தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரசம்ஹாரம்

Go down

 சூரசம்ஹாரம்  Empty சூரசம்ஹாரம்

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:38 pm


சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'' என்று கோஷமிடும் ஒலி விண்ணை பிளக்கும்.

அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான்.

சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான்.

வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு. சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது.

உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் "வைதாரையும் வாழவைப்பவன் முருகன்'' என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானை தாங்கி மகிழ்வோம்.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் தொடங்கினர்.

ஆறு நாட்கள் நடந்த அந்த யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

12 நாள் விழா.......

முருக ஸ்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். சில ஸ்தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்ந்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறு நாட்களில் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.

சஷ்டி யாகம்........

திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும்.

குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்ஹாரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புகிறார்

மும்மூர்த்தி முருகன்.....

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார்.

மறுநாள் (8-ம் நாள்)அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது.

கண்ணாடிக்கு அபிஷேகம்.....

ஜெயந்திரநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர்.

சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.

தெய்வானை திருக்கல்யாணம்........

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள்.

மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.

அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.

குரு பெயர்ச்சி......

திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, சண்முகர் சன்னதி எதிரே உள்ள பீடத்தில் வைத்து குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை கூறினார். எனவே இத்தலம் குருதலம் என்கிறார்கள். பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்.

அஷ்ட நாகங்கள் மற்றும் அஷ்ட யானைகள், மேதா மலை என மூன்று ஆசனத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், 4 கிளிகள் வடிவில் இருக்கின்றன. இவர் அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் ஞானஸ்கந்த மூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.

வழக்கமாக இடது கையில் அக்னியும், வலது கையில் உடுக்கையும் வைத்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு வலது கையில் மழுவும், இடக்கையில் மானும் வைத்தபடி காட்சி தருகிறார். நவம்பர் 21-ல் நடக்கும் குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், நன்மை நடக்கும்.

இரண்டு வடிவங்களில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு வந்த முருகன், சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் மூலஸ்தானத்தில் அருளுகிறார். இவர் சிவனை வணங்கியபடி, தவக்கோலத்தில் உள்ளார். தவிர சண்முகர், பிரதான உற்சவமூர்த்தியாக தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.

இவருக்கு மூலவருக்குரிய மரியாதை அனைத்தும் செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இவரை சுற்றிவர பிரகாரம் இருக்கிறது. ஆனால் மூலவரின் தவம் கலைந்து விடக்கூடாது என்பதால் சுற்றி வருவது இல்லை.

அன்று பாட வேண்டிய பாடல்...........

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum