தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவில்

Go down

மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவில் Empty மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 2:45 pm

கோவை-பாலக்காடு சாலையில் கோவையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது நவக்கரை என்ற தலம். கோவை-பாலக்காடு சாலையி லேயே அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கு உள்ள ஆலயத்தின் பெயர் அருள்மிகு மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் திருக்கோவில்.

உயரமான நந்தி...............

ஆலயம் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உள்ளே நுழையும் முன் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் எதிரே நந்தியின் திருஉருவம் உள்ளது. தென் திசை நோக்கி காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான நந்தியை நாம் அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு பெரியது இந்த நந்தி.

இந்த நந்தி பகவானின் உருவம் 31 அடி உயரமும், 41 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டது. ஆசியா கண்டத்திலேயே பெரிய நந்தி இதுதான். மாத பவுர்ணமிகளில் இந்த நந்தி பகவானுக்கு சிறப்பான முறையில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த பாலாபிஷேகம் எப்படி நடக்கிறது தெரியுமா? சுமார் 5 ஆயிரம் லிட்டர் பாலை மோட்டார் வைத்து குழாய் மூலம் உயரே சிலை மீது பீச்சி அடித்து அபிஷேகம் செய்வது கண்கொள்ளா காட்சியாகும்.

அம்மன் சன்னிதி.............

உள்ளே நுழைந்து, பிரகாரத்தில் நடந்து வலது புறம் திரும்பியதும் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் அருள்மிகு தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னையின் எதிரே ஸ்தூபியும் அசுர நந்தியும் உள்ளன. அன்னையின் கருவறை நுழைவாசலின் இடதுபுறம் கிருஷ்ணனும், வலதுபுறம் சிவபெருமான் திருமேனிகளும் உள்ளன.

தென்மேற்கு மூலையில் குரு, கேது, சிவனும் கூடவே கன்னி சர்ப்பமான நாகக் கன்னியின் திருமேனி உள்ளது. இந்த நாகக்கன்னியின் திருமேனியில் பின்புறம் ஆதிசேஷன், வலது புறம் தட்சிணாமூர்த்தி, இடது புறம் சிவலிங்கம், பாதத்தின் கீழ் பிரம்மா ஆகியோர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த அம்மனுக்கு மனித கால் கிடையாது.

பாம்பு கால்களைக் கொண்ட இந்த அன்னையின் கையில் தாமரைப் பூ உள்ளது. இந்த நாகக் கன்னியை வணங்குவோருக்கு அனைத்து சுப காரியங்களும் நல்ல முறையில் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். அடுத்து மேற்கு பிராகாரத்தில் அருள்மிகு அய்யப்பனும், சனி பகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

புலி மேல் அய்யப்பன்............

இங்குள்ள அய்யப்ப சுவாமியின் திருமேனியின் உயரம் 11 அடி. புலி வாகனத்தில் அமர்ந்து மலர்ந்த முகத்துடன் அருள்பாலிக்கிறார் அய்யப்பன். தென் மேற்கு பிரகாரத்தில் அருள்மிகு வலம்புரி செல்வ விநாயகரின் சன்னதி உள்ளது.

இக்கோவிலின் தல வரலாறு என்ன?

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடந்த போட்டியில், பாற்கடலில் அமுதத்தை அருந்த வேண்டி தேவர்கள் கலியுகை ஆளும் மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மனை வேண்டி மலையாள தேசத்தில் யாகம் செய்தார்கள். யாகத்தின் போது தேவர்கள் கண்முன் பகவதி அம்மன் தோன்றினாள்.

அப்போது, சிவபெருமானுக்கும், லட்சுமி நாராயணனுக்கும் காட்சி தந்து தேவர்களுக்கும், மானிடர்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நலம் பெறச் செய்யுமாறு கட்டளையிட்டாள். அதை ஏற்ற சிவனும் லட்சுமி நாராயணனும் புறப்படும் போது சிவனின் வாகனமான நந்தி ஈஸ்வரன், லட்சுமி நாராயணனைப் பார்த்து, அய்யனே! கலியுகத்தைக் காக்கும் தேவியின் அவதாரத்தை நீங்கள் கண்டீர்கள். அக்காட்சியை காணும் பாக்கியம் எனக்கு இல்லையே என்று கேட்டார்.

நந்திக்கு தரிசனம்................

அப்போது லட்சுமி நாராயணன் நாங்கள் கண்ட காட்சிதனை கண்டு நீயும் மகிழ்வாயாக என்று கூறினார். நந்தி பகவான் உற்சாகமாக விண்ணுயர வானுயர எழுந்து நின்ற போது பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரிய, உடனே லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு நந்தீஸ்வரா, சாந்தமெனும் ரூபத்தில் மண்டியிட்டு பூமியை நோக்கி பார் என்று கூற, அதன்படி நந்தி உட்கார்ந்து மண்டியிட்டு பூமியை உள்நோக்கி பார்க்கும்போது தேவி துர்க்கை அம்மன் சிவனுக்கும் லட்சுமி நாராயணனுக்கும் காட்சி தந்ததைக் கண்டு மகிழ்ந்தார்.

நந்தி பகவான் கண்ட காட்சியினை சனி பகவான் கண்டார். தன்னை மறந்து உற்சாக நிலையில் தனது வலது காலைத் தூக்கி காகத்தின் மீது வைத்து, என்னைக் காண வருவோருக்கு இப்பூவுலகில் உள்ள ஏழரை நாட்டு சனி, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்க, நெய் விளக்கேற்றி என்னை வலப்புறமாக சுற்றி வந்தால் போதும் என அருள்வாக்கு அருளினார்.

தங்களது அனைத்து தோஷ நிவர்த்திக்காக இன்றும் சனிபகவானுக்கு நெய் விளக்கேற்றி வலப்புறமாகச் சுற்றி நிவர்த்தி பெறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். சித்ரா பவுர்ணமியன்று இந்த ஆலயத்தில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

அன்று தேவி துர்க்கா பகவதியின் திருமேனியில் சாத்தப்பட்டிருக்கும் மூலிகைகளால் ஆன சந்தனத்தை பிரசாதமாக தருகின்றனர். இந்த மூலிகை சந்தனத்தை சூரிய ஒளியோ, மின் ஒளியோ விழாமல் உட்கொண்டால் தீராத பல வியாதிகள் தீரும் என நம்புகின்றனர் பக்தர்கள். அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெறுகின்றனர்.

கிரக தோஷங்கள்...............

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலயம் வந்து கிரக நிவர்த்தி பெற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் குரு பூஜை விழா சிறப்பாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாத சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு காலை 6 மணி முதல் சனி யாக பூஜை (வேள்வி) வேத விற்பன்னர்களாலும் நம்பூதிரிகளாலும் நடத்தப்படுகிறது. இந்த வேள்வியில் பலவித மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேள்வியில் கலந்து கொள்வதால் அனைத்து கிரகதோஷங்களும் விலகும், நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி இங்கு மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. தேவி துர்க்கா தேவியையும் ஆசியாவிலேயே பெரிய நந்தியையும் தரிசிக்க நாமும் ஒரு தடவை நவக்கரை செல்லலாமே.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum