முத்தாரம்மன் கோவில்
Page 1 of 1
முத்தாரம்மன் கோவில்
தமிழகத்தில் சங்க காலத்தில் சீரோடும், சிறப்போடும் இருந்த எத்தனையோ ஊர்கள், காலச்சுழற்சி காரணமாக இன்று பெருமை இழந்து நிற்கின்றன. அத்தகைய வரிசையில் உள்ள ஊர்களில் ஒன்று 'குலசேகரப்பட்டினம்'.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் அதாவது திருச்செந்தூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரப்பட்டினம் உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பாசத்தோடு இந்த ஊரை `குலசை' என்று அழைக்கிறார்கள். சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் `தென் மறைநாடு' என்றழைக்கப்பட்டது. இந்த ஊர் கடல் பகுதி இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வசதி கொண்டது.
இதனால் சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் துறைமுகம் மிகப் பெரும் வாணிப கேந்திரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் தமிழர்கள் குலசேகரப்பட்டினம் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்தனர். அது போல ஆப்பிரிக்கர்களும் குலசேகரப்பட்டினம் வந்ததற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
ஆப்பிரிக்க நாட்டுக்காரர்கள் மரணம் அடைந்தவரை புதைக்கும் இடத்தில் பப்பரபுளி என்ற மரத்தை நடுவார்கள். உலகில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இருப்பதாக கருதப்படும் இந்த மரம் குலசேகரப்பட்டினத்திலும் உள்ளது. இந்த மரத்தை ஆய்வு செய்த பாட்னா பல்கலைக்கழகம் இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறியுள்ளது. இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலை நாட்டவர்களுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்துவதற்கு குலசேகரப்பட்டினம் உதவியாக இருந்துள்ளது தெரிகிறது.
அதன்பிறகு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் குலசேகரப்பட்டினம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்போது குலசேகரப்பட்டினம், வீரவளநாடு என்றழைக்கப்பட்டது. மூவேந்தர்களும் இந்த ஊர் துறைமுகம் வழியாகத்தான் நவதானியங்கள், தேங்காய், எண்ணை, மரம் போன்றவற்றை இறக்குமதி செய்தனர், உப்பு, கருப்பட்டி, கருவாடு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர்.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து சென்ற உப்பு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வரவேற்பு பெற்று இருந்ததாக வரலாற்று குறிப்புகளில் உள்ளது. அரபு நாடுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் குதிரைகளை குலசேகரப்பட்டினம் வழியாகத்தான் இறக்குமதி செய்தனர்.
இலங்கையை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாகத்தான் நாடு திரும்பினான். பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப் பாண்டியன் இப்பகுதியை கி.பி.1251ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள். அந்த போரில் வெற்றி பெற்ற குலசேகரப்பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி துறைமுகத்தை சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான். அன்று முதல் இந்த ஊரின் பெயர் குலசேகரப்பட்டினம் என்று மாறியது.
இதையடுத்து சில நூற்றாண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட போதும், குலசேகரப்பட்டினம் தன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. குசேகரப்பட்டினத்தை சிறந்த துறைமுகமாக பயன்படுத்திய ஆங்கிலேயர்கள், திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டினத்துக்கு ரெயில் போக்குவரத்தையும் நடத்தி வந்தனர்.
அதே சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் குலசேகரப்பட்டினம் முதன்மையாக இருந்தது. 1942-ம் ஆண்டு நாடெங்கும் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்ட போது குலசேகரப்பட்டினத்தில் ஆங்கிலேய அதிகாரி லோன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இத்தகைய சிறப்புடைய குலசேகரப்பட்டினம், நாடு விடுதலை அடைந்த பிறகு சில சிறப்புகளை இழந்து விட்டது. துறைமுகம் இல்லாமல் போய்விட்டது. ரெயில் போக்குவரத்தும் மறைந்து விட்டது. இத்தகைய நிலையில் தற்போது குலசேகரப்பட்டினம் ஊரின் பெயர் மீண்டும் நாடெங்கும் பேசப்படும் வகையில் உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் குலசேகரப்பபட்டினத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஆன்மீக புரட்சி.
குலசேகரப்பட்டினத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வரும் முத்தாரம்மன் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளாள். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குலசை வந்து முத்தாரம்மனை மனம் உருக வழிபட்டு மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
குறிப்பாக புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா, இன்று குலசை பெயரை உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பினரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தலம் இந்தியாவின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஓசையின்றி ஆன்மீக புரட்சி செய்து வரும் குலசை முத்தாரம்மன் தலத்தின் சிறப்பு உங்களுக்காகவே
குலசைக்கு செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு....
தசரா பண்டிகைக்கு மட்டுமல்லாது, மற்ற விசேஷ நாட்களில் குலசேகரப்பட்டினம் சென்று அம்பாளைத் தரிசனம் செய்ய வெளியூர் பக்தர்கள் விரும்புவார்கள். அவர்கள் குலசேகரன் பட்டினத்திற்கு சென்றால் தங்குவதற்கு சேவார்த்திகள் தங்கும் மண்டபம் உள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
எனவே அங்கு சந்தோஷமாகத் தங்கலாம். அன்னையை வணங்கி, அவளின் அருளாசியைப் பெற்றுச் செல்லலாம். இன்னும் சிலர் தங்குவதற்கு அதிக வசதி வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்டவர்கள் சுமார் பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்செந்தூரில் தங்கலாம். அங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. நல்ல சாப்பாடும் கிடைக்கும்.
மேலும் நெல்லை நகரம் இங்கிருந்து 68 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது. இங்கு நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான தங்கும் இடங்கள் உள்ளன. எனவே அங்கும் வெளியூர் பக்தர்கள் தங்கலாம்.
சென்னையில் இருந்து குலசை செல்கிறவர்கள், திருச்செந்தூர் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் குலசை செல்லலாம். இல்லை என்றால் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடிக்கு ரயில் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து பேருந்துகள் அல்லது கார் மூலம் குலசை செல்லலாம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும். அதே போல நெல்லை செல்வதற்கு நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், போன்ற ரெயில்கள் உள்ளன.
இந்த ரயில்களில் பயணம் மேற்கொண்டு நெல்லையை அடையலாம். அங்கிருந்து குலசைக்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளதால், பக்தர்களுக்கு எந்தவிதச் சிரமமும் இருப்பதில்லை.
விமானத்தில் செல்ல விரும்புகிறவர்கள், திருவனந்தபுரம் அல்லது மதுரை விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் இந்த புண்ணிய தலத்தை அடையலாம். அருள் தரும் குலசை முத்தாரம்மன் திருத்தலம் சென்று, அவளை உள்ளம் உருக வேண்டி, வணங்கி அனைத்து நலன்களையும், மகிழ்ச்சிகளையும், செல்வங்களையும் பெற்று பக்தர்கள் சுபிட்சத்தோடு வாழலாம்.
இத்திருத்தலத்தில் பக்தர்களின் பாதம் பட்டு, தேவியின் பொற்பாதம் பணிந்து வணங்கி வழிபட்டால் பீடைகள், பிணிகள், கவலைகள் அனைத்தும் பஞ்சாய்ப் பறந்தோடும். காரியசித்தி உண்டாகும். அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
அதிகரித்து வரும் அன்னதானம்.....
குலசை முத்தாரம்மன் அருளால் மறு வாழ்வு பெற்ற பக்தர்கள், அதற்கு நன்றிக் கடனாக விதம், விதமாத நேர்ச்சைகளை செய்வதுண்டு. சமீப காலமாக நிறைய பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், அன்னதானம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் குலசேகரபட்டினம் ஆலயத்தில் தினமும் அன்னதானம் செழிப்பாக நடக்கிறது. கடந்த சில மாதங்களாக குலசை தலத்துக்கு வந்து அன்னதானம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் குலசையில் அன்னதானத்துக்கு குறைவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு ஊர்களிலும் உள்ள தசரா குழுவினரும் அடிக்கடி குலசைக்கு வந்து அன்னதானம் செய்கிறார்கள்.குலசைக்கு வரும் பக்தர்கள் முத்தாரம்மன் அருள் பெற்றதும் அன்னதானமும் பெற்று மன நிறைவுடன் திரும்புகிறார்கள்.
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலை 04639-250355 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான கூடுதல் தகவல்களை பெறலாம்.
இணையத்தள முகவரி: www.mutharammantemple.org.
இமெயில் முகவரி: gnamuthuaramman@gmail.com
நடைதிறப்பு மற்றும் பூஜை கால நேரம் விபரம்..
காலை 6.00 நடை திறப்பு, காலை 8.00 காலைச்சந்தி பூஜை
பகல் 12.00 உச்சிகாலப் பூஜை, பகல் 1.00 நடை சாத்தல்
மாலை 4.00 நடை திறப்பு, மாலை 5.30 சாயரட்சைப் பூஜை
இரவு 8.30 அர்த்த சாமப் பூஜை, இரவு 9.00 நடை சாத்தல்
நித்ய பூஜை கட்டளை..
இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நித்ய பூஜை நிரந்தரக் கட்டளைத் திட்டத்தில் பங்குபெற விரும்புபவர்கள் ரூ. 2000/- மட்டும் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தினால் தாங்கள் குறிப்பிடும் நாளில் தங்கள் பெயரில் பூஜை செய்யப்பட்டு அருள்தரும் முத்தாரம்மன் திருவருள் பிரசாதம் அனுப்பப்படும்.
விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் கட்டளை நாள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முத்தாரம்மன் கோவில்
» குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
» முத்தாரம்மன் வரலாறு
» குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு
» குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு
» குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
» முத்தாரம்மன் வரலாறு
» குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு
» குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum