தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய் நாடு நோக்கி

Go down

தாய் நாடு நோக்கி Empty தாய் நாடு நோக்கி

Post  birundha Fri Mar 22, 2013 10:41 pm

நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, இப்பொழுது மூன்று ஆண்டுகள் ஆயின. அங்கிருந்த மக்களை நான் தெரிந்து கொண்டேன். அவர்களும் என்னை அறிந்து கொண்டார்கள். அங்கே நான் நீண்டகால ஆறு மாதங்களுக்கு தாய்நாடு போய்வர 1896-ல் நான் அனுமதி கேட்டேன். வக்கீல் தொழிலும் நன்றாகவே நடந்து வந்தது. நான் இருக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தனர் என்பதையையும் கண்டேன். ஆகவே, தாய் நாட்டிற்குச் சென்று, மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து, அங்கேயே தங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும், தாய் நாட்டிற்குச் சென்றால் விஷயங்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறித் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர் சம்பந்தமாக அவர்களுக்கு அதிகச் சிரத்தை உண்டாகும் படி செய்து, ஏதாவது பொதுவேலை செய்யலாம் என்றும் நினைத்தேன். மூன்று பவுன் வரி, ஆறாப் புண்ணாக இருந்து வந்தது. அது ரத்துச் செய்யப்படும் வரையில் அமைதி கிட்டுவதற்கில்லை.

ஆனால், நான் இல்லாதபோது காங்கிரஸின் வேலைகளையும், கல்விச் சங்கத்தையும் ஏற்று நடத்துவது யார் ? இதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆதம்ஜி மியாகான், பார்ஸி ருஸ்தம்ஜி ஆகிய இருவரையே நான் நினைக்க முடியும். வர்த்தகர்கள் வகுப்பில் பொது வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அப்போது பலர் இருந்தனர். ஆனால் அவர்களில் ஓழுங்காக வேலை செய்து காரியதரிசியின் கடமையை நிறைவேற்றக் கூடியவர்களும், இந்தியர் சமூகத்தின் மதிப்பைப் பெற்றிருந்தவர்களும் அந்த இருவருமே. காரியதரிசியாக இருப்பவருக்கு ஓரளவு ஆங்கிலம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்குக் காலஞ் சென்ற ஆதம்ஜி மியாகானின் பெயரைச் சிபாரிசு செய்தேன். அவரைக் காரியதரிசியாக நியமிப்பதைக் காங்கிரஸும் அங்கீகரித்தது. அவரைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியானது என்பது பிறகு அனுபவத்தினால் தெரிந்தது. ஆதம்ஜி மியாகான், விடாமுயற்சி உள்ளவர் தாராளமானவர், இனிய தன்மையுள்ளவர், மரியாதையுள்ளவர். அந்த நற்குணங்களால் அவர் எல்லோருக்கும் திருப்தியளித்தார். அதோடு காரியதரிசி வேலைக்குப் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரோ, அதிகமாக ஆங்கிலம் படித்தவரோ தேவையில்லை என்பதையும் அவர் எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டி விட்டார்.

1896-ஆம் ஆண்டு மத்தியில் கல்கத்தாவுக்குச் சென்ற, பொங்ககோலோ என்ற கப்பலில் நான் தாய் நாட்டிற்குப் புறப்பட்டேன். கப்பலில் பிரயாணிகள் குறைவாகவே இருந்தனர். அவர்களில் இருவர் ஆங்கில அதிகாரிகள். அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டாயிற்று. அவர்களில் ஒருவருடன் தினம் ஒரு மணி நேரம் சதுரங்கம் விளையாடுவேன். கப்பல் டாக்டர் எனக்கு, தமிழ்ச் சுயபோதினி என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். முஸ்லீம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமாயின், உருது மொழி தெரிந்திருப்பதும் சென்னை இந்தியருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

அந்த ஆங்கில நண்பரும் என்னுடன் உருது படித்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளிடையே ஒரு நல்ல உருது முன்ஷியைக் கண்டு பிடித்தேன். எங்களுடைய இப்படிப்பில் நல்ல முன்னேற்றமும் கண்டோம். அந்த அதிகாரிக்கு என்னை விட ஞாபக சக்தி அதிகம். ஒரு சொல்லைப் பார்த்து விட்டால் பிறகு அதை அவர் மறக்கவே மாட்டார். உருது எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. அதிக விடா முயற்சியுடனேயே நான் படித்தேன். ஆனால், அந்த அதிகாரியை மிஞ்சிவிட முடியவே இல்லை. தமிழிலோ, நல்ல அபிவிருத்தி அடைந்து வந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்ச் சுயபோதினி நன்றாக எழுதப்பட்ட புத்தகம் இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

இந்தியாவுக்குப் போய் சேர்ந்த பிறகும், இம் மொழிகளைத் தொடர்ந்து படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால், அது சாத்தியமில்லாது போயிற்று. 1893-க்குப் பிறகு நான் அதிகமாகப் படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில், தமிழிலும் உருதுவிலும் எனக்குக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் தமிழ் படித்தேன். உருது படித்தது ஏராவ்டா சிறையில், ஆனால் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளவே இல்லை. நான் படித்த கொஞ்சம் தமிழும், பயிற்சி இன்மையால் துருப் பிடித்துக் கொண்டிருந்தது.

தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என் மீது பொழிந்த அன்பு இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அவர்களில் பெரும் பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள். அவர்கள் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர், ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப் பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுவதற்கு, அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியது போல், தமிழக் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன். ஆனால், இந்தியாவில் தெலுங்கு கற்றுக் கொள்ள முயன்றும் நான் நெடுங்கணக்கை தாண்டி அப்பால் போகவில்லை. இம்மொழிகளை நான் இனி கற்றுக் கொள்ளவே முடியாது என்று இப்பொழுது அஞ்சுகிறேன். ஆகையால், திராவிடர்கள் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இவர்களில் ஆங்கிலம் தெரியாதவர்கள் தட்டுத்தடுமாறியேனும் ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுகிறவர்கள் மாத்திரமே, ஆங்கிலம் தெரிந்திருப்பது நமது சொந்த மொழிகளை அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக இருப்பது போல ஹிந்தி கற்றுக் கொள்ளுவதில்லை.

நான் விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். என் பிரயாண விவரத்தை கூறி முடித்து விடுகிறேன். பொங்கோலா-க் கப்பலின் காப்டனை நான் உங்களுக்கு அறிமுகம் செய்த வைக்க வேண்டும். நாங்கள் நண்பர்கள் ஆனோம். அந்த நல்ல காப்டன், பிளிமத் சகோதரர்கள் என்ற கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். கப்பல் ஓட்டும் விஷயத்தைக் காட்டிலும், எங்கள் பேச்சு, அதிகமாக ஆன்மிக விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒழுக்கத்திற்கும் சமயத்திற்கும் நடுவே அவர் ஒரு வரம்பை இட்டுவிட்டார். பைபிளில் கண்ட உபதேசங்கள் அவருக்குக் குழந்தை விளையாட்டாகத் தோன்றின. அதன் அழகு அவற்றின் எளிமையிலேயே இருக்கிறது என்றார். ஆண், பெண், குழந்தைகள் ஆகிய எல்லோரும் ஏசுநாதரிடமும் அவர் தியாகத்திலும் நம்பிக்கை வைக்கட்டும். அவர்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் விமோசனம் அடைவார்கள் என்றும் அவர் கூறுவார். பிரிட்டோரியாவில் இருந்த பிளிமத் சகோதரர்களின் நினைவு எனக்குத் திரும்ப வரும்படி இந்த நண்பர் செய்தார்.

ஒழுக்கச் கட்டுத் திட்டங்களை விதிக்கும் எந்த மதமும் பயனற்றது என்பது இவர் கருத்து. இந்த விவாதமெல்லாம் என்னுடைய சைவ உணவின் பேரில் எழுந்தவையே. மாமிசம் ஏன் திண்ணக் கூடாது மாட்டிறைச்சி தின்றால்தான் என்ன மோசம் ? தாவர வர்க்கத்தை மனிதன் அனுபவிப்பதற்கென்றே கடவுள் படைத்திருக்கிறார். மிருகங்கள் போன்ற கீழ் உயிர் இனங்களையும் அதற்காகவே கடவுள் படைத்திருக்க வில்லையா? இந்தக் கேள்விகளெல்லாம் அநேகமாகச் சமய சம்பந்தமான விவாதத்தில் கொண்டு போய் விட்டன. எங்களில், ஒருவர் கருத்தை மற்றவரால் மாற்றிவிட முடியவில்லை. மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன். இதற்கு மாறுபட்டு, தாம் கொண்ட கருத்தே சரியானது என்பதில் காப்டனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இருபத்து நான்காம் நாள் முடிவில் இன்பகரமான அக்கப்பல் பிரயாணம் ஒரு முடிவுக்கு வந்தது. ஹூக்ளி நதியின் அழகைக் கண்டு வியந்தவண்ணம் நான் கல்கத்தாவில் இறங்கினேன். அன்றே பம்பாய் செல்ல ரெயில் ஏறினேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum