தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கும்ப மேளா

Go down

கும்ப மேளா       Empty கும்ப மேளா

Post  birundha Sat Mar 23, 2013 4:39 pm

அடுத்தபடியாக டாக்டர் மேத்தாவைச் சந்திப்பதற்காக ரங்கூனுக்குப் போனேன். போகும் வழியில் கல்கத்தாவில் தங்கினேன். அங்கே காலஞ்சென்ற பாபு பூபேந்திரநாத வசுவின் விருந்தினனாகத் தங்கினேன். வங்காளிகளின் விருந்தோம்பல் குணம் இங்கே உச்ச நிலையை எட்டிவிட்டது. அந்த நாளில் நான் பழங்களைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. ஆகவே, கல்கத்தாவில் கிடைக்கக்கூடிய எல்லாப் பழங்களும் கொட்டைப் பருப்புகளும் எனக்காகத் தருவிக்கப்பட்டன. அவ்வீட்டுப் பெண்மணிகள் இரவெல்லாம் கண்விழித்துப் பலவிதமான கொட்டைகளையும் உடைத்து உரித்தார்கள். பழங்களை இந்திய முறையில் பக்குவம் செய்து, பரிமாறுவதற்கும் எவ்வளவோ சிரமம் எடுத்துக் கொண்டார்கள். என்னுடன் வந்தவர்களுக்கென்று எத்தனையோ வகையான பலகாரங்கள் செய்யப்பட்டிருந்தன. என்னோடு என் மகன் ராமதாஸு ம் வந்திருந்தான். அன்போடு நடந்த இந்த விருந்தோம்பலை நான் எவ்வளவோ பாராட்டக்கூடும். ஆயினும் இரண்டு மூன்று விருந்தினரை உபசரிப்பதற்காக ஒரு குடும்பம் முழுவதுமே வேலை செய்வதை என்னால் சகிக்க முடியவில்லை. என்றாலும், இவ்விதமான சங்கடமான உபசரிப்புகளிலிருந்து தப்பும் வழியும் அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ரங்கூனுக்கு போகும்போது கப்பலில் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்தேன். ஸ்ரீபோஸின் வீட்டில் அதிகப் படியான உபசாரம் எங்களுக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் கப்பலில் எங்களுக்கு ஏற்பட்ட கதியோ? மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் சாதாரண வசதிகளைக்கூட கவனிப்பார் இல்லாமல் இருந்தது. குளிக்கும் அறை என்று சொல்லப்பட்ட இடம், சகிக்க முடியாத வகையில் ஆபாசமாக இருந்தது. கக்கூசு ஒரே நாற்றமெடுத்தது. கக்கூசுக்குப் போவதாக இருந்தால் மலத்தையும் மூத்திரத்தையும் மிதித்துக்கொண்டுதான் போக வேண்டும். இல்லையானால், தாண்டிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆபாசங்களைச் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. கப்பலின் பிரதம அதிகாரியிடம் முறையிட்டும் பயனில்லை. இந்த விதமான ஆபாசங்களும் நாற்றங்களும் போதாதென்று பிரயாணிகளும் தங்களுடைய புத்திகெட்ட பழக்கங்களினால் மேலும் ஆபாசப்படுத்தினார்கள். உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி துப்பி வைத்தனர். சாப்பிட்டதில் மிஞ்சியது, புகையிலை, வெற்றிலை ஆகியவைகளைக் கழித்தது ஆகியவற்றையெல்லாம் சுற்றிலும் போட்டார்கள். அவர்கள் போட்ட கூச்சல்களுக்கோ முடிவே இல்லை. முடிந்த அளவு அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டு விட ஒவ்வொருவரும் முயன்றனர். அவர்களைவிட அவரவர்களுடைய சாமான்களே அதிக இடத்தை அடைத்துக் கொண்டுவிட்டன. இவ்விதம் இரண்டு நாட்கள் எங்களுக்கு மிகவும் கடுமையான சோதனையாகி விட்டது.

ரங்கூனுக்குப் போனதும் கப்பல் கம்பெனியின் ஏஜெண்டுக்கு எழுதினேன். இருந்த நிலைமை முழுவதையும் அவருக்குத் தெரிவித்தேன். இந்தக் கடிதத்தினாலும், டாக்டர் மேத்தாவின் முயற்சியினாலும், திரும்புகையில் மூன்றாம் வகுப்புப் பிரயாணம் அவ்வளவு மோசமாக இல்லை. எனது பழ ஆகார விரதம் ரங்கூனிலும் டாக்டர் மேத்தாவின் வீட்டினருக்கு அதிகப்படியான சங்கடத்தை விளைவித்தது. டாக்டர் மேத்தாவின் வீடு என் சொந்த வீடு மாதிரி. ஆகவே, ஆகார வகைகள் மிக அதிகமாகப் போய் விடாதவாறு ஓரளவுக்குக் கட்டுப்படுத்த என்னால் முடிந்தது. என்றாலும், இத்தனை வகையான உணவுதான் சாப்பிடுவது என்பதற்கு நான் இன்னும் ஒரு வரம்பை விதித்துக்கொள்ள வில்லை. ஆகவே, பரிமாறப் பட்டவைகளை ஓரளவோடு நிறுத்திக்கொள்ளுவதற்கு என் சுவை உணர்ச்சியும் கண்களும் மறுத்துவிட்டன. சாப்பாட்டுக்குக் குறிப்பிட்டநேரம் என்பதும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில் கடைசிச் சாப்பாட்டை இருட்டுவதற்கு முன்னால் முடித்துக்கொண்டு விடவே நான் விரும்பினேன். ஆனால், அனேகமாக இரவு எட்டு, ஒன்பது மணிக்கு முன்னால் சாப்பிட்டு முடிவதில்லை. அது 1915-ஆம் ஆண்டு. கும்ப உற்சவம் நடக்க வேண்டிய ஆண்டு அது. இந்தத் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்துவாரத்தில் நடக்கிறது. அத்திருவிழாவைப் பார்க்க வேண்டும்என்ற ஆர்வம் எனக்கு இல்லை. என்றாலும், மகாத்மா முன்ஷிராம்ஜியை, அவருடைய குருகுலத்திற்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.

கும்பத் திருவிழாவில் சேவை செய்வதற்கென்று கோகலேயின் சங்கத்தினர் ஒரு தொண்டர் படையை அனுப்பியிருந்தார்கள். அத்தொண்டர் படைக்குப் பண்டித ஹிருதயநாத குன்ஸ்ரு தலைவர்; காலஞ்சென்ற டாக்டர் தேவ், வைத்திய அதிகாரி. தங்களுக்கு உதவி செய்யப் போனிக்ஸ் கோஷ்டியினரை அனுப்புமாறு என்னைக் கேட்டிருந்தார்கள். எனவே, மகன்லால் காந்தி எனக்கு முன்னாலேயே அங்கே போயிருந்தார். ரங்கூனிலிருந்து திரும்பியதும் நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். கல்கத்தாவிலிருந்து ஹரித்துவாரத்திற்கு ரெயில் பிரயாணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. சில சமயங்களில் வண்டிகளில் விளக்குகளே இல்லை. சகரன்பூரிலிருந்து நாங்கள், சாமான்களையும் கால்நடைகளையும் ஏற்றும் வண்டிகளில் அடைக்கப்பட்டிருந்தோம். இந்த வண்டிகளுக்கு மேல் கூரை இல்லை. மேலே தகிக்கும் வெயில்; கீழேயோ கொதிக்கும் இரும்புத் தளம். இவற்றிற்கு நடுவே நாங்கள் வறுபட்டுப் போனவர்கள் போல் ஆகிவிட்டோம். இத்தகைய பிரயாணத்தினால் ஏற்பட்ட நீர் வேட்கையில்கூட வைதிக ஹிந்துக்கள், முஸ்லிம்களிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடிக்க மறுத்தனர். ஹிந்து தண்ணீர் கிடைக்கும் வரையில் அவர்கள் காத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இதே ஹிந்துக்கள் நோயுற்றுவிடும்போது டாக்டர் தங்களுக்குக் கொடுக்கும் சாராயத்தையும் மாட்டிறைச்சிச் சூப்பையும் குடிக்கத் தயங்குவதில்லை. தங்களுக்கு மருந்துத் தண்ணீர் கொடுப்பவர் கிறிஸ்தவக் கம்பவுண்டரா, முஸ்லிம் கம்பவுண்டரா என்பதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை என்பது கவனிக்க வேண்டியதாகும்.

தோட்டி வேலையே இந்தியாவில் எங்களுடைய விசேஷ வேலையாக இருக்க வேண்டும் என்பதைச் சாந்திநிகேதனத்தில் தங்கியதிலிருந்து நாங்கள் அறிந்துகொண்டோம். ஹரித்துவாரத்தில் தொண்டர்கள் தங்குவதற்கு ஒரு தரும சாலையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கக்கூசுகளாக உபயோகிப்பதற்கு டாக்டர் தேவ் அங்சே சில குழிகளைத் தோண்டியிருந்தார். அவைகளைச் சுத்தம் செய்வதற்கு, கூலி பெறும் தோட்டிகளையே அவர் எதிர்பார்க்கவேண்டியிருந்தது. போனிக்ஸ் கோஷ்டியினர் வேலை செய்வதற்கு இங்கே சந்தர்ப்பம் ஏற்பட்டது. மலத்தை மண் போட்டு மூடிப் பிறகு அங்கிருந்து அகற்றிச் சுத்தம் செய்துவிடும் வேலையை நாங்கள் செய்வதாக முன்வந்தோம். டாக்டர் தேவ் மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொண்டார். இந்த வேலையைச் செய்வதாகச் சொன்னது நான்தான் என்றாலும் அதை மகன்லால் காந்தியே நிறைவேற்ற வேண்டியதாயிற்று. கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டு தரிசினம் கொடுப்பதும், என்னைப் பார்க்க அங்கே வந்த அனேக யாத்திரிகர்களுடன் மத சம்பந்தமாகவும் மற்றவைகளைக் குறித்தும் விவாதிப்பதுமே பெரும்பாலும் என் வேலையாக இருந்தது. இதனால், என் வேலை எதையும் கவனித்துக்கொள்வதற்கு எனக்கு நேரமே இல்லை. என்னைப் பார்க்க வந்தவர்கள், நான் நீராட ஸ்நான கட்டிடத்திற்குச் சென்ற போதும் என்னை விடாது பின் தொடர்ந்தார்கள். நான் சாப்பிடும் போதுகூட அவர்கள் என்னைத் தனியாக விட்டு வைப்பதில்லை. தென்னாப்பிரிக்காவில் நான் செய்த சாதாரணச் சேவைக்கு இந்தியா முழுவதும் எவ்வளவு ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியிருந்தன என்பதை இவ்விதம் ஹரித்துவாரத்திலேயே நான் அறியலானேன்.

ஆனால், இது யாரும் பொறாமைப்பட வேண்டிய நிலைமை அன்று. இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் நான் இருப்பதாகவே எண்ணினேன். என்னை யாரும் தெரிந்துகொள்ளாத இடங்களில், ரெயில்வே பிரயாணம் போன்ற சமயங்களில் இந்நாட்டு மக்களில் கோடிக்கணக்கானவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நானும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால், என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவர்களுடைய தரிசனப் பித்துக்குப் பலியாக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த இரு நிலைமைகளில் எது அதிகப் பரிதாபகரமானது என்பதை எப்பொழுதுமே நிச்சயமாகக் கூற என்னால் முடிந்ததில்லை. ஆனால், ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். இந்தத் தரிசனப் பித்தர்களின் குருட்டு அன்பு, பல தடவைகளிலும் எனக்குக் கோபத்தையும் அடிக்கடி மன வேதனையையுமே உண்டாக்கி வந்திருக்கிறது. ஆனால், ரெயில் பிரயாணமோ, மிகவும் கஷ்டமானதாகவே இருந்தபோதிலும், ஆன்மத் தூய்மைதான் அளித்துவந்ததேயன்றி எனக்கு ஒருபோதும் கோபத்தை மூட்டியதில்லை. எவ்வளவு தூரமாயினும் ஊரெல்லாம் சுற்றித் திரிவதற்கு வேண்டிய பலம், அந்த நாளில் எனக்கு இருந்தது. அதிர்ஷ்ட வசமாக நான் அவ்வளவு தூரம் ஊருக்கெல்லாம் தெரிந்தவனாகவும் ஆகிவிடவில்லை. ஆகையால், எவ்விதப் பரபரப்பையும் உண்டாக்கிவிடாமல் அப்பொழுது தெருவில் போய் கொண்டிருக்க என்னால் முடிந்தது. அவ்விதம் சுற்றித் திரிந்ததில் பல விஷயங்களைக் கவனித்தேன். யாத்திரிகர்களிடம் பக்தியைக் காட்டிலும் கவனக் குறைவும், வெளிவேஷமும், ஒழுங்கீனமுமே அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். சாதுக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்திருந்தார்கள். உலக வாழ்க்கையின் இன்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கென்று பிறந்திருப்பவர்களாகவே அவர்கள் தோன்றினர்.

இங்கே ஐந்து கால்களோடு கூடிய ஒரு பசுவையும் பார்த்தேன்! நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். ஆனால், விஷயம் தெரிந்தவர்கள் சீக்கிரத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரமையைப் போக்கிவிட்டனர். அந்தப் பரிதாபகரமான ஐந்து கால் பசு, கொடியவர்களின் பேராசைக்குப் பலியானதேயன்றி வேறு அல்ல. உயிருடன் இருந்த ஒரு கன்றின் காலைத் துண்டித்து, இப்பசுவின் தோலில் பொருத்தியிருந்தார்கள். அதுதான் இந்த ஐந்தாவது காலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்பதை அறிந்தேன்! இவ்வித இரட்டைக் கொடுமையின் பலனைக் கொண்டு, ஒன்றும் அறியாதவர்களின் பணத்தைப் பறித்து வந்தார்கள். இந்த ஐந்து கால் பசுவைப் பார்க்க ஆவல் கொள்ளாத ஹிந்துவே இல்லை. இந்த அற்புதப் பசுவிற்குத் தாராளமாக தருமம் செய்யாத ஹிந்துவும் இல்லை. உற்சவ தினமும் வந்தது. அது எனக்கு மிக முக்கியமான தினமாகவும் ஆயிற்று. நான் ஹரித்துவாரத்திற்கு யாத்திரை நோக்கத்துடன் போகவில்லை. புண்ணியத்தை நாடி யாத்திரை ஸ்தலங்களுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணியதே இல்லை. ஆனால், அங்கே கூடியிருந்ததாகக் கூறப்பட்ட பதினேழு லட்சம் மக்களில் எல்லோருமே வெளி வேஷக்காரர்களோ, வெறும் வேடிக்கை பார்க்க வந்தவர்களோ அல்ல. அவர்களில் எண்ணற்றவர்கள், புண்ணியத்தைத் தேடவும், ஆன்மத் தூய்மையை அடையவுமே வந்தார்கள் என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட நம்பிக்கை எந்த அளவுக்கு ஆன்மாவை மேன்மைப்படுத்துகிறது என்பதைச் சொல்லுவது
இயலாதது அல்ல என்றாலும், சொல்லுவது கஷ்டம்.

ஆகையால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவாறே அன்றிரவைக் கழித்தேன். தங்களைச் சூழ்ந்திருக்க வெளி வேஷத்திற்கு நடுவில் பக்தியுள்ள ஆன்மாக்களும் இருந்தன. ஆண்டவனின் சந்நிதானத்தில் அவர்கள் குற்றமற்றவர்களே. ஹரித்துவாரத்திற்கு வந்ததே, அதனளவில் பாவச் செயல் என்றால், ஹரித்துவார யாத்திரையை நான் பகிரங்கமாகக் கண்டித்துக் கூறி விட்டுக் கும்பதினத்தன்றே அங்கிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஹரித்துவார யாத்திரையை மேற்கொண்டதும், கும்ப உற்சவத்திற்கு வந்ததும் பாவச் செயலன்று என்றால், அங்கே நடக்கும் அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தமாக நான் ஏதேனும் எனக்கு நானே மறுத்துக்கொண்டு என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இது எனக்கு மிகவும் இயல்பானது. என் வாழ்க்கையே கட்டுத் திட்டங்களடங்கிய முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. கல்கத்தாவிலும் ரங்கூனிலும் நான் தங்கிய வீட்டினர் ஏராளமாகச் செலவு செய்து எனக்கு விருந்தளித்தார்கள். அவர்களுக்கு நான் அனாவசியமான தொந்தரவுகளைக் கொடுத்து விட்டதாக எண்ணினேன். ஆகையால், என் ஆகாரத்தில் இத்தனை பண்டங்களைத் தான் சாப்பிடுவது என்று கட்டுப்படுத்திக் கொள்ளுவதோடு கடைசிச் சாப்பாட்டை இருட்டுவதற்கு முன்னால் முடித்துக் கொண்டுவிடுவது என்றும் தீர்மானித்தேன். எனக்கு இத்தகைய தடைகளை நானே விதித்துக் கொள்ளாவிட்டால், இனி என்னை அதிதியாக ஏற்பவர்களுக்கு அநேக இடைஞ்சல்களை நான் உண்டாக்க நேரும்.

சேவையில் நான் ஈடுபடுவதற்கு மாறாக அவர்களை எனக்குச் சேவை செய்வதில் ஈடுபடுத்திக்கொள்ளவும் வேண்டி வரும். ஆகையால், இந்தியாவில் இருக்கும்போது இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்துக்கு அதிகமான பொருள்களை நான் சாப்பிடுவதில்லை என்றும், இருட்டிய பிறகு சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டேன். இதனால் எனக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களைக் குறித்துத் தீரச் சிந்தித்தேன். ஆனால், இதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் பின்னால் இடம் வைத்துவிட நான் விரும்பவில்லை. நான் நோய் வாய்ப்பட்டு, மருந்தும் உணவுப் பொருள்களில் ஒன்றாகி, அச்சமயம் விசேஷமாகச் சாப்பிடவேண்டிய ஆகாரத்திற்காக விதி விலக்கு எதுவும் செய்யாது போனால், அப்பொழுது என்ன ஆகும் என்பதைக் குறித்தும் யோசித்தேன். என்ன வானாலும் சரி, இந்த விரதத்திலிருந்து எந்த விதிவிலக்கும் செய்து கொள்ளுவதில்லை என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டேன். இந்த விரதத்தை இப்பொழுது நான் பதின்மூன்று ஆண்டுகளாக அனுசரித்து வருகிறேன். இதனால் எனக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டதும் உண்டு. ஆயினும் இந்த விரதம் எனக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது என்பதை நிச்சயமாகக் கூற முடியும். இது என் வாழ் நாட்களில் சில ஆண்டுகளை அதிகமாக்கியது; நான் பற்பல நோய்களுக்கு உள்ளாகாதவாறும் என்னைக் காப்பாற்றியது என்பதே என் அபிப்பிராயம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum