தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடி அமாவாசை

Go down

ஆடி அமாவாசை Empty ஆடி அமாவாசை

Post  gandhimathi Sun Jan 20, 2013 2:22 pm


இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி, அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.

யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்' செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.

அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக்கொள்வான் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள் மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

தர்ப்பணம் செய்வது எப்படி!

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

புனித தீர்த்தங்கள்:

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.

நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

பாவம் நீங்கும்:

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

ராமேசுவரத்தில் நீராடுவது?

ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள். ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல். அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் ராசியில் சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும் அமாவாசை நாளன்று தான் ஒருங்கு கூடுகின்றனர்.

சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும். இத்தகைய சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர்.

அன்று நோன்பு நோற்றல், விரதங்காத்தல், சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும். ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.

அங்ஙனம் சென்ற உயிர், பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதிர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.

பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.

இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும் முத்தியடைவனவுமன்றிச் சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும். அன்றி, அவை இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.

சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு அமாவாசையும் பிதிர்கருமத்திற்கு விசேஷமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விசேஷமானதாகும். ஏனெனில், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதிர்களுக்குரிய இடமாகும்.

இது பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதிர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும், இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதிரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறை வனை வேண்டி நீராடல் வேண்டும்.

முன்னோர் வழிபாடு:

ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

லவ-குச குளத்தில் நீராடுங்கள்:

கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். அவரின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம்.

ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச் சஞ்சலம் நீங்கும்; பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

21 பிண்டங்கள்:

பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

சங்கமேஸ்வரர் வழிபாடு:

அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum