தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெய்வ திருமகள் – திரைவிமர்சனம்

Go down

 தெய்வ திருமகள் – திரைவிமர்சனம் Empty தெய்வ திருமகள் – திரைவிமர்சனம்

Post  ishwarya Wed Apr 17, 2013 2:29 pm

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் – நா முத்துக்குமார்
இசை – ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – நீரவ்ஷா
எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து – இயக்கம் – விஜய்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்…

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

‘ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்…. காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது ‘எ பிலிம் பை விஜய்’ என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum