தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விபூதி விநாயகர்

Go down

விபூதி விநாயகர் Empty விபூதி விநாயகர்

Post  meenu Fri Jan 18, 2013 11:12 am

சோழர் கால தொன்மையில் இந்த கோயில் இன்றும் மிளிர்கிறது. இது பஞ்ச ஆரண்யத் தலங்களுள் ஒன்று. கிழக்கு நோக்கி, ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புற மண்டபத்தில் ஈசனும், அம்பாளும் தனித்தனி சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர்.

ராஜ கோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி உள்ளது.. வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது.

இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். ஏதோவொரு அரூபமான விவரித்தலுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று அங்கு மையமிட்டிருப்பதை பாதாளேஸ்வரர் சந்நதியில் உணரலாம். வராகர் அதல, விதல, சுதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான்.

இத்தல ஈசனை சரணாகதி உற்றால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது தலம் கூறும் ரகசியம்.

அம்பாளின் சிறப்புகள்:

அம்பாள், நேற்றுதான் திருமணம் முடித்த பெண்போல, பேரழகோடு நின்ற கோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் நம் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம்.

ஜகத்தின் அழகே இவள்தான் என்பதால், அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு வெகு சகஜம். அம்பாளை தரிசித்து அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். தியானம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது.

கோவில் சிறப்புகள்:

கோயிலின் பிராகாரத்தை சுற்றி வந்தால் தெற்கே தட்சிணாமூர்த்தியையும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். வலம் வரும் போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்ணுறலாம். கற்களின் பழமை நம்மை ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் அழைத்துச் செல்கிறது.

ராஜகோபுரத்தின் இடப் பக்கத்திலுள்ள மண்டபத்தில், நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர், மற்றும் பைரவரை தரிசிக்கலாம். அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகில் கஜலட்சுமியையும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடையே இருக்கும் சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலை வணங்கி எழுந்தால் பாதாளேஸ்வரர் இங்கு வானுயர காட்சியளிப்பதை மனதால் உணரலாம்.

போக்குவரத்து வசதி:

கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்தும் செல்லலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மூலம் கும்பகோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலை அடையலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum