தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புலனடக்கத்தை நோக்கி

Go down

புலனடக்கத்தை நோக்கி Empty புலனடக்கத்தை நோக்கி

Post  birundha Sat Mar 23, 2013 3:37 pm

என் உணவில் சில மாறுதல்களைச் செய்வதற்குக் கஸ்தூரிபாயின் தேக அசௌக்கியம் எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை முந்திய அத்தியாயத்தில் விவரித்திருக்கிறேன். பிந்திய கட்டமொன்றில், பிரம்மச்சரியத்திற்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக மற்றும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. இவற்றில் முதலாவது பால் சாப்பிடுவதை விட்டுவிட்டது. பால் மிருக உணர்ச்சியைத் தூண்டுகிறது என்று ராய்ச்சந்திர பாயிடமிருந்தே முதன் முதலில் அறிந்தேன். சைவ உணவைப் பற்றிய புத்தகங்களும் இக்கருத்தைப் பலப்படுத்தின. ஆனால், நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளாமல் இருந்த வரையில் பால் சாப்பிடுவதை விட்டுவிட நான் துணியவில்லை. உடலை வளர்ப்பதற்குப் பால் அவசியமானது அல்ல என்று நான் முன்னமே அறிந்திருந்தேன். ஆனால், அதை விட்டுவிடுவது எளிதாக இல்லை. புலனடக்கத்திற்காகப் பாலைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு வளர்ந்துவிட்டபோது, கல்கத்தாவிலிருந்து வந்த சில பிரசுரங்களை நான் காண நேர்ந்தது. பசுக்களையும் எருமைகளையும் அவற்றின் சொந்தக்காரர்கள் எவ்வளவு கொடுமைபடுத்துகிறார்கள் என்பது அவற்றில் விவரிக்கப்பட்டிருந்தது. இது என்னிடம் ஆச்சரியகரமான பலனை உண்டுபண்ணியது. ஸ்ரீ கால்லென்பாக்குடன் இதைக் குறித்து விவாதித்தேன்.

தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரம் என்ற புத்தகத்தில் ஸ்ரீ கால்லென்பாக்கை வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைத்திருந்தபோதிலும், முந்திய ஒரு அத்தியாயத்தில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவரைக் குறித்து இங்கே மேலும் கொஞ்சம் சொல்ல வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். முதன்முதலில் தற்செயலாகவே நாங்கள் சந்தித்தோம். அவர் ஸ்ரீ கானுக்கு நண்பர். அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பர உலகப்பற்று இருப்பதை ஸ்ரீ கான் கண்டுபிடித்ததால், அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரை அறிய ஆரம்பித்ததும், சுகபோக வாழ்க்கையிலும் ஆடம்பரத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பிலேயே சமய சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான கேள்விகளை எல்லாம் அவர் கேட்டார். பேச்சின் நடுவில் கௌதமபுத்தரின் துறவைப் பற்றியும் பேசினோம். எங்களுடைய பழக்கம் சீக்கிரத்தில் நெருங்கிய நட்பாகக் கனிந்தது. எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல் ஆயின. என் வாழ்க்கையில் நான் செய்து கொள்ளும் மாறுதல்களைத் தாமும் தமது வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

அச்சமயம் அவருக்கு மணமாகவில்லை, வீட்டு வாடகையைச் சேர்க்காமல் தமக்கு மாத்திரம் மாதம் ரூ.1,200 செலவழித்து வந்தார். இப்பொழுதோ, மாதம் ரூ.120 மாத்திரம் செலவு செய்து கொள்ளும் அளவுக்குத் தமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டுவிட்டார். என் குடித்தனத்தை எடுத்துவிட்ட பிறகு, முதல் தடவை சிறையிலிருந்து விடுதலையான பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கத் தொடங்கினோம். நாங்கள் நடத்தியது மிகவும் கஷ்டமான வாழ்க்கையே. இந்த சமயத்தில் தான் பாலைப்பற்றி நாங்கள் விவாதித்தோம். ஸ்ரீ கால்லென்பாக் கூறியதாவது: “பாலினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைக் குறித்து நாம் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியானால், நாம் ஏன் அதை விட்டு ஒழித்து விடக்கூடாது? நிச்சயமாக அது அவசியமானதே அல்ல.” இந்த யோசனையைக் கேட்டு எனக்கு ஆச்சரியமும் திருப்தியும் ஒருங்கே ஏற்பட்டன. அதைச் சந்தோஷமாக வரவேற்றேன். அப்பொழுதிலிருந்தே பால் சாப்பிடுவதை விட்டுவிடுவதென்று இருவரும் பிரதிக்ஞை செய்து கொண்டோம்.

இது நடந்தது டால்ஸ்டாய் பண்ணையில், 1912ல். ஆனால், பாலை மறுப்பது மாத்திரம் எனக்குப் போதிய திருப்தியளித்து விடவில்லை. இதற்குப் பின் சீக்கிரத்திலேயே பழ ஆகாரத்தை மாத்திரம், அதுவும் சாத்தியமான வரையில் மலிவான பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்வது என்று தீர்மானித்தேன். மிகுந்த வறுமையிலிருக்கும் மக்களின் வாழ்க்கையையே நாங்களும் வாழவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
பழ ஆகாரம் அதிகச் சௌகரியமானதாகவும்கூட இருந்தது. சமைப்பது என்ற வேலையே இல்லை. பச்சை நிலக் கடலை, வாழைப் பழங்கள், பேரீச்சம் பழங்கள், எலுமிச்சம் பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவையே எங்கள் வழக்கமான சாப்பாடு. பிரம்மச்சரியத்தை அடைய விரும்புவோருக்கு இங்கே ஓர் எச்சரிக்கையைச் செய்யவேண்டியிருக்கிறது. பிரம்மச்சரியத்திற்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நான் எடுத்துக்காட்டியிருந்த போதிலும், இதில் மனமே மிகவும் முக்கியமானது என்பது நிச்சயம். தான் அறிய அசுத்தமானதாக இருக்கும் மனத்தைப் பட்டினியினால் சுத்தம் செய்துவிட முடியாது; உணவில் செய்கிற மாறுதல்கள் அதனிடம் பலனை உண்டாக்காது. மனத்திலிருக்கும் காம விகாரங்களைத் தீவிரமான ஆன்மசோதனையினாலும், ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவதனாலும், அவன் அருளினாலுமன்றிப் போக்கிக் கொண்டு விடவே முடியாது. ஆனால், உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சிற்றின்ப இச்சை கொண்டுள்ள மனம், சுவையானவைகளையும் சுகபோகத்திற்கானவைகளையுமே எப்பொழுதும் நாடும். இந்தப் புத்திப் போக்கைப் போக்கிக் கொள்ளுவதற்கு உணவுக் கட்டுத் திட்டங்களும், பட்டினி இருப்பதும் அவசியமானவை என்று தோன்றலாம். சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம். உணவுக் கட்டுத் திட்டங்களையும் பட்டினி இருப்பதையும் அலட்சியம் செய்கிறவர்களைப் போலவே, எல்லாவற்றையும் இவற்றிற்காகத் தத்தஞ் செய்கிறவர்களும் தவறையே செய்கின்றனர். புலனடக்கத்தை நோக்கிப் போகும் மனமுடையவர்களுக்கு, உணவுக் கட்டுத் திட்டங்களும் பட்டினியும் அதிகப் பயனளிப்பவை என்று என் அனுபவம் போதிக்கிறது. உண்மையில் இவற்றின் உதவியினாலன்றி உள்ளத்திலிருக்கும் காம விகாரங்களை அடியோடு போக்கிக் கொண்டு விடவே முடியாது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum