தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுகப்பிரசவம் அருளும் சிவன்

Go down

சுகப்பிரசவம் அருளும் சிவன் Empty சுகப்பிரசவம் அருளும் சிவன்

Post  amma Fri Jan 11, 2013 2:31 pm

கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டைக்கு நடுவே இருக்கிறது,
மங்கலம்பேட்டை. கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது நடுவாந்திரமான ஊர்.
அந்தக் காலத்தில், முகாசாபரூர் பாளையத்தின் கீழ்வரும் ஏராளமான கிராமங்களில்
மங்கலம்பேட்டை மிக முக்கியமான வணிக கிராமமாகத் திகழ்ந்திருக்கிறது.
மங்கலநாயகி அம்மன் கோயில் அருகே ஆண்டாண்டு காலமாக சந்தை நடக்கும்
குளக்கரையும் கிராம விவசாயிகள் விளைப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு
வரும்போது பாளையத்தின் சார்பாக வரி வசூலித்த சாவடிக் குளமும் இந்த
பகுதியின் வணிக நிர்வாகத்தை சொல்கின்றன.

பாளையத்தின் எல்லை தெய்வம்
போல விளங்கும் வனதுர்க்கையான மங்கலநாயகியும் வியாபாரிகளின் வாழ்வில் வளம்
சேர்க்கும் ஓட்டைப் பிள்ளையாரும் அருளுக்கு ஆதாரமாய் இருக்கிறார்கள்
என்றால், மகிழ்ச்சி, பாதுகாப்பு இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறார்
தாய்மையோடு அருளும் ஈசன். அதுவும் அன்புக்கு இலக்கணமாய், பொங்கும் தாய்மையை
தம் பெயராகவே கொண்டு, மாத்ருபுரீஸ்வரராக அருள்கிறார்.

இங்கு எப்படி வந்தமர்ந்தார் இந்த ஈசன்?

காசியை
விட வீசம் அதிகம் என இயல்பாய் சொல்கிறார்கள் விருத்தாசலம் என்னும்
புண்ணியத் திருத்தலத்தை. இங்கு அருளும் விருத்தகிரீஸ்வரர் என்கிற
பழமலைநாதரை, அசையாத மலையாய் தோன்றி அமர்ந்த ஈசன் என்று கொண்டாடுகிறது
புராணம். மிக பழமையானவர் என்றும் பிரபஞ்ச சிருஷ்டியோடு தொடர்புடையவர்
என்றும் கொண்டாடப்படும் பழமலைநாதனுக்கு பல்வேறு சமயங்களில், பல மன்னர்கள்
திருப்பணிகளை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு தேர்ந்த
வேலையாட்களை அனுப்பி வைத்து இறைப்பணியில் உதவி இருக்கிறார்கள்,
பாளையக்காரர்கள். அப்படி மிகப் பெரிய அளவில் விருத்தகிரீஸ்வரருக்கு
திருப்பணி நடைபெற்ற காலத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து
கல்தச்சர்கள், தங்க வேலை செய்யும் ஆச்சாரிகள், மரத் தச்சர்கள், இரும்புக்
கருவிகள் செய்யும் கருமார்கள் என பலதரப்பினரை கோயில் பணிக்காக அழைத்து
வந்து மங்கலம்பேட்டை பகுதியில் குடியமர்த்தி இருக்கிறார்கள். அவர்கள்
அனைவரும் சேர்ந்து தாங்கள் வழிபட ஒரு ஆலயம் அமைத்ததாகவும் அதுவே இந்த சிவன்
கோயில் என்றும் சொல்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, உதவிக்கு ஆள்
இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு தாயாய் மாறி பிரசவம் பார்த்து
அருளிய திருச்சி தாயுமானவரின் அருள் பிரதியாய் இங்கே மாத்ருபுரீஸ்வரரை
எழுந்தருளச் செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் இத்தல
ஈசன் தன் அன்பால் இப்பகுதி மக்களுக்கு அருள் செய்வது அனுபவபூர்வமான உண்மை.

மங்கலம்பேட்டை
பேருந்து நிறுத்தத்திலிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் உள்ள இந்த கோயில்,
புராதனப் பாரம்பரியம் கொண்டது. நந்திதேவரைக் கடந்து உள்ளே சென்றால்
விநாயகர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் சூரியன், சந்திரன், நால்வர்,
வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், நவகிரக
நாயகர்கள் ஆகியோர் அருள்கிறார்கள். தல விருட்சம், வில்ல மரம். இந்த மரம்
ஒரு காலத்தில் பட்டுப் போய் காய்ந்து கிடந்ததாம். உழவாரப் பணி செய்த சிவத்
தொண்டர்கள் இம்மரத்தை அப்புறப்படுத்தலாம் என்று வெட்ட
முயன்றிருக்கிறார்கள்.

அப்போது ஒரு அன்பர், ‘இந்த மரம் எத்தனை வயது
கொண்டது என்பது நமக்குத் தெரியாது. இதன் நினைவாய் ஒரு பகுதியையாவது
எடுத்து வைத்து விட்டு பிறகு அப்புறப்படுத்தலாம்’ என்று சொன்னாராம்.
‘வெட்டி வைத்தால் என்ன? காய்ந்த கட்டை முளைக்கவா போகிறது’ என்று ஒருவர்
சொல்லியிருக்கிறார். உடனே அங்கிருந்த ஒரு சிறுவன், ‘காய்ந்த கட்டை என்ன?
நமச்சிவாயம் விரும்பினால் பட்டுப்போனதாய் நீங்கள் சொல்லும் இந்த மரம்கூட
துளிர்க்கும்’ என்று ஒரு தெய்வ வாக்காகச் சொன்னான். சரி பார்க்கலாம் என்று
சோதனையாய் சிவநாமம் சொன்னபடி ஐந்து குடம் தண்ணீர் கொண்டு வந்து அந்த பட்ட
மரத்தின் வேரில் ஊற்ற, பதினைந்து நாளில் வில்வம் துளிர்த்த அதிசயம்
நிகழ்ந்ததாம்.

உடனே ஆலயத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு
கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்று வில்வ மரத்தின் கீழ் ஒரு
லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இந்த லிங்கத்திற்கு வில்வ மாலை
அணிவித்து, இம்மரத்தை ஒன்பது திங்கட் கிழமைகள் சுற்றிவர, முடியவே முடியாது
அல்லது முடிந்து போன விஷயம் என்று கைவிடப்பட்ட காரியங்களைக் கூட, நியாயமாக
இருப்பின் நல்லபடியாய் முடித்துத் தருகிறார் இந்த வில்வ மரத்தடி ஈசன்.

உள்ளே
கருவறையில் உறையும் மாத்ருபுரீஸ்வரருக்கும் மரகதாம்பிகைக்கும் பிரதோஷ
காலத்தில் பாலபிஷேகம் செய்து வழிபட, நினைத்த காரியம் கைகூடும். திருமண வரம்
வேண்டி கைகூப்புகிறவர்கள் வாழ்க்கைத் துணை அமைந்து தம்பதியாய் வந்து நன்றி
சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மனமுருகி வேண்ட, சுகப்பிரசவம் நிகழ்த்தி
அருள்கிறார்கள், அம்மையும் அப்பனும். மாதந்தோறும் பௌர்ணமியன்று இரவு
இத்தலத்தில் சிறப்பு வழிபாடும் 108 முறை ஆலய வலம் வரும் பழக்கமும்
வழக்கத்தில் இருக்கிறது. எதிர் வரும் மகா சிவராத்திரி(20.2.2012)அன்று
விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் சுற்று வட்டார கிராமங்களில்
இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறையருள் பெறுவார்கள். ஆலய
தொடர்புக்கு: 9788798828.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum