தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேதங்கள் வழிபட்ட வேதபுரீஸ்வரர் கோவில்

Go down

வேதங்கள் வழிபட்ட வேதபுரீஸ்வரர் கோவில் Empty வேதங்கள் வழிபட்ட வேதபுரீஸ்வரர் கோவில்

Post  birundha Sat Mar 30, 2013 10:03 pm

ஸ்தல வரலாறு.....

சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. அதே திருவேற்காட்டில் உலகை ஆளும் ஈசனுக்கும் தனி ஆலயம் அமைந்துள்ளது. பாலாம்பிகை சமேதராக உள்ள இந்த தலத்தின் இறைவனுக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். கருமாரி அம்மன் கோவிலில் இருந்து தென் மேற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

வேதங்கள் வழிபட்ட தலம்..........

நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று, ஈசனை வழிபட்ட காரணத்தால், இந்த இடம் வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தைக் கொண்டு, நிமிர்ந்து நிற்கும் இந்த ஆலயத்தில் வேதபுரீஸ்வரர் சுயம் புவாய் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் கருவறைக்கு எதிரில் நந்தியும், முன்னதாக கொடி மரம், பலிபீடம் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறத்தில் ஈசனும், அம்பாளும் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு திருக்காட்சி கொடுக்கும் தரிசனம் காண கண்கோடி வேண்டும். அருகிலேயே தலைமகனான கணபதியுடன் சிவனும், பார்வதியும் எழுந்தருளிய சன்னதி அமைந்துள்ளது. மூலவரின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவம் கொண்டதாகஅமைக்கப்பட்டுள்ளது.

பைரவர் வழிபாடு...........

விநாயகர், தட்சிணாமூர்த்தி, பொல்லாப்பிள்ளையார், நால்வர், 63 நாயன் மார்கள், அநபாய சோழன், சேக்கிழார், காசி விசுவநாதர், விசாலாட்சி, சண்டி கேசுவரர், துர்க்கை, பிரம்மா முதலிய தெய்வங்கள் உட் சுவற்றில் எழுந்தருளியுள்ளனர். கருவறை கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அருள்புரிகிறார்.

மாத சிவராத்திரி நாட்களில் மாலை வேளையில் லிங்கோத்பவருக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் வாழ்க்கை இனிதாகும். கல்வி, ஞானம், செல்வம், இறையருள் கிட்டும். பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன் அருகில் நடராஜர் சிவகாமி அம்பாள் தனி சன்னதியில் உள்ளனர். அம்பிகையின் சன்னதி வாயில் அருகில் பைரவர் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல பைரவரை சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலியவை விலகும்.

பரசுராமர் பூஜித்த ஈசன்..........

63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம் இது. இத்தல முருகப்பெருமான் அரு ணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றவர். ராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும் வலதுபுறத்தில் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன.

அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், மற்றும் குபேரன் ஆகியோரும், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். பாரதப் போரில் பங்கேற்க விரும்பாத பலராமர், தீர்த்த யாத்திரை சென்ற போது திருவேற்காட்டில் பூஜித்தார்.

பலராமர் பூஜித்த லிங்கம் 'பலராமேசர்' என்ற திருநாமத்துடன் திரிபுராந்தகேச லிங்கத்திற்கு தெற்கில் அமைந்துள்ளது. இதே போல் பரசுராமரும் திருவேற்காட்டிற்கு வந்து இத்தல மந்தாகினி தீர்த்தத்தில் நீராடி வேல மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை பூஜித்துள்ளார். பின்பு சிவலிங்கம் ஒன்றை அமைத்தும் வழிபட்டுள்ளார். அவர் பூஜித்த லிங்கம் 'பரசுராமேஸ்வரர்' என்ற பெயரில் உள்ளது.

வலிமை இழந்த சக்ராயுதம்.........

தசீசி என்ற சிவனடியாரின் சக்தியால் திருமாலின் சக்கரம் தனது வலிமையை இழந்தது. திருவேற்காட்டில் ஈசனை வழிபட்டு திருமால், தனது சக்ராயுதத்தின் வலிமையை மீண்டும் பெற்றார். திருமால் இத்தல ஈசனை வழிபட வந்தபோது, ஆதிசேஷனும் வந்து ஈசனை வழிபட்டது.

அப்போது திருவேற்காடு வந்தடைந்தவர்களை தீண்ட மாட்டேன் எனக் கூறியதாம். எனவே இந்த தலம் விஷம் தீண்டா பதி என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்ன திகள் தாமரை பூ வடிவில், எண்கோண மேடையில் உட்பிரகாரத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

முருகர் வழிபட்ட சிவபெருமான்.....

இந்த தலத்தில் முருகப்பெருமான், சுப்பிரமணியராக நின்ற கோலத்தில் இரண்டரை அடி உயரத்தில் காட்சிய ளிக்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர், இந்த தலத்தில் உள்ள வேத புரீஸ்வரரை முருகப்பெருமான் வந்து வழிபட்டுள்ளார். முருகப்பெருமான் பூஜித்த ஸ்கந்த லிங்கம், முருகப் பெருமானுக்கு முன்பாக அதே சன் னதியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் முருகப்பெருமான் உரு வாக்கிய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது. இந்த தீர்த் தத்தில் தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழ மைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கட்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரை வழிபட்டால் சகல தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

கருமாரி அம்மன் திருஉருவம்..........

வேதபுரீஸ்வரர் கோவில் பிரகாரத் தூணில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, காலடியிலும் நாகம் கொண்டு தேவி கருமாரியம்மன் வீற்றிருக்கும் சிற்பமானது சிறப்பு வாய்ந்தது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலின் கருவறையில் முதலில் நாகப்புற்று, பின்பு அம்மனின் தலை மட்டும் வெளியில் தெரிந்தது.

சில காலம் கழித்து கருமாரி அம்மனின் முழு உருவத்தையும் கருவறையில் பிரதிஷ்டை செய்ய பக்தர்கள் எண்ணம் கொண்டனர். அப்போது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் பிரகார தூணில் இருந்த திருக்கோலமே கருமாரிஅம்மனின் தோற்றம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே வேதபுரீஸ்வரர் கோவில் தூணில் உள்ள கருமாரி அம்மனை வழிபட்டாலே, தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டதற்கான பெரும் புண்ணியம் கிட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன் சாவடி என்ற ஊரில் இருந்து பிரிந்து செல்லும் கிளை சாலையில் 2 கிலோ மீட்டர் சென்றால் திருவேற்காடு வரும். திருவேற்காடு பஸ் நிலையத்தின் வடக்கே கருமாரி அம்மன் கோவில் உள்ளது. மேற்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum