தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளம் பெருக்கி, நலம் காக்கும் பொன்னியம்மன்!

Go down

 வளம் பெருக்கி, நலம் காக்கும் பொன்னியம்மன்! Empty வளம் பெருக்கி, நலம் காக்கும் பொன்னியம்மன்!

Post  meenu Sat Mar 09, 2013 12:42 pm

தம் கிராமத்தையும் கிராம மக்களையும் காப்பதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கித் தந்த சில வழிகளில் ஒன்று, அதே கிராமத்தில் வாழும் இளைஞர்களை முறைவைத்து இரவு நேரங்களில் காவல் உலா வரச் செய்வது. இதனால் களவு எண்ணத்தோடு அந்நியர் யாரும் அந்த கிராமத்துக்குள் நுழைந்துவிடாமல் பாதுகாக்க முடிந்தது. மோரணம் கிராமத்திலும் அதுபோன்ற ஒரு வழக்கம் இருந்தது. அந்த வகையில் ஒரு குடும்பத்தில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். தங்கள் தந்தையாருடன் ஊர்க்காவலில் ஈடுபட்டு வந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பணியைத் தொடர்ந்தார்கள். அதாவது ஒரு மாதத்துக்கு ஒரு சகோதரன் என்ற சுழற்சியில் அவர்கள் கிராமத்தைக் காவல் காத்தார்கள்.

இவர்களில் மூத்த சகோதரனுக்கு இவ்வாறு காவல் காப்பதில் சிறிதும் விருப்பமில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கத்தான் அவன் ஆசைப்பட்டான். மீதி சகோதரர்கள் நால்வரும் தம் முறை தவறாமல் காவல் பணி மேற்கொண்டார்கள். ஆனால் அண்ணனுக்காக எவ்வளவுதான் விட்டுக் கொடுப்பது? அவனும் ஊர்க் காவலில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். அவர்கள் மட்டுமின்றி, அவனுடைய மனைவி பொன்னியும் அவ்வாறு காவலுக்குச் செல்லுமாறு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் கேட்பதாக இல்லை. குடும்பத்துக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்னை கிராமத்துக்குத் தெரிந்தால் பெரிய அவமானமாகப் போய்விடுமே என்று கருதிய பொன்னி தானே ஆண் வேடமிட்டு, தன் கணவனுக்கு பதிலாக ஊர்க் காவலில் ஈடுபட்டாள். இந்த விஷயம் அவளுடைய கணவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; சகோதரர்களுக்குக் கூட!

ஒருநாள் சகோதரர்களுக்கு ஏதோ சந்தேகம் தட்டவே, அண்ணன் வீட்டிற்குச் சென்று பார்த்தார்கள். அங்கே அண்ணன் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வீட்டில் அண்ணி இல்லாதது அவர்களுக்கு சந்தேகத்தை மேலும் வளர்த்தது. அண்ணனை மிரட்டிக் கேட்டபோது, அண்ணிதான் அண்ணன் சார்பாக அவ்வாறு காவலுக்குப் போகிறாள் என்று தெரியவந்தது. அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணன் அவ்வாறு சமுதாயக் கடமை ஆற்றாததால், பிற சகோதரர்களுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. இப்படி ஒரு சகோதரன் தங்களுக்கு இருப்பதைவிட இல்லாமலிருப்பதே மேல் என்று நினைத்த அவர்கள், அவனைக் கொன்று அருகில் இருந்த நிலத்தில் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.

தன் காவல் பணி முடித்து வேலையாட்களுடன் திரும்பிக்கொண்டிருந்த பொன்னி, வழியில் யாரோ இறந்து கிடப்பதைப் பார்த்தாள். உடன் வந்த வேலையாட்களிடம் இறந்து கிடப்பவர் யார் என்று பார்க்கச் சொன்னாள். அப்படிப் பார்த்த வேலையாட்கள் திகைத்தார்கள். பொன்னியின் கணவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். அப்படியானால் இத்தனை நாள் அவனைப் போலவே காவல் காக்க வந்தவள் அவனுடைய மனைவியான பொன்னிதான் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிந்தனர். கணவனின் மரணத்துக்கு அவனுடைய சகோதரர்களே காரணம் என்றறிந்த பொன்னி, அவர்களை சபித்தாள். பின் தன் கணவருக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்ய, சகோதரர்களை வரவழைத்து, சந்தன கட்டைகளை அடுக்கி, கணவர் உடலை அதில் வைத்து தீ மூட்டி தானும் உடன்கட்டை ஏறினாள்.

அந்த இடத்தில் இப்போது கோயில் கிணறு உள்ளது. நம் முன்னோர்கள் இந்தப் பொன்னியை தெய்வப் பிறவியாகவே பாவித்தனர். கணவனுக்கு அறிவுரை சொல்லும் நல்மனைவியாகவும் கணவனுக்கு பதிலாகத் தான் சமுதாயக் கடமையை நிறைவேற்றியதில் ஊருக்கே தெய்வமாகவும் அவள் திகழ்ந்தாள். அன்றிலிருந்து பொன்னியைத் தம் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றார்கள். பொன்னி வாழ்ந்த தலத்திலேயே அவளுக்கு ஆலயம் அமைந்தது. பொன்னி, பொன்னியம்மனாக மோரணம் கிராமத்துக்கு மட்டுமல்லாமல், சுற்றுவட்டார மக்களின் குடும்பங்களிலும் நன்மைகள் சூழச் செய்கிறாள்.

இந்தக் கோயில் சோழர் காலத்தது என்றும் இந்தத் தலம் ‘மோரண்டத்தூர்’ என்றழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மோரணம் என்னும் பெயர், வந்தோர் எல்லோருக்கும் மோர்+ அன்னம் இடும் இந்த ஊரின் சிறப்பை விளக்கவல்லதாக உள்ளது. தேவாரம், திருவாசகம், திருவிளையாடல் புராணம், திருவோத்தூர் புராணம், புள்ளிருக்கு வேளூர்ப்புராணம், சிவராத்திரி புராணம் ஆகிய நூல்களில் இந்த ஊர் பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பொன்னியம்மன் கோயில் கருவறையில் ஏழு அம்மன்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த அம்மன்களை சப்த கன்னிகள், ஊர் தேவதைகள் என்றும் அழைப்பார்கள். அவர்கள், சாமுண்டீஸ்வரி என்ற பொன்னியம்மன், மாகேஸ்வரி, கௌமாரி, வராகி, நாகேஸ்வரி, வைணவி, பிராம்மி ஆவார்கள். இவ்வாலயத்தில் ஒரு சுற்றும் ஒரு மாட வீதியும் அமைந்துள்ளன.

விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் தரிசனமும் நமக்குக் கிட்டுகிறது. முதலில் கிணறு உள்ள இடத்தில் பூஜைகளை செய்துவிட்டு, பின்னர் கோயில் சென்று அம்மனை வழிபடுவது இங்கு மரபு. ஊர்ப் பெரியவர்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் திருப்பணிகள் செய்து காஞ்சிபுரம் பெரியவர்களின் அருளாசியுடன் 27.11.1987ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆலய சபரி வார அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 8.7.2002ல் நடைபெற்றது. இக்கோயிலில் தினசரி பூஜை நடைபெறுகிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை, செல்வங்களை அளித்து, பிணிகளை நீக்கி, தாயினும் சாலப் பரிந்து அருள்கிறாள், பொன்னியம்மன். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது, இந்த பொன்னியம்மன் திருக்கோயில்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum