி மக்கள்
நம்புகிறார்கள்.

1809-ல் குமரி மாவட்டத்தின் சாஸ்தான் கோவில்விளை
என்று அழைக்கப்படும் சாமித்தோப்பில் பொன்னுமாடன்-வெயிலாள் தம்பதிக்கு மகனாக
அவதரித்தார் வைகுண்டர். மகனுக்கு ‘முடிசூடும் பெருமாள்’ என பெயரிட்டனர்
பெற்றோர்.

மாடன், சூடன் என்று மட்டுமே பெயரிட உரிமைபெற்ற ஒரு
சாதியில் பிறந்தவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயரிட்டதை
மேல்சாதியினர் அங்கீகரிக்க மறுத்தனர். கொடுமைகளையும், மிரட்டலையும்
சகிக்காத பொன்னுமாடன் ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரை முத்துக்குட்டி
என்று மாற்றினார்.

முத்துக்குட்டி, இளவயதிலேயே சமூக ஆர்வம்
மிக்கவராக இருந்தார். மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல்
எழுப்பினார். ஆண்டாண்டு காலமாக அடங்கி ஒடுங்கி கிடந்த மக்களுக்கு
உணர்வூட்டும் விதமாக போதனைகள் செய்தார். தலையிலே முண்டாசு கட்டி,
நெற்றியில் நாமம் இட்டு, முட்டுக்கு கீழே முழு வேட்டி கட்டி வழிபடும்
உரிமையை பெற்று தந்தார். இதனால் முத்துக்குட்டி பல்வேறு இன்னல்களை
எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் அனைத்தையும் தன் உறுதியால்
விரட்டினார். இந்த நிலையில் தன்னைவிட வயது முதிர்ந்த, ஒரு பெண் குழந்தைக்கு
தாயான திருமால் வடிவு என்ற பெண்ணை மணம் புரிந்தார் முத்துக்குட்டி. இந்த
இல்லற வாழ்வில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

முத்துக்குட்டியை
தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ராஜவம்சம், அவரை மருந்துவாழ்மலைக்கு
விருந்துக்கு அழைத்து விஷம் கொடுத்தது. சிறிது சிறிதாக உயிர் எடுக்கும்
அந்த விஷத்தால் கடும் காய்ச்சலுக்கு உள்ளானார் முத்துக்குட்டி. பல்வேறு
மருத்துவங்களாலும் குணம் தெரியவில்லை. இதனால் துடித்துப்போன தாயார்
வெயிலாளும், மனைவி திருமால்வடிவும், நாராயணனின் அருள்வேண்டி உருகி
நின்றனர்.

ஒருநாள் இரவில் ஒளிவடிவாய் தோன்றிய நாராயணன்,
‘திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் மாசித் திருவிழாவுக்கு உன் பிள்ளையை
அழைத்து வா’ என்று ஆணையிட்டார். உடல்நிலை மிகவும் தொய்வடைந்த நிலையில்
பெண்கள் இருவரும் தொட்டில் கட்டி முத்துக்குட்டியை தோளில் சுமந்து
சென்றனர். கூடங்குளம் அருகில் நவலாடி என்ற இடத்தில் உணவருந்துவதற்காக
தோள்சுமையை இறக்கியபோது முடங்கிக் கிடந்த முத்துக்குட்டி எழுந்தார்,
நடந்தார். நேராக திருச்செந்தூர் கடற்கரைக்குச் சென்றார். தாய்க்கும்
மனைவிக்கும் இந்த அற்புதம் மயக்கத்தையே கொடுத்தது.

விறுவிறுவென்று
கடலுக்குள் இறங்கிய முத்துக்குட்டியை சிறிது நேரத்தில் காணவில்லை. இறக்கும்
நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவர் கடலுக்குள் நடந்து சென்று மறைந்தது அங்கே
கூடியிருந்த மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. முத்துக்குட்டி
கடலுக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக எண்ணினார்கள். ஆயினும் வெயிலாள் மட்டும்
கரையில் மகனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தார்.

கடலுக்குள்
சென்ற முத்துக்குட்டியை, நாராயணரின் தூதுவர்கள் லெட்சுமி கோயில்
கொண்டிருந்த மகர மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு திருமால் மூன்று
நாட்கள் கலிகாலம் பற்றி போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, பூவுலகை
ரட்சிக்க தன் பிரதிநிதியாய் வெளியில் அனுப்பிவைத்தார். கடலுக்குள்
இருந்து ஒளியாய் வெளிவந்த மகனை கட்டி அணைத்து முத்தமிட்டார் வெயிலாள்.

ஆனால்,
‘அம்மா. நான் வைகுண்டராக வந்திருக்கிறேன். இனி நான் இந்த பூவுலகிற்கே
சொந்தம்’ என்று தன் நிலையை விளக்கினார், மகன். இதைக்கேட்ட மக்களும்
வெயிலாளைப் போலவே திகைத்து நின்றனர்.

பின்னர் சாமித்தோப்பு வந்த
வைகுண்டர், மக்களுக்கு ஆன்மிக போதனைகளை செய்யத் தொடங்கினார். Ôஇந்த
உலகத்தில் சாதியின் பெயரால் மோதல்கள் உருவாகிவிட்டன. மதத்தின் பெயரால்
சண்டைகள் பெருகிவிட்டன. இருப்பவன், இல்லாதவன் என்று ஏகப்பட்ட பிரச்னைகள்-
மனிதர்கள் திசைமாறி சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவை எல்லாம்
கலியின் அடையாளங்கள். இவற்றை ஒழிக்கவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன்’
என்று மக்களுக்கு போதிக்கத் தொடங்கினார். மனிதருக்குள் எந்த பேதமுமின்றி
அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை பெற்று தந்தார். சாதிக்கொடுமைக்கு எதிரான
அவரது பிரசாரம், திருவிதாங்கூர் அரசுக்குக் கோபமூட்டியது. அவருக்கு தண்டனை
அளிக்க திட்டமிடப்பட்டது. புலிக்கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார்
வைகுண்டர். பல நாட்களாகப் பசியும் பட்டினியுமாகக் கிடந்த புலி, வைகுண்டரை
பார்த்ததும் அமைதி யாய் அவர் காலடியில் வந்து படுத்தது. ராஜ கொடுமைகளைத்
தன் சக்தியால் முறியடித்த வைகுண்டர், பின்னர் குமரிக்கு வந்து பதிகள்
அமைத்து மக்களுக்கு போதனைகள் செய்தார்.

அவர் அருளிய ‘அகிலதிரட்டு
அம்மானை’ இன்று அவர் வழிவந்த மக்களுக்கு புனித நூலாக உள்ளது. தமிழகம்
முழுவதும் ஒரு கோடிக்கு மேலானோர் இன்று அய்யாவழியை பின்பற்றி வருகின்றனர்.
அய்யாவழி வழிபாட்டு தலங்கள் ‘பதிகள்’ என்று அழைக் கப்படுகின்றன. அய்யா
வைகுண்டரின் பாதம் பட்ட சாமித்தோப்பு தலைமைபதி, சின்னமுட்டம். முட்டபதி,
சொத்தவிளை அம்பலபதி, நாராயணன்விளை. பூப்பதி, தென்தாமரைகுளம்பதி, கோவளம்,
துவாரகாபதி ஆக விளங்குகின்றன. இது தவிர தமிழகம் முழுமைக்கும்
ஏழாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் உள்ளன. இந்த தாங்கல்கள் அய்யாவின்
தத்துவங்களை விளக்கும் கல்விக்கூடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை,
எளிமையை வலியுறுத்துகிறது அய்யாவழி வழிபாட்டு முறை. ஒரு நாளைக்கு
ஒருமுறையாவது தொழ வேண்டும் என்பது நியதி.

காலை உகப்பெருக்கு, மதியம்
உச்சிப்படிப்பு, இரவு உகப்பெருக்கு ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டிய முக்கிய
நடை முறைகள். ‘பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று’ என்று அய்யா
வைகுண்டரின் தத்துவத்துக்கு ஏற்ப எல்லா பதிகளிலும் 5 வேளை அன்னதானம்
வழங்கப்படுகிறது. அய்யாவழி மக்கள் நாமம் இடப் பயன்படுத்தும் திருநீறு
பூமிக்கு அடியில் உள்ள தூய வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக் கப்படுகிறது.
புருவ மத்தியில் இருந்து தீபவடிவில் நெற்றியில் மேல்நோக்கி இந்நாமம்
இடப்படுகிறது.

அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு
பதியில் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
மாசி 20-ம் நாள் அய்யா வைகுண்டரின் அவதாரத்திருநாள்; சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு,
சிறப்பு பெற்றதாகும். ஆராதனை, அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு
இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன் மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு
பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.

இந்த தீர்த்தம் அருமருந்து என்றும்
போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான
மக்கள் பதிகளுக்கு வந்து வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு
தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல்
அகிலத்திரட்டு மூலச்சுவடி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில்
மாற்றப்படும். ஏனென்றால் பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும்.
இக்கட்டிலில் அய்யா வைகுண்டர் வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள்
நம்புகிறார்கள்.

குமரி கடலோரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல
கிராமங்கள், அய்யா வைகுண்டரின் தத்துவங்களையும், போதனைகளையும் தினந்தோறும்
நினைவு கூறுகின்றன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum