தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்தர் நலம் காக்கும் பெருமாள்

Go down

பக்தர் நலம் காக்கும் பெருமாள் Empty பக்தர் நலம் காக்கும் பெருமாள்

Post  meenu Sat Mar 09, 2013 1:39 pm

புகழ்பெற்ற தென்காசி தலத்தில் அமைந்துள்ள பிரபலமான லோகநாயகி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் பலர், இதே கோயிலுக்கு அருகில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள தொன்மைமிக்க பெருமாள் திருக்கோயில் ஒன்றும் இருப்பதை அறியாமல் சென்று விடுகிறார்கள்.

ஒருசமயம் திருமால் பூலோகத்தில் தனக்குப் பிடித்தமான தென்காசி திருத்தலத்தில் ஓடும் சித்ரா நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்பக்கம் தற்செயலாக வந்த ராமானுஜரும், நம்மாழ்வாரும் அக்காட்சியைக் கண்டு ஆனந்தித்தனர். கூடவே அவர்களிருவரும் பெருமாளிடம் ஒரு கோரிக்கையும் விடுத்தனர்: “பெருமாளே, தாங்கள் எங்களுடன் எழுந்தருளி திருவரங்கம் புண்ணியத் திருநகருக்கு விஜயம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

இதனைக் கேட்டு புன்னகைத்த மகாவிஷ்ணு, ‘‘ஆழ்வார்களே! உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை எனக்கு. இவ்வூரில் வாழும் என்னுடைய பக்தர்கள் நான் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நான் இத்தலத்திலேயே தங்கிட சிந்தை கொண்டுள்ளேன். அதுமட்டுமல்ல, நீங்களிருவருமே என்னுடன் இங்கே தங்கினால், அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சம்மதமா?’’ எனக் கேட்க, இரண்டு அடியார்களும் உடனே, அப்போதே பேரானந்தத்துடன் பகவானின் உத்தரவுக்கு கட்டுப்பட்டனர்.

இப்படி பக்தர்களின் ஆசைக்காக தென்காசி தலத்துடன் தன்னை பொருத்திக்கொண்ட திருமாலை ‘பொருந்தி நின்ற பெருமாள்’ என்ற திருநாமத்துடன் மக்கள் வழிபடத் தொடங்கினார் கள். கூடவே, இரண்டு அடியார்களும் பெருமாளுடன் இணைந்து திருக்காட்சி தந்தனர். இவ்வூர் திருமாலின் அபிமானத் தலம் என்று கொண்டாடப்படுகிறது. தென் திருப்பதிகளில் சிறப்பான திருக்கோயில். முதலில் சிறிய அளவில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், பிற்காலத்தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களால் விரிவுபடுத் தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை.

பேருந்துகள் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பழமையான ஆலயத்திற்கு ராஜகோபுரமில்லை. இக்கோயிலின் முன் நுழைவாயிலின் மேற்புறத்தில் சீதை, லட்சுமணனுடன் ராமர் காட்சி தரும் சுதைச் சிற்பம் வண்ணமுடன் கண்ணைக் கவர்கிறது. அவர்களுடைய பக்கத்துக்கு ஒருவராக பெரிய திருவடியும், சிறிய திருவடியும் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்தக் கோயிலின் அகண்ட வாசலின் இருபுறமும் உள்ள திண்ணை போன்ற அமைப்பை தாண்டி உள்ளே சென்றால், பரமபதம் என அழைக்கப்படும் முன் மண்டபத்தை அடையலாம். அதன் மத்திய பாகத்தில் மேற்கு திசை நோக்கி நின்று பெருமாளை பக்தியுடன் கை கூப்பி சேவிக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். இந்த மண்டபத்தின் வடதிசையில் மூடப்பட்ட பரமபத வாயில் உள்ளது. எதிரே தெற்கு பக்கத்தில் உள்ள எழில் மண்டபத்தில் பெரிய படத்தில் மகான் ராகவேந்திரர் திருக்காட்சி தருகிறார்.

அடுத்து நாம் நுழையும் அர்த்த மண்டபத்தில் உள்ள சிறிய கோஷ்டத்தில் இருபக்கமும் துவார பாலகர்கள் துணையிருக்க தென்திசை நோக்கி காட்சி தரும் விஷ்வக்சேனரை வணங்கிடுவோம். அவருக்கு பக்கத்தில் அதே கோஷ்டத்தில் தும்பிக்கை ஆழ்வார், ஆஞ்சநேயர் இருவரும் இடம் பெற்றுள்ளனர். தவிர வடகோடி பாகத்தில் சிறிய மேடையில், பெருமாள் ஆணையிட்டவாறு அங்கே குடிகொண்ட ராமானுஜரும், நம்மாழ்வாரும் தவிர சேஷ கிருஷ்ணர், குட்டி கிருஷ்ணர் ஆகியோரும் தெற்கு நோக்கி நமக்கு தரிசனமளிக்கிறார்கள்.

இந்த மண்டபத்திலேயே சிறு சந்நதி கொண்டு, மிகச் சிறிய வடிவில் அனுமன் மேற்கு திசை நோக்கி அருட் காட்சி தருகிறார். மூர்த்தி சிறிதானாலும் இவர் கீர்த்தி பெரிது என்கிறார்கள்.

அடுத்து கருவறையில் குடி கொண்ட பெருமாளின் தரிசனம். வெளிப்புறம் இரு பக்கத்திலும் பெரிய துவார பாலகர்கள் நிற்கிறார்கள். உள்ளே பொருந்தி நின்ற பெருமாள், நான்கடி உயரம் கொண்டு, சங்கு, சக்கரபாணியராய் அபய வரத கரங்கள் காட்டி, புன்னகை பூத்த முகத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். திருப்பதி வெங்கடாசலபதியைத்தான் இங்கே தரிசிக்கிறோமோ என்று அதிசயத்துடன் யோசிக்க வைக்கிறார். தன்னை துதித்து வேண்டி நிற்கும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெருமாளின் இருபுறமும் தங்கள் திருக்கரங்களில் பூச்செண்டு ஏந்திய, எழில் வடிவத்தோடு கூடிய பத்மாவதி மற்றும் அலர்மேல் மங்கைத் தாயார்கள் இணைந்து அருட் காட்சி அருள்கிறார்கள்.

கருவறையின் முன்பக்கத்தில் பஞ்சலோக உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலமாக அருள்பாலிக்கிறார். இங்கு வந்து பக்தர்கள் தம் தேவைகளை வேண்டிக் கொள்ளவே வேண்டாம். நிர்மலமான மனத்துடன் இந்தப் பெருமாளை சேவித்தாலே போதும், பக்தர்களின் எல்லா நலனையும் இவர் காப்பார் என்கிறார்கள். பெருமாளின் பாதமருகே அழகிய சிறு திருவுருவில் சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார்.

பெருமா0ளின் விமானத்தை ஒட்டி அமைந்துள்ள பின்பக்க மதிற்சுவரின் மையத்தில் புடைப்புச் சிற்ப மாக, அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கும் தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

வைகானச ஆகம முறைகள் கடைப்பிடிக்கப்படும் இவ்வாலயத்தின் தலவிருட்சமாக பவழமல்லி மரம் (தேவேந்திர புஷ்பம்) உள்ளது. இது ‘ஸ்ரீபாரிஜாத ஸ்ரீபாதவல்லி’ என்கிற கற்பக விருட்சமாகும். மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் பூக்கும் இந்த பவழமல்லி மலர் வெள்ளை இதழ்களும், சிவப்பு காம்பும் கொண்டுள்ளது. இது பெருமாள் அடியார்கள் இட்டுக் கொள்ளும் நாமத்தில் உள்ள வண்ணங்களை குறிக்கின்றது. ஆகவே பெருமாளுக்கு பெரிதும் உகந்த மலராக இந்த பாரிஜாதம் கருதப்படுகிறது.

திருக்கோயிலின் முன்பக்கம் உள்ள பரமபத மண்டபத்தில் மகான் ராகவேந்திரரின் திருவுருவப் படம் உள்ளது. ராகவேந்திரர் சமீபத்தில் ஓர் அதிசயம் நிகழ்த்தியிருக்கிறார்.

வாரந்தோறும், வியாழக்கிழமையன்று இந்த ராகவேந்திரர் படத்துக்கு முன்பாக உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் கூடி ஒரு மணி நேரத்திற்கு மேல் பஜனை செய்து வழிபாடுகள் செய்வது வழக்கம். அண்மைக் காலத்தில் இந்த மகானின் 133வது ஆராதனை விழா பக்தர்களால் இங்கு நன்கு நடத்தப்பட்டது. ஆராதனை முடிந்த மறுநாள் காலை 6 மணி அளவில் ஆலயபட்டர் கதவுகளை திறந்து பரமபத மண்டப வாயிலை அடைந்தபோது அந்த ராகவேந்திரரின் திருவுருவப் படத்திலிருந்து திடீரென ஓர் ஒளி உருவாகி, எதிரே உள்ள பரமபத வாயில்வரை நீண்டதாம்!

இதனைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியும், பதட்டமும் கொண்ட பட்டர் விரைந்து வெளியே போய் சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை அழைத்து இதனை காட்டியுள்ளார். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஒளி சிறிது நேரத்திற்கெல்லாம் மறைந்துவிட்டிருக்கிறது. அதே சமயம், ராகவேந்திரர் திருவுருவப் படத்திலிருந்து குங்குமம் கொட்ட ஆரம்பித்திருக்கிறது. அனைவருக்கும் இந்த குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பெருமாளின் கருணைதான் அப்படி நிகழ்ந்து அற்புதமாக அங்கே வெளிப்பட்டிருக்கிறது என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் பக்தர்கள்.

திருநெல்வேலிகுற்றாலம் வழியில் 57வது கிலோ மீட்டரில், தென்காசிக்கு அருகே இருக்கிறது இந்தக் கோயில்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum