தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்

Go down

சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் Empty சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்

Post  meenu Mon Apr 01, 2013 11:30 am


தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து தெய்வங்கள் அதனை நிறைவேற்றித் தருவதும், அந்த நன்றிக்கடனுக்காக தெய்வங்களுக்கு மனிதன் நேர்த்திக்கடன் செலுத்துவதும் பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கம்தான்.

ஆனால் அந்த நேர்த்திக்கடனானது, குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவது, அபிஷேக ஆராதனை செலவுகளை ஏற்றுக்கொள்வது, கோவிலுக்கு பொருட்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது என்றுதான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் தன் உயிரை பிழைக்க வைத்த தெய்வத்துக்கு, பூரணமாக குணமடைந்ததும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக் கிடந்து, கோவிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் முறை என்பது கேள்விப்படாத ஒன்றாகத் தான் இருக்கிறது.

மகா மாரியம்மன்.......... கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வலங்கைமான் என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் கோவிலில் தான் இந்த ஆச்சரியம் அளிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

வாருங்கள் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை கொஞ்சம் வலம் வரலாம். வலங்கைமான் கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் மகா மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் அருகிலேயே ஆலங்குடி குரு பகவான் தலமும், பைரவ உபாசகர் குரு பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் பைரவர் அருள் சுரக்கும் தலமும் உள்ளது.

குழந்தை வடிவில்......... வலங்கை மகா மாரியம்மன் உருவில் சிறியவள்; எளிமையானவள். ஆனால் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளை விட பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள். குழந்தையே இந்த தலத்தில் மாரியம்மனாக வீற்றிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.

சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் வலங்கைமான் ஊரின் அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோவில் பக்கத்தில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருவர் எடுத்துச் சென்று 'சீதளா' என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். இந்த நிலையில் அந்த குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டது.

நாகதோஷம் தீரும்......... அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்த குழந்தை, 'எனக்கு உடல் இல்லையே தவிர, உயிர் இருக்கிறது' என்று கூறி மறைந்தது. மற்றொரு முறை ஊரில் உள்ள பெண் ஒருவரின் மீது அருள் வடிவில் வந்த அம்மன், 'நான் தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுபவர்களுக்கு அபயம் தந்து காப்பேன்' என்று அருளியது.

இதனை கேட்டதும் ஊர் மக்கள், குழந்தைக்கு சமாதி எழுப்பிய இடத்திலேயே கோவில் கோவில் எழுப்பினர். அந்த தோற்றம் அம்மனே சீதளாதேவி மகா மாரியம்மனாக இருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். நான்கு கரங்களுடன், வலது காலை தொங்க விட்டு, இடது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசனத்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார்.

வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியும், இடது மேற்கரத்தில் சூலமும், இடது கீழ்கரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் இரு நாகங்கள் உள்ளன. இதனால் இந்த தல மாரியம்மனை தீபமேற்றி வழிபட்டு, அர்ச்சித்தால் நாகதோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நோய் தீர்க்கும் அம்மன்............ இத்தலத்தின் உள் சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், இருளன், பேச்சாயி, பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்த தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும், பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாக சர்க்கரை பொங்கலிட்டு படைத்து வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

உடலில் எந்த பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கபிரதட்சணம் வருவது இந்த தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகி விடும்.

கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண் பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும். கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண் மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.

கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சையின் சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.

பங்குனி மாத திருவிழா......... இந்த ஆலயத்தில் ஆவணி மாத தெப்பத் திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. விழாக்களின் முக்கியமானதாக பங்குனி மாதத்தில் நடைபெறும் 'பாடைக் காவடித் திருவிழா' உள்ளது. உயிருக்கு போராடுபவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், 'எனக்கு உயிர்ப் பிச்சை கொடு தாயே!' என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேறியதும், மாரியம்மனுக்கு பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். இந்த பாடைக் காவடி நேர்த்திக் கடன் செலுத்தும் திருவிழாதான் பங்குனி மாதத்தில் சிறப்பாக நடை பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். எட்டாம் நாளான பங்குனி மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் பாடைக் காவடி திருவிழா நடத்தப்படும்.

போலீசாரின் மண்டகப்படி... வலங்கைமான் காவல் நிலையத்தில் 1942-ம் ஆண்டு ஒரு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் போது பாடைக் காவடி மற்றும் அலகு காவடி போன்றவை எடுக்கக் கூடாது என்று அந்த போலீஸ் அதிகாரி தடை விதித்தார்.

அந்த வருடம் பாடைக்காவடி எடுத்து வந்த பக்தர்களை, வாய்க்கு வந்தபடி திட்டியதோடு, தன் கைப்பிரம்பால் அவர்களை விரட்டியடித்தார். பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கண்டு துடிக்காமல் இருப்பவர் தாயல்லவே!. சிறிது நேரத்தில் அந்த போலீஸ் அதிகாரியின் கண்பார்வை திடீரென்று பறிபோனது. 'கண் தெரியவில்லையே!' என்று கதறிய அந்த அதிகாரி, அம்மை நோயாலும் பாதிக்கப்பட்டார்.

அகிலத்தை காக்கும் அம்மனின் பக்தர்களை துர் வார்த்தைகளால் தூற்றியதால், அம்மனின் கோபத்திற்கு கிடைத்த சாபம் இதுவென்று அப்போது தான் போலீஸ் அதிகாரிக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக ஒரு பேப்பரையும், பேனாவையும் அங்கிருந்த ஒருவரிடம் வாங்கி, 'இனி மேல் எந்த அதிகாரியும் என்போல் பாடைக் காவடி விழாவுக்கும், இறை காரியத்திற்கும் தடையாக இருக்காதீர்கள்' என்று எழுதி கையெழுத்திட்டார்.

சற்று நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அன்று முதல் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் இருந்து பங்குனி மாத திருவிழாவின் போது ஒரு நாள் மண்டகப்படி இன்றளவும், பயபக்தியுடன் அம்மனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாடைக்காவடி......... தங்களது வேண்டுதல் நிறைவேறி, பாடைக் காவடி செலுத்தும் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருக்க வேண்டும். ஒருவர் இறந்தால் எவ்வாறு பாடைக் கட்டி அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதோ, அதே போலவே இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படும். இந்த தலத்தில் அருகில் ஓடும் குடமுருட்டி ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நீராடுவார்கள்.

பின்னர் அவர் பாடையில் படுக்க வைக்கப்பட்டு, அதை நான்கு பேர் தூக்கிக் கொண்டு கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வருவார்கள். அப்போது பாடையில் படுத்திருப்பவரின் தலையில் தாடையுடன் சேர்த்து கயிறு கட்டப்பட்டிருக்கும். கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். கோவிலின் முன் மண்டபத்தில் பாடையை கொண்டு வந்து இறக்கியதும்,
கோவில் பூசாரி வந்து அன்னையை வேண்டிக்கொண்டு, அபிஷேக நீரை பாடையில் இருப்பவரின் மீது தெளித்து விபூதி பூசி எழச் செய்வார்.

அத்துடன் நேர்த்திக் கடன் முடிவடையும். நேர்த்திக் கடன் செலுத்தியவர் அம்மனை தரிசித்து விட்டு செல்வார். பங் குனி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இங்கு வரும் பாடைக் காவடியின் எண்ணிக் கையை வைத்தே இந்த அம்மனின் அருளையும், கருணையையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum