தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமாவின் உண்மை முகம்!

Go down

தமிழ் சினிமாவின் உண்மை முகம்! Empty தமிழ் சினிமாவின் உண்மை முகம்!

Post  ishwarya Sat Mar 23, 2013 5:28 pm

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வந்தாலே சினிமா ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பண்டிகை நாள்களில் பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என குறைந்தது 10 படங்களாவது ரிலீஸ் ஆகும். ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. அதிலும் இந்தத் தீபாவளிக்கு "ஏழாம் அறிவு', "வேலாயுதம்', "ரா ஒன்' என மூன்று படங்கள்தான் வெளியாகின்றன. பல படங்களுக்குத் தியேட்டர்களே கிடைக்கவில்லை. சில ஸ்டார் நடிகர்களின் படங்கள் கூட "ஏழாம் அறிவு' ஃபோபியா காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொண்டன.

சினிமாத் தொழில் நசிந்து வருவதற்கும் தியேட்டர்களில் முன்பு போல் கூட்டம் கூடாததற்கும் அங்கு வசூலிக்கப்படும் அடாவடியான டிக்கெட் கட்டணமே காரணம் என்பதுதான் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் பிரதானமாக இருக்கிறது.

மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்களில் வசதி படைத்தவர்கள்தான் செல்ல முடியும் என்ற நிலை. சரி... சாதாரண, நடுத்தர வசதியுள்ள திரையரங்குகளுக்கோ, புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கோ செல்லலாம் என்றால் அங்கு நடக்கும் கூத்து இதை விட பயங்கரமாகவுள்ளது.

ரூ.10, ரூ.15-க்கு டிக்கெட் கொடுப்பார்கள்; ஆனால் நம்மிடம் ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலித்துவிடுகிறார்கள். அதிலும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; குறைந்த பட்சம் ரூ.100 முதல் ரூ.500 வரை கறந்துவிடுகிறார்கள். ஆனால் நமக்குத் தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ.15, ரூ.20 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோதான்.

நமக்குத் தரும் அந்த ரூ.15, ரூ.20 டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில்தான் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அளிக்கிறார்கள். அதைத்தான் டி.சி.ஆர் எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள்.

அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? விநியோகஸ்தர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்குப் பங்கு இருக்கிறதா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இப்படி திரையரங்குகளில் கொள்ளை நடக்கும்போது நடுத்தர மக்கள் திருட்டு வி.சி.டி. பக்கம்தான் செல்வார்கள்!

ஊரறிந்த இந்த ரகசியம் அரசுக்குத் தெரியாதா? சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? என்பதுதான் பலருடைய கருத்து.

அஜித் நடித்து வெளியான "மங்காத்தா' படம் வசூலில் வெற்றி பெற்றதாகத்தான் சினிமாத்துறையில் பேச்சு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டத் திரைப்பட விநியோகப் பகுதிகளில் முதல் 14 நாள்களில் "மங்காத்தா' படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரத்து 763. மொத்த வசூல் ரூ.9 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 571.

வெளிப்படையாகப் பார்த்தால் "அட' என ஆச்சரியம் அடையலாம். ஆனால் இந்த வசூல் சாத்தியம்தானா? சத்தியமாக இல்லை! அதாவது அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தின் படி வசூல் செய்திருந்தால் இந்தத் தொகை வசூலாகியிருக்க முடியாது. மேற்கூறப்பட்ட திரையரங்குகளில் 14 நாள்களில் இத்தனை லட்சம் பார்வையாளர்கள் படத்தைப் பார்த்திருக்கவே முடியாது. அப்படியானால்... திரையரங்குகளில் அரசு அனுமதித்த பார்வையாளர்களை விட கூடுதலாகப் பலர் படத்தைப் பார்த்துள்ளனர். வசூலான தொகையையும் பார்வையாளர்கள் செலுத்திய கட்டணத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு டிக்கெட் சராசரியாக ரூ.87.80-க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பகுதிகளில் எந்த ஒரு திரையரங்கிலும் (அரசு நிர்ணயத்தபடி) ரூ.50-க்கு மேல் டிக்கெட் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இரண்டு விதி மீறல்கள் நடந்துள்ளன.

ஒன்று... அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. "மங்காத்தா' படத்துக்காக அஜித் ரூ.10 கோடி சம்பளம் பெற்றார். அதற்கு முறையாக வரியும் செலுத்தப்பட்டுவிட்டது. சினிமாவில் சம்பளத்தை கறுப்புப் பணமாகப் பெறாத மிகச் சிலருள் அஜித்தும் ஒருவர். ஆனாலும் அவர் நடித்த படத்தின் வசூல் முறைகேடான வழியில் ஈட்டப்பட்டிருக்கிறதே, இதற்கு என்ன சொல்லுவது? யார் மீது நடவடிக்கை எடுப்பது?

இரண்டு... அனுமதித்த பார்வையாளர்களை விட அதிக நபர்களைத் திரையரங்கினுள் அனுமதித்தது. அவர்களிடமிருந்து வசூலான டிக்கெட் கட்டணம் கணக்கில் வந்திருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஏனென்றால் திரைப்படங்கள் மூலம் பெறப்படும் கேளிக்கை வரியை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்பதுதான் உண்மை. ஆக, சினிமா மூலம் கிடைக்கும் கேளிக்கை வரி மக்களைச் சென்றடைய இது ஒரு வழி. அது அடைக்கப்பட்டு விடுகிறது.

அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை அரங்கத்தில் அடைத்து வைப்பதன் மூலம் விபத்துக்கும் வழிகோலுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?

இனி, இந்தத் தீபாவளிப் படங்கள் பற்றி ஒரு சிறு அலசல். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ஏழாம் அறிவு' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.65 கோடி. சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகத்தில் மட்டும் ரூ.65 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. எஃப்.எம்.எஸ்., இதர உரிமைகளோடு சேர்த்து சுமார் ரூ.85 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையின்படி டிக்கெட் கட்டணம் விற்கப்பட்டு போட்ட முதல் தொகையை எடுக்க வேண்டுமானால் (கேளிக்கை வரி, எக்ஸிபிட்டர்ஸ் ஷேர் ஆகியவற்றை உள்ளடக்கி) இந்தப் படம் தமிழகத்தில் சுமார் ரூ.78 கோடி வரை வசூலாக வேண்டும்.

"வேலாயுதம்'- ஹன்சிகா மோத்வானி, விஜய் ---- "ஏழாம் அறிவு'- ஸ்ருதி ஹாசன், சூர்யா

"வேலாயுதம்' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.40 கோடி. சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகத்தில் ரூ.45 கோடி வரை விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்தின் அசலை எடுக்க வேண்டுமானால் சுமார் ரூ.55 கோடிக்கு மேல் (கேளிக்கை வரி, எக்ஸிபிட்டர் ஷேர் உள்ளடக்கி) வசூலாக வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி டிக்கெட் கட்டணம் விற்கப்பட்டால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினால்தான் இந்தப் படங்களால் மேலே குறிப்பிட்ட வசூலை எட்ட முடியும். இது சாத்தியமாகுமா? பிறகு எப்படி 20, 30 நாள்களில் பணத்தை எடுக்க முடிகிறது?

அதிக கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்பதால்தான் என்கிறார் தமிழ்த் திரைப்படங்களின் வியாபார ஆய்வாளரும் தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட் இதழின் ஆசிரியருமான ஆர்.ராமானுஜம்.

இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கேட்டபோது...

""படத்தின் தயாரிப்பு செலவு அதாவது பட்ஜெட் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், அதில் பெரும் தொகை நடிகர்களின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை அளிக்க அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிக எம்.ஜி. (மினிமம் கியாரண்ட்டி) கேட்கிறார். திரையரங்கு உரிமையாளர் என்ன செய்வார்? அதிக விலை கொடுத்து வாங்கிய படத்துக்கு நிர்ணயித்ததை விட அதிக கட்டணத்தைத்தான் வாங்குவார். மல்டிபிளக்ஸ் தவிர்த்த தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தயாரிப்பாளர்களும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களும்தான் காரணமே தவிர, விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கிடையாது'' என்கிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு? கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை நியாயமான அளவுக்கு உயர்த்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை மீறும் திரையரங்குகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் உடனே முறையிடலாம் என அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண், அலுவலக முகவரி போன்றவற்றை வைத்திருப்பது போல ஒவ்வொரு திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத் தொகை, அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதைப் பின்பற்றாமல் மீறுவோர் மீது புகார் அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள், அவர்களது தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு ஒரு வினைல் போர்டு வைக்கலாம்.

இப்படிச் செய்தால் முறையான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அப்போது திரையரங்கு உரிமையாளர்கள் அதிக எம்.ஜி. கொடுத்து படத்தை வாங்க மாட்டார்கள். இதன் விளைவாக தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு அதிக சம்பளம் தர மாட்டார்கள். அதனால் படங்களின் தயாரிப்புச் செலவு குறையும். அனைத்தும் ஒருங்கே அமையும்போது ரசிகர்கள் தாமாகவே தியேட்டர்களுக்கு வருவர். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என அனைத்துத் தரப்பு படங்களும் நன்றாக ஓடும். சாதனை பாதி; வேதனை பாதி என இரட்டைக் குதிரைகளில் கடிவாளமில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் தழைத்தோங்குவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum