தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கறுப்புப் பிளேக்- 2

Go down

கறுப்புப் பிளேக்- 2 Empty கறுப்புப் பிளேக்- 2

Post  birundha Sat Mar 23, 2013 3:48 pm

காலி வீட்டை எடுத்துக்கொண்டு, நோயாளிகளையும் கவனித்துக் கொண்டதற்காக நகரசபை நிர்வாகி எனக்கு நன்றி தெரிவித்து எழுதினார். இப்படிப்பட்டதோர் அவசர நிலைமையைச் சமாளிப்பதற்கு நகரசபையிடம் உடனே செய்வதற்கான சிகிச்சை முறைகள் எவையும் இல்லை என்பதையும், அவர் மனம்விட்டு ஒப்புக்கொண்டார். நகரசபை தனது கடமையைக் குறித்து விழிப்படைந்தது; துரிதமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுவதில் காலதாமதம் செய்யவில்லை. மறுநாள், காலியாக இருந்த ஒரு கிடங்கை என்னிடம் ஒப்படைத்தார்கள். நோயாளிகளை அங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்ளலாம் என்றும் யோசனை கூறினர். ஆனால், அந்த இடத்தைச் சுத்தம் செய்யும் வேலையை நகரசபை எடுத்துக்கொள்ளவில்லை. அக் கட்டிடம் மிகவும் அசுத்தமாகவும் வசதியில்லாமலும் இருந்தது. அதை நாங்களே சுத்தம் செய்து கொண்டோம். தரும சிந்தனையுள்ள இந்தியரின் உதவியைக் கொண்டு சில படுக்கைகளையும் தேவையான மற்றவைகளையும் சேகரித்தோம். இவ்வாறு அதைத் தாற்காலிகமானதோர் வைத்திய சாலையாக்கிக் கொண்டோம். நகர சபை, உதவிக்கு ஒரு தாதியை அனுப்பியது. பிராந்தி முதலிய மற்ற ஆஸ்பத்திரிச் சாதனங்களுடன் அவர் வந்தார். டாக்டர் காட்பிரேயே இன்னும் பொறுப்பு வகித்து வந்தார்.

தாதி மிகுந்த அன்பானவர்: தாமே நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய விரும்பினார். நோய் அவருக்கும் தொத்தி என்பதற்காக நோயாளிகளைத் தொட அவரை நாங்கள் விடவில்லை. நோயாளிகளுக்கு அடிக்கடி பிராந்தி கொடுக்குமாறு எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நோய்த் தடுப்பு முறையாகத் தாதியும் அடிக்கடி பிராந்தி சாப்பிட்டார். அதேபோல எங்களையும் சாப்பிடச்சொன்னார். ஆனால், எங்களில் யாரும் அதைத் தொடவில்லை. நோயாளிகளுக்குக்கூட அது பயனளிக்கவல்லது என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. டாக்டர் காட்பிரேயின் அனுமதியின்பேரில் பிராந்தி சாப்பிடாமலேயே இருக்கத் தயாராயிருந்த மூன்று நோயாளிகளுக்கு மண் சிகிச்சை அளித்து வந்தேன். அவர்களுடைய தலைக்கும் மார்புக்கும் ஈர மண் வைத்துக் கட்டினேன். அவர்களில் இருவர் பிழைத்துக் கொண்டார்கள். கிடங்கிலிருந்த மற்ற இருபது பேர் இறந்து விட்டனர்.

இதன் நடுவே நகரசபை மற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது. ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து ஏழுமைல் தூரத்தில் தொத்துநோய் கண்டவர்களை வைப்பதற்கு என்று ஓர் இடம் இருந்தது. பிழைத்திருந்த இருவரையும் அங்கிருந்த கூடாரங்களுக்குக் கொண்டுபோயினர். புதிதாக நோய் கண்டவர்களை அங்கே கொண்டு போவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். இவ்விதம் இவ் வேலையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். சில தினங்களுக்கெல்லாம் அந்த நல்ல தாதி அந்நோய் கண்டு இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டோம். நோயாளிகளில் அந்த இருவர் மாத்திரம் எப்படிப் பிழைத்தார்கள், எங்களுக்கு மாத்திரம் அந் நோய் எப்படிப் பற்றாமல் இருந்தது என்பதைக் கூறுவது சாத்தியமில்லை. ஆனால், இதில் ஏற்பட்ட அனுபவம், மண் சிகிச்சையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியது. மருந்து என்ற வகையில்கூட, பிராந்தியின் ஆற்றலில் எனக்கு இருந்த நம்பிக்கையின்மை பலப்பட்டது. இந்த நம்பிக்கையோ அல்லது இந்த நம்பிக்கையின்மையோ எந்த உறுதியான ஆதாரத்தையும் கொண்டது அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், அன்று நான் பெற்ற கருத்து இன்றும் எனக்கு அப்படியே இருந்து வருகிறது. ஆகையால், அதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதினேன்.

பிளேக் நோய் கண்டதும் நகரசபையைக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினேன். இந்தியர் குடியிருந்த பகுதி நகரசபைக்குச் சொந்தமாகிவிட்ட பிறகு அச்சபை அசட்டையாக இருந்துவிட்ட குற்றத்தைச் செய்திருக்கிறது என்றும், பிளேக் தோன்றியதற்கே அவர்கள்தான் பொறுப்பு என்றும் அதில் எழுதினேன். அந்தக் கடிதத்தினால் ஸ்ரீ ஹென்றி போலக் எனக்குக் கிடைத்தார். காலஞ்சென்ற பூஜ்யர் ஜோஸப் டோக்கின் நட்பு ஏற்பட்டதற்கும் அதுவே ஓரளவுக்குப் பொறுப்பாயிற்று. ஒரு சைவ உணவு விடுதியில் நான் சாப்பிடுவது வழக்கம் என்று முந்திய அத்தியாயம் ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அங்கே தான் ஸ்ரீ ஆல்பர்ட் வெஸ்ட்டைச் சந்தித்தேன். ஒவ்வொரு நாள் மாலையில் இந்த விடுதியில் நாங்கள் சந்தித்துச் சாப்பிட்ட பிறகு உலாவப் போவது வழக்கம். ஒரு சிறு அச்சகத்தில் ஸ்ரீ வெஸ்ட் கூட்டாளி. பிளேக் நோய் ஏற்பட்டதைக் குறித்து நான் எழுதியிருந்த கடிதத்தை அவர் பத்திரிகையில் படித்தார். என்னை அந்த விடுதியில் காணாது போகவே அவருக்குக் கவலையாகிவிட்டது. தொத்து நோய் ஏற்படும் காலங்களில் சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டுவிடுவது என்பதை நீண்ட காலமாகவே நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிளேக் நோய் ஏற்பட்டதும் நானும் என் சக ஊழியர்களும் எங்கள் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டுவிட்டோம். ஆகையால், இந்த நாட்களில் மாலையில் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். மத்தியானச் சாப்பாட்டைக்கூட மற்ற விருந்தினர் வருவதற்கு முன்னால் சாப்பிடுவேன். அந்தச் சாப்பாட்டு விடுதியின் சொந்தக் காரரை எனக்கு நன்றாகத் தெரியும். பிளேக் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும் வேலையில் நான் ஈடுபட்டிருப்பதால் சாத்தியமான வரையில் நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொள்வது என்று இருக்கிறேன். என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்.

சாப்பாட்டு விடுதியில் இரண்டொரு நாட்கள் என்னைக் காணாது போகவே ஸ்ரீ வெஸ்ட், ஒரு நாள் காலையில் என் வீட்டிற்கு வந்தார். உலாவப் போவதற்கு அப்பொழுதுதான் நான் தயாராகிக்கொண்டிருந்தேன். நான் கதவைத் திறந்ததும் ஸ்ரீ வெஸ்ட் கூறியதாவது: “உங்களைச் சாப்பாட்டு விடுதியில் காணவில்லை. எனவே, உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதோ என்று பயந்து விட்டேன். ஆகையால், உங்களை வீட்டிலாவது போய்ப் பார்ப்போம் என்பதற்காகக் காலையில் புறப்பட்டு வந்தேன். இப்பொழுது நீங்கள் சொல்லும் பணியைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன். நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் உதவி செய்யத்தயாராயிருக்கிறேன். என்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்கள் யாருமில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.” என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொண்டேன். ஒரு விநாடிகூடச் சிந்திக்காமல் பின்வருமாறு பதில் சொன்னேன்: “உங்களை நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய நான் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. மேற்கொண்டும் புதிய நோயாளிகள் இல்லை என்றால், இரண்டொரு நாளில் எங்களுக்கே வேலையிராது ஆனால், நீங்கள் செய்யக் கூடியது ஒன்று இருக்கிறது.”

அது என்ன?” என்று அவர் கேட்டார். டர்பனிலிருக்கும் இந்தியன் ஒப்பீனியன் அச்சக நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளுவீர்களா? ஸ்ரீ மதன்ஜித்துக்கு இங்கே வேலை இருக்கிறது. டர்பனில் யாராவது இருக்க வேண்டியிருக்கிறது. உங்களால் அங்கே இருக்க முடியுமானால் எனக்கு அந்தக் கவலை நீங்கியதாக எண்ணுவேன்” என்றேன். எனக்கும் ஓர் அச்சகம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேகமாக நான் அங்கே போவது சாத்தியமாகலாம். ஆனால், என் முடிவான பதிலை இன்று மாலை கூறலாமல்லவா? மாலையில் நாம் உலாவப்போகும்போது அதைக் குறித்துப் பேசுவோம்” என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். மாலையில் பேசினோம். போவதற்குச் சம்மதித்தார். சம்பளத்தைப்பற்றி அவருக்கு கவலை இல்லை. ஏனெனில், பணம் அவர் நோக்கமல்ல. என்றாலும், மாதம் 10 பவுன் சம்பளமும், ஏதாவது லாபம் வந்தால் அதில் ஒரு பங்கும் என்ற முடிவுக்கு வந்தோம். தமக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்கும் வேலையை என்னிடம் விட்டுவிட்டு அன்று மாலை மெயில் ரெயிலிலேயே ஸ்ரீ வெஸ்ட், டர்பனுக்குப் புறப்பட்டார். அன்று முதல், தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் கப்பலேறிய வரையில், அவர் என்னுடைய இன்ப துன்பங்களில் பங்காளியாக இருந்து வந்தார். லௌத்தில் (லின்கன்ஷயர்) ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வெஸ்ட். சாதாரணப் பள்ளிப் படிப்புத்தான் அவர்பெற்றிருந்த கல்வி. ஆனால், அனுபவம் என்ற பள்ளியிலும், திடமான சுயமுயற்சியினாலும் அவர் எவ்வளவோ அறிந்து கொண்டிருந்தார். அவர் எப்பொழுதும் தூய்மையும், நிதானமும், காருண்யமும், கடவுள் பக்தியுமுள்ள ஆங்கிலேயராக இருக்கக் கண்டேன். இனி வரும் அத்தியாயங்களில் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி அதிகமாகக் கவனிப்போம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum