தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...

Go down

ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... Empty ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...

Post  meenu Sat Mar 09, 2013 2:26 pm

சிவராத்திரி வழிபாடு ஏற்படக் காரணமாக பல கதைகள் கூறப்படுகின்றன.

படைக்கும் கடவுளான நான்முகனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இப்பிரச்னையை தீர்த்து வைக்க பிறவாயாக்கைப் பெரியோனாம் சிவபெருமானிடம் வேண்டினர். உடன் சிவனும் தன் அடி முடியினைக் கண்டு முதலில் வருபவரே பெரியவர் என்றார். இருவரும் சம்மதித்து விரைந்தனர். அப்போது சிவபெருமான் லிங்கோத்பவராய் எழுந்தருளி அடிமுடிகாண ஒண்ணாப் பேரொளியாய் நின்றார். அது கண்ட தேவர்கள் எல்லாம் ஒன்று கூடி சிவபெருமானை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியே பிற்காலத்தில் சிவராத்திரியாகக் கொண்டாடப்பட்டது என்கிறது ஒரு புராணக்கதை.

சக்தி, விளையாட்டாக சிவமூர்த்தியின் மூன்று கண்களையும் தம் கைகளால் மூட, மூவுலகமும் இருண்டன. அந்த நேரத்தில் சிவமூர்த்தியை தேவர்கள் வேண்டி வணங்கி நின்றனர். இதுவே சிவராத்திரி ஆயிற்று என்பது மற்றொரு கதை.

அசுரர்களும், தேவர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அவ்விஷம் மற்ற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதற்காக சிவபெருமான் தானே அதை அருந்தினார். அவ்விஷம் சிவனைப் பீடிக்காதிருக்க உமையானவள் சிவனின் கண்டம் பற்ற, அவ்விஷம் கண்டத்தில் தங்கிற்று. கண்டத்தில் தங்கிய விஷத்தால் சிவபெருமான் ‘நீலகண்டன்’ என்றழைக்கப்பட்டார். கண்டத்து விஷம் சிவனை பாதிக்காதிருக்க தேவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பூஜை செய்தனர். அவர்கள் பூஜித்த நிகழ்ச்சியே சிவராத்திரி என்றழைக்கப்பட்டது என்பது இன்னொரு கதை.

ஒரு கல்பத்தில் அண்டங்களெல்லாம் இருளாகிப்போக அவ்விருளைப் போக்க ருத்திரர் சிவலிங்கத்தை இடைவிடாது பூசித்தார். அவர் அவ்வாறு பூசித்த காலமே சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது என்றும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை காட்டில் ஒரு வேடன் உணவிற்காக வேட்டையாடச் சென்றபோது வேட்டை விலங்குகள் ஒன்றும் கிடைக்காமல் காட்டில் வெகுதூரம் சென்றுவிட, இரவில் வழி தெரியாது சோர்ந்தபோது வெம்புலி ஒன்று அவனை துரத்தியது. வேடன் தன் உயிரைக் காத்துக்கொள்ள ஒரு மரத்தின் மேலேறினான். மரத்தின் அடியில் புலி அமர்ந்துகொண்டது. இரவில் தான் உறங்காமலிருக்கும் பொருட்டு அம்மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்தபோது புலியைக் காணவில்லை. வேடன் பறித்து போட்ட இலைகள் குவிந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றிருந்தது. இவை வில்வ இலைகளாக இருந்தன. இவ்வாறு ஓர் இரவு முழுவதும் அவன் ‘சிவ பூஜை’யில் ஈடுபட்ட அந்தச் சம்பவமே, சிவராத்திரி என்றும் பரவலாக சொல்லப்படுகிறது.

கதைகள் எப்படியிருந்தாலும் சிவராத்திரி நடத்தப்பட வேண்டிய காலத்தை ஒன்றாகவே நிர்ணயித்தனர். மாசி மாதத்தில் வருகின்ற கிருஷ்ணபட்சத்துப் பதினான்காம் நாள் இரவு சதுர்த்தசி திதியின் பதினான்காம் நாழிகை, லிங்கோத்பவ காலம் என அழைக்கப்படுகின்றது. இதுவே மகா சிவராத்திரி புண்ணிய காலம் என்பர். இதே கிருஷ்ண பட்சத்தில் (பவுர்ணமிக்கு அடுத்த) திரயோதசியில் 30 நாழிகைக்கு சதுர்த்தசி வருமாயின் அது உத்தம சிவராத்திரி என்றழைக்கப்படும். அவ்வாறு திரயோதசியில் இல்லாமல் சதுர்த்தசியில் வந்தால் அது அதம சிவராத்திரி என்றழைக்கப்படும். அன்றைய இரவில் அமாவாசை வருமானால் அது பரியாய சிவராத்திரி என்றழைக்கப்படும். பதின்மூன்றாம் நாள் ஏற்படும் மகா சிவராத்திரி, சிவனுக்குத் தேகமாகவும் பதினான்காம் நாள் தேகியாகவும் கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு அமைவது சிவசக்தி உருவமாக குறிப்பிடப்படுகிறது.சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களிலும் ஆத்மார்த்தமாகச் சிவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் தானங்கள் பல செய்ய வேண்டும் என்பார்கள். இப்பூசைகளை முறையாகச் செய்பவர்கள் நான்கு யுகங்களிலும் விநாயக மூர்த்திக்கும் கந்த மூர்த்திக்கும் பிரம்மா, விஷ்ணு தெய்வங்களுக்கு இணையாகக் கருதப்படுவர் என்கின்றன புராணங்கள். இப்பூசைகளை நியதிப்படி செய்வோர் இம்மையில் பல்வகைச் செல்வங்களும், மறுமையில் சுவர்க்க போகமும் அடைவர் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி வழிபாடு தற்காலத்தில் கூட்டு வழிபாடாகவும், தனி வழிபாடாகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சிவபூசை மேற்கொள்பவர்கள் மட்டுமே தனி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பூஜை அறையில் சிவலிங்கத்தை வைத்து ஒவ்வொரு ஜாமத்திற்கும் ஒரு நைவேத்தியத்தையும் படைத்துச் சிவ மந்திரங்களைக் கூறி வழிபாடு செய்கின்றனர். ஒவ்வொரு ஜாமத்திலும் குளித்துவிட்டு உடை மாற்றித் திருநீறு பூசி பூஜைக்கு அமர்கின்றனர். பெரும்பாலும் பூஜை செய்பவர்கள், தாமே ஒவ்வொரு ஜாமத்திற்கும் வேண்டிய பிரசாதங்களை தயாரித்துக் கொள்வதும் உண்டு. சில இடங்களில் மட்டும் பெண்கள் அதே தூய்மையைக் கடைபிடித்துப் பிரசாதங்களை தயாரித்துக் கொடுக்கின்றனர். இரவு விழித்திருந்து தாமும் அந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

சிவ பக்தர்கள் கோயில்களில் கூடி கூட்டாக வழிபடுவதும் உண்டு. அப்போது பூஜையில் கலந்துகொண்டு சிவனை நினைத்து இரவு முழுவதும் விழித்திருப்பதும், வழிபடுவதும் வழக்கம். சில கோயில்களில் பக்தர்கள் விழித்திருப்பதற்கு ஏதுவாகப் புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் உண்டு.

சிவராத்திரியை ஒரு கோயிலில் இருந்து வழிபடாமல் ஒவ்வொரு ஜாமத்திற்கும் ஒரு சிவன் கோயில் என்று சென்று வழிபடும் வழக்கம் சில இடங்களில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இவ்வழக்கம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. ஒரே இரவில் 12 சிவன் கோயிலுக்கு ஓடிச்சென்று வழிபடுவதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 70 கிலோ மீட்டர் சுற்றும் இவ்வழிபாட்டை இம்மாவட்டத்து இளைஞர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். ஓடிச்சென்றே சிவாலயங்களை தரிசிப்பதால் இந்நிகழ்ச்சிக்குச் ‘சிவாலய ஓட்டம்’ என்று பெயர்.

மேலும் இச்சிவராத்திரி ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என்று திருமாலின் பெயர்களைக் கூறிக்கொண்டே ஓடுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கான புராணக் கதை ஒன்றையும் கூறுகின்றனர்: பஞ்சபாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின்போது யாகம் நடத்தத் திட்டமிட்டனர். இதற்கு வலிமை மிக்க புருஷா மிருகத்தின் பால் தேவையாய் இருந்தது. புருஷா மிருகம் என்பது ஒரு விசித்திரமான உருவம் ஆகும். இடுப்பிற்கு மேல் மனித உருவமும், கீழே புலியின் வடிவமும் கொண்டது. சிவசக்தி மிக்க இப்புருஷா மிருகம் வைணவத்தை அறவே வெறுத்தது. அதன் எல்லையில் திருமாலின் நாமத்தை எழுப்பினால் எழுப்பியவரை அது வெறிகொண்டு தாக்கும். அதே வேளையில் அது நியாயத்திற்குக் கட்டுப்பட்டதாகவும் இருந்தது. தனது எல்லையை தாண்டியவர்களை அது விட்டு விடும்.

புருஷா மிருகத்தின் பாலைக் கறந்து வர தானே தகுதியானவன் என பீமன் கூறினான். பீமனது செருக்கை அடக்கவும், புருஷா மிருகத்திற்கு ‘அரியும், சிவனும் ஒன்று’ எனும் உண்மையை உணர்த்தவும் கண்ணன் எண்ணினான். பீமனே உன் வலிமையினை விடப் பலமடங்கு வலிமை மிக்கது புருஷாமிருகம். பாலைக் கறக்க முயற்சிக்கும்போது அது உன்னைப் பிடித்துவிட்டால் அங்கே ஒரு சிவலிங்கத்தை வைத்துவிடு எனக்கூறி பன்னிரு சிவலிங்கங்களை கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட பீமன் புருஷா மிருகத்தைக் காணப் புறப்பட்டான்.

சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்த புருஷா மிருகத்தைக் கண்ட பீமன் அதனருகே சென்று ‘கோவிந்தா, கோபாலா’ என்று கூற, புருஷா மிருகம் கோபமடைந்து பீமனை எட்டிப் பிடித்துக்கொண்டது. அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்ட பீமன் அதன் வலிமையை உணர்ந்துகொண்டான். தன்னைக் காத்துக் கொள்ள கண்ணன் கொடுத்த சிவலிங்கம் ஒன்றைக் கீழே வைக்கவும் பீமனை விட்டுவிட்டு மீண்டும் சிவநாமத்தைச் சொல்லத் தொடங்கிவிட்டது. அதனிடமிருந்து மீண்ட பீமன் சற்றே இளைப்பாறி விட்டு மீண்டும் அதனிடம் பாலைக் கறக்க முயற்சித்தான். புருஷா மிருகம் மீண்டும் அவனைப் பிடிக்க முற்பட்டது. அப்போது பீமன் மேலும் ஒரு சிவலிங்கத்தை வைத்தான். இப்படியாக வைக்கப்பட்ட பன்னிரு லிங்கங்களும் பன்னிரு சிவாலயங்களாக இப்போது திகழ்கின்றன. கடைசி சிவாலயமான ‘நட்டாலத்தில்’ தான் புருஷா மிருகத்திற்கு ‘அரியும், சிவனும் ஒன்று’ எனும் தத்துவத்தை விளக்க இறைவன் ‘சங்கர நாராயணராகக் காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது.

சிவாலய ஓட்டம் குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகிறது. அது பஸ்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் மேற்கொண்டான். அதற்கிறங்கிய சிவனிடம் ஒரு வரம் கேட்டான். தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாகிவிட வேண்டும் என்றான். ‘தந்தேன்’ என்ற சிவனின் தலை மீதே கை வைத்துச் சோதிக்க எண்ணினான். அடி முடி காணா அண்ணலாய் சோதியாய் நின்ற இறைவன் தலை மீது தாம் கொண்ட வரத்தைச் சோதிக்க எண்ணிய அசுரனின் நிலையறிந்து அவனிடமிருந்து பயந்து ஓடுவது போன்ற பாவனையாக ஓடித் தங்கிய பன்னிரண்டு இடங்களே இச்சிவாலயங்கள் என்கின்றனர்.

அவ்வாறு துரத்தி வந்த அசுரனின் செயல் கண்ட திருமால் மோகினி உருக்கொண்டு அசுரன் முன்னால் வந்து நின்றார். அவள் அழகில் மயங்கி அசுரன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினான். உடனிசைவதுபோல மோகினியும் தன்னைத் தவிர வேறு பெண்ணைக் கண்டுகொண்டும் பாராதிருப்பேன் எனத் தலையில் அடித்து சத்தியம் செய்துதர வேண்டினாள். அவ்வாறே சத்தியம் செய்ய முற்பட்ட அசுரன் தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்ய அவனே பஸ்மமானான். இதனால் அவ்வசுரன் பஸ்மாசுரன் (அ) பத்மாசுரன் என்றழைக்கப்பட்டான் என்பது ஒரு புராணக்கதை.

சிவபெருமான் ஓடிக் களைத்துத் தங்கிய பன்னிரு இடங்களுக்கும் ஓடியே வழிபடுவது இச்சிவாலய ஓட்டம் என்றும் மக்கள் கூறுவர். அவ்வாறு ஓடும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பனை ஓலை விசிறியால் இறைவனின் களைப்பினைப் போக்க விசிறி விடுகின்றனர்.

இச்சிவாலய ஓட்டத்தினின்று மாறுபட்டது திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டத்துள் அடங்கும் பஞ்ச பூதத் தலங்களின் வழிபாடாகும். சிவராத்திரியன்று இரவு முழுவதும் நடந்து சென்றே இப்பஞ்ச பூதத் தலங்களை வழிபட்டு வருகின்றனர். தற்போது சிலர் வாகனங்களில் பஞ்ச பூதத் தல வழிபாட்டைச் செய்து வருகின்றனர்.

ஒரே இரவில் பஞ்ச பூதத் தலங்களையும் வழிபட வேண்டும் என்பது மரபாகும். இம்மரபு மருத்துவ ரீதியாக மிகுந்த பயனை அளிப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐம்பூதங்களாகிய நமது உடல் ஒரே இரவில் சீர்படுத்தப்படுகின்றது. ஐம்பூதங்களின் இயக்கமும் உடலில் ஒழுங்காக அமைந்தால்தான் நோயினின்று உடலைப் பாதுகாக்க இயலும். எனவே ஐம்பூத வழிபாட்டால் ஐம்பூதங்களின் இயக்கமும் சீர்படுத்தப்படுகின்றது என்பது மருத்துவர்களின் கணிப்பாகும்.

சிவராத்திரி நாளைத் தவிர ஐம்பூதத்தின் இயக்கத்தைச் சீர் செய்வதற்காக இறை வழிபாட்டோடு தொடர்புபடுத்திச் சில மருத்துவர்கள் தம் வைத்திய முறையைக் கூறுகின்றனர். நம் உடலில் அப்பூதத்தின் ஆதிக்கம் குறைவுபட்டோ அன்றிக் கூடி நிற்கின்றபோதோ அந்தந்த பூதத்திற்கு உரிய சிவத்தலத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டால் அதன் இயக்கம் சீராகும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றனர். எடுத்துக்காட்டாக வாயுக் கோளாறு உள்ளவர்கள் வாயுத்தலமாகிய தென்மலைச் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தால் அந்நோய் போக்கலாம். இதுபோன்ற ஒவ்வொரு பூதத்தின் இயக்கமும் சரிவர நடைபெறும்.

தற்போது சிவராத்திரி வழிபாட்டில் அதிகமானவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் சிவராத்திரியன்று கண் விழித்திருக்க வேண்டும் என்பதே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. கண் விழிப்பதற்கான முயற்சியினை பலர் பலவிதமாகச் செய்து வருகின்றனர். பெண்கள் தாயக்கட்டம், சோழியாடுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு விழித்திருக்கின்றனர். ஆண்களோ சீட்டு விளையாடுதல், சதுரங்கம் விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு விழித்திருக்கின்றனர். சிலர் திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில் பக்திப்பாடல்களை பார்த்து விழித்திருக்க முயற்சிக்கின்றனர். இதனால் பயன் ஏதும் கிட்டுவதில்லை. இதில் ஆன்ம சுத்தியோ, உடற்சுத்தியோ ஏற்படுவதில்லை.

ஒரு காலத்தில் பெண்கள் சிவராத்திரியன்று விழித்திருக்க வேண்டிக் ‘கழங்காடுதல்’ என்ற விளையாட்டை விளையாடினர். இவ்வாறு விளையாடும்போது சிவனின் பெருமைகளைக் கூறக்கூடிய பாடல்களைப் பாடிக்களித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு சிவராத்திரியின் முழுப்பலனும் கிட்டியது. ஆனால், காலப்போக்கில் விளையாட்டு மட்டுமே நின்று சிவ சிந்தனை மறந்து போயிற்று.

ஒரே இடத்திலிருந்து கண் விழித்து வழிபடுபவர்களாக இருந்தாலும், பல தலங்களுக்குச் சென்று வழிபடுபவர்களாக இருந்தாலும் சிவநாமத்தை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு இரவு முழுவதும் சிவனை நினைப்பவர்களுக்கே சிவராத்திரியின் முழுப்பலனும் கிட்டும். எனவே கேளிக்கைகளில் மனம் செலுத்தவாவது சிந்தை மகிழச் சிவபுராணத்தை பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் என்பது நியதி.

அர்ச்சுனன் தவம் இருந்து, சிவபெருமானிடமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்ற திருநாள்; கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்ணைப் பெயர்த்தெடுத்துப் பொருத்தி முக்தி அடைந்த நன்னாள்; பகீரதன், கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பொன்னாள்; மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தது இந்த நாளில்தான் என்கின்றன புராணங்கள்.

வீட்டில் பூஜை செய்பவர்கள் சிவபெருமான் படத்திற்கோ அல்லது நடராஜர் விக்கிரகத்திற்கோ வில்வ தளங்களால் அர்ச்சிப்பது சிறந்தது. இந்த மகா சிவராத்திரியன்று சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் ஒரு வில்வ தளம், கோடிக்கணக்கான மலர்களால், ஈசனை அர்ச்சனை செய்வதற்குச் சமம். அன்று முழுநாள் உபவாசம் இருப்பார்கள். அல்லது ஒரு வேளைச் சாப்பாட்டுடன் நிறுத்திக் கொள்வார்கள். இரவு முழுவதும் கண் விழித்து, சிவ தோத்திரங்களைப் பாடுவார்கள்.

நதிகளில் பாகீரதி, மரங்களில் கற்பகதரு, பசுக்களில் காமதேனு, யானைகளில் ஐராவதம், கடலில் திருப்பாற்கடல், மலைகளில் கைலாசம் போன்று விரதங்களில் சிவராத்திரி என்று சொல்வர்.

சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர்க்கு காசியில் முக்தி அடைந்த பலன் கிட்டுகிறது. சிவனுக்கு வில்வத்தினால் இன்று பூஜை செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது உறுதி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum