தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி

Go down

நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி Empty நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி

Post  ishwarya Fri Mar 29, 2013 4:43 pm

சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று பொய்யான நம்பிக்கை தர விரும்பவில்லை. ஆனால் நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் ரஜினிகாந்த்தை வாழ்த்தி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் பேசினர். பத்து நிமிடம் மட்டுமே ரஜினி இந்த விழாவில் இருப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் வந்திருந்தவர்கள் பேசும் முன்பே வந்துவிட்ட ரஜினி அனைவரும் பேசி முடிக்கும் வரை, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ரசித்து கேட்டார். விழாவில் 35 நிமிடங்கள் ரஜினி பேசினார். அவர் அதிகநேரம் பேசிய அரசியல் மேடை இதுவே. விழாவில் ரஜினி பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான். அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அவர்களின் பெற்றோர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டனர். அதை இங்கே சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் இனி சென்னையில் இருக்க வேண்டாம், பிறந்தநாளன்று என்ற முடிவுக்கு வந்தேன். வெளியூருக்கு… என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது. மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. 500 ரூபாய் சம்பாதிக்கலாம். அல்லது 2000 சம்பாதிக்கலாம். ஆனால் 1000 சம்பாதிக்க முடியாது. இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது. உயிர் நண்பன் மரணம்… நேத்து என் பிறந்த நாள் அன்று நான் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 12.12.12 என்பதை அவாய்ட் பண்ணக்கூடாது, அது நல்லாருக்காது. அதுவும் நான் உடம்பு சரியில்லாம இருந்து வந்த பிறகு ரசிகர்கள்லாம் பார்க்க ஆவலா இருக்காங்க. அவர்களை சந்திக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. சரி இப்ப சந்திக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோது, என்னுடைய அருமையான நண்பன், உயிர் நண்பன், எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனை வெளிய நெறய பேருக்கு தெரியாது. ரொம்ப சிலருக்குத்தான் தெரியும். அந்த நண்பன், எனக்கு அனுமான் மாதிரி இருந்த காந்தி… மாரடைப்பால் 10-ம் தேதி இறந்துபோனான். 11-ம் தேதி அடக்கம் பண்ணிட்டு வந்தேன். அந்த சோகத்தை மைன்ட்ல வச்சிருந்து வருத்தத்தோட இருந்தேன். என் அப்பா இறந்திருக்கார், அண்ணா இறந்திருக்கார், அம்மா இறந்திருக்காங்க… ஆனா அதைவிட எனக்கு அதிக வேதனையைத் தந்தது காந்தியின் மரணம். அப்பா இறந்த போது ரொம்ப வயசாகியிருந்தார். அண்ணன் இறந்ததுக்கு காரணமிருக்கு. அம்மா இறந்தபோது நான் சின்னப் பையன். இன்னும் சில நண்பர்களும் இறந்திருக்காங்க. காந்தியின் இறந்து போனப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா… சில வியாதிகள் உடம்பிலிருக்கும்போது, அதை வெளிய யாரும் சொல்றதில்லை. வெளிய சொன்னா தொந்தரவா இருக்கும்னு நினைச்சி உள்ளயே வச்சிக்கிட்டு காந்தி அதை யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு சில தினங்களுக்கு முன் காந்தி மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. பத்தாம்தேதி கேட்டப்ப இப்போ பரவால்லன்னாங்க. ஆனா அன்னிக்கு நைட் இறந்து போயிட்டதா செய்தி வந்தது. ஒருவேளை அங்கே உடனே போய் அவனைப் பார்த்து, வேற ஆஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணியிருந்தா காந்தி பொழச்சிருப்பானோ என்ற உறுத்தல் எனக்கு இருந்துகிட்டே இருந்தது. அந்த பெய்ன்ல நான் நேத்து முழுக்க தூங்கவே இல்லை. அந்த சோகத்தை மறக்க முடியாம இருந்தேன். ரசிகர்கள் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேட்டேன். எட்டு ஒன்பது மணிக்கு வருவாங்கன்னு சொன்னாங்க. என் வேதனையை மறக்கடித்த ரசிகர்கள்… ஆனா காலைல 6 மணிக்கே முன்னூறு நானூறு பேர் வந்திட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் குளிச்சி பூஜை முடிச்சி வெளிய வந்து உங்களையெல்லாம் பாத்தேன். அப்போ என் மனம் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்களையெல்லாம் பாத்தாதான் அந்த வலி தீரும்னு ஆண்டவன் முடிவு செஞ்சிருக்கான். அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி.. உங்களைப் பார்த்ததும் கிடைச்சது. அந்த காந்தி என்ற நண்பனின் மரணம் தந்த வலியை உங்களை பார்க்க வைத்து தீர்க்க வச்சது நிச்சயம் ஆண்டவன் செயல்தான். கூட்டம் சேர்க்க முயன்றதில்லை… அதுக்கடுத்த நாள் வெளியில் போகலாம்னு நினைச்சேன். ஆனால் அன்னிக்கு இதுபோல நிகழ்ச்சி இருக்கு, ரசிகர்கள்லாம் உங்களைப் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால இங்க வந்திருக்கேன். நான் பொதுவா எப்பவுமே கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணதில்லை. ஏன்னா அதுக்கு எனக்கு அவசியமே இல்லை. கூட்டம் சேர்த்தா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். என்னால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் கூட்டம் சேர்ப்பதில்லை. அதனாலதான் 12-ம் தேதி சென்னையிலேயே இருக்கணும்னு பத்து நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டாலும் அதை பதினொண்ணாம் தேதி ராத்திரிதான் எல்லோருக்கும் சொன்னேன். நான் முன்கூட்டியே சொன்னா நிறைய பேரு வெளியூர்கள்லருந்து பஸ், லாரி, வேன்னு கிளம்பி வருவாங்க. அப்படி வந்த பிறகு பாதுகாப்பா பத்திரமா திரும்பிப் போகணுமேன்னுதான், 11-ம் தேதி சொன்னேன். மற்றவங்களுக்கு தொந்தரவு கூடாது… ரசிகர்கள் பாதுகாப்பா இருக்கணும் என்பதால்தான் நான் முன்கூட்டி இதைச் சொல்லல. என் ரசிகர்கள் வெறியனுங்க… 100 பேர் ஆயிரம் பேருக்கு சமம்! யாருக்கும் சொல்லலியே… கூட்டம் வரலன்னா என்ன பண்றது, வெளிய மட்டமா பேசுவாங்களேன்னு சொன்னாங்க. பரவால்ல… நூறு பேர் இருந்தா கூட போதும். என் ரசிகர்கள் நூறு பேர் ஆயிரம் பேருக்கு சமம்… அவங்க பிரம்ம ராட்சசர்கள்.. வெறியனுங்க… அரசியல்… இங்க வந்திருப்பவர்கள் அரசியல் பற்றி பேசினார்கள். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் இங்கதானிருக்கு. வாகை சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடம் போய் ஐயா நான் ரஜினி விழாவுக்கு போகணும்னு சொல்லி கேட்டிருந்தா போய் வாங்கன்னு அனுப்பியிருப்பார். அதே போல ஜெயலலிதாகிட்ட சரத்குமாரும் ராதாரவியும் கேட்டிருந்தாலும் அனுப்பியிருப்பார். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் தமிழ் மக்களைச் சேர்ந்தவன். தமிழ் மக்கள்தான் என்னை வாழ வைத்த தெய்வங்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். கோழையாக மட்டும் சாகமாட்டேன்… 1996ல் நடந்த அரசியல் நிகழ்வுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, போட்டோவையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன். அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க பிரசாரத்துக்கு கூட வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. உடனே, நீங்கள் பிரச்சாரத்துக்குக் கூட வரவேண்டாம். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். கோழையாக வாழ விரும்ப மாட்டேன். அதன் பிறகு ஆட்சியிலிருந்தவர்கள் நல்லது செய்தார்களா, கெட்டது செய்தார்களா என்றெல்லாம் பார்க்காமல், நான் முதலில் ஆதரித்து விட்டேன் என்பதற்காக, 5 வருடங்கள் அவர்களை தொடர்ந்து ஆதரித்தேன். கூட்டணி தர்மத்தை மதித்தேன். அதன் பிறகு நான் யாரையும் ஆதரிக்கவில்லை. என் அருமையான நண்பர் கலைஞர் – அவரை அருமை நண்பர் என்று கூப்பிட எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நண்பர் என்று அழைப்பதால், நானும் அப்படியே குறிப்பிடுகிறேன்- நான் எப்போது சந்தித்தாலும் அரசியல் பேசமாட்டார். நானாக பேசினாலும் கூட, இல்லை தம்பி வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அதன் பிறகு அவரிடம் நான் அரசியல் பேசவே இல்லை. அதன் பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது கூட நம்ம படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. நாம் கோழைகள் அல்ல என்பதைக் காட்ட. அவர்கள் சொன்ன விஷயம் சரி. ஆனால் சொன்ன விதம் தவறு. அதை எதிர்க்கவே களமிறங்கினேன். அவர்கள் ஒழுங்கா, கரெக்டா, நியாயமா சொல்லலேன்னுதான் எதிர்த்தேன். அன்றைக்கே நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். படங்களில் அன்று விட்ட சிகரெட்டை இன்றுவரை தொடவில்லை. வீம்புக்காக அதை படங்களில் செய்திருக்கலாம். ஆனால் சொன்ன விஷயம் நல்லது. அதனால் அதை மதித்துவிட்டுவிட்டேன். பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்… அரசியல் சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை. மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சி தலைவரும் சந்தோஷமா.. நிம்மதியா இல்லீங்க. அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான்… அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று மனசார ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம்’ அப்படி இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. தயவு செய்து அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு கட்சியின் பலமே, அஸ்திவாரமே அதன் தொண்டர்கள்தான். தொண்டர்கள் சரியாக இருக்க வேண்டும். தங்கள் தலைவர்கள் மனநிம்மதியோடு இருந்து, நல்லது செய்ய பாடுபட வேண்டும். நேரம் காலம் கனிஞ்சா… ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது. நேரம், சூழல் நன்றாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். நேரமும் சூழலும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். ஒருத்தர் வந்து தன்னுடைய அருமை பெருமைகளாலோ, பேச்சாலோ, உழைப்பாலோ ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்காது. நேரம்தான் அரசியல் மிக முக்கியமான விஷயம். இல்லாவிட்டால், காமராஜர் மாதிரி ஒரு தலைவர் தோற்றிருப்பாரா? யாராவது நினைச்சிப் பாத்திருப்பாங்களா? நேரம்தான் காலம்தான் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது,” என்றார் சூப்பர் ஸ்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum