தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேப்ப மரத்தடியில் முருகன்

Go down

வேப்ப மரத்தடியில் முருகன் Empty வேப்ப மரத்தடியில் முருகன்

Post  meenu Sat Mar 09, 2013 2:24 pm

கந்தக் கடவுள் தன் தந்தைக்கு ஓர் கோயில் எழுப்பி வழிபட்ட ஊரே திருமுருகன்பூண்டி. இறைவனே இறைவனுக்கு ஆலயம் அமைத்ததே இத்தலத்தின் பிரதானச் சிறப்பு. அது மானிடரின் துயர் துடைக்க நின்றாலும், கந்தனுக்கே வந்த இடர் களைந்தது என்பது புராணச் செய்தி.
தந்தைக்கு உபதேசம் செய்த முருகப் பெருமான், சூரனை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பெற்றார். தோஷம் அகல ஒரே வழி ஈசனை வணங்குவதே என்று தெளிந்தார். சிவலிங்கத்தை நிறுவி தந்தையை இதயத்தில் தரித்தார். இடையறாது பூஜித்தார். தோஷம் தூசாக பறந்தது. கோயிலின் சக்தி இன்னும் பெருகியது. ஒப்பாரும், மிக்காரும் இல்லா திருமுருகநாதரின் ஆலயத் தோற்றப் பொலிவு அழகோடு இணைந்த அமைதியான சூழ்நிலையில் உள்ளது. கோயிலுக்குள் நுழையும்போது ஒரு அமானுஷ்ய சக்தி நம்மைச் சூழுவதை மிகச் சாதாரணமாக உணரலாம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் ஞானபூமி, பூண்டி மாநகர் என்று விளிக்கிறார். மேலும், கொங்கு ராஜபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடும்போது பெருநகரங்களாகத் திகழும் பக்கத்திலுள்ள ஊர்களெல்லாம் ஒரு காலத்தில் இவ்வூருக்குள் அடக்கம் என்பது தெளிவு. அதுமட்டுமல்லாது கோயில் முழுவதும் ஒரு கல்கூட விட்டுவிடாமல் கல்வெட்டாக செதுக்கியிருக்கிறார்கள். ‘கல்வெட்டுக் கருவூலம்’ எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.

மேற்குத் திசை நோக்கிய சிவாலயம் இது. ஊர் மேடாகவும் கோயில் சற்று தாழ்வான இடத்திலும் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இருபுறமும் சுந்தரர் சிலைகள் காணப்படுகின்றன. ஒன்றில் பொருளிழந்த சுந்தரர் தோற்றமும், மற்றொன்றில் பொருளோடு கூடிய சுந்தரருமாக இரு நிலைகளில் உள்ளார். முக அமைப்புகளை நுணுக்கமாக செதுக்கியுள்ளனர். கோயிலின் பிரதான நாயகர் சண்முகநாதர் உள்முக மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். ஈசன் இங்கு ஆடிய பிரம்மதாண்டவம் மிக்க சிறப்புடையது.

சுற்றுப் பிராகாரத்தில் கண்கவரும் சிற்பங்கள் செதுக்கி கற்களில் மாயம் நிகழ்த்தியிருக்கிறார் கள். கண்களைக் கவரும் இச்சிற்பங்கள் கருத்தோடு சேர்ந்து பிரமிப்பூட்டுகின்றன. சுந்தரர் வேடுபறி நிகழ்ச்சியும், அவிநாசிப் பெருமான் முதலை வாயினின்று பாலகனைக் கொணரும் சிற்பமும், சுந்தரரும், சேரமான் பெருமான் நாயனாரும் வெண்களிறில் கயிலைக்கு செல்லும் காட்சியும், ஞான சம்பந்தர் பல்லக்கில் எழுந்தருளுதலையும் மனக் கண்ணில் மிதக்க விட்டிருக்கின்றனர். அப்பரடிகள் சமணத்தை விட்டு சைவத்திற்கு மீளும் காட்சியும், காரைக்கால் அம்மை கயிலை நோக்கி தவழ்ந்து முன்னேறும் காட்சியும், திருப்புண்கூரில் நந்தி விலகி நந்தனாருக்கு ஏற்படுத்தித் தந்த சிவ தரிசனத்தை காணும்போதே மனம் கனிந்து போகிறது.

ஆலயத்தின் ஈசான மூலையில் பைரவர் உள்ளார். அருகேயே அண்மைக் காலத்து நவகிரகங்கள் உள்ளன. அதையொட்டிய மூலையின் ஓர் புறம் குழி ஒன்று காணப்படுகிறது. இதில்தான் ஈசன், சுந்தரரிடமிருந்து பறித்த பொருட்களை வைத்திருந்ததாகக் கூறுகின்றனர். கோயிலின் வெளிப்புறத்தில் வேப்ப மரத்தின் கீழே வேம்படி முருகன் எனும் பெயரில் தனியே முருகன் வீற்றிருக்கிறார். சதுரக்கல் ஒன்று அங்கே நடப்பட்டுள்ளது. அது முருகன், இறைவனை வழிபட்டபோது தன்னிலிருந்து பிரிந்த பிரம்மஹத்தியின் வடிவம் என்று கூறுகிறார்கள்.

அம்பாள் அழகே உருகொண்டு நிற்கின்றாள். அம்மையின் அழகுப் பெயர் முயங்குபூண் முலைவல்லி என்பதாம். அன்னையின் பெயரை ஒரு முறை உச்சரித்தால் மனதில் அமுதூறும். கல்வெட்டுகளில் இடுகு நுண்ணிடை மங்கை என்று குறிப்பிட்டுள்ளனர். அடுத்ததாகப் பள்ளியறையும், வெளிப்பிராகாரத்தில் அறுபத்து மூவரின் சிலை வரிசைகளும் உள்ளன. இடது பக்க ரிஷப வடிவில் தீர்த்தம் உள்ளது.

திரு முருக நாதர் கோயிலுக்கு வெளிப்புறமே மாதவிவனேச்சுவரர் ஆலயம் உள்ளது. மிகப் பழமையான கோயில். திருக்கோயிலுக்குள் நுழைபவர்கள் முன்காலத்தில் எல்லாம் நந்தியின் வயிற்றுக்குள் புகுந்து வருவது போலவும், அல்லது நந்திக்கு அடியில் நுழைந்து வரும்படியாகவும் அமைத்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக விளங்கும் இக்கோயிலில், உயரத்தில் அமைக்கப்பட்ட மகா நந்தி விளங்குகின்றது. இவ்வளவு பெரிய கல் நந்தி முற்காலத்தில் இருந்ததாகவும், தற்பொழுது அதே அளவில் சிமென்ட்டில் செய்து இருப்பதாகவும் கோயிலார் கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் எல்லா தலத்திலும் நந்தியின் வடிவம் சிறுத்து சுருங்கிப் போய்விட்டது. இன்னமும் சில இடங்களில் நந்திக் கூபம் என்னும் நந்திக்குள் அமைந்த கிணறுகள் கோயில்களில் காணப்படுகின்றன.

இத்தலத்தில் நடந்த சுந்தரர் வேடுபறி நிகழ்ச்சி திருவிழாவாகவே கொண்டாடப்படும் அளவிற்கு முக்கியத்துவம் மிகுந்தது. சுந்தரரும், இறைவனும் ஒருவருக்கு ஒருவர் தோழர்கள் போல் நடந்து கொண்ட வரலாறும் சுவைமிக்கது. ஈசன் இவரை ‘வன்தொண்டன்’ என்றே அழைத்து மகிழ்வார்.

அனைத்து சிவன் கோயில்களிலும் பறிவேட்டை, வேடுபறி என்னும் பெயரில் இத்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் கொண்டாடுவர்.

மாசி மாதம் பெருந் திருவிழா நடைபெறும். கார்த்திகை, சஷ்டி, விசாகம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தலவிருட்சம் மாதவி குருக்கத்தி. மாமங்க விநாயகர், கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்களும் உண்டு. இவ்வூரில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற திருக்கோயில் உண்டு. சுந்தரர் பொருளைப் பறிகொடுத்ததை முருகன்பூண்டி மக்களுக்கு அறிவிக்க யானைமுகப் பெருமான் கூவிக்கூவி ஊராரைக் கூப்பிட்டாராம். இறைவன் சினந்து ‘இனிமேல் நீ தனித்து இருப்பாயாக’ என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆயிரத்தெட்டு அண்டங்களை அடக்கியாளும் திறத்தை, ஈசனால் பெற்ற சூரபத்மன், தன் திறத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களை சிறைப்படுத்தி, சித்திரவதை செய்ததால், ஆறுமுகங்கள் கொண்டு, வெற்றிவேல், வீரவேல் கொண்டு சுற்றி வந்து பகைவர்களை அழித்ததால், செவ்வேலாக மாறியது. பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்த நிலையில் திரிந்த முருகன், கயிலையில் இறைவன் அருளியபடி மாதவிவனநாதரை வழிபட வந்தார். பூஜைக்கு நீர் தேவைப்பட்டதால் வேற்படையை நிலத்தில் ஊன்ற ஆங்கொரு தீர்த்தம் உண்டாகியது. நாள்தோரும் அதில் தீர்த்தமாடி அகங்கையால் நீரெடுத்து மங்களாம்பிகை உடனமர் மாதவிவனநாதரை வழிபட்டார். இதனால் பிரம்மஹத்தி விலகி வேப்ப மரம் பக்கம் ஒதுங்கியது. இறைவனைப் பீடித்து இருந்த தோஷம் ஒழிந்த தீர்த்தத்தில் நீராடி இன்றும் பலர் மனநோயிலிருந்து தெளிகின்றனர்.

இதில் நீராடுவதால் மனநோய் மட்டுமின்றி தொழு நோய் போன்ற கொடிய நோய்களும் நீங்குகின்றதாம்.

அவிநாசியிலிருந்து கோவை - திருப்பூர் நெடுஞ்சாலையில் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum