தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போயர் யுத்தம்

Go down

போயர் யுத்தம் Empty போயர் யுத்தம்

Post  birundha Sat Mar 23, 2013 2:48 pm

1894-ஆம் ஆண்டுக்கும் 1899-ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்ட மற்றும் பல அனுபவங்களையெல்லாம் விட்டுவிட்டு நேரே போயர் யுத்தத்திற்கு வரவேண்டும். அந்தப் போர் ஆரம்பம் ஆனபோது என் சொந்தக் கருத்துக்களை வற்புறுத்தும் உரிமை எனக்கு இல்லை என்றே நான் நம்பினேன். இது சம்பந்தமாக என் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட போராட்டத்தைக் குறித்து நான் எழுதியிருக்கும் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரத்தில் விவரமாகக் கூறியிருக்கிறேன். அந்த வாதங்களை இங்கே திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை அறிய விரும்புவோர் அப்புத்தகத்தில் பார்த்துக் கொள்ளுவார்களாக. பிரிட்டிஷ் ஆட்சியிடம் நான் கொண்டிருந்த விசுவாசம், அப் போரில் பிரிட்டிஷ் பக்கம் என்னைச் சேரும்படி செய்துவிட்டது என்பதைச் சொல்லுவது மட்டும் இங்கே போதுமானது. பிரிட்டிஷ் பிரஜை என்ற வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காகப் போரில் ஈடுபட வேண்டியதும் என் கடமை என்றே நான் கருதினேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தயவினாலேயே அந்த ஏகாதிபத்தியத்துக்கு உட்பட்டு, தனது பூர்ணமான கதிமோட்சத்தை இந்தியா அடைய முடியும் என்பதும் அப்பொழுது என் கருத்து. ஆகையால் என்னால் முடிந்த வரையில் தோழர்களைத் திரட்டினேன். அவர்களைக் கொண்டு வைத்திய உதவிப் படையும் அமைத்து, கஷ்டப்பட்டு அப்படையின் சேவையைப் பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளும் படியும் செய்தேன்.

இந்தியன் பயங்காளி, ஆபத்துக்குத் துணியாதவன், உடனடியான தனது சொந்த நன்மையைத் தவிர வேறு எதையும் எண்ண மாட்டான் என்பதே பொதுவாக ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம். ஆகையால், நான் என் யோசனையைக் கூறியதும் பல ஆங்கில நண்பர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால் டாக்டர் பூத், என் திட்டத்தை மனமார ஆதரித்தார். வைத்திய உதவிப் படை வேலைக்கு, அவர் எங்களுக்குப் பயிற்சியும் அளித்தார். சேவைக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதற்கு வைத்திய அத்தாட்சிப் பத்திரம் எங்களுக்குக் கிடைக்கவும் உதவினார். ஸ்ரீ லாப்டனும் காலஞ்சென்ற ஸ்ரீ எஸ்கோம்பும் இத் திட்டத்திற்கு உற்சாகத்துடன் ஆதரவளித்தார்கள். கடைசியாகப் போர்முனையில் சேவை செய்வதாக மனுச் செய்து கொண்டோம். அரசாங்கம் வந்தனத்துடன் எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால் எங்கள் சேவை அப்போதைக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டது.

இந்த மறுதலிப்புக் கிடைத்ததோடு திருப்தியடைந்து நான் சும்மா இருந்துவிடவில்லை. டாக்டர் பூத்தின் உதவியின் பேரில் நேட்டால் பிஷப்பிடம் ( பாதிரியாரிடம் ) சென்றேன். எங்கள் வைத்திய உதவிப் படையில் இந்தியக் கிறிஸ்தவர்கள் பலர் இருந்தனர். என் திட்டத்தை அறிந்து பிஷப் மகிழ்ச்சியடைந்தார். எங்கள் சேவை அங்கீகரிக்கப்படுவதற்கு உதவி செய்வதாகவும் வாக்களித்தார். காலமும் எங்களுக்கு உதவியாக இருந்தது. எதிர் பார்த்ததைவிட அதிகத் தீரத்தோடும், உறுதி உடனும், திறமையாகவும் போயர்கள் போராடினார்கள். ஆகவே, முடிவில் எங்கள் சேவையும் அவசியமாயிற்று.

எங்கள் படை 1,100 பேரையும் 40 தலைவர்களையும் கொண்டது. இவர்களில் சுமார் முந்நூறு பேர் சுயேச்சையான இந்தியர், மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். டாக்டர் பூத்தும் எங்களுடன் இருந்தார். படையும் நன்றாக வேலை செய்து புகழ் பெற்றது. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்கு வெளியில்தான் எங்கள் வேலை என்று இருந்தும், செஞ்சிலுவைப் படையின் பாதுகாப்பு எங்களுக்கு இருந்தும், நெருக்கடியான சமயம் வந்தபோது, துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளும் போய்ச் சேவை செய்யும்படி எங்களுக்குக் கூறப்பட்டது. மேலே கூறப்பட்ட வரையறை, நாங்கள் விரும்பிப் பெற்றது அன்று. துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் நாங்கள் இருப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. ஸ்பியன் காப் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகள் முறியடிக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறிவிட்டது. ஜெனரல் புல்லர் ஒரு செய்தி அனுப்பினார்.

ஆபத்திற்கு உடன்பட நீங்கள் கடமைப்பட்டிராவிடினும், நீங்கள் அவ்விதம் செய்து, போர்க்களத்திலிருந்த காயம்பட்டவர்களைக் கொண்டு வருவீர்களானால் அரசாங்கம் நன்றியறிதல் உள்ளதாக இருக்கும் என்று அச்செய்தி கூறியது. இதற்கு நாங்கள் தயங்கவே இல்லை. இவ்விதம் ஸ்பியன் காப் யுத்தத்தின் பயனாக, நாங்கள் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள்ளாகவே வேலை செய்யலானோம். காயம்பட்டவர்களை, டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு, அந்த நாட்களில் நாங்கள் தினந்தோறும் இருபது, இருபத்தைந்து மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. காயம் அடைந்தவர்களில் ஜெனரல் வுட்கேட் போன்ற போர்வீரர்களைத் தூக்கிச் சென்ற கௌரவமும் எங்களுக்கு கிடைத்தது.

ஆறு வாரங்கள் சேவை செய்த பிறகு, எங்கள் படை கலைக்கப் பட்டுவிட்டது. ஸ்பியன் காப்பிலும், வால்கிரான்ஸிலும் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, லேடி ஸ்மித் என்ற இடத்தையும் மற்ற இடங்களையும் அவசர நடவடிக்கைளினால் மீட்பதற்கு முயல்வதைப் பிரிட்டிஷ் தளபதி கைவிட்டுவிட்டார். இங்கிலாந்திலிருந்தும் இந்தியாவில் இருந்தும் மேற்கொண்டு உதவிக்குப் படைகள் வந்து சேரும் வரையில் மெதுவாகவே முன்னேறுவது என்று முடிவு செய்தார். எங்களுடைய சொற்ப சேவை, அச்சமயம் வெகுவாகப் பாராட்டப்பெற்றது. இந்தியரின் கௌரவமும் உயர்ந்தது. எப்படியும் நாம் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் புத்திரர்களே என்பதைப் பல்லவியாகக் கொண்ட பாராட்டுப் பாடல்களைப் பத்திரிகைகள் பிரசுரித்தன. இந்திய வைத்தியப் படையின் சேவையை, ஜெனரல் புல்லர், தமது அறிக்கையில் பாராட்டியிருந்தார். இப்படையின் தலைவர்களுக்கும் யுத்தப் பதக்கங்களை வழங்கினார்கள்.

இந்திய சமூகம் அதிகக் கட்டுப்பாடுடையதாயிற்று. ஒப்பந்தத் தொழிலாளருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டாயிற்று. அவர்களும் அதிகமாக விழிப்படைந்தார்கள். ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள், குஜராத்திகள், சிந்திகள் என்ற எல்லோரும் இந்தியரே, ஒரே தாய் நாட்டின் மக்களே என்ற உணர்ச்சி இவர்களிடையே ஆழ வேர் ஊன்றியது. இந்தியரின் குறைகளுக்கு இனி நிச்சயமாகப் பரிகாரம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் உண்டாயிற்று. வெள்ளைக்காரரின் போக்கும் தெளிவாக மாறுதலை அடைந்துவிட்டது என்றே அச்சமயம் தோன்றியது. யுத்த சமயத்தில் வெள்ளையருடன் இந்தியருக்கு இனிமையான வகையில் நட்பும் ஏற்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான வெள்ளைக்காரச் சிப்பாய்களுடன் அப்பொழுது நாங்கள் பழகினோம். அவர்கள் எங்களுடன் நண்பர்களாகப் பழகினர். தங்களுக்குச் சேவை செய்வதற்காக நாங்கள் அங்கே இருப்பதைக் குறித்து நன்றியுள்ளவர்களாகவும் இருந்தனர்.

சோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் எவ்வளவு உயர்ந்த விதத்தில் தென்படுகிறது என்பதற்கு, நினைத்தாலும் இன்பம் தருவதாக உள்ள ஒரு சம்பவத்தின் உதாரணத்தை நான் இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்கில்லை. சீவ்லி முகாமை நோக்கி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். லார்டு ராபர்ட்ஸின் மகனான லெப்டினெண்டு ராபர்ட்ஸ் அங்கே படுகாயமடைந்து இறந்தார். போர்க்களத்திலிருந்து அவருடைய சவத்தைத் தூக்கி வந்த எங்கள் ஒவ்வொருவரும் தாகத்தினால் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். தாகத்தைத் தணித்துக் கொள்ள வழியில் ஒரு சிற்றோடை இருந்தது. ஆனால் அதில் யார் முன்னால் இறங்கித் தண்ணீர் குடிப்பது? வெள்ளைக்காரச் சிப்பாய்கள் குடித்துவிட்டு வந்த பிறகே நாங்கள் நீர் அருந்துவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் முன்னால் போகவில்லை. முன்னால் இறங்கி நீர் அருந்துமாறு எங்களை வற்புறுத்தினர். இவ்விதம் யார் முன்னால் போய்த் தண்ணீர் குடிப்பது என்பது பற்றிக் கொஞ்ச நேரம் அங்கே மகிழ்ச்சி தரும் போட்டியே நடந்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum