தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடுவினைகள் களையும் கோவிந்தன் திருச்சித்ரகூடம்

Go down

கடுவினைகள் களையும் கோவிந்தன் திருச்சித்ரகூடம் Empty கடுவினைகள் களையும் கோவிந்தன் திருச்சித்ரகூடம்

Post  amma Fri Jan 11, 2013 4:19 pm

சிதம்பரம் சென்று திருச்சித்ரகூடத்து கோவிந்தராஜனை தரிசிக்கும்வரை அவரது த்யான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:
திவ்ய ஸ்ரீசித்ர கூடே கநகமய ஸபா தத்ர கோவிந்த ராஜ
மோதா தத்யாயி ந்ருத்யத் பசுபதிவிநுதோ போகி போகே சயாந
தத்ரஸ்ரீ புண்டரீ கேத்யபி மதபலதா ஸாத்விகம் தத்விமாநம்,
தஸ்மின் கண்வ ப்ரஸந்நோ ஹரிதிகபிமுக தத்ஸர புண்டரீகம்
பொதுப்
பொருள்: திருச்சித்ரகூடம் எனும் இந்த திவ்ய தலத்தில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கோவிந்தராஜரே, நமஸ்காரம். பொன்மயமான
அரங்கத்தில், புண்டரீகவல்லித் தாயாருடன் ஸாத்விக விமான நிழலில், புண்டரீக
புஷ்கரணிக் கரையில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவனாய் தரிசனம் தரும்
பெருமாளே நமஸ்காரம். ஆனந்த நடனம் ஆடிய சிவபெருமானால் சேவிக்கப் பெற்று
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சிவபிரானுக்கும், கண்வ முனிவருக்கும்
காட்சி அருளி, இப்போது எங்களனைவருக்கும் அருள்பாலிக்கும் பெருமாளே
நமஸ்காரம்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள்
அமைந்திருக்கும் ஒரு திவ்ய தேசம், திரு நிலாத்திங்கள் துண்டத்தான் ஆலயம்;
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் இன்னொரு திவ்ய தேசம்,
திருக்கள்வனூர். இந்த இரு திவ்ய தேசங்களையும் நேரில் சென்று தரிசிக்க சில
வைணவ அன்பர்கள் தயக்கம் காட்டுவதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம்.
அந்த
வகையில் அமைந்த, ஆனால் வைணவ அடியார்களும் விரும்பிச் சென்று தரிசிக்கும்
ஒரு திவ்ய தேசம், திருச்சித்ரகூடம். இந்தக் கோயில், திருச்சிற்றம்பலம்
எனப்படும் நடராஜர் ஆலய வளாகத்துக்குள்ளேயே அமைந்திருக்கிறது. இரண்டு
ராஜாக்களை தரிசிக்க வாய்ப்பளிக்கும் அற்புத தலம் சிதம்பரம் என்றே
சொல்லலாம். ஆமாம், ஒருவர் நடராஜர் மற்றொருவர் கோவிந்தராஜர்! ஒரே
வளாகத்துக்குள் அமைந்திருக்கும் இரண்டு பிரமாண்டமான கோயில்கள்.
இரண்டுக்கும் தனித்தனியே கோபுரங்கள், கொடி மரங்கள், பலிபீடங்கள்,
சந்நதிகள், விமானங்கள்.... வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இந்த ஆச்சர்யம்,
நம் பாரம்பரிய குணநலனை விவரிக்கும் இன்னொரு பரிமாணம். வரிக்குதிரைக்கு
வெள்ளையில் கறுப்புக் கோடா, கறுப்பில் வெள்ளைக் கோடா என்று கேட்டால் என்ன
பதில் வரும்?

‘ஒன்றுக்குள் ஒன்று; அது கறுப்புப் பரப்பில் வெள்ளைக்
கோடாயிருந்தால் என்ன; வெள்ளைப் பரப்பில் கறுப்பு கோடாயிருந்தால் என்ன?’
என்பதுதானே பதிலாக இருக்கும்! அதுபோலதான் திருச்சிற்றம்பலமும்,
திருச்சித்ரகூடமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாகவே இருக்கின்றன. வழிபாட்டு
சம்பிரதாயங்கள் இரண்டுக்கும் வேறு வேறு என்றாலும் அந்த சம்பிரதாயம்
மாறுபட்டாலும் வழிபடப்படும் பரம்பொருள் ஒன்றுதான் என்ற உணர்வைத்
தோற்றுவிக்கத்தான் இப்படி ஒரே வளாகத்துள் இந்த இரு கோயில்களையும் நம்
முன்னோர்கள் அமைத்தார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டு
பிரமாண்ட தெய்வ தரிசனங்களைக் காணும் பேறு ஆனந்தமானது. தெற்கு நோக்கி காட்சி
தரும் நடராஜப் பெருமானை நேருக்கு நேராக, அகம் குளிரக் காணும் நாம், சற்றே
விழிகளை இடது பக்கமாகத் திருப்பினால் அங்கே கிழக்கு நோக்கி, சயனித்தபடி
சேவை சாதிக்கும் கோவிந்தராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இரு தெய்வங்களும்
ஒருமித்து ஒரே வளாகத்துக்குள் சைவ, வைணவ அன்பர்களுக்கு பேரருள் புரியும்
இந்த அற்புதத் தலத்தில், இரு கோயில்களிலும் பூஜாகிரமங்களை நிறைவேற்றி
வைக்கும் இறையடியார்களுக்குள் பேதம் நிலவுகிறது என்று கிடைக்கும் தகவல்,
மனசுக்குள் லேசாக நெருடலை உருவாக்கத்தான் செய்கிறது.

சரி, அந்தந்த
சமய ஆன்றோர்கள் மூலம் இந்த மன விலகல் மறையாதா என்ற ஏக்கப் பெருமூச்சுடன்
இப்போதைய நமது நோக்கமான 108 திவ்ய தேச திருவுலாவின் அடுத்த தரிசனமாக
கோவிந்தராஜப் பெருமாளை சேவிக்கச் செல்வோம். அதற்கு முன் இத்தல புராணத்தைப்
பார்க்கலாம்: ‘தில்லை நகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள் எங்கள் தனி
முதல்வனை’ என்றும் ‘திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்’ என்றும் குலசேகர
ஆழ்வார் பாடி மகிழ்ந்த, ‘திருச்சித்ரகூடம் உறை செங்கண்மால்’ என்று
திருமங்கையாழ்வார் போற்றிப் பரவசமடைந்த தலம்.
இத்தலம் உருவாவதற்கும்,
இங்கே திருமால், திவ்யதேச நாயகனாக உறைவதற்கும் கயிலாய பரமேஸ்வரனே காரணமாக
இருந்திருக்கிறார் என்கிறது புராணம். அதாவது கயிலையில் பரமசிவனும்
பார்வதியும் உற்சாகமாக நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார்கள். கலை ஆர்வம்,
அந்த நடனத்தைக் கண்டு பிறர் அடையும் பரவசம் என்பதையெல்லாம் மீறி,
அவ்விருவரில் யாருடைய நடனம் சிறப்பானது என்ற போட்டி உணர்வும் தோன்ற
ஆரம்பித்தது. கணவன்-மனைவியாகவே இருந்தாலும், கலை என்று வந்துவிட்டால்,
சாதிக்கும் போட்டி மனப்பான்மையும் தன் பங்கே சிறப்பானது என்ற பெருந்தனமும்
தலை காட்டுமல்லவா, அது இங்கும் நிகழ்ந்தது. அப்போது அங்கே இருந்த விநாயகர்,
முருகனிடம், ‘‘யார் நடனம் சிறப்பாக இருந்தது?’’ என்று கயிலைநாதன்
கேட்டார். ‘‘அம்மாவின் நடனம்தான்...’’ என்று இருவரிடமிருந்தும் ஏகோபித்த
பதில் வந்தது. சிவனாருக்கு அதில் உடன்பாடில்லை. அந்தத் தீர்ப்பு மாற்றப்பட
வேண்டும் என்று விரும்பினார். பிரம்மன் தகுதி வாய்ந்த நீதிபதி என்று
நினைத்து அவரிடம் சென்று தங்கள் நாட்டியத்தைப் பார்வையிட்டு தீர்ப்பளிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் நான்முகன் மட்டுமல்ல, நாமகளும்
பிற தேவர்களும் யாருமே அந்தத் தகுதிப் போட்டியில் அபிப்ராயம் சொல்லத்
தயாராக இல்லை; சொல்லத் தெரியவில்லை. இருவர் நடனமுமே, அவர்கள் கோணத்தில்
மிகச் சிறப்பாக அமைந்துவிட்டதால், யாருக்கு யார் உசத்தி என்று அனுமானிக்கத்
தெரியவில்லை.

இதுபோன்ற கட்டங்களில், முடிவெடுக்க முடியாத குழப்பச்
சூழ்நிலையில், தன் சாதுர்யத்தால் சரியான முடிவை இரு தரப்பாரும்
ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லக்கூடியவர் வைகுந்தவாசனே என்பது பல
சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், தேவர்கள் அவர் உதவியை
நாடினார்கள். அவரும் தமக்கு உகந்த தில்லைவனத்துக்கு வந்து அங்கே போட்டியை
வைத்துக் கொள்ளுமாறும் தான் சரியான பதிலைச் சொல்வதாகவும் கூறினார். உடனே
போட்டிக்கான ஏற்பாடுகள் தயாராயின. தேவ தச்சனான விஸ்வகர்மா, அரக்கர் தச்சனான
மயனை அழைத்துக் கொண்டு தில்லைவனத்துக்கு வந்தான். வனத்தின் நடுவே
சித்ரகூடத்தை அமைத்தான். அவனுக்கு அடிபணிந்து பஞ்ச பூதங்களும் 5
கலசங்களாயின. 4 வேதங்கள் 4 கோபுரங்களாயின. 36 ஸ்ம்ருதி சூத்திரங்களை 36
வாயில்களாகவும் 5 வகை யக்ஞங்களை (யாகங்களை) 5 மதில்களாகவும் 6 அங்கங்களை 6
உள் வாயில்களாகவும் 6 தரிசனங்களை 6 கதவுகளாகவும் 3 வியாகிருதிகளை 3
மண்டபங்களாகவும் அமைத்து, சித்ரகூடத்தை கனகசபை, ரத்தினசபை, நாகசபை, தேவசபை,
ராஜசபை ஆகியவை சூழ பிரமாண்டமாகத் தோற்றுவித்தான்.
பேரெழிலுடன்
திகழ்ந்த சித்ரகூடத்தில் நடனப் போட்டி ஆரம்பித்தது. பார்வையாளர்கள் வியந்து
நிற்க, பரந்தாமன் மட்டும் சயனத் திருக்கோலம் கொண்டவராக அந்த நடனத்தை
ரசித்தார். ஆனால், தீர்ப்பு சொல்ல வேண்டியவர் என்ற கட்டாயத்தில் அவரும்
திகைத்துத் தடுமாறினார். நடன நுணுக்கங்கள் இருவரிடமுமே துல்லியமாக
அமைந்திருந்தன. ஆனால் உடலியலும் அதைச் சார்ந்த மனவியலும் பெண்களுக்குச்
சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பதை நாரணன் உணர்ந்தார். உடனே தன் திரிவிக்ரம
கோலத்தை சிவன் மனதில் தோன்றச் செய்தார். அதுவும் ஊர்த்துவம் என்ற
நடனவகையின் சாயலாகப் படவே, ஈசன், சட்டென்று தன் இடது காலைத் தரையில் ஊன்றி,
வலது காலை மேலே உயர்த்தி, அது வான் தொட நின்றார். பெண்மையின் கூச்ச
பலவீனத்தால் அந்த தாண்டவத்தைத் தன்னால் ஆடிக் காட்ட முடியாமல், திகைத்தாள்
அம்பிகை. ஆனால் தோல்வியை ஏற்க இயலாதவளாக ரவுத்திரம் மிகக் கொண்டாள். உடனே
அந்தப் பகுதியை விட்டு விலகி, நகர எல்லைக்குச் சென்று அங்கே தில்லைக்
காளியாக உருவும் கோயிலும் கொண்டாள்.

தன் வெற்றிக்கு வழிகாட்டிய
பரந்தாமனை வணங்கிய ஈசன், தான் ஆடும் கோலத்தில் அங்கேயே கொலுவிருக்க,
எந்நாளும் தன்னுடைய அந்த நாட்டியத்தை ரசிக்கும் வகையில், திருமாலும் அதே
சயன கோலத்தில் அங்கேயே வீற்றிருக்குமாறும் கேட்டுக் கொண்டார். சித்திரம்
போல ஈசன் நடனத் தோற்றம் காட்டியதால் இந்தத் தலம் சித்(தி)ரக் கூடம் என்று
பெயர் பெற்றதாம். சித்ரகூடத்தில் பெருமாள் கோயில் கொண்ட புராணம் இது.
பரந்தாமன் இங்கே கோவிந்தன் என்று பெயர் கொண்டதற்கும் ஒரு காரணம்
இருக்கிறது. கலிங்க நாட்டு மன்னன் கவேரன் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி
தன் மனைவியுடன் கடுந் தவம் மேற்கொள்ள, காவிரியே அவர்களுக்கு மகளாக
வந்துதித்தாள். பின்னாளில், காவிரி, அகத்திய முனிவரால் ஒரு நதியாக
மாறினாள். அந்த நதியில் நீராட வந்த பெற்றோர்கள், தாங்கள் மோட்சமடைய வழி
சொல்லுமாறு விரும்பிக் கேட்டார்கள். அவர்களுக்கு, காவிரி, தில்லைவனம்
சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானை, ‘கோவிந்தா, கோவிந்தா’
என்று மனமுருகி அழைத்தால் அவர்கள் அப்பேறு பெறலாம் என்றாள்.

உடனே
கவேரன் தன் மனைவியுடன் தில்லை வந்து திருமாலை, ‘கோவிந்தா’வென அழைத்து
பிரார்த்தித்தான். அவர்கள் முன் பிரத்யட்சமான திருமால், அவர்களுக்கு
அப்போதே மோட்சப் பதவியளித்து அனுக்ரகித்தார். அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ
நாராயணா’வைப் போலவே கோவிந்த நாமமும் மோட்ச பலன் ஈட்டித் தந்ததால்,
பரந்தாமன் இங்கே கோவிந்தராஜன் என்று அழைக்கப்படுகிறார். நடராஜரும்
கோவிந்தராஜரும் ஒருங்கே அமைந்து அனைத்து பக்தர்களுக்கும் நல்வினைகளை
அருள்வது கண்டு பொறுக்காத சோழ மன்னன் ஒருவன், திருச்சித்ரகூட மூலவரை
அப்படியே பெயர்த்து கடலில் வீசி எறிந்தான் என்று சொல்லப்படுகிறது. பிறகு
ராமானுஜரின் பெருமுயற்சியால், அந்த அர்ச்சாவதாரம் காப்பாற்றப்பட்டு,
திருப்பதி(திருமலை)யில் சிறிது காலம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பிறகு
விஜயநகர அரசரான அச்சுதராயர், தில்லையில் பெருமாளை மீண்டும் எழுந்தருளச்
செய்தார்.

மொத்தம் 12 தீர்த்தங்களைக் கொண்ட மிகப் பெரிய கோயில்
இது. இவற்றில் அமுத கூபம் குறிப்பிடத் தகுந்தது. சிவ-பார்வதி நடனப்
போட்டியைக் காண வந்த வைகுந்தவாசனுக்காக, அவர் பசி தீர்க்க கருடன் அமுதம்
கொண்டு வந்து வைத்த இடம் இது. மூலவர் கோவிந்தராஜனின் சயனக் கோலம்
சிலிர்ப்பூட்டுகிறது. கடுவினைகள் எல்லாம் அக்கணமே காணாமல் போய்விடுகின்றன.
அவரது காலடியில் ஸ்ரீதேவி-பூதேவியர். உற்சவர் தேவாதி தேவன் என்றும்
சித்ரகூடத்துள்ளான் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பெயர்
புண்டரீகவல்லி. மூலவர் சந்நதிக்கு எதிரே ஒரு தூணில் ஆஞ்சநேயர் பக்தர்களின்
வெண்ணெய்க் காப்பில் மிளிர்கிறார். கருவறையை வலம் வரும்போது நரசிம்மர்,
வேணுகோபாலன், உடையவர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், மணவாள
மாமுனி, சேனை முதலி, ஆஞ்சநேயர் என்று வைணவத் திருத்தோன்றல்கள் தனித்தனி
சந்நதிகளில் கோயில் கொண்டு அனுக்ரகம் செய்கிறார்கள்.
வலம் முடித்து
மீண்டும் கோவிந்தராஜன் முன்னால் நின்று உளமாறத் தொழுது சற்றே இடப்பக்கம்
திரும்பினால் - நடராஜர் இனிய முறுவலுடன், ‘எங்களுக்குள் ஒன்றும்
பேதமில்லை. அப்படி பேதப்படுத்துமாறு யாருக்கும் நாங்கள் அறிவுறுத்தவும்
இல்லை. போய் வாருங்கள்’ என்று சொல்லி விடைகொடுக்கிறார். அதை ஆமோதிப்பதுபோல
கோவிந்தராஜர் கருவறையிலிருந்து மணியொலி எழுகிறது. படங்கள்:
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum