தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பள்ளி ஆசிரியனாக

Go down

பள்ளி ஆசிரியனாக Empty பள்ளி ஆசிரியனாக

Post  birundha Sat Mar 23, 2013 3:15 pm

தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகச் சரித்திரத்தில் சொல்லாத அல்லது சுருக்கமாக மாத்திரம் குறிப்பிட்டுச் சென்றுவிட்ட விஷயங்களை மட்டுமே நான் இந்த அத்தியாயங்களில் கூறி வருகிறேன் என்பதை வாசகர்கள்நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.அப்படி நினைவில் வைத்திருந்தால், சமீபத்திய அத்தியாயங்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அவர்கள் எளிதில் காண முடியும். பண்ணை வளர்ந்து வரவே அதிலிருந்த சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் படிப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டியது அவசியமாயிற்று. இவர்களில் ஹிந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்தவச் சிறுவர்களும், சில ஹிந்துப் பெண்களும் இருந்தனர். இவர்களுக்குத் தனியாக உபாத்தியாயர்களை வைப்பது சாத்தியமல்ல.அப்படிச் செய்வது அவசியம் என்று நான் எண்ணவுமில்லை. தகுதி பெற்ற இந்தியப் பள்ளி ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆகையால், ஆசிரியர்களைநியமிப்பது சாத்தியமில்லை. அப்படியே ஆசிரியர்கள் கிடைத்தாலும், குறைந்த சம்பளத்தில் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து 21 மைலுக்கப்பால் போக யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க எங்களிடம் பணமும் ஏராளமாக இல்லை. மேலும் பண்ணைக்கு வெளியிலிருந்து உபாத்தியாயர்களை இறக்குமதி செய்யவேண்டியது அவசியம் என்றும் நான் கருதவில்லை.அப்பொழுது நடை முறையிலிருந்த கல்வி முறையிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அனுபவத்தினாலும், சோதனைகளினாலும், உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது, மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயேஉண்மையான கல்வியை அளிக்க முடியும். இதற்கு வெளி உதவி மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். டால்ஸ்டாய் பண்ணையோ ஒரு குடும்பம். அதில் தந்தையின் ஸ்தானத்தை நான் வகித்தேன். ஆகையால், சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பைச் சாத்தியமான வரையில் நானே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட யோசனையில் குறைகளும் இல்லாமல் இல்லை. எல்லா இளைஞர்களும்சிறு வயதிலிருந்தே என்னுடன் இருந்து வந்தவர்களல்ல. அவர்கள் மாறுபட்ட நிலையிலும், சூழ்நிலையிலும் வளர்ந்தவர்கள் அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. இத்தகைய நிலையிலிருக்கும் சிறுவர்களுக்குநான் குடும்பத்தின் தந்தை என்ற ஸ்தானத்தை வகித்தாலும், எவ்விதம் முழுப்பயிற்சியையும் நான் அளித்துவிட முடியும்?
ஆனால், உள்ளத்தின் பண்பு அல்லது சன்மார்க்கத்தை வளர்த்துக்கொள்ளுவதற்கே எப்பொழுதும் நான் முதல் இடம் கொடுத்து வந்தேன். அவர்களுடைய வயதிலும், அவர்கள் வளர்ந்த விதத்திலும் என்னதான் வித்தியாசம் இருந்தாலும், எல்லோருக்கும் ஒரே விதமான சன்மார்க்கப் பயிற்சியை அளித்து விடமுடியும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களுடைய தந்தையாக அவர்களிடையே இருந்து வருவது என்றும் தீர்மானித்தேன். அவர்கள் பெறும் கல்விக்குச்சரியான அடிப்படை அவர்கள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுவதே என்று கருதினேன். அந்த அடிப்படையைப் பலமாகப் போட்டுவிட்டால், மற்ற விஷயங்களையெல்லாம் அவர்களாகவோ அல்லது நண்பர்களின் உதவியாலோ அவர்கள் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதும் என் கருத்து.

அதோடு இலக்கியப் பயிற்சி இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்ததால்ஸ்ரீகால்லென்பாக், ஸ்ரீபிரக்ஜி தேசாய் ஆகியவர்களின் உதவியுடன் சில வகுப்புக்களையும் ஆரம்பித்தேன். உடலை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் குறைத்து எண்ணிவிடவில்லை. அன்றாடம் வழக்கமாக அவர்கள் செய்துவந்த காரியங்களினால் இந்த உடல் வளர்ச்சியை அவர்கள் பெற்று வந்தார்கள். ஏனெனில், பண்ணையில் வேலைக்காரர்களே இல்லை. சமையலிலிருந்து தோட்டிவேலை வரையில் எல்லாவற்றையும் பண்ணைவாசிகளே செய்துவந்தனர். பழ மரங்கள் பலவற்றைக் கவனித்துக்கொள்ளவும்வேண்டியிருந்தது. தோட்ட வேலையும் அதிகமிருந்தது. தோட்டவேலையில் ஸ்ரீகால்லென் பாக்குக்கு அதிக ஆர்வம். அரசாங்கத்தின் மாதிரித் தோட்டம் ஒன்றில் இருந்ததனால் அவருக்கு இதில் அனுபவமும் இருந்தது. சமையல் வேலையில் ஈடுபடாத மற்ற எல்லாக் குழந்தைகளும், பெரியவர்களும், கொஞ்ச நேரம் தோட்ட வேலை செய்தாக வேண்டியது அவர்களுடைய கடமையாயிற்று. இவ்வேலையில் பெரும் பகுதியைக்குழந்தைகளே செய்துவந்தனர். குழிகளைத் தோண்டுவது, மரம் வெட்டுவது, தூக்குவது போன்றவைகளை அவர்களே செய்தார்கள். இவை அவர்களுக்கு நல்ல தேகப்பயிற்சியை அளித்தன. இவ் வேலைகளை அவர்கள் சந்தோஷத்தோடு செய்துவந்தனர். ஆகையால், அவர்களுக்கு வேறு தேகப்பயிற்சியோ, விளையாட்டுக்களோ பொதுவாகத் தேவைப்படவில்லை. இக் குழந்தைகளில் சிலர் - சிற்சில சமயங்களில் எல்லாக் குழந்தைகளுமே- வேலைக்குச் சோம்பியதும் உண்டு.

சில சமயங்களில் இதைப் பார்க்காதது போல இருந்து விடுவேன். ஆனால், அநேகமாக அவர்களிடம் நான் கண்டிப்பாகவே இருப்பேன். இந்தக் கண்டிப்பை அவர்கள் விரும்புவதில்லை என்றே சொல்லுவேன். என்றாலும், என் கண்டிப்பை அவர்கள் ஒரு சமயமாவது எதிர்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. நான் அவர்களிடம் கண்டிப்பாக இருந்த சமயங்களில் ஒருவர் செய்ய வேண்டியவேலை விஷயத்தில் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது என்று எடுத்துக்காட்டி, அவர்கள் உணரும்படி செய்வேன். ஆனால், அந்த உறுதி அவர்களிடம் கொஞ்ச நேரத்திற்குத்தான் இருக்கும். அடுத்த கணம் அவர்கள் வேலையைப் போட்டுவிட்டு விளையாடப் போய்விடுவார்கள். என்றாலும், நாங்கள் சமாளித்துக் கொண்டு வந்தோம். அவர்கள் நல்ல உடற்கட்டும் அடைந்து வந்தார்கள். பண்ணையில் நோய் என்பதே இல்லை. இதற்கு நல்ல காற்றும், நீரும், உரிய வேலையில் சாப்பிடுவதும் காரணங்களாகும் என்றும் சொல்லவேண்டும். கைத்தொழில் பயிற்சியைப் பற்றியும் கூற வேண்டும். சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் பயனுள்ள ஏதாவது ஒரு கைத்தொழிலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என் நோக்கம்.

ஸ்ரீகால்லென்பாக் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தார். இந்த வித்தையை நானும் கற்றுக்கொண்டு, அதைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தேன். ஸ்ரீகால்லென்பாக்குக்குத் தச்சுவேலையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அத் தொழிலறிந்த மற்றொருவரும் பண்ணையில் இருந்தார். ஆகவே, தச்சுத் தொழில் கற்றுக்கொடுக்கவும் ஒரு சிறு வகுப்பு ஆரம்பித்தோம். சமையல் வேலையோ அநேகமாக எல்லாச் சிறுவர்களுக்குமே தெரியும். இவை யாவும் அவர்களுக்குப் புதியவை. ஒரு நாளைக்கு இவைகளையெல்லாம் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர்கள் கனவு கண்டதுகூட இல்லை. பொதுவாகத் தென்னாப்பிரிக்காவில் இந்தியச் சிறுவர்கள் பெற்று வந்த ஒரே பயிற்சி, படிப்பதும், எழுதுவதும், கணக்குப் போடுவதும்தான். டால்ஸ்டாய் பண்ணையில்உபாத்தியாயர்கள் எதைத் தாம் செய்யவில்லையோ, அவற்றைச் செய்யுமாறு சிறுவர்களிடம் சொல்லக்கூடாது என்பதை ஒரு விதியாக்கி விட்டோம். ஆகையால், ஒரு வேலையைச் செய்யுமாறு குழந்தைகளிடம் கூறினால், ஓர் உபாத்தியாயரும் அவர்களுடன் இருந்து அந்த வேலையைச் செய்துகொண்டிருப்பார். எனவே, சிறுவர்கள் எதைக் கற்றுக்கொண்டாலும் அதை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்டார்கள்.இலக்கியப் பயிற்சியைப் பற்றியும் ஒழுக்கத்தை வளர்ப்பது பற்றியும் பின்னால் வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum