தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாத மேடை:"பாலியல் வழக்குகள் தொடர்பாக வர்மா கமிட்டி பரிந்துரைகள் போதுமானவை என்று கருதுகிறீர்களா.

Go down

விவாத மேடை:"பாலியல் வழக்குகள் தொடர்பாக வர்மா கமிட்டி பரிந்துரைகள் போதுமானவை என்று கருதுகிறீர்களா. Empty விவாத மேடை:"பாலியல் வழக்குகள் தொடர்பாக வர்மா கமிட்டி பரிந்துரைகள் போதுமானவை என்று கருதுகிறீர்களா.

Post  meenu Tue Mar 12, 2013 1:11 pm

பாலியல் வழக்குகள் தொடர்பாக வர்மா கமிட்டி பரிந்துரைகள் போதுமானவையே. ஆனால் அந்தப் பரிந்துரைகளும் அவற்றின் அடிப்படையில் இயற்றப்படும் சட்ட விதிமுறைகளும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதில்தான் வெற்றி, தோல்விகள் அடங்கியுள்ளன.

ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.



மரண தண்டனை கூடாது

பரிந்துரைகளே போதும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் அவர்கள் திருந்த வாய்ப்பே கிடையாது. ஆயுள் தண்டனை விதிப்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். பாலியல் குற்றம் புரிந்தோர் தங்களுடைய தவறினை நினைத்து வருந்தி மனம் வாடிவாடி சிந்திக்க ஆயுள் தண்டனை போதுமானது. ஜனநாயக நாட்டில் சர்வாதிகார தண்டனை கூடாது. வர்மா கமிட்டி பரிந்துரைகளை ஏற்கலாம், தவறில்லை.

என். சண்முகம், திருவண்ணாமலை.



3 அளவுகோல்கள்

பரிந்துரைகள் போதும், ஆனால் அதை நடைமுறைப்படுத்திடவரும் காவல்துறை அதிகாரிகள் 3 வித அளவுகோல்களை வைத்துள்ளனர். அதிகார வர்க்கத்துக்கு, பணக்காரர்களுக்கு, பணபலமோ - செல்வாக்கோ இல்லாத ஏழைகளுக்கு என்று மூன்றுவித வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டு செயல்படுத்துவார்கள் என்பதை அனுபவம் தெரிவிக்கிறது. எனவே இந்தப் பரிந்துரைகள் முறையாகச் செயல்வடிவம் பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டத்தின் பற்கள் எப்போதும் ஏழைகளைத்தான் கடிக்கும்; அதிகாரத்தில் உள்ளவர்களையும் பணக்காரர்களையும் பார்த்தால் சட்டம் வணங்கி வழிவிட்டுவிடுகிறதே?

இ.ராஜு நரசிம்மலு, சென்னை.



தேவை நீதிபோதனை

சட்டங்களை இயற்றுவதும் பரிந்துரைப்பதும் பெரிதல்ல; ஏழை - பணக்காரன், அரசன் - ஆண்டி என்ற வித்தியாசங்களைப் பாராமல் குற்றவாளி எவராக இருந்தாலும் சட்டம் பாய வேண்டும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட வேண்டும். ""பட்டாளத்தை அதிகப்படுத்துவதைவிட குடிமக்களைத் திருத்துவது மிகமிக பயன் அளிக்கக்கூடியது'' என்று அரபுப் பழமொழி கூறுகிறது. பள்ளிக்கூடங்களிலேயே மக்களுக்கு நல்ல ஒழுக்கங்களைப் போதிக்க வேண்டும். இப்போது இதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. பொதுத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும், அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்பதற்காக நீதி போதனை வகுப்புகளைக்கூட பொதுப் பாடங்களைப் படிக்கப் பயன்படுத்துகின்றனர். நீதிபோதனையும் பாடமாக இருந்தால்தான் வருங்கால சமுதாயம் ஒழுக்கமானதாக இருக்கும்.

க. சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி,
காயல்பட்டினம்.



ஒரு சில விநாடிகளே

பாலியல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என்ற வர்மா குழு பரிந்துரை போதுமானதே. மரண தண்டனை அளித்து உடனே உயிரைப் பறித்துவிடுவதால் வலி, வேதனை ஒரு சில விநாடிகளில் முடிந்துவிடும். ஆயுள் தண்டனை விதித்தால் எந்தக் குற்றத்துக்காக தான் சிறைக்கு வர நேர்ந்தது என்பதை ஒவ்வொரு கணமும் நினைத்துப் பார்க்கும் நிலை ஏற்படும். இதில்தான் அதிகபட்ச மன வலி ஏற்படும். குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய நிலைமை அவமானத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும். இதனைவிட பெரிய தண்டனை இருக்க முடியாது. அரசியல் தலைவர்களின் பிறந்த நாளையொட்டியோ நன்னடத்தையைக் காரணம் காட்டியோ இத்தகைய குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கவே கூடாது. சிறைச்சாலைகளுக்குள்ளும் இவர்களுக்கு தனிச் சலுகைகள் ஏதும் வழங்கக்கூடாது.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.



உணர்வுக் கோணல்கள்

என்னதான் தண்டனை அளித்தாலும் இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் மனிதர்களின் உணர்வுக் கோணல்கள்தான் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். அதற்காக இதை மன்னித்துவிடவும் முடியாது. பாலியல் தொடர்பாகக் கூறப்படும் குற்றங்களுக்கு இப்போதுள்ள சட்டங்களே போதுமானவை; ஆனாலும் நீதியரசர் ஜே.எஸ். வர்மா 80,000 பேரின் கருத்துகளையும் பரிசீலித்து பரிந்துரைகளை அளித்துள்ளார். பல குற்றங்களைக் குறைக்க அரசு உத்தரவுகளே போதும் என்கிறார்; சிலவற்றுக்கு போலீஸ் நடவடிக்கைகளும் பாதுகாப்புகளுமே போதும் என்கிறார். குற்றத்தின் தன்மைகளுக்கு ஏற்ப 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம் என்கிறார். குற்றம் நடந்த 30 நாள்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற அவரின் பரிந்துரை எல்லாவற்றையும்விட முக்கியமானது. அதைச் செய்தாலே பாலியல் குற்றங்கள் குறையும்.

மகிழ்நன், சென்னை - 56.


திருந்தவா போகிறான்?

பாலியல் குற்றவாளிக்குச் சிறைத்தண்டனை என்றால் திருந்தவா போகிறான்? சிறைவாசம் முடிந்து ஊர் திரும்பியதும் அந்தப் பெண்ணைப் பழிவாங்கவே துடிப்பான். அந்தப் பெண் எப்படி வாழ்நாள் எல்லாம் மனம் நொந்து கண்ணீர் வடிக்கிறாளோ அதே மாதிரி அவனும் மனம் புழுங்கும்படியாக ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாகும். பத்து, இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அவன் மன நிலையை மாற்றாது. திரும்பத்திரும்ப குற்றம் புரிவான், மனித நேயமே இல்லாதவன்.

ஏ.டி. சுந்தரி, சிதம்பரம்.



சிறையில் சுகபோகம்

இன்றைய தண்டனைச் சட்டங்களும் வர்மா கமிட்டி பரிந்துரைகளும் போதுமானவையாக இருந்தாலும் நடைமுறையில் எந்தக் குற்றவாளியும் தவறுக்கு வருந்துவதோ, திருந்துவதோ இல்லை. சிறைக்கூடத்தில் செல்போன், கஞ்சா, வெளியிலிருந்து சுவையான சாப்பாடு, சிகரெட் என்று பணத்தைக் கொடுத்து கைதிகள் சுகபோகத்தில் இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. பிரிட்டிஷார் காலத்தில் கடுமையான குற்றம் செய்தவர்களை நாடு கடத்துவார்கள். தேச விடுதலைக்காகப் போராடிய தியாகிகளைக்கூட அந்தமான் சிறையில் அடைத்து வைத்தனர்.

பாலியல் குற்றவாளிகளை அவர்களுடைய சொந்த மாநிலத்திலிருந்து வெகு தொலைவில், எந்தவித வசதியும் இல்லாதபடிக்கு அடைத்து வைப்பது மிகமிக அவசியம். நண்பர்கள், உறவினர்களைக்கூடசந்திக்க முடியாத நிலைமைதான் அவர்களைத் திருந்த வைக்கும். பாலியல் வழக்குகளில் மேல் முறையீட்டுக்கு வாய்ப்பே இருக்கக்கூடாது. இதற்காக சட்டத்தைத் திருத்த வேண்டும்.

டி.ஆர். சங்கரன், தருமபுரி.


மரணமே தண்டனை

கற்பழிக்கப்பட்ட பெண் உண்மையில் நடைப்பிணமாகத்தான் வாழ்வாள்; அவளால் அந்தக் கொடுமையை மறக்கவே முடியாது. அவளுடைய சுதந்திரத்தைப் பறித்த காமுகனுக்கு மரண தண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். இன்றைய சிறுவர்கள் "எல்லாம்' தெரிந்தவர்கள். அவர்களுக்கு வயது கருதி சலுகை கூடாது. பாலியல் குற்றங்கள் செய்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாகவே கருதி தண்டனையைக் கடுமையாக்கினால்தான் சிறார் சமுதாயத்தை நாம் காப்பாற்ற முடியும். வர்மா கமிஷனுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை என்றே பரிந்துரைகளைப் பார்க்கும்போது தெரிகிறது.

டி. சேகரன், திண்டுக்கல்.



அரசு நீக்கிவிட்டது

வர்மா கமிஷன் பரிந்துரைகள் போதுமானவையாக இருந்தாலும் பலவற்றை மத்திய அரசு நீக்கிவிட்டது. அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றங்கள் செய்யும்போது துறைரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு நீண்ட காலம் ஆகிவிடுகிறது. இதனால் சிலர் தங்களுடைய செல்வாக்கு - சொல்வாக்கால் தப்பித்துவிடுகின்றனர். எந்த சட்டமும் திட்டமும் ஏட்டளவில் இருந்து பயனில்லை. அவை கண்டிப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.



எம்.எஸ். இப்ராகிம்,

சென்னை.



ஆண்மையை நீக்குக

பாலியல் வழக்குகளில் குற்றம் நீருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்; அவருடைய வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதித்து சாகும் வரையில் சிறையிலேயே அடைத்துவைக்க வேண்டும். தனி நபரோ, ஒன்றுக்கும் மேற்பட்டோரோ பாலியல் பலாத்காரம் செய்து அல்லது செய்ய முயற்சி செய்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டால் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும். குற்றச் செயல்களைக் குறைக்க வேண்டும் என்றால் தண்டனை கடுமையானதாகத்தான் இருக்க வேண்டும்.

மு. நடராஜன், திருப்பூர்.

தண்டனைக் குறைவு

வர்மா கமிட்டி அறிக்கையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை இல்லை; ஆண்மை நீக்கம் இல்லை. சிறைவாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். அரசியல் சட்டத்தில் இல்லை என்பதற்காக சில தண்டனைகளை விட்டுவிடக்கூடாது. ஒட்டுமொத்த மக்களின் மன நிலைக்கு மதிப்பளித்து சட்டம் திருத்தப்படவேண்டும். வன்புணர்ச்சியோடு கொலையும் செய்கிறார்களே, அவர்களைத் தூக்கிலிட வேண்டாமா? சிறு குழந்தைகள், மைனர் பெண்களையும் சீரழிக்கிறார்களே அந்த மிருகங்களுக்கு மரண தண்டனை தேவையில்லையா? குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் தண்டனையை மரண தண்டனையாக மாற்றி அமல்படுத்த வேண்டும்

ஜி.எம்.சி. பாபு, சென்னை.


உடனே மரண தண்டனை

பாலியல் குற்றங்களுக்கு வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் மூன்றில் ஒரு பங்கு முன்னேற்றத்தைத் தருமா என்பது சந்தேகமே? குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்; வாக்குரிமை பறிப்பு போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். வழக்கு, விசாரணை வருடக்கணக்காக நீட்டிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிவுரைகளும் மன்னிப்புகளும் குற்றங்களைக் குறைத்துவிடாது. பரிந்துரைகள் கடுமையாக இருந்திருக்க வேண்டும்.

பழ. கவிதா சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி.


மிருகத்திடம் மனிதாபிமானமா?

எப்போது ஒரு மனிதன் தன் நிலை மறந்து மிருகமாகிவிடுகிறானோ அப்போதே அவன் இச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவனாக ஆகிவிடுகிறான். அவனுக்கு சிறைத் தண்டனைகள் சரியான தீர்வு அல்ல. அரபு நாடுகளைப் போல தண்டனைகளை மக்கள் முன் நிறைவேற்ற வேண்டும். "குற்றத்துக்குத் தண்டனை உண்டு, அது மென்மையானது, வழக்குரைஞர் உதவியோடு தப்பிவிடலாம், அப்படியே சிறைவாசம் விதித்தாலும் தலைவர்களின் பிறந்த நாள்களின்போதோ, புதிய ஆட்சி அமைந்த உற்சாகத்திலோ தண்டனைகளைக் குறைப்பார்கள் அப்போது வெளியே வந்துவிடலாம்' என்றே கிரிமினல்கள் நினைக்கிறார்கள். மரண தண்டனை விதித்தால்தான் குற்றவாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விவாத மேடை: 13-2-2013 இதழில் விவாத மேடை
» விவாத மேடை:
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மேலும் 3 வழக்குகள்
» இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான ‘அட்ஹாக் கமிட்டி’க்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum