தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லா நோய்களும் தீர்க்கும் எண்ணெய்க் கிணறு

Go down

எல்லா நோய்களும் தீர்க்கும் எண்ணெய்க் கிணறு  Empty எல்லா நோய்களும் தீர்க்கும் எண்ணெய்க் கிணறு

Post  amma Fri Jan 11, 2013 3:55 pm

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே
கண்ணா என்றும் என்னையாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேனமாம் பொழில் தண்
சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை
வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே
-
என்று பரவசத்துடன் நம்மாழ்வார் துதித்து மகிழ்வது வானமாமலைப் பெருமாளை.
வானமுட்டும் மாமலை போன்ற கீர்த்தியுடைய இவரை தோத்தாத்ரிநாதன் என்று
அழைத்து பூரிக்கிறது வடமொழி.
ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் தனிச் சிறப்பை
விளங்க வைக்கும் வகையில் தனித்தனியான, வித்தியாசமான பிரசாதங்கள் வழங்கப்
படுகின்றன. இந்த வானமாமலைப் பெருமாள் கோயிலில் கிடைப்பது, எண்ணெய்
பிரசாதம்! இந்தக் கோயில் வளாகத்தில் ஓர் எண்ணெய்க் கிணறே இருக்கிறது.
இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் ஊற்றாக வருவதல்ல; ஊற்றுவதால்
நிரம்பி இருப்பது. ஆமாம், பெருமாளுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்
எண்ணெய் இந்தக் கிணற்றில் ஊற்றி சேகரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்
பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது வெறும் பிரசாதமல்ல;
மருந்தே என்கிறார்கள் பக்தர்கள். ஆமாம், சர்வ ரோக நிவாரணியாகப்
பயன்படுகிறது, இந்த எண்ணெய்.

பெருமாளுக்கு இவ்வாறு எண்ணெய்த்
திருமஞ்சனம் செய்வது ஒரு முக்கியமான சம்பிரதாயம். வேறெந்த திவ்ய
தேசத்திலும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி. ஒவ்வொரு தை அமாவாசை
அன்றும்
ஒரு கோட்டை அளவு (210 லிட்டர்) சுத்தமான நல்லெண்ணெய் தரவழைக்கப்பட்டு,
பெரிய வெள்ளிக் கொப்பரைகளில் சேகரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயில் சில
மூலிகைப் பொருட்கள் இடப்பட்டு பக்குவப்படுத்தப்படுகிறது. பிறகு மந்திர
கோஷங்கள் முழங்க, எண்ணெய் பெருமாளை உச்சி முதல் பாதம்வரை தழுவி மகிழ்கிறது.
இது தவிர தினமுமே பெருமாளுக்கு மூன்று லிட்டர் எண்ணெய் அபிஷேகம்
செய்யப்பட, இந்த எண்ணெய் மூலவர் சந்நதிக்கு வெளியே கோமுகி வழியாக ஒரு
தொட்டிக்கு வந்து சேருகிறது. இந்தத் தொட்டியிலிருந்து முகந்தெடுத்து
மண்டபத்துக்கு வெளியே உள்ள கிணற்றுக்குள் விடுகிறார்கள். பிறகு இந்தக்
கிணற்றிலிருந்து இறைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

‘‘அந்தகால
மரபுப்படி எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது வாராந்திர வழக்கமாக
இருந்தது ‘சனி நீராடு’ என்பார்கள். பல்வேறு காரணங்களால் உண்டாகும் உடல், மன
சூட்டைத் தணித்து, உடல் நலத்தை சீராக வைத்திருக்கும் அந்தப் பழக்கம், பல
குடும்பங்களில் இப்போது முற்றிலும் காணாமலேயே போய்விட்டது. மக்கள் மறந்த
ஒரு நற்பழக்கத்தை மாதவன் மறக்காமல் தான் மேற்கொண்டு, அந்த எண்ணெயையே
பிரசாதமாக்கி பக்தர்களுக்கு வழங்குகிறார்’’ என்றார் ஒரு பெரியவர்.

வானமாமலை
அல்லது நான்குநேரி என்றழைக்கப்படும் இத்தலம், அந்நாளில் தாயாரின்
திருப்பெயராலேயே ஸ்ரீவரமங்கை என்று போற்றப்பட்டது. நான்கு பெரிய ஏரிகளாகப்
பிரித்து, பாசனத்துக்கும் பிற உபயோகத்துக்கும் இங்குள்ள குளத்து நீர்
பயன்பட்டதால், நான்கு ஏரி என்று பெயர் படைத்து, நான்(ங்)குநேரி என்று
இப்போது அறியப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தற்போது அனுசரிக்கப்படும்
சம்பிரதாயங்களுக்கு மூலகாரணமானவர் மணவாள மாமுனிகள். இவர் நிலைநாட்டிய
அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்தான் வானமாமலை ஜீயர். இவர்மூலம் வானமாமலை மடம்
நிறுவப்பட்டது. திருக்கோயிலை ஒட்டியே இந்த மடம் அமைந்திருக்கிறது.
‘மஹாவிஷ்ணுவின் பாதுகைகள்தான் நம்மாழ்வார் (வைணவக் கோயில்களில் பக்தர்கள்
தலையில் வைக்கப்படும் சடாரி ஆசிர்வாதம் நம்மாழ்வாரின் பாதுகைகளே);
நம்மாழ்வாரின் பாதுகைகள்தான் மணவாள மாமுனிகள்; மணவாள மாமுனிகளின் பாதுகைகளே
வானமாமலை ஜீயர்’ என்ற ஒரு வழக்கும் உண்டு. அதனாலேயே இந்தத் தலத்திலுள்ள
சடாரியில் நம்மாழ்வார் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நவதிருப்பதிகளில்
ஆழ்வார்-திருநகரியில் மட்டுமே நம்மாழ்வாருக்கு விக்ரகம் அமைந்திருக்கிறது;
இங்கோ சடாரியில் அவர் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒவ்வொரு
ஆண்டும் ஐப்பசி மாத, மூல நட்சத்திர நாளில் மணவாள மாமுனிகள் அணிந்திருந்த
மோதிரத்தை, தாம் அணிந்துகொண்டு, பக்தர்களுக்குப் புனித தீர்த்தம்
அருள்கிறார் இந்த ஆலயத்தின் ஜீயர் சுவாமிகள். சடாரியாக சிரசில் நம்மாழ்வார்
ஆசியளிக்க, மோதிரமாக மணவாள முனிகள் தீர்த்தம் அளிப்பதுதான் பக்தர்களுக்கு
எத்தகைய பேறு!

மூலவர் சந்நதியில் கூட்டம் மிகுந்திருக்கிறது -
வெளியே அல்ல; உள்ளேயே! ஆமாம், கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில்,
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக மூலவர் தோத்தாத்ரிநாதன், கருடாழ்வார், பிருகு
முனிவர், விஷ்வக்சேனர், மார்க்கண்டேயன், சூரியன்-சந்திரன், உற்சவர்
தெய்வநாயகன், மூலவருக்கு சாமரம் வீசும் ஊர்வசி, திலோத்தமை...

தேவ
கன்னியரான ஊர்வசியும் திலோத்தமையும் இங்கே எப்படி வந்தார்கள்?
தேவலோகத்தில் ஆடல், பாடல்களில் மட்டுமல்லாது பேரழகிலும் தலை சிறந்து
விளங்கியவர்கள் இந்தக் கன்னியர். இந்திரசபையில் ஆடுவதும் பாடுவதும்
அவற்றால் தேவர்களை மகிழ்விப்பதுமாகத் தம் பிறவியின் பயனை அனுபவித்து வந்த
அவர்களுக்கு, தம்மாலும் ஓர் உயர்நிலை அடைய முடியுமா என்ற ஏக்கம் படர்ந்தது.
தமக்கு இனி பிறவி வேண்டாம்; ஆனால் அதேசமயம் தாம் அழிவற்றவர்களாகவும் திகழ
வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். உடனே படைக்கும் கடவுளான பிரம்மாவை
அணுகி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.

பிரம்மனோ,
‘‘படைப்பது என்பது என் தொழில்தானே தவிர, நானும் மஹாவிஷ்ணுவுக்கு அடிபணிந்து
செயலாற்றுபவன்தான். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதோ அல்லது நிராகரிப்பதோ
செய்ய அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆகவே, பூலோகத்தில், சீரிவரமங்கை
திவ்யதேசத்தில், தோத்தாத்ரிநாதனாகக் கோயில் கொண்டிருக்கும் அவரை நோக்கி
நீங்கள் தவமியற்றினீர்களானால் உங்கள் விருப்பம் நிறைவேறலாம்’’ என்று
சொல்லிவிட்டார்.

உடனே இருவரும் இந்தத் தலத்துக்கு வந்தார்கள்.
பிறவி இல்லாததும் அழிவற்றதானதுமான நிலை என்பது என்ன? அது திருமாலடியோடு
ஐக்கியமாவதுதானே! அந்த அரிய வரத்தை இந்தத் தல நாயகன் ஊர்வசி, திலோத்தமை
இருவருக்கும் அருளினார். ஆகவே அவர்கள் இருவரும் இந்தத் தலத்தில்
பெருமாளுக்கு சாமரம் வீசும் கைங்கரியத்தை மேற்கொண்டு மகிழ்ந்தார்கள்.
அந்தக் கோலத்தைதான் நாம் இப்போது மூலவரின் கருவறையில் காண்கிறோம்.

இந்தப்
பெண்களைப் போலவே கருடனும் திருமாலைப் பிரியாத நிலை வேண்டினான்.
கிரேதாயுகத்தில் காஷ்யப முனிவரின் இரு மனைவியர் கத்ருவும் விநதையும். கத்ரு
நாகங்களாகப் பல குழந்தைகளைப் பெற்றாள். இந்தக் குழந்தைகளுக்கு ஆதிசேஷன்
மூத்தவனாகவும் தலைவனாகவும் விளங்கினான். விநதைக்கு இரண்டே புதல்வர்கள் -
ஒருவன் அருணன், இன்னொருவன் கருடன். ஒருமுறை கருடன் பாதாளலோகத்துக்குத் தன்
பெரிய அன்னையின் புதல்வர்களான நாகர்களைப் பார்ப்பதற்காகப் போனான். அவர்களோ
அவன் தங்களுடைய சிற்றன்னையின் மகன் என்ற வேறுபாடு காரணமாக அவனைப்
பழித்தார்கள். அதைக் கேட்கப் பொறுக்காத கருடன், அவர்களைத் தாக்க
ஆரம்பித்தான். விவரம் கேள்விப்பட்ட ஆதிசேஷன் அங்கே வந்து, ‘‘நாம் இருவருமே
திருமாலுக்கு சேவை புரிபவர்கள்; இவ்வாறு இவர்களுடன் நீ சண்டையிட்டாயானால்
அது பரந்தாமன் பெயரைக் கெடுக்குமல்லவா?’’ என்று கேட்டு கருடனைத் தன்னுடன்
அழைத்துச் சென்றான். உடனே கருடன், ‘‘உனக்கென்ன நீ எப்போதுமே உன் தலைகளால்
திருமாலுக்குக் குடை பிடிக்கிறாய்; உன் உடலே அவருக்கு படுக்கையாகிறது;
எனக்கு அத்தகைய பேறு உண்டா? எப்போது திருமால் வெளியே போகிறாரோ அப்போது
மட்டும்தானே நான் அவரைத் தாங்கியபடி உடன் செல்கிறேன்!’’ என்று ஏக்கமாகச்
சொன்னான்.

அதுகேட்ட ஆதிசேஷன், ‘‘அப்படியானால் நீ சீரிவரமங்கை
தலத்துக்குச் சென்று தோத்தாத்ரிநாதரை துதித்து வா; உன் விருப்பம் ஈடேறும்’’
என்றான். அதன்படியே கருடனும் திருமாலைத் துதிக்க, தோத்தாத்ரிநாதன்
அவனுக்குக் காட்சி தந்து, ‘‘நீதான் எனக்கு வாகனமாகவே இருக்கிறாயே, இன்னும்
என்ன குறை உனக்கு?’’ என்று கேட்டார். ‘‘எனக்கும் ஆதிசேஷனைப் போல
உங்களுடனேயே இருக்கும் பாக்கியம் வேண்டும்’’ என்று கேட்டான். திருமால்
யோசித்தார். பிறகு சொன்னார்: ‘‘ஆதிசேஷன் நிறைவேற்றும் பொறுப்புபோல உனக்கு
நான் இப்போதைக்கு அளிக்க முடியாது. ஆனால், வைகுந்தத்தில் என் வாசலில்
எப்போதும் என்னைச் சுமந்து புறப்பட தயாரான நிலையில் நீ இருக்கலாம்.
கலியுகம் வரப்போகிறது. பக்தர்களுக்கு என் சேவை அடிக்கடி தேவைப்படும்.
அப்போது நீ தயாராக இருந்தால் நான் உன்மீதமர்ந்து என் பக்தர்களுக்கு உதவ
முடியும். அதாவது கிட்டத்தட்ட நான் உன்மீது நாளெல்லாம் பயணிக்கும் சூழ்நிலை
வரும்’’என்றார், தோத்தாத்ரிநாதர். காலத்தையே நிர்ணயிக்கும் அவருடைய பதிலால
திருப்தியடைந்தான் கருடன்.

கோயிலில் நாயக்கர் மண்டபம் மிகுந்த
அழகுடன் பொலிகிறது. இதனை வீரப்ப நாயக்கர் மண்டபம் என்றழைக்கிறார்கள்.
தூண்களில் நாயக்க மன்னர்களின் சிலைகளைக் காண முடிகிறது. இவர்களுக்கு இடையே
ஒரு கிணறு உள்ளது. மரத்தட்டு போட்டு அதன் வாயை மூடியிருக்கிறார்கள். வேகம்
மிகுந்த நீரூற்று கொண்ட கிணறாம் இது. குறிப்பாக மழைக்காலத்தில் இதிலிருந்து
நீர் பொங்கி வெளியே வழிந்து கருவறை முன்னால்வரை நீர் சூழுமாம். பாற்கடலில்
பரந்தாமன் பள்ளிகொண்டிருப்பான்; இங்கோ மழைக்காலத்தில், நீர்க்கடலில்
அமர்ந்திருக்கிறான் என்று கொள்ளலாமா! பக்தர்கள் எல்லாம் அந்த நீரில்
பாதங்கள் மூழ்க நின்றபடி பகவானை தரிசிப்பார்கள்.

தோத்தாத்ரிநாதர்
அமர்ந்திருப்பதால் அவரது ஒரு பாதத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. பெருமாள்
பிரயோக சக்கரம் ஏந்தியிருப்பது, கருடனுக்கு அவர் கொடுத்த வாக்கை
நினைவூட்டுகிறது. கருவறை முன்னால் சிறு மாடத்தில் நரசிம்மர்
காட்சியளிக்கிறார்.

அடுத்தடுத்து ராமர் (சீதை, லட்சுமணனுடன்),
லக்ஷ்மிவராகப் பெருமாள், விஷ்வக்சேனர், லட்சுமி நாராயணன்-திருக்கச்சி
நம்பிகள், கிருஷ்ணன், ஸ்ரீநிவாசன், சக்கரத்தாழ்வார் என்று வைணவப்
பெருந்தகைகளை தரிசித்து ஆசி பெறலாம். தங்க சப்பரம் ஒன்று சிறு ஒளியிலும்
ஜொலிக்கிறது. சித்திரை மற்றும் பங்குனி மாத விசேஷங்களில் 7ம் நாள்
திருவிழாவில் பெருமாளையும் திருவரமங்கைத் தாயாரையும் இந்தப் பல்லக்கில்
சுமந்து பவனி வருவார்கள். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த வைபவத்தைக் கண்டு
மனம் நிறைகிறார்கள்.

சீரிவரமங்கை என்ற திருவரமங்கைத் தாயார் தனி
சந்நதியில் அருள் பொங்க நோக்கி நம் மனக்குறைகளைக் களைகிறாள். இங்கே மாமரம்
தலவிருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது. திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ.
தொலைவிலுள்ள இந்தக் கோயிலுக்கு நிறைய பேருந்து வசதி உண்டு. கோயில்
தொடர்புக்கு, 9994432520 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum