தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்பக் காட்சி

Go down

குடும்பக் காட்சி Empty குடும்பக் காட்சி

Post  birundha Sat Mar 23, 2013 3:43 pm

வீட்டுச் செலவு அதிகமாக இருந்தபோதிலும் எளிய வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற மனப்போக்கு டர்பனிலேயே ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை முன்பே கவனித்து இருக்கிறோம். ஆனால், ரஸ்கினின் உபதேசங்களை அனுசரித்து ஜோகன்னஸ்பர்க் வீடே கடுமையான மாறுதலை அடைந்தது. ஒரு பாரிஸ்டரின் வீட்டில் எவ்வளவு எளிமையைப் புகுத்துவது சாத்தியமோ அவ்வளவையும் செய்தேன். ஓரளவுக்கு மேஜை நாற்காலிகள் இல்லாமல் இருக்க முடியாது. புறத்தில் ஏற்பட்ட மாறுதலைவிட அகத்தில் ஏற்பட்ட மாறுதலே அதிகம். உடலுழைப்பு வேலைகளையெல்லாம் நாமே செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வளர்ந்தது. ஆகையால், என் குழந்தைகளையும்கூட இவ்விதமான கட்டுத் திட்டங்களின் கீழ் வளர்க்க ஆரம்பித்தேன். கடையில் ரொட்டி வாங்குவதை நிறுத்தினோம். கூனேயின் முறைப்படி தவிடு போக்காத கோதுமையைக்கொண்டு வீட்டிலேயே ரொட்டி தயாரிக்க ஆரம்பித்தோம். இதற்குக் கடையில் விற்கும் மில் மாவு பயனில்லை. கையினாலேயே அரைத்த மாவை உபயோகிப்பது அதிக எளிமை ஆவதோடு உடம்புக்கும் நல்லதாகவும் சிக்கனமாகவும் இருக்கும் என்று எண்ணினோம். எனவே கையினால் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்றை ஏழு பவுன் கொடுத்து வாங்கினேன். அதன் இரும்புச் சக்கரத்தை ஒருவரே சுற்றுவது கஷ்டம். இரண்டு பேர் சுலபத்தில் சுற்றலாம். வழக்கமாகப் போலக்கும் நானும் குழந்தைகளும் அந்த இயந்திரத்தில் மாவு அரைப்போம்.

நாங்கள் மாவு அரைக்கும் நேரந்தான் சாதாரணமாக என் மனைவி அடுப்பங்கரை வேலையைப் பார்க்கப் போகும் நேரம். என்றாலும், மாவு அரைப்பதில் அவ்வப்போது அவளும் எங்களுக்கு உதவி செய்ய வருவாள். ஸ்ரீமதி போலக் வந்து சேர்ந்த பிறகு அவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளுவார். மாவு அரைப்பது குழந்தைகளுக்கு நன்மை தரும் தேகப் பயிற்சியாக இருந்தது. இந்த வேலையையோ, வேறு எந்த வேலையையோ செய்ய வேண்டும் என்று குழந்தைகள் கட்டாயப்படுத்தப் படுவதில்லை. தாங்களே வந்து, இதில் எங்களுக்கு உதவி செய்வது குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு. களைத்துப் போனால் அவர்கள் போய்விடலாம். குழந்தைகள் - பின்னால் உங்களுக்கு நான் அறிமுகம் செய்துவைக்கப் போகிறவர்கள் உள்பட - எனக்கு உதவி செய்ய வராமல் இருந்ததே இல்லை. இவ் வேலையில் பின் தங்கியவர்களும் சிலர் உண்டு. ஆனால், அநேகர் உற்சாகமாகவே வேலை செய்தனர். அந்த நாளில் இளைஞர்கள், வேலை செய்யத் தயங்கியதாகவோ, களைப்பாயிருப்பதாகச் சொன்னதாகவோ எனக்கு நினைவு இல்லை.

வீட்டு வேலையைக் கவனித்துக்கொள்ளுவதற்காக ஒரு வேலைக்காரரை நியமித்திருந்தோம். குடும்பத்தில் ஒருவராக அவரும் எங்களுடன் வசித்தார். அவருடைய வேலைகளில் குழந்தைகளும் அவருக்கு உதவியாக இருப்பார்கள். முனிசிபல் தோட்டி மலத்தை அப்புறப்படுத்திவிடுவார். ஆனால், கக்கூசுகளை அலம்பும் வேலையை வேலைக்காரர் செய்யும்படி விடாமல், அவர் செய்வதை எதிர்பார்த்துக் கொண்டிராமல் நாங்களே செய்து வந்தோம். குழந்தைகளுக்கு இது நல்ல பயிற்சியாயிற்று. இதன் பலனாக, என் புதல்வர்கள் எல்லோருக்கும் தோட்டி வேலையில் அருவருப்பு ஏற்படாமல் இருந்தது. சுகாதார விதிகள் சம்பந்தமாகவும் நல்ல பயிற்சி பெற்றார்கள். ஜோகன்னஸ்பர்க் வீட்டில் யாருக்கும் நோய் என்பதே இல்லை. யாருக்காவது நோய் வந்தால், குழந்தைகள் மனம் உவந்து பணிவிடை செய்வார்கள். குழந்தைகளின் புத்தகப் படிப்பு விஷயத்தில் நான் அசிரத்தையாக இருந்தேன் என்றும் சொல்லமாட்டேன். என்றாலும், அதைத் தியாகம் செய்துவிட நிச்சயமாக நான் தயங்கவில்லை. ஆகையால், என் புதல்வர்கள் என் மீது குறை சொல்லுவதற்குக் கொஞ்சம் காரணமும் இருக்கிறது. சில சமயங்களில் இதை அவர்கள் தெரிவித்தும் இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு என் குற்றத்தையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

அவர்களுக்கு இலக்கியக் கல்வி அளிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நானே அதைச் சொல்லிக் கொடுக்கவும் முயன்றேன். ஆனால், ஒவ்வொரு சமயமும் இதற்கு ஏதாவது ஓர் இடையூறு வந்துகொண்டே இருந்தது. வீட்டில் அவர்களுக்குப் போதிக்க நான் வேறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. என்றாலும், தினமும் என் அலுவலகத்திற்குப் போகும் போதும், வீடு திரும்பும்போதும், அவர்கள் என்னுடன் நடந்துவரும்படி செய்துவந்தேன். இப்படி நடக்கும் தூரம் மொத்தம் ஐந்து மைல்கள். இது எனக்கும் அவர்களுக்கும் நல்ல தேகாப்பியாசமாயிற்று. இவ்விதம் நடந்து போகும்போது, வேறு யாரும் என் கவனத்தைக் கவராது போனால், பேசிக்கொண்டே போவதன் மூலம் அவர்களுக்குக் கல்வி போதிக்க முயல்வேன். இந்தியாவில் தங்கியிருந்த மூத்த மகன் ஹரிலாலைத் தவிர மற்ற என் புதல்வர்கள் எல்லோரும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்த வகையில் வளர்ந்தவர்கள்தான். தினமும் ஒரு மணி நேரம் ஒழுங்காக அவர்களுடைய இலக்கியப் படிப்புக்குச் செலவிட என்னால் முடிந்திருக்குமானால், மிகச்சிறந்த படிப்பை நான் அவர்களுக்கு அளித்திருப்பேன் என்பது என் கருத்து. அவர்களுக்குப் போதுமான இலக்கியப் பயிற்சியை அளிக்க நான் தவறி விட்டது, அவர்களுக்கும் எனக்கும் கூடத் துயரம் தருவதாயிற்று.

என் மூத்த மகன், தனது வருத்தத்தைத் தனிமையில் என்னிடத்திலும் பகிரங்கமாகப் பத்திரிகைகளிலும் அடிக்கடி தெரிவித்து வந்திருக்கிறான். ஆனால் என் மற்ற புதல்வர்கள், என் தவறு தவிர்க்கமுடியாதது என்று எண்ணித் தாராளத்துடன் என்னை மன்னித்து விட்டனர். இதற்காக நான் மனம் உடைந்து போய் விடவில்லை. இதில் எனக்கு ஏதாவது வருத்தமிருந்தால், அது ஒரு தந்தை எப்படி இருக்கவேண்டுமோ அப்படி, நான் இல்லாது போய் விட்டேனே என்பதற்காகத்தான். சமூகத்திற்குச் சேவை என்று நான் எதை நம்பினேனோ அது தவறானதாகவும் இருந்து இருக்கக்கூடும். என்றாலும், நான் உண்மையாகவே நம்பிய அந்தச் சேவையில் என் புதல்வர்களின் இலக்கியப் பயிற்சியை நான் தியாகம் செய்துவிட்டேன் என்றே கருதுகிறேன். அவர்களுடைய ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அவசியமானவை எவையோ அவைகளை நான் அலட்சியம் செய்துவிட்டதில்லை என்பது நிச்சயம். இதற்குச் சரியான ஏற்பாடு செய்யவேண்டியதே ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான கடமையும் என்று நம்புகிறேன். இதில் நான் எவ்வளவு முயன்றிருந்தும், என் புதல்வர்களிடம் குறைபாடுகள் தோன்றும் போதெல்லாம், அவற்றைக் குறித்து எனக்கு நிச்சயமாகத் தோன்றும் முடிவு ஒன்று உண்டு. அவர்களுடைய குறைபாடுகளுக்குக் காரணம். நான் போதிய கவனம் செலுத்தத் தவறியது அல்ல. ஆனால், அவர்களுடைய பெற்றோர் இருவரிடமும் இருக்கும் குறைகள்தான் என்பதே என் உறுதியான முடிவு.

குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜி தமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது. குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிப்பது விரும்பத் தக்கதா என்பதைக் குறித்துப் போலக்கும் நானும் அடிக்கடி கடுமையான விவாதம் செய்திருக்கிறோம். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே பேசுமாறு தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்தியப் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள் என்பது எப்பொழுதுமே என் திடமான அபிப்பிராயமாக இருந்து வந்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமூக பாரம்பரியச் செல்வம் குழந்தைகளுக்கு இல்லாது போகும்படி செய்து, அந்த அளவுக்கு நாட்டின் சேவைக்குத் தகுதியில்லாதவர்களாகவும், அவர்களை செய்து விடுகிறார்கள். இவ்விதத் திடமான கருத்துக்களை நான் கொண்டிருந்ததால், குழந்தைகளிடம் குஜராத்தியில் தான் பேசுவது என்று வைத்துக்கொண்டேன்.

இது போலக்குக்குப் பிடிப்பதே இல்லை. அவர்களுடைய எதிர்காலத்தை நான் நாசமாக்குகிறேன் என்று அவர் கருதினார். தம் முழுவலிமையுடனும், அன்புடனும் என்னோடு விவாதிப்பார். ஆங்கிலம் போன்ற உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு மொழியை, மழலைப் பருவத்திலிருந்தே குழந்தைகள் கற்றுக்கொள்ளுவதாக இருந்தால், வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைவிட அதிக அனுகூலங்களைச் சுலபமாக அவர்கள் பெறுவார்கள் என்பார், போலக். ஆனால், என் மனத்தை அவரால் மாற்ற முடியவில்லை. என் போக்குத்தான் சரி என்பதை அவர் அறிந்து கொள்ளும்படி செய்துவிட்டேனா, அல்லது நான் அதிகப் பிடிவாதக்காரன் என்று அவர்தான் விட்டுவிட்டாரா என்பது எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. இது, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. என் கருத்துக்கள், அனுபவத்தினால் இப்பொழுது அதிகப் பலப்பட்டே இருக்கின்றன. முழு இலக்கியப் படிப்பும் இல்லாததனால் என் புதல்வர்கள் நஷ்டமடைந்திருந்தாலும், இயற்கையாகவே தாய் மொழியில் அவர்கள் அடைந்த அறிவு, அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்மையானதாகவே இருக்கிறது. இதனாலேயே, தங்கள் சொந்த நாட்டில் அந்நியரைப் போல் தோன்றியிருக்க வேண்டியவர்கள், இன்று அப்படித் தோற்றமளிக்காமல் இருக்கிறார்கள். இயற்கையாகவே அவர்கள் இரு மொழிகளை அறியலாயினர். ஏராளமான ஆங்கில நண்பர்களுடன் தினமும் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தாலும், முக்கியமாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகவே இருந்த நாட்டில் அவர்கள் இருந்தாலும் எளிதில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கூடியவர்களாக இருக்கின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum