தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமணன் பாலம்

Go down

லட்சுமணன் பாலம் Empty லட்சுமணன் பாலம்

Post  birundha Sat Mar 23, 2013 4:39 pm

ஹரித்துவாரத்திலிருந்து மகாத்மா முன்ஷிராம்ஜியின் குரு குலத்திற்குச் சென்று ஆஜானுபாகுவான அவரைச் சந்தித்ததில் எனக்கு மன ஆறுதல் ஏற்பட்டது. குருகுலத்திலிருந்த அமைதிக்கும் ஹரித்துவாரத்திலிருந்த இரைச்சலுக்கும் இடையே இருந்த அற்புதமான வித்தியாசத்தை அங்கே சென்றதுமே உணர்ந்தேன். மகாத்மா தமது அன்பினால் என்னை ஆட்கொண்டும் விட்டார். பிரம்மச்சாரிகள், எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தார்கள். இங்கேதான் முதன் முதலில் ஆச்சாரிய ராம தேவஜியைச் சந்தித்தேன். அவரிடம் எவ்வளவு அபாரமான சக்தி இருந்தது என்பதை உடனேயே கண்டுகொண்டேன். பல விஷயங்களிலும் நாங்கள் மாறுபட்ட கருத்துடையவர்கள். என்றாலும், எங்கள் பழக்கம், சீக்கிரத்திலேயே நட்பாகக் கனிந்தது. குருகுலத்தில் கைத்தொழில் பயிற்சியை ஆரம்பிப்பதன் அவசியத்தைக் குறித்து ஆச்சாரிய ராமதேவஜியுடனும் மற்றப் பண்டிதர்களுடனும் நீண்ட நேரம் விவாதித்தேன். அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டிய நேரம் வந்தபோது பிரிவது மனத்திற்கு அதிக வருத்தமாகவே இருந்தது. லட்சுமணஜூலாவைப் (கங்கைமீது போடப்பட்டிருந்த தொங்கும் பாலம்) பற்றிப் பலர் புகழ்ந்து பேச நான் கேட்டிருந்தேன். இது ரிஷீகேசத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. அந்தப் பாலத்தைப் போய்ப் பார்க்காமல் ஹரித்துவாரத்திலிருந்து திரும்பி விட வேண்டாம் என்று பல நண்பர்கள் என்னிடம் வற்புறுத்திச் சொன்னார்கள்.

நடந்துபோயே இந்த யாத்திரையை முடிக்க விரும்பினேன். ஆகையால், மத்தியில் ஓர் இடத்தில் தங்கி அங்கேபோய்ச் சேர்ந்தேன்.ரிஷீகேசத்தில் சந்நியாசிகள் பலர் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் அதிக அபிமானம் கொண்டிருந்தார். போனிக்ஸ் கோஷ்டியினர் அங்கே இருந்தனர். அவர்களைக் குறித்து அந்தசுவாமி என்னைப் பல கேள்விகள் கேட்டார். சமய சம்பந்தமாக நாங்கள் விவாதித்தோம். அதில் இருந்து சமய சம்பந்தமான சிரத்தை எனக்கு அதிகம் உண்டு என்பதைத் தெரிந்துகொண்டார். கங்கையில் நீராடிவிட்டு உடம்பில் சட்டையில்லாமல், தலையில் தொப்பியில்லாமல் நான் வந்து கொண்டிருந்தபோது அவர் என்னைப் பார்த்தார். தலையில் உச்சிக்குடுமியும், உடம்பில் பூணூலும் இல்லாமல் நான் இருந்ததைக் கண்டு அவருக்கு மனவேதனையாகிவிட்டது. ஹிந்து தருமத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப் படுகிறது. இவை இரண்டும் ஹிந்து தருமத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும் என்றார். இந்த இரண்டையும் நான் எவ்வாறு விட்டுவிட்டேன் என்பதே ஒரு தனிச்சரித்திரமாகும். நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது பிராமணச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துக்களைக் கோர்த்து தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு.

நானும் அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசியக் குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல்அணிந்து கொள்ளுவதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தினரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகியிருந்தது. இதன் காரணமாகக் காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை போதித்துவந்த பிராமணர், எங்களுக்கும் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்து வைத்துக்கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படாவிட்டாலும், ஒரு சாவிக் கொத்தைச் சம்பாதித்து என் பூணூலில் மாட்டிக்கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்பொழுது நான் வருத்தப்பட்டேனா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் புதிதாகப் பூணூலைத் தேடி நான் போட்டுக் கொள்ளவில்லை என்பதை அறிவேன். நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக்கொள்ளும்படி செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சிவெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக்கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை. வைஷ்ணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந்திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று வீட்டில் பெரியவர்கள் கருதி வந்தார்கள். ஆயினும், நான் இங்கிலாந்துக்கு புறப்படவிருந்த தருணத்தில் உச்சிக் குடுமியை எடுத்துவிட்டேன். எடுக்காமல் இருந்தால், தலையில் தொப்பியில்லாத போது அதை யாராவது பார்த்துவிட்டால் பரிகாசம் செய்வார்கள் என்றும், நான் ஒரு காட்டுமிராண்டி என்று ஆங்கிலேயருக்குத் தோன்றும் என்றும் அப்பொழுது நான் எண்ணினேன். இந்தக் கோழைத்தன உணர்ச்சியின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் மதநம்பிக்கையுடன் குடுமி வைத்திருந்த என் சகோதரரின் மகனான சகன்லால் காந்தியையும் அதை எடுத்துவிடும்படி செய்தேன். அவருடைய பொதுஜன சேவைக்கு அக்குடுமி இடையூறாக இருக்கும் என்று அஞ்சினேன். ஆகையால், அவர் மனத்துக்குக் கஷ்டமாக இருக்குமே என்பதைக் கூடக் கவனிக்காமல், அவர் அக்குடுமியை எடுத்துவிடும்படி செய்தேன். எனவே, எல்லா விவரங்களையும் சுவாமிக்கு எடுத்துக்கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது: கணக்கற்ற ஹிந்துக்கள் பூணூல் அணியாமலேயே ஹிந்துக்களாக இருந்துவ முடிகிறது.

பூணூல் போட்டுக்கொண்டாக வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இருப்பதாக நான் காணவில்லை. ஆகையால், அதை நான் போட்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும், பூணூல் ஆன்மிகப்புனர் வாழ்வுக்குச் சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல்பவராகவும் இருக்க வேண்டுவது அவசியம். ஆனால், ஹிந்து சமயமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய பொருளோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்துகொள்ளத் தங்களுக்கு உரிமை உண்டென்று ஹிந்துக்கள் காட்டமுடியுமா என்பதைச் சந்தேகிக்கிறேன். ஹிந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு, தாழ்வு என்ற பேதங்களெல்லாம் போய், அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் வேஷங்களும் நீங்கிய பிறகே ஹிந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்படமுடியும். ஆகையால், பூணூல் போட்டுக்கொள்ளுவது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப்பற்றி நீங்கள் கூறும் யோசனை சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட்கம் என்று தவறான எண்ணத்தால் அதை எடுத்துவிட்டேன். ஆகவே, திரும்பவும் அதை வளர்த்து விட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர்களுடன் இதைக் குறித்து விவாதிக்கிறேன்.

பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைச் சுவாமியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதை அணியவேண்டியதில்லை என்பதற்கு எனக்கு எவை நியாயங்களாகத் தோன்றியனவோ அவையே அணிய வேண்டும் என்பதற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின. இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும். சமயங்கள் பல இருந்துவரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தைவிடத் தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின், அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். ஹிந்து சமயத்தை மேன்மைப்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குச் சிரத்தையும் இல்லை. குடுமியைப் பற்றியவரையில் அதை நான் எடுத்துவிட்டதற்குக் கோழைத்தனமே காரணமாக இருந்ததால், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு திரும்பவும் குடுமி வளர்க்க முடிவு செய்தேன். இப்பொழுது லட்சுமண ஜூலாவைக் குறித்துக் கவனிப்போம். ரிஷீகேசம், லட்சுமண ஜூலா ஆகியவற்றின் இயற்கைக் காட்சிகள் என் மனத்தைக் கவர்ந்தன. இயற்கை அழகை அனுபவிக்கும் நமது மூதாதையர்களின் உணர்ச்சிக்குத் தலை வணங்கினேன். ஏனெனில், இயற்கையின் அழகிய தோற்றங்களுக்கு அவர்கள் முன் யோசனையின் பேரில் சமய பூர்வமான முக்கியத்துவம் அளித்திருந்தார்கள். ஆனால், இயற்கைக்காட்சிகள் மிகுந்த இந்த இடங்களை மனிதர் உபயோகித்து வந்த விதங்கள் என் மனத்திற்குச் சங்கடத்தை உண்டாக்கின. ஹரித்துவாரத்தைப் போல ரிஷீகேசத்திலும் மக்கள் ரஸ்தாக்களையும் அழகிய கங்கைக் கரைகளையும் ஆபாசப்படுத்தி வந்தனர். கங்கையின் புனித நீரையும் அசுத்தப்படுத்த அவர்கள் தயங்கவில்லை.

கொஞ்சதூரம் போனால் ஜன நடமாட்டமில்லாத இடங்களுக்கு எளிதாகப் போயிருக்கக் கூடுமெனினும், அப்படிச் செய்யாமல் பாட்டைகளிலும் நதிக்கரைகளிலும் மக்கள் மலஜலம் கழித்ததைக் கண்டு என் மனம் அதிக வேதனையடைந்தது. லட்சுமண ஜூலா என்பது கங்கைமீது போடப்பட்டிருந்த தொங்கும் இரும்புப் பாலமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதைக் கண்டேன். முன்பு அந்த இடத்தில் சிறந்த கயிற்றுப் பாலம் ஒன்று இருந்ததாம். ஆனால், தரும சிந்தனையுள்ள ஒரு மார்வாரியின் மூளையில், அக் கயிற்றுப் பாலத்தை நாசப்படுத்தி விட்டு அதற்குப்பதிலாக ஓர் இரும்புப் பாலத்தைப் போடும் யோசனை எப்படியோ பிறந்துவிட்டது. ஏராளமான செலவில் அப்பாலத்தைப் போட்டு, அதன் சாவியை அவர் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டார். கயிற்றுப் பாலத்தை நான் பார்த்ததில்லை. ஆகையால், அதைக் குறித்து நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. ஆனால், இரும்புப் பாலமோ அங்கிருக்கும் சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாததாவதோடு அங்கிருக்கும் அழகையும் அது கெடுத்துவிடுகிறது. யாத்திரிகர்கள் செல்வதற்கு என்றுள்ள அப்பாலத்தின் சாவியை அரசாங்கத்தினிடம் கொடுத்து விட்டதை, எனக்கு அதிக ராஜவிசுவாசம் இருந்த அந்த நாளில் கூட, என்னால் பொறுக்க முடியவில்லை. பாலத்தைக் கடந்தால் சுவர்க்காசிரமம் போகலாம். சுவர்க்காசிரமம் என்பது மிகவும் மோசமான இடம். இரும்புத் தகட்டுக் கூரை போட்ட சில ஆபாசமான கொட்டகைகளைத் தவிர அங்கே வேறு எதுவுமே இல்லை. அவை சாதகர்களுக்கு என்று கட்டப்பட்டனவாம். அச்சமயம் அங்கே சாதகர்கள் யாருமே இல்லை. அங்கிருந்த முக்கியமான கட்டிடத்தில் இருந்தவர்களோ, பார்ப்போருக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகும்படி செய்யக் கூடியவர்களாகவும் இல்லை. ஆனால், ஹரித்துவார அனுபவங்கள் எனக்கு மதிப்பதற்கரிய பயன்களை அளித்தன. நான் எங்கே வசிப்பது, நான் செய்ய வேண்டியது என்ன என்பவைகளில் முடிவுக்கு வருவதற்கு அந்த அனுபவங்கள் அதிக அளவில் எனக்கு உதவியாக இருந்தன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum