தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புயலின் குமுறல்கள்

Go down

புயலின் குமுறல்கள் Empty புயலின் குமுறல்கள்

Post  birundha Sat Mar 23, 2013 2:54 pm

நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்திய தரவகுப்பினரிடையே பால்ய விவாகம் செய்து விடும் வழக்கம் இருப்பதால் கணவன் படித்திருப்பான், மனைவி சொஞ்சம்கூட எழுத்து வாசனையே இல்லாதிருப்பாள் என்பதை இச் சரித்திரத்தில் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். இவ்விதம் அவர்கள் இருவர் வாழ்க்கைக்கும் இடையே பெரும் அகழ் ஏற்பட்டு, அவர்கள் வாழ்வைப் பிரித்து நின்றது. கணவன் மனைவிக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆகையால் என் மனைவியும் குழந்தைகளும் அணிய வேண்டிய உடைகள் யாவை, அவர்கள் சாப்பிட வேண்டியது என்ன, புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எந்தவிதமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றையெல்லாம் நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது அந்த நாட்களைப் பற்றிய சில நினைவுகள் இப்பொழுது நகைப்பை ஊட்டுபவைகளாக இருக்கின்றன.

கணவன் சொல் தவறாமல் பணிந்து நடந்து வருவதே தனக்கு உயர்ந்த தருமம் என்று ஒரு ஹிந்து மனைவி கருதுகிறாள். ஒரு ஹிந்துக் கணவனோ, மனைவிக்கு எஜமானனும் எல்லாமும் தானே என்று எண்ணுகிறான், தன் மனைவி, தான் காலால் இடும் வேலையைத் தலையால் செய்ய வேண்டியது கடமை என்றும் கருதுகிறான். நாம் நாகரிகம் உள்ளவர்களாகத் தோன்ற வேண்டுமாயின் நடை உடை பாவனைகளெல்லாம் சாத்தியமானவரை ஐரோப்பியத் தரத்திற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று எந்தச் சமயத்தைப் பற்றி எழுதுகிறேனோ அந்தச் சமயத்தில், நான் நம்பி வந்தேன். ஏனெனில், அப்படிச் செய்தால் தான் நமக்குக் கொஞ்சம் செல்வாக்காவது இருக்கும். அந்தச் செல்வாக்கு இல்லாது போனால் சமூகத்திற்குச் சேவை செய்வது சாத்தியமாகாது என்றும் நான் அப்போது எண்ணினேன்.

ஆகையால் என் மனைவியும் குழந்தைகளும் எந்தவிதமான ஆடைகள் அணிவது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன் அவர்கள் கத்தியவார்ப் பனியாக்கள் என்று கொள்ளக் கூடியவாறு அவர்கள் உடை இருப்பதை நான் எப்படி விரும்ப முடியும் ? இந்தியர்களில் பார்ஸிகளே, அதிக நாகரிகம் உள்ளவர்களாக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்கள். ஆனாலும் முழு ஐரோப்பிய உடை சரிப்படாது என்று தோன்றவே பார்ஸி உடையை அவர்கள் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதன்படி என் மனைவி பார்ஸிப் புடவை உடுத்திக் கொண்டாள். சிறுவர்கள், பார்ஸிக் கோட்டும் கால்சட்டைகளும் போட்டுக் கொண்டனர். பூட்ஸும் ஸ்டாக்கிங்கும் இல்லாமல் யாரும் இருப்பதற்கில்லை. அவற்றைப் போட்டு பழக்கப்படுவதற்கு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலம் பிடித்தது. பூட்ஸ்கள் அவர்கள் காலை நசுக்கின. ஸ்டாக்கிங்குகளோ, வியர்வையால் நாற்றம் எடுத்துவிட்டன. கால்விரல்கள் அடிக்கடி புண்ணாயின். இவைகளையெல்லாம் சொல்லி அவற்றைப் போட்டுக் கொள்ள அவர்கள் ஆட்சேபிக்கும் போதெல்லாம் அதற்குச் சமாதானம் கூற நான் பதில்களைத் தயாராக வைத்திருப்பேன்.

ஆனால் என் பதில்களால் திருப்தியடைந்து விடாமல், என் அதிகாரத்திற்குப் பயந்தே, அவர்கள் விடாமல், அவற்றை அணிந்து வந்தார்கள் என்று நினைக்கிறேன். வேறு வழி இல்லை என்பதனாலேயே அவர்கள் உடை மாற்றத்திற்கும் சம்மதித்தார்கள். அந்த உணர்ச்சி காரணமாகவே, ஆனால் இன்னும் அதிகத் தயக்கத்துடனேயே, கத்தியையும் முள்ளையும் கொண்டு சாப்பிடவும் சம்மதித்தார்கள். இந்த விதமான நாகரிக சின்னங்களின் மீது எனக்கு இருந்த மோகம் குறைந்த பிறகு அவர்கள் கத்தியையும் முள்ளையும் உபயோகித்துச் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். புதிய முறைகளில் நீண்ட காலம் பழகிவிட்டதால், பழைய வழக்கத்திற்குத் திரும்புவதும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆனால் நாகரிகத்தின் இந்தப் பகட்டுகளையெல்லாம் உதறி எறிந்து விட்ட பிறகு, நாங்கள் சமையெல்லாம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ச்சியோடு இருந்ததை நான் இன்று காண முடிகிறது.

அதே கப்பலில் என் உறவினர்கள் சிலரும் எனக்குப் பழக்கமானவர்களும் இருந்தனர். எனது கட்சிக்காரரின் நண்பருக்கு அக் கப்பல் சொந்தமானதாகையால், அதில் நான் விரும்புகிற இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக முடிந்தது. அதனால் இந்த உறவினர் முதலியவர்களையும் மூன்றாம் வகுப்பில் வந்த மற்றப் பிரயாணிகளையும் நான் அடிக்கடி சந்தித்து வந்தேன். மத்தியில் எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல், கப்பல் நேரே நேட்டாலுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆகையால், எங்கள் பிரயாணம் பதினெட்டு நாட்களில் முடிந்துவிடும். ஆனால், ஆப்பிரிக்காவில் அடிக்கவிருந்த தீவிரமான போராட்டப் புயலைக் குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்வதைப்போல் நேட்டாலுக்கு இன்னும் நான்கு நாள் பிரயாணமே பாக்கி இருந்த சமயத்தில், கடலில் கடுமையான புயல் காற்று வீசியது. அது டிசம்பர் மாதம் பூமத்திய ரேகைக்குத் தெற்கிலுள்ள பகுதிக்கு அதுவே கோடைக் காலம். ஆகையால், அப் பருவத்தில் தென் சமுத்திரத்தில், பெரியதும் சிறியதுமாகப் புயல்காற்றுகள் அடிப்பது சகஜம். ஆனால் எங்களைத் தாக்கிய புயலோ மிகக் கடுமையானது. நீண்ட நேரம் அடித்தது. எனவே, பிரயாணிகள் திகல் அடைந்து விட்டனர். அது பயபக்தி நிறைந்த காட்சியாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்ட அபாயத்தில் சகலரும் ஒன்றாகிவிட்டனர். முஸ்லிம்கள், ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முதலிய எல்லோரும், தங்களுடைய வேற்றுமைகளை யெல்லாம் மறந்து விட்டு ஒன்றை ஒரே கடவுளை நினைத்தார்கள். சிலர் அநேக வேண்டுதல்களைச் செய்துகொண்டனர்.

பிரயாணிகளின் பிரார்த்தனைகளில், கப்பல் காப்டனும் கலந்து கொண்டார். புயல் ஆபத்துக்கு இடமானதுதான் என்றாலும் அதையும்விட மோசமான புயல்களைத் தாம் அனுபவித்திருப்பதாகக் காப்டன் பிரயாணிகளுக்கு உறுதி கூறினார். சரியான வகையில் கட்டப்பட்ட கப்பல், எந்தப் புயலையும் சமாளித்துத் தாங்கிவிடும் என்றும் விளக்கினார். ஆனால், பிரயாணிகளைத் தேற்ற முடியவில்லை. கிரீச் என்ற சப்தமும், முறியும் சப்தமும் கப்பலின் பல பாகங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொண்டே இருந்தன. கப்பலில் பிளவு கண்டு, எந்த நேரத்திலும் தண்ணீர் உள்ளே புகுந்துவிடக் கூடும் என்பதை அந்தச் சப்தங்கள் நினைவுபடுத்தி வந்தன. கப்பல் அதிகமாக ஆடியது. உருண்டது எந்தக் கணத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்று தோன்றியது மேல் தளத்தில் இருக்க முடியும் என்ற பேச்சிற்கே இடமில்லை. எல்லாம் அவன் சித்தம்போல் நடக்கும் என்று சொல்லாதவாறு இல்லை. இருபத்து நான்கு மணி நேரம் இவ்விதம் அல்லல் பட்டிருப்போம் என்பது என் ஞாபகம். கடைசியாக வானம் நிர்மலமாயிற்று, சூரியனும் காட்சியளித்தான். புயல் போய்விட்டது என்று காப்டன் அறிவித்தார். கப்பலில் இருந்தவர்களின் முகங்களில் ஆனந்தம் பொங்கியது. ஆபத்து மறைந்ததோடு அவர்களின் நாவிலிருந்து கடவுள் நாமமும் மறைந்தது. திரும்பவும் தின்பது, குடிப்பது, ஆடுவது பாடுவது என்பவற்றில் அவர்கள் இறங்கி விட்டார்கள். மரண பயம் போய்விட்டது. ஒரு கணம் மெய் மறந்து ஆண்டவனைத் துதித்த பக்தி போய், அவ்விடத்தை மாயை மூடிக்கொண்டுவிட்டது. வழக்கமான நமாஸ்களும் பிரார்த்தனைகளும் பின்னாலும் நடந்து வந்தன என்பது உண்மையே ஆனாலும், அந்த பயங்கர நேரத்தில் இருந்த பயபக்தி அவற்றில் இல்லை.

அப்புயல் மற்றப் பிரயாணிகளுடன் என்னை ஒன்றாகப் பிணைத்துவிட்டது. இதுபோன்ற புயல்களின் அனுபவம் எனக்கு இருந்ததால் புயலைப்பற்றிய பயம் எனக்குச் சிறிதும் இல்லை. கடல் பிரயாணம் எனக்குப் பழக்கப்பட்டு போனபடியால் எனக்கும் மயக்கம் வருவதே இல்லை. ஆகையால், பயமின்றிப் பிரயாணிகளிடையே நான் அங்கும் இங்கும் போக முடிந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். புயல் நிலைமையைக் குறித்துக் காப்டன் கூறிய தகவலைப் புயல் அடித்த போது மணிக்கு மணி அவர்களுக்குக் கூறுவேன். இவ்விதம் ஏற்பட்ட நட்பு எவ்வளவு தூரம் எனக்கு உதவியாக இருந்தது என்பதை பின்னால் கவனிப்போம். டிசம்பர் 18 அல்லது 19 தேதி கப்பல் டர்பன் துறைமுகத்தில் ரங்கூரம் பாய்ச்சியது. நாதேரி என்ற கப்பலும் அன்றே வந்து சேர்ந்தது. ஆனால், உண்மையான புயல் இனிமேல்தான் அடிக்க வேண்டியிருந்தது!
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum