திருவண்ணாமலை திருவண்ணாமலை
Page 1 of 1
திருவண்ணாமலை திருவண்ணாமலை
மாபெரும் தவசிகளும், சித்தர்களும், தேவர்களும் வணங்கிப் பேரின்பம் பெற்ற இடம் திருவண்ணாமலை. இந்த மலை மீதுள்ள கற்கள்கூட சிவலிங்கம்தான். அதனால்தான் சித்தர்களும், தேவர்களும், முனிவர்களும் திருவண்ணாமலையை தினமும் தரிசனம் செய்து வலம் வருகின்றனர்.
இது சித்தர் மலையாக சித்தர்கள் அரூப வடிவில் வணங்கும் பெருமை பெற்ற மலையாக இருக்கிறது. திருவண்ணாமலையில் பல அற்புதக் குகைகள் உள்ளன. இரண்டு மூன்று சிறிய பாறைகள் சேர்ந்து அமைந்து ஒருவர் மட்டுமே அமரக்கூடிய சிறிய குகையிலிருந்து அகலமான பாறைகளால் ஆன பலர் தங்கக் கூடிய விசாலமான கூடம் போன்ற அமைப்பு வரை பல குகைகள் காணப்படுகின்றன.
குகைகளின் அமைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் தோற்றம் காணுகின்றன. ஒருவரே இருக்கக்கூடிய குகையானாலும், பல பேர் தங்குமளவு பெரிய குகையானாலும் குளிர், மழை, வெயில் இவைகளிலிருந்து பாதுகாப்பளிக்கின்ற வகையில் தோற்றமளிக்கிறது.
ஒவ்வொரு குகையிலும் வாயில் சிறியதாக இருந்தாலும் அந்தச் சிறிய வாயிலில் தவழ்ந்து உள்ளே நுழைந்து விட்டால் பிரமாண்டமான கூடம் போன்ற இருப்பிடமாக இக்குகைகள் விரிந்துள்ளன. இவற்றில் சில குகைகள் மிகவும் மர்மம் நிறைந்தும் காணப்படுகின்றன.
மலைக்கு உள்ளே செல்ல பல வழிகளும், அவ்வழிகளினூடே சென்றால் அண்ணாமலையாரின் அருளால் ஆழ்ந்த சமாதி நிலையிலுள்ள சித்தர்களை தரிசிக்க முடியுமாம். வண்ணத்திக் குகை, பவழக்குன்றுக் குகை, அருட்பால் குகை, மாமரத்துக் குகை போன்றவை மக்கள் அறிந்த குகைகளுள் சில. இவைதவிர, வேறு பல சித்தர் குகைகளும் மலையின் மேல் இருக்கின்றன.
குகை மட்டுமல்ல, முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாசுபத தீர்த்தம் போன்ற பல தீர்த்தங்கள் இம்மலையில் உள்ளன. இப்படிக் குகைகளும், சுனைகளும் நிறைந்த இந்த மலையில் எண்ணற்ற சித்தர்கள் தங்கி அரூப வடிவில் இறைவனை சதாதியானம் செய்து இங்கு கிரிவலம் வந்த வண்ணமிருக்கிறார்கள்.
கிரிவலம் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் லிங்கங்களைப் படைத்து அதற்குப் பூசைகளும் செய்து வருகின்றனர். மலையின் உள்ளே ஒரு தெய்வீக உலகம் இயங்குகிறது. ஆலயம், வழிபாடு, தெய்வீக சஞ்சாரம், தவம், தியானம், யோகம் என்று அனைத்தும் நடைபெறுகின்றன. இம்மலையிலிருந்து பல்வேறு சிவத்தலங்களுக்கு ரகசியப் பாதைகள் செல்கின்றனவாம்.
சூட்சும உலகில் உலவக்கூடியவர்களால் மட்டுமே இந்தப் பாதைகளைப் பயன்படுத்த இயலும். உள்ளே இறைவன் யோக நிஷ்டையில் இருப்பதாகவும், அரைப் புண்ணிய ஆத்மாக்களும், மகான்களும், சித்தர்களும் தினசரி வணங்குவதுடன் வெளியே வந்து கிரிவலமும் செய்கின்றனராம். கற்பகத்தரு என்று புராணங்களில் கூறப்படும் மரம் ஒன்று இங்கு உள்ளது. பசியைப் போக்கக்கூடிய கனிதரும் மரம் ஒன்று இங்கு உள்ளது.
மிகப்பெரிய கனியையும் மிகப்பரந்த இலைகளையும் கொண்டது. இங்கு ஞான விருட்சம் ஒன்றும் இருக்கிறது. சித்தர்களுக்கு இங்குதான் இறைவனின் தரிசனம் கிடைக்குமாம். மலையில் ஒவ்வொரு பூசை வேளைக்கும் சங்கொலி முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கும். ரமண மகரிஷி விருபாட்சி குகையில் தவம் இருந்தபோது கிடைத்த அனுபவம் இந்த மலையின் ரகசியத்தை உறுதிப்படுத்துகிறது.
ஒருநாள் தியானத்திலிருந்த ரமணர் மலையில் ஓரிடத்தில் குகை ஒன்றினுள் நுழைந்து செல்ல அந்தக் குகையினுள் பல தவக்குடில்கள் நீர்நிலைகள், நந்தவனங்கள் நிறைந்த ஒரு தெய்வீக இடத்தைக் கண்டார். இந்த அனுபவத்தைப் பற்றி அப்பொழுது அவர் யாரிடமும் சொல்லவில்லை.
அதன்பிறகு, 1915-இல் அடி அண்ணாமலை கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது கோயிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைத் திருப்பணி செய்து கொண்டிருப்பவர்கள் கண்டார்கள். மலையில் உள்ள சுரங்கப்பாதையை அந்த திருப்பணியாளர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து ரமணரிடம் தெரிவித்தனர்.
மறுநாள் கிரிவலம் வரும்போது ரமணர் அந்தச் சுரங்கத்தைக் கண்டார். அதன் வெளிப்புரம், தாம் முன்பு தியானத்தின் போது கண்ட மலை வாயிலை பெரிதும் ஒத்திருந்ததைக் கண்டு வியந்தார். அது மலையுள் உள்ள தெய்வீக இடத்திற்குச் செல்லும் வாயில்களுள் ஒன்று என்பதை உணர்ந்தார். ஆனால் அதன் உண்மை நிலை குறித்து அங்கிருப்பவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை.
அங்கிருப்பவர்கள் அச்சுரங்க வழியை என்ன செய்வது என்று ரமணரிடம் கேட்க, அவரும், இதனை நாம் சோதனை செய்வது சரியல்ல. தெய்வீக சம்பந்தமான இதனை மூடிவிடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே அந்தத் தெய்வீக சுரங்கம் மூடப்பட்டது. ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளுக்குக்கூட மலையினுள் தேவலோகத்தைக் கண்ட அனுபவம் ஏற்பட்டதாம்.
கயிலாயம், மேரு முதலான இடங்களைவிட்டு புலத்தியர், வசிட்டர், மருச்சி, அகத்தியர், ததீச்சி, நகரு, பிருகு, அத்திரி, ஜாபாலி, கைமினி, ஜமதக்னி, பரதர், பிப்பலாதன், மதங்கர், குக்ஷி, மந்தகாணி, சாண்டில்யர், கன்யா, குமுதா, வர்ஷா, வால்மீகி, போதாயணர், கார்கமுனி, ரிஷ்யசிருங்கர், பதஞ்சலி, சனத்குமாரர், சனகர் என்று பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
இவர்கள் பதினெண் சித்தர்கள். அகத்தியர், குதம்பைச் சித்தர், போகர், இடைக்காடர், அருணகிரிநாதர், குகை நமசிவாயர், குருநமசிவாயர், ராமலிங்க அடிகளார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அம்மணி அம்மாள், ஈசான்ய ஞானதேசிகர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், மங்கையர்க்கரசி, விருபாக்ஷதேவர், சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, இசக்கி சித்தர், அடிமுடி சுவாமிகள், விசிறி சாமியார், இடியாப்பச் சித்தர், ஓம் சாது, கயிறு சுவாமிகள் மற்றும் இன்னும் பெயர் தெரியாத சித்தர்கள் பலர் வாழ்ந்தும், நடமாடியும், தவம் செய்தும், ஜீவ சமாதியடைந்தும் இருக்கிறார்கள்.
இப்படிச் சித்தர்களும் மகான்களும் வாழும் உலகமாக திருவண்ணாமலை விளங்குகின்றது. திருவண்ணாமலை ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முக்தி மண்டபத்தில் அருணாசலேஸ்வரர், யோகியாக சூட்சும வடிவில் இன்றைக்கும் சித்தர்களுக்குத் தரிசனம் தருவதாகவும், அதன்பொருட்டே சித்தர்கள் மலையேயன்றி இந்த ஆலயத்தையும் சூட்சும நிலையில் வழிபடுவதாகக் கூறப்படுகின்றது.
திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்கள் `மலைவலம்` வருதலையே பிரதான வழிபாடாகக் கொண்டவர்கள். அதனால்தான் ஜீவசமாதி அடைந்த பின்னரும் அவர்கள் அரூப நிலையில் கிரிவலம் வந்த வண்ணமிருக்கின்றனர்.
கிரிவலப் பாதையில் பாணிபத்திரர், ஈசான்ய தேசிகர், அம்மணி அம்மன் கோபுரம் கட்டிய அம்மணி அம்மாள் (ஈசானிய குளத்தினருகில் உள்ளது) காஞ்சீபுரம் பாலாஜி சாமிகள், கௌதம முனிவர் ஆசிரமம் எதிரில் அடிமுடி சித்தர், நேர் அண்ணாமலை அருகில் கயிறு சாமி என்கிற பட்டிணத்து சாமி, பஞ்சமுகம் அருகில் இசக்கி சாமி, பிரம்மானந்த சாமி சமாதிகள் காணப்படுகின்றன.
இந்தச் சித்தர்களின் சமாதிகள் காணப்படுகின்ற அளவு அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. அந்தச் சமாதியில் பூசை செய்யும் அன்பர்களிடம் விசாரித்தால் உண்மை தகவல்களைவிட கட்டுக்கதைகள்தாம் வெளிப்படுகின்றன. ஆகவே, கிடைத்த ஓரளவுக்கு உண்மையான தகவல்கள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அடிமுடி சித்தர் என்ற சித்தர் மலைவலம் வருதலையே பிரதான வழிபாடாகக் கொண்டவர். தம் உடல் முடியாத நிலையிலும் கூட மலைவல வழிபாட்டைத் தொடர்ந்தார். தம்மால் நடக்கவியலாத கட்டத்தில் வைக்கோலால் ஒரு திண்டுபடுக்கை போல் செய்து அதில் படுத்துக்கொண்டு வைக்கோற் பிரிகளால் கயிறு செய்து திண்டில் பிணித்து சில சிறுவர்களிடம் கொடுத்து வண்டி போல் இழுத்துக் கொண்டு மலை வலம் வரச் செய்வாராம்.
ஜடாமுடி சித்தர், சிவபெவாளச் சித்தர், வேப்பிலைக் கட்டி சித்தர், கோணிப்படைக் கோவணச் சித்தர், சப்த கந்தலிங்க அடியார் ஆகிய சித்தர்கள் இம்லையில் உறைந்துள்ளனர். கோணியை கோவணமாக அணிந்தபடி மலை வலம் வந்த கோவண சித்தர்பிரான் பஞ்சமுக லிங்க தரிசனம் செய்யுமிடத்தில் சமாதியானதாகக் கூறப்படுகிறது.
சப்த கந்தலிங்க அடியார் என்பவர் தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வந்தார். இந்த சித்தர் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம். இவரது உடலிலிருந்து ஒருவித நறுமணம் வீசுமாம். இவரது தலைமுடி பொற்கம்பி இழைகளாக இருக்குமாம். ஆனால் இவைகள் தாமாக எப்போதுமே உதிர்வதில்லையாம்.
மாத சிவராத்திரி தொடங்கி ஏழு நாட்கள் ஏழேழு நாட்கள் இவர் கிரிவலம் செய்யத் தொடங்கும் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடி உதிருமாம். ஆனால், அப்படி உதிர்ந்த முடிகள் நம் கண்களில் காண முடியாதாம். அந்தப் பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றுமாம்.
இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. அவை சப்தகந்த லிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன. ஒவ்வொரு கிரிவலத்தின் போதும் இவர் தலைமுடி உதிர உதிர இறைவனே அவருக்குக் காட்சியளித்து முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது என ஏழு கந்தங்களுக்கும் செல்ல அப்படிச் சொல்லிய இடங்களில் தோன்றிய லிங்கங்களே சப்தகந்த லிங்கங்கள் என்றும் கூறப்படுகின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருவண்ணாமலை பூஜைகள்
» திருவண்ணாமலை
» திருவண்ணாமலை
» திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» திருவண்ணாமலை
» திருவண்ணாமலை
» திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
» திருவண்ணாமலை சிறப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum