தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புயல்

Go down

புயல்                                                                      Empty புயல்

Post  birundha Sat Mar 23, 2013 2:54 pm

டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களில் நன்றாக வைத்தியப் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன், பிரயாணிகள் இறங்க அனுமதிக்கப் படுவதில்லை. தொத்து நோயால் பீடிக்கப் பட்டவர் எவராவது கப்பலில் இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும் இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியக் கண்காணிப்பில் தூரத்தில் நிறுத்தி வைத்து விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய சமயத்தில் பம்பாயில் பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச காலத்திற்கு இந்த விதமான சுத்திகரணத்திற்கு நாங்கள் ஆளாக நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு முன்னால் ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும். யாருக்கும் நோய் இல்லை என்று டாக்டர் அத்தாட்சி கொடுத்த பிறகே அக்கொடி இறக்கப் படும். அந்த மஞ்சள் கொடியை இறக்கிய பின்னரே பிரயாணிகளின் உற்றார் உறவினர்கள் கப்பலுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர் வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ஐந்து நாட்களுக்கு இக்கப்பலிலிருந்து யாரையும் இறங்க அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில் பிளேக் கிருமிகள் வளருவதற்கு அதிகபட்சம் இருபத்து மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர் கருத்து, ஆகையால் எங்கள் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு இருபத்து மூன்றாம் நாள் முடியும் வரையில் அதிலிருந்து பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய கவலைமட்டும் அல்ல, அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.

டர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள், எங்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில் அன்றாடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தாதா அப்துல்லா கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக் காரர்கள் தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை, எல்லா விதங்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அக் கம்பெனிக்கு ஆசை வார்த்தைகளையும் கூறி வந்தனர். இரு கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் கம்பெனிக்குத் தக்க நஷ்ட ஈடு கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்கள்.

ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்துவிடக் கூடியவர்கள் அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல் கரீம் ஹாஜி ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். எப்படியும் கப்பல்களைக் கரைக்குக் கொண்டு வந்து, பிரயாணிகளை இறக்கியே தீருவது விவரமாகக் கடிதங்களை எழுதி எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற திரு மன்சுக்லால் நாஸர், அச்சமயம் அதிர்ஷ்வசமாக அங்கே இருந்தார். அவர் திறமை வாய்ந்தவர், அஞ்சாதவர். இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார். அக் கம்பெனியின் வக்கீலான திரு லாப்டனும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். வெள்ளைக்காரர்களின் போக்கை அவர் கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற முறையில் மட்டும் அன்றி அச் சமூகத்தின் உண்மையான நண்பர் என்ற முறையிலும் அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.

இவ்வாறு சம பலம் இல்லாத ஒரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒரு பக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும், மற்றொரு பக்கத்திலோ ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள் நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த திரு ஹாரி எஸ்கோம்பு வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.

கப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப்படுத்திவிட வேண்டும் என்பதே கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம் கடலில் தள்ளப்படுவீர்கள் திரும்பிவிட ஒப்புக் கொள்ளுவீர்களாயின் உங்கள் கப்பல் கட்டணத்தொகையும் உங்களுக்குக் கிடைத்துவிடும் என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய சகப்பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாதேரி கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோருமே அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.

பிரயாணிகளின் பொழுது போக்குக்காக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று, காப்டன, மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் நானும் என் குடும்பத்தியரும். விருந்து முடிந்த பிறகு பிரசங்கங்களும் நடந்தன. அப்பொழுது நான் மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன். பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் என் பேச்சு வேறுவிதமாக இருப்பதற்கில்லை. பிறகு நடந்த களியாட்டங்களில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். ஆனால் என் மனமெல்லாம் டர்பனில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. உண்மையில் அப் போர் என்னை எதிர்பார்த்து நடந்ததேயாகும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு.

1. நான் இந்தியாவில் இருந்தபோது நேட்டால் வெள்ளைக் காரர்களை அக்கிரமமாகக் கண்டித்தேன் என்பது.

2. நேட்டாலை இந்திய மயம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக, அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள் நிறையப் பிரயாணிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பது.

என் பொறுப்பை நான் அறிவேன. என்னால் தாதா அப்துல்லா கம்பெனியார், பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பிரயாணிகளின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால் அவர்களையும் ஆபத்தில் வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன். ஆனால் நான் முற்றும் குற்றம் அற்றவன். நேட்டாலுக்குப் போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை. பிரயாணிகள் கப்பலில் ஏறியபோது அவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. என் உறவினர் இருவரைத் தவிர கப்பலில் இருந்த பிரயாணிகளில் ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத் தெரியாது. நேட்டாலில் நான் இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத வார்த்தை ஒன்றையேனும், இந்தியாவில் இருந்தபோது நான் சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது இன்னது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.

நேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த நாகரிகத்தின் கனிகளோ, எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ அந்த நாகரிகத்திற்காக நான் வருந்தினேன். அந்த நாகரிகம் எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது. ஆகவே, அச்சிறு கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த நாகரிகத்தைப் பற்றி என் கருத்தை எடுத்துக் கூறினேன். காப்டனும் மற்ற நண்பர்களும் பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன் நான் பேசினேனோ அதே உணர்ச்சியுடன் என் பிரசங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையின் போக்கை அப்பேச்சு எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற அதிகாரிகளோடும் மேனாட்டு நாகரிகத்தைக் குறித்து, நீண்ட நேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல் மேற்கத்திய நாகரிகம் முக்கியமாக பலாத் காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என் பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே நிறைவேற்ற முடியுமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர் காப்டன் என்பது எனக்கு ஞாபகம்.

அவர் என்னை நோக்கி வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளவோம். அப்பொழுது உங்களுடைய அகிம்சைக் கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள் என்ற கேட்டார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன். அவர்களை மன்னித்து, அவர்கள் மீது வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய அறியாமைக்கும் குறுகிய புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன். தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன். ஆகையால், அவர்கள் மீது நான் கோபம் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

கேள்வி கேட்டவர் ஆயாசத்தை உண்டு பண்ணி வண்ணம் நீண்டு கொண்டே இருந்தன. இப்படிக் கப்பல் ஒதுக்கி வைக்கப் பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருந்தது. இப்படிக் கப்பலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது என்றும் அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே கப்பலில் இருந்து இறங்க எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார். கடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள் வந்து சேர்ந்தன. உயிரோடு நாங்கள் தப்பிப் போய்விட வேண்டுமானால், பணிந்துவிடுமாறு எங்களுக்குக் கூறபட்டது, எங்கள் பதிலில், பிரயாணிகளும் நானும் நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உள்ள உரிமையை வற்புறுத்தினோம். என்ன கஷ்டம் நேருவதாயினும், நேட்டாலில் பிரவேசித்தே தீருவது என்று நாங்கள் கொண்டிருந்த உறுதியையும் தெரிவித்தோம். இருபத்து மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள் துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள். பிரயாணிகள் இறங்குவதை அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum