தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீணாகும் உணவும் விலைவாசி வீக்கமும்

Go down

வீணாகும் உணவும் விலைவாசி வீக்கமும் Empty வீணாகும் உணவும் விலைவாசி வீக்கமும்

Post  meenu Fri Mar 22, 2013 5:44 pm

தினமணியில் வந்துள்ள அற்புதமான தலைப்பு கட்டுரை:

உலகப் புகழ்பெற்ற இயற்கை விவசாய ஆலோசகரும், ஆசிரியருமான தேவேந்திர சர்மா,
ஒருமுறை ஓர் உலகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது, “”இந்தியாவின்
விவசாயக் கொள்கையை புதுதில்லி தீர்மானிப்பதில்லை, நியூயார்க்
தீர்மானிக்கிறது…” என்று கூறியது பொய்யல்ல.

ஏனெனில், அமெரிக்க அரசு விவசாயத் தொழில்நுட்ப ஒப்பந்த அடிப்படையில்
மான்சண்டோவின் பி.ட்டி விதைகளை வாங்க இந்தியா நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளை நியமித்து அமெரிக்க பாணி
விவசாயம் – அதாவது உணவுப் பயிர்களைத் தவிர்த்துவிட்டு ஏமாற்றும் மாற்றுப்
பயிர்த்திட்டம் என்று காட்டாமணக்கு, கூர்க்கன், விஷவெள்ளரி, சீனிச்சோளம்,
பீட்ரூட் கிழங்கு, வனில்லா போட்டு ஏற்றுமதி செய்யப் பணிக்கவில்லையா?

சரி, இதெல்லாம் போகட்டும். உணவை வீணாக்குவதிலுமா அமெரிக்காவைப்
பின்பற்ற வேண்டும். 1950-களில் பார்லாக் கண்டுபிடித்த மெக்சிகன் வெள்ளை
என்ற குட்டைரக கோதுமையைச் சாகுபடி செய்து யூரியாவை அள்ளிவிட்டபோது ஆஹா
ஓஹோவென்று விளைந்து அமெரிக்காவில் வைக்க இடமில்லாமல் களஞ்சியங்கள் நிரம்பி
வழிந்து விலை விழுந்தது. கோதுமை விலையை உயர்த்த, விளைந்த கோதுமையை
அட்லாண்டிக் சமுத்திரத்தில் கொட்டியதுபோக எஞ்சியது, உதவி என்ற பெயரில்
பி.எல். 480 அடிப்படையில் இந்தியாவுக்கு வந்தது.

இன்றைய இந்தியாவிலும் களஞ்சியம் நிரம்பி வழிவதன் காரணம், போதிய
களஞ்சியங்கள் கட்டப்படாததே. ஆகவே, கொள்முதல் செய்யப்பட்ட கோடி டன்களை
மூட்டையாகக் கட்டிச் சதுரமாக அடுக்கி அதன்மீது கறுப்புத் தார்ப்பாய்
விரித்துவிட்டால் போதும். மழைபெய்து மூட்டைக்குள் கோதுமை முளைக்கும்;
பூஞ்சை பிடிக்கும்; காற்றோட்டம் இல்லாமல் வீணாகும். பின்னர், பொது
விநியோகம் செய்ததாகக் கூறிக் குப்பையில் கொட்டப்படும். இப்படிச் செய்வதன்
மூலம் விலைவீழ்ச்சியடையாமல் காப்பாற்றலாம். கடலைத் தேடிக் கொட்டுவதென்றால்
டீசல், பெட்ரோல் செலவு. எந்தச் செலவும் இல்லாமல் கொள்முதல் செய்த
இடத்திலேயே வீணாக்கும் நுட்பத்தை “”மன்மோகனாமிக்ஸ்” எனலாம்.

அமெரிக்க நிபுணர்கள் வியந்து போற்றினாலும், உச்ச நீதிமன்றம் சும்மா அதன்
வேலையைப் பார்க்காமல் மூக்கை நுழைத்து, “”உணவை இப்படி வீணாக்குவதைவிடப்
பசியில் வாடும் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம்” என்று அரசைக் கண்டித்தபோது
பிரதமருக்குக் கோபம் வந்தது. கடந்த ஆண்டுதான் வீணாக்கப்படும்
உணவைப்பற்றிய தகவல் உச்ச நீதிமன்றத்துக்கு வந்துள்ளதுபோலும்! கடந்த 30
ஆண்டுகளாகவே உணவை வீணடிப்பதும் இந்திய உணவுக்கொள்கையின் அம்சமாயிருந்தது.

பின்னர்தான் அதுவே “”மன்மோகனாமிக்ஸ்” ஆனது. 80-களில் பல்லாயிரம்
டன்கள், 90-களில் சில லட்சம் டன்கள், 2000-க்குப் பின் பல லட்சம் டன்கள்,
இன்று கோடி டன்களாகக் கொள்முதல் செய்த உணவை வீணாக்குவதன் மூலம் விலை
வீழ்ச்சி தடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு விலைப் பாதுகாப்பும்
வழங்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், நெஞ்சு பொறுக்காத சில
எம்.பி.க்கள் வீணாகும் உணவைப் பற்றி வினா எழுப்பும்போது சம்பந்தப்பட்ட
அமைச்சர், “”குழு அமைத்து விவாதிக்கும்” என்பார். சைலோஸ் அமைப்பது
பற்றியோ, அலுமினியப் பெட்டகங்கள் வாங்குவது பற்றியோ பேசி அது தொடர்பாக
குழுவினர் அமெரிக்கா செல்வார்கள். ”"இது ஒரு பிரச்னையா? நாங்கள் கடலில்
கொட்டவில்லையா? நீங்கள் ஏன் கங்கையில் கொட்டக்கூடாது?” என்று
அமெரிக்காவிலிருந்து கற்று வந்ததைப் பிரதமரிடம் குழு கூறுவதுண்டு.
சீனாவுக்குச் சென்றவர்கள் என்ன சொன்னார்களோ? விண்ணில் ராக்கெட்விடத்
தெரிந்த இந்திய விஞ்ஞானிகளுக்கு அலுமினியத்தில் பெட்டகங்கள் செய்யத்
தெரியாதா? பாதாளச் சுரங்கம் கட்டி சைலோஸ் உருவாக்க முடியாதா? பல லட்சம்
கோடிக்கு ஊழல் செய்யத் தெரிந்த “”மன்மோகனாமிக்ஸ்” அரசுக்குப் பல்லாயிரம்
கோடி செலவழித்து உணவைப் பாதுகாக்கப் பெட்டகமோ, சைலோúஸôகூட அமைக்கத்
தெரியாதபோது, “”தேசிய உணவுப்பாதுகாப்பு மசோதா சட்டம்” இயற்றப்போவது நல்ல
வேடிக்கை.

கொள்முதல் செய்யப்படும் உணவில் ஒரு பகுதி திடலில் கொட்டி வீணானதுபோக
எஞ்சுவது உணவு விநியோகத் திட்டத்துக்கு அனுப்பப்படும். அதில் பாதி வெளி
அங்காடிக்கு வந்துவிடும். இப்படி ரேஷன் அரிசி வெளி அங்காடிக்கு வருவதன்
மூலம் உணவு விலை குறையும் என்பது “”மன்மோகனாமிக்ஸ்” விதி.

பணவீக்கம் எப்போது குறையும்? விலைவாசி எப்போது குறையும்? என்ற கேள்விகள்
கடந்த இரண்டாண்டுகளாகத் தினமும் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு
“”மன்மோகனாமிக்ஸ்” நிபுணர்கள், “”இந்த ஆண்டு உணவு உற்பத்தி உயர்ந்துள்ளது.
அறுவடை அபரிமிதம். உணவு விலை குறைந்து பணவீக்கம் கட்டுப்படும்…” என்று
நவில்வர்.

விலைவாசி உயர்வதால் பணவீக்கம் ஏற்படுகிறதா? பணவீக்கத்தால் விலைவாசி
உயர்கிறதா? இதற்கு ஒரு பட்டிமன்றம் போடலாம். விலைவாசி உயர்வதால் பணம்
அச்சடிக்கப்படுகிறது. பணப்புழக்கம் கூடுவதால் பொருள்மதிப்பு இழக்கப்பட்டு
விலை உயர்கிறது. இதைக் கட்டுப்படுத்தாமல் நீட்டிக்க வைக்கும்
“”மன்மோகனாமிக்ஸ்” அகராதியில் “”விலைவாசி வீக்கம்” என்ற புதிய சொல்
தமிழுக்கு ஒரு காணிக்கை. அதுவே, பசியில் உணவு கிடைக்காமல் துடிக்கும் ஏழை
இந்தியரின் வயிற்றெரிச்சலும்கூட.

ரிசர்வ் வங்கியிலிருந்து ஓர் அறிக்கை வரும். ஊடகங்களுக்குப் பேட்டி
தரும் கவர்னர், “இன்றுள்ள உணவுப்பற்றாக்குறை தீரும்போது பணவீக்கம்
கட்டுக்குள் நிற்கும்’ என்பார். மீண்டும் நல்ல விளைச்சல் என்று
“”மன்மோகனாமிக்ஸ்”, இந்திய விவசாய விஞ்ஞானிகளைப் பாராட்டும். ”கோதுமை
கொள்முதல் 2.80 கோடி டன்களை எட்டி சாதனை” என்று செய்தி வரும். ஏற்கெனவே
கொள்முதல் செய்து இருப்பிலுள்ள உணவால் களஞ்சியங்கள் நிரம்பி வழியும்
நிலையில் வெளியில் கொட்டி வீணாகும் பழைய இருப்புடன் புதிய வரவுகள்
மூட்டைகளாகக் கட்டப்பட்டு சதுரங்களாக அடுக்கி மேலே ஒரு கறுப்புத்
தார்ப்பாய் போட்டு மூடிவைத்து மீண்டும் உணவை வீணாக்கத்
திட்டமிடப்படுகிறது.

இன்றைய இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இல்லை. களஞ்சியப்
பற்றாக்குறைதான். கொள்முதல் செய்யப்படும் உணவைக் காப்பாற்றுவதைவிடக்
கெட்டுப்போக அனுமதிப்பதுவே நன்று என்று புதிய பொருளாதாரமான
“”மன்மோகனாமிக்ஸ்” ஆதாரங்களுடன் எடுத்துரைப்பதைக் கவனிக்க வேண்டும்.
“உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே’ என்று பெப்பே காட்டுவதில்
வல்லவரான மன்மோகன் சிங், உச்ச நீதிமன்றத்துக்கும் பெப்பே காட்டிக்
கொண்டுள்ளார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில்
“”மன்மோகனாமிக்ஸ்” சாதனை, வளர்ச்சி என்று வேலை செய்ததால் மறுபடியும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் முறை சாதனைகள் வேதனைகளாயின. முதல்
காலகட்டத்தில் நாணயம், நேர்மை என்று பெயரெடுத்து உத்தமராகவும்,
மாசுமருவற்ற சூரியனாக ஜொலித்த மன்மோகன், களங்கமுள்ள சந்திரனாகிவிட்டார்.

வளர்ச்சி, போதை இறங்காமல் “பணவீக்கத்துக்கு மருந்து பணவீக்கமே’ என்று
எண்ணும் அளவில் உற்பத்தித்தன்மையற்ற செலவுகள் தொடர்வதால் மன்மோகனுக்குப்
பொருளாதாரம் கற்பித்த கீன்ஸ் இவரை மன்னிக்கவே மாட்டார்.

இந்த நாடு இன்னமும் விவசாயத்தை நம்பியிருப்பதுபோலவும், ஜி.டி.பி
வருமானத்தில் விவசாயம் பெரும்பங்கு வகிப்பதுபோலவும் எண்ணி அதே பழைய
பல்லவி, “”உணவு உற்பத்தி உயர்ந்தால் விலைவாசி குறையும். பணவீக்கம்
கட்டுப்படும்” என்று கிளிப்பிள்ளை பேசுவதுபோல் “”மன்மோகனாமிக்ஸ்”
நிபுணர்கள் பேசி வருவது வெட்கக்கேடு.

பணப்புழக்கம் பல வடிவங்களில் பெருத்து வீங்கி வெடித்து வருகிறதே.
பற்றாக்குறை பட்ஜெட்டால் அரசு அடிக்கும் அசல் பணம் ஒரு பங்கு. உள்நாட்டில்
புழங்கும் கறுப்புப் பணம் ஒரு பங்கு. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்
எல்லா வங்கிகளும் வழங்கும் கடன், திரும்பிவராத கடன், திருப்ப முடியாத கடன்
– இதற்கும் சேர்த்து அச்சடிக்கப்படும் அசல் பணம்.

“கஜானா காலி, கஜானா காலி…’ என்று மாநில அரசுகள் புலம்பினாலும் ரிசர்வ்
வங்கி எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுத்து கஜானாக்களுக்குப் பணம்
நிரப்பியவண்ணம் உள்ளன. முதலீடு, முதலீடு என்று சாலைகளுக்கும்,
ஆலைகளுக்கும், வன அழிப்புக்கும், சுரங்கம் தோண்டவும், விவசாய நிலத்தைக்
கைப்பற்றி ரியல் எஸ்டேட் செய்யவும் பணம் அள்ளிவிடப்படுகிறது.

நொய்டா திட்டம் என்னவோ உ.பி.யில் மட்டுமே நிகழ்வதாக எண்ண வேண்டாம்.
2005-ல் எஸ்.ஈ.இசட் சட்டம் என்ற பெயரில் அவசரம் அவசரமாகப் பொருளாதார
மண்டலச் சட்டத்தை மத்திய அரசுதானே இயற்றியது? மாநில அரசுகள் செயல்படுத்தி
ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் மிகுந்துவிட்டது யாரால்? எலும்பை
முறித்தவனே புத்தூர் கட்டுப்போடுவதுபோல் ராகுல் உ.பி.க்கும் ஒரிசாவுக்கும்
ஓடிப்போய் விவசாயிகளுடன் காட்சி தந்து பேட்டி எடுப்பது ஊடகங்களுக்கு
உற்சாகம் தரலாம். கறுப்புப்பணம் குறையுமா?

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் புழங்கும் பணஓட்டம் குறையுமா? ”"1,000
ரூபாய் நோட்டுகளையும் 500 ரூபாய் நோட்டுகளையும் செல்லாக்காசு ஆக்குங்கள்”
என்று ஒரு சாமியார் தரும் யோசனைதான், பணவீக்கம் – விலைவாசிவீக்கம்
எல்லாவற்றுக்குமே தக்க மருந்தாக இருக்கும் என்று
தோன்றுகிறது.”"மன்மோகனாமிக்ஸ்” திட்டங்களால் ஏறும் விலைவாசிகளுக்கும்,
வீங்கும் பணத்துக்கும், வீணாகும் உணவுக்கும் யார்தான் மருந்து வழங்கப்
போகிறார்கள் என்பது விளங்காத புதிராயுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum