கைலாயம் கைலாயம் கைலாயம்
Page 1 of 1
கைலாயம் கைலாயம் கைலாயம்
கைலாயம் என்பது சிவபெருமான், பார்வதி தேவியுடன் உறையும் இடமாகும். இதனால் தான் சிவனை, கைலாசாவாசா என்கிறார்கள். இந்து சமயத்தின் எல்லா பிரிவுகளும் கைலாயத்தை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன. ``சொர்க்கம்'' என்றும் ``ஆன்மாக்கள் இறுதியாக சென்றடைய வேண்டிய இடம்'' என்றும் கைலாயமலை புகழப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய கைலாய மலை இமயமலையின் வடக்குப் பகுதியில் சீனா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பத்தில் இருக்கிறது. இமயமலைத் தொடர் உலகிலேயே மிக உயர்ந்த, ஒப்பற்ற, மாபெரும் மலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் எப்போதும் உறைபனி மூடி இருக்கும். இந்தியாவின் வட எல்லையாக உள்ள இந்த மலை நூற்றுக்கும் மேற்பட்ட தனித்தனி மலைகள் உள்ளன.
இந்த மலை தொடர்களில் இருந்து தான் கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து, ஐராவதி, யாங்சிகீ போன்ற ஆறுகள் உருவாகின்றன. இந்த மலைத் தொடர்களில் ஒன்றில் தான் கைலாயம் உள்ளது. உலகின் மைய அச்சுப் பகுதி இந்த மலையில் தான் உள்ளதாக அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் இம்மலை உள்ளது.
கைலாய மலைப்பகுதியில் புகழ்மிக்க இரண்டு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் ஏரியும், ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரியாகும். ராட்சதலம் ஏரியில் ராவணன் தவம் இருந்து வரம் பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. கைலாய மலை சிவபெருமானின் முக்கிய வழிபாடு தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.
மானசரோவர் ஏரியும், சிந்து நதியும் கைலாய மலையின் புண்ணிய தீர்த்தங்கலாக கருதப்படுகின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் இத்தலம் மீது ஞான உலா பாடியுள்ளார். கயிலை, கயிலாயம், நொடித்தான்மலை என்றெல்லாம் கைலாயம் அழைக்கப்படுகிறது.
கைலாயமலையை மிகப்பெரிய லிங்கமாகவும், மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருகப்படுத்தும் மரபும், நம்பிக்கையும் இந்துக்களிடம் உள்ளது. இம்மலை பற்றி பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்துக்கள் மட்டுமின்றி உலகின் பிற பகுதியில் உள்ள எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் கைலாயத்துக்கு சென்று வருகிறார்கள். விஷ்ணு புராணத்திலும் கைலாயம் பற்றி நிறைய சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் மாதிரி கைலாய மலையை நடந்து சுற்றி வருவது சிறப்பானதாகவும், பலன்கள் தருவதாகவும் கருதப்படுகிறது. இதற்காகவே கைலாய மலையை சுற்றி பாதை உள்ளது.
இந்த நடைபாதை மொத்தம் 52 கிலோ மீட்டர் (32 மைல்) நீளம் கொண்டது. கைலாயமலையை சுற்றி யாத்திரை வருவதை இந்துக்கள் ஒரு முக்கிய கடமையாகக் கருதுகிறார்கள். இந்த வட கைலாயத்துக்கு யாத்திரை சென்று வருவது என்பது எல்லாராலும் இயலாததாகும். இதனால் தென் கைலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தியில் வழிபடுவதை பலரும் புனிதமாக கருதுகிறார்கள்.
சம்பந்தர் இத்தலத்தில் தரிசித்த பின்னர் அங்கிருந்து கைலாயம் மீது பதிகம் பாடினார் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த கைலாயத் தலங்களுக்கு நிகரானது நவகைலாய தலங்களாகும். இந்த நவகைலாய தலங்கள் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum