தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கறுப்பு பிளேக்-1

Go down

கறுப்பு பிளேக்-1 Empty கறுப்பு பிளேக்-1

Post  birundha Sat Mar 23, 2013 3:19 pm

இந்தியர் குடியிருந்த ஒதுக்கல் இடங்களை நகரசபை வாங்கிக் கொண்டதுமே அவ்விடத்திலிருந்து இந்தியர் அகற்றப்பட்டு விடவில்லை. அவர்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்து விட முடியாமல் இருந்ததனால், அந்த ஆபாசப் பகுதியிலேயே இந்தியர்கள் இருந்து கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது என்பதுதான் இதில் வித்தியாசம். சொந்தக்காரர்கள் என்று இல்லாது போய்விட்டதால் அவர்கள் நகரசபையின் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களாயினர். இதன் பலனாக அவர்களுடைய சுற்றுப்புறங்களெல்லாம் முன்னால் இருந்ததைவிட அதிக ஆபாசமாயின. அவர்களே சொந்தக் காரர்களாக இருந்தபோது சட்டத்திற்குப் பயந்துகொண்டாவது. ஏதோ ஒரு வகையில் சூழ்நிலை சுத்தமாக இருக்கும்படி செய்யவேண்டியிருந்தது. நகர சபைக்கோ அப்படிப்பட்ட பயம் எதுவும் இல்லை! அங்கே குடியிருந்தோர் தொகை அதிகமாயிற்று. அதோடு ஆபாசமும் ஒழுங்கீனமும் பெருகின. நிலைமை இவ்வாறு இருந்து வந்ததைக் குறித்து இந்தியர் கொதிப்படைந்திருந்த சமயத்தில் அங்கே திடீரென்று கறுப்புப் பிளேக் நோய் பரவியது.

இந்த நோயை நிமோனிக் பிளேக் என்றும் கூறுவது உண்டு. புபோனிக் பிளேக்கைவிட இது மகா பயங்கரமானதும் பிராணாபாயமானதுமாகும். இந்த நோய் பரவுவதற்குக் காரணமாக இருந்த இடம், அதிர்ஷ்டவசமாக இந்தியர் குடியிருப்பு இடமன்று. ஜோகன்னஸ்பர்க்குப் பக்கத்தில் இருந்த தங்கச் சுரங்கம் ஒன்றிலிருந்தே இந்த நோய் பரவியது. அச்சுரங்கத்தின் தொழிலாளர்கள் பெரும்பாலும் நீக்ரோக்கள். அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள், அவர்களுடைய வெள்ளைக்கார எஜமானர்களே. அங்கே இச் சுரங்க சம்பந்தமான வேலையில் சில இந்தியர்களும் இருந்தனர். இவர்களில் இருபத்து மூன்று பேருக்கு இந் நோய் கண்டது. ஒரு நாள் மாலை இந்நோயினால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இவர்கள், இந்தியர் குடியிருப்புப் பகுதியிலிருந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இந்தியன் ஒப்பீனியனுக்கு அப்பொழுது சந்தாசேர்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ மதன்ஜித் அப்பொழுது அப் பகுதிக்குப் போயிருந்தார். அவர் அச்சம் என்பதை ஒரு சிறிதும் அறியாதவர். கொள்ளை நோய்க்குப் பலியான இத் துர்ப்பாக்கியர்களைப் பார்த்ததும் அவர் உள்ளம் பதறியது.

பென்ஸிலினால் எழுதி எனக்குப் பின்வருமாறு ஒரு குறிப்பு அனுப்பினார்: “திடீரென்று கறுப்புப் பிளேக் நோய் கண்டிருக்கிறது. தாங்கள் உடனே வந்து அவசரமாக நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால் மகா மோசமான விளைவுகளுக்கு நாம் தயாராக வேண்டியிருக்கும். தயவுசெய்து உடனே வாருங்கள்.” காலியாக இருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து ஸ்ரீ மதன்ஜித் தைரியமாகத் திறந்தார். நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களையெல்லாம் அவ் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்பகுதிக்கு நான் உடனே சைக்கிளில் போனேன். எந்தச் சந்தர்ப்பத்தை முன்னிட்டு அந்த வீட்டை எடுத்துக் கொள்ளநேரிட்டது என்பதைக் குறித்து நகரசபை நிர்வாகிக்கு உடனே எழுதினேன். இச் செய்தியை அறிந்ததும் ஜோகன்னஸ்பர்க்கில் வைத்தியத் தொழில் செய்துவந்த டாக்டர் வில்லியம் காட்பிரே உதவிக்கு விரைந்து வந்து சேர்ந்தார். நோயாளிகளுக்கு அவரே டாக்டரும் தாதியுமானார். ஆனால், இருபத்து மூன்று நோயாளிகளை நாங்கள் மூன்று பேர் கவனித்துக் கொண்டுவிட முடியாது. ஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை. அச் சமயம் என் அலுவலகத்தில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் மூவரின் பெயர்கள் ஸ்ரீ கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் என்பவையாகும். மற்றொருவரின் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை.

கல்யாண்தாஸை அவர் தந்தை என்னிடம் ஒப்படைத்திருந்தார். பரோபகார குணத்திலும், சொன்ன மாத்திரத்தில் சொன்னதை மனமுவந்து பணிவுடன் செய்வதிலும் கல்யாண்தாஸைவிடச் சிறந்தவர்கள் யாரையும் நான் தென் ஆப்பிரிக்காவில் கண்டதில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அப்பொழுது மணமாகவில்லை. எவ்வளவுதான் மகத்தானவை ஆயினும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கடமைகளை அவர்மீது சுமத்த நான் தயங்கவே இல்லை. மாணிக்கலால், ஜோகன்னஸ்பர்க்கில் எனக்குக் கிடைத்தார். இவருக்கும் மணமாகவில்லை என்றுதான் எனக்கு ஞாபகம். ஆகவே, அந்த நால்வரையும் - அவர்களைக் குமாஸ்தாக்கள் என்று சொன்னாலும் சரி; சக ஊழியர்கள் அல்லது என் புதல்வர்கள் என்று சொன்னாலும் சரி - தியாகம் செய்துவிடத் தீர்மானித்தேன். கல்யாண்தாஸைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்றவர்களும் - அவர்களிடம் நான் கூறியதுமே-சம்மதித்து விட்டனர். “நீங்கள் எங்கே இருப்பீர்களோ அங்கே நாங்களும் இருப்போம்” என்பதே அவர்களுடைய சுருக்கமான, இனிமையான பதில். ஸ்ரீ ரிச்சின் குடும்பம் பெரியது. அவரும் இதில் குதித்து விடத்தயாராக இருந்தார். ஆனால், அவரை நான் தடுத்தேன். அவரை இந்த ஆபத்திற்கு உட்படுத்த எனக்கு மனம் வரவில்லை. ஆபத்துப் பிராந்தியத்திற்கு வெளியே இருந்த வேலைகளை அவர் கவனித்துக் கொண்டார்.

கண்விழித்துப் பணிவிடை செய்த அன்றிரவு மிகப் பயங்கரமான இரவு. அதற்கு முன்னால் எத்தனையோ நோயாளிகளுக்கு நான் பணிவிடை செய்திருக்கிறேன். ஆனால், கறுப்புப் பிளேக் நோய் கண்டவர்களில் யாருக்கும் நான் பணிவிடை செய்ததே இல்லை. டாக்டர் காட்பிரேயின் தீரம் மற்றவர்களையும் தொத்திக்கொண்டது. பணிவிடை செய்வது என்பது அதிகமாகத் தேவைப்படவில்லை. அப்போதைக்கப் போது அவர்களுக்கு மருந்து கொடுத்துவருவது, நோயாளிகளின் தேவைகளைக் கவனிப்பது, அவர்களுடைய படுக்கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, அவர்கள் உற்சாகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவது ஆகியவையே நாங்கள் செய்ய வேண்டியிருந்தவை. வேலை செய்த இளைஞர்கள் காட்டிய தளராத உற்சாகத்தையும் பயமின்மையையும் கண்டு, அளவு கடந்த ஆனந்தமடைந்தேன். டாக்டர் காட்பிரேயின் தைரியத்தையும், அனுபவம் மிக்கவரான ஸ்ரீ மதன்ஜித்தின் தீரத்தையும், யாரும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், இன்னும் வயது வராதவர்களான இந்த இளைஞர்களின் உற்சாகத்தை என்னவென்று கூறுவது? அன்றிரவு எல்லா நோயாளிகளையும் காப்பாற்றிவிட்டோம் என்பதுதான் எனக்கு ஞாபகம். ஆனால், அச்சம்பவம்-அதிலுள்ள பரிதாபம் ஒரு புறமிருக்க- உள்ளத்தைக் கவரும் முக்கியத்துவம் உடையதாகும். எனக்கு அது பாரமார்த்திக மதிப்பு வாய்ந்தது. ஆகையால், அதை விவரிக்க மேலும் இரு அத்தியாயங்களை நான் எழுத வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum