தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றியெல்லாம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்

Go down

வெற்றியெல்லாம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம் Empty வெற்றியெல்லாம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்

Post  meenu Fri Mar 08, 2013 6:17 pm

‘‘விநாயகர் சதுர்த்தி ஒரு பண்டிகை மட்டுமல்ல, அந்த நாளை ஒரு விரத நாளாகவே நாம் அனுசரிக்கலாம்,’’ என்றாள் பவானி மாமி. ‘‘ஏன் மாமி, ஆவணி மாசம்தானே விநாயகர் சதுர்த்தி வரும்?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘ஆமாம். ஆனா இந்த வருஷம், புரட்டாசி மாதம் 3ம் தேதி அதாவது செப்டம்பர் 19ம் தேதி வருது. பொதுவா, ஆவணி மாசம், அமாவாசைக்கு அடுத்த நாலாம் நாள் விநாயகர் சதுர்த்தி. இந்த வருஷம் ஆவணியில இரண்டு அமாவாசை. அதனால இரண்டாவது அமாவாசைக்கு (15.9.12) அடுத்த நாலாம் நாள் இந்தக் கொண்டாட்டம் வருது’’ மாமி சொன்னாள்.

‘‘விநாயகர் சதுர்த்தி விரதம் பற்றி சொல்லுங்க மாமி.’’ ‘‘விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் ரொம்பவும் எளிமையான கடவுள். அதாவது யார் கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வந்து அருள் பண்ணுவார். அதனாலதான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமா பூஜிக்கற மாதிரியும் இருக்கார். விநாயகர் கோயில் கொள்ளாத இடம்தான் ஏது? நடைபாதைக் கோயிலா, அங்கேயும் இருப்பார். நவநாகரிக கோயிலா, ஏன் பேட்டைக்குப் பேட்டை இருக்கற சின்னச் சின்ன கோயில்லேயும் அவர் அழகாக கொலு வீற்றிருக்கிறார். அவர் அருள் எல்லோருக்கும் கிடைக்கறதுக்காகவே அப்படி எந்த இடத்திலும் அர்ச்சாவதாரமாகக் காட்சி தர்றார்.’’

‘‘அர்ச்சாவதாரமா? அப்படின்னா?’’

‘‘இந்தக் கலியுகத்திலே கடவுள்கள்லாம் சிலைகளாகக் கோயில்ல தரிசனம் தர்றாங்களே. இந்த அவதாரத்துக்குத்தான் அர்ச்சாவதாரம்னு பேரு. அதாவது பக்தர்கள்லாம் அர்ச்சனை செய்து மகிழத் தக்க வகையிலே அவர்கள் சிலா ரூபமாக இருக்காங்க.’’

‘‘ஓஹோ! சரி, இந்த விநாயகர் விரதம்னு எப்படி வந்தது?’’

‘‘விநாயகர் விரதத்தை பார்வதியே மேற்கொண்டிருக்கா, தெரியுமா உனக்கு?’’

‘‘அட.... அப்படியா?’’

‘‘ஆமாம். அந்தக் கதை என்னன்னா.. தன்னோட கணவரை அவமரியாதை பண்ணி யாகம் நடத்தினான் தகப்பனான தட்சன். இந்த அவமரியாதைக்கு நியாயம் கேட்கப் போனா பார்வதிங்கற தாட்சாயணி. ஆனா தட்சனோ ரொம்பவும்தான் கர்வம் பிடிச்சவனாக இருந்தான். தன்னோட மருமகனை அவமானப்படுத்தினது போதாதுன்னு, தன்னோட மகளையும் கேலி பேசினான். இந்த அவமானத்தைப் பொறுத்துக்க முடியல தாட்சாயணியால. உடனே அப்பா வளர்த்து வெச்சிருந்த யாக குண்டத்திலே அப்படியே பாய்ஞ்சுட்டா..’’

‘‘ஐயயோ! அப்புறம்?’’

‘‘அப்படித் தன்னை மாய்ச்சுக்கிட்ட அவ, அப்புறம் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதிங்கற பேரோட வளர்ந்து வந்தா, சின்ன வயசிலேர்ந்தே கயிலாய
நாதன்தான் தன்னோட கணவன்னு தீர்மானமாக இருந்தா..’’

‘‘இல்லையா பின்னே.. பூர்வ ஜன்ம பந்தமில்லையோ அது?’’

‘‘வாஸ்தவம்தான். அப்படி அவளோட எண்ணம் பலிக்கணும்னா, அவ விநாயகரை நினைச்சு சதுர்த்தி விரதம் கடைபிடிக்கணும்னு அவளோட அப்பா பர்வதராஜன் யோசனை சொன்னார்.’’

‘‘அப்படின்னா பர்வதராஜன் அதுக்கு முன்னாலேயே விநாயகர் சதுர்த்தி விரதத்தைப் பத்தி தெரிஞ்சவர்னு சொல்லுங்க.’’

‘‘ஆமாம். அப்பா சொன்னபடியே, மண்ணால ஓர் விநாயகர் விக்ரகம் பண்ணினா. அதோட தங்கத்தாலயும் ஒரு உருவம் பண்ணி இரண்டையும் ஒரு பொன்னாலான கும்பத்துக்குப் பக்கத்துல வச்சா..’’ ‘‘ராஜகுமாரியாச்சே, தங்கத்தாலேயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்... ஹும்..’’ ‘‘அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி உரிய பூஜைகளைச் செய்தா. ஆவணி மாசத்திலே அமாவாசைக்கு அடுத்த சதுர்தசியில் இப்படி பூஜையை ஆரம்பிச்சு, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரைக்கும் தினமும் பூஜை பண்ணினா. அதற்கப்புறம் மண் பிள்ளையாரை மேளதாளத்தோடு ஊர்வலமாக எடுத்துகிட்டுப் போய் நதியிலே இறக்கிவிட்டா. அந்தப் பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாம விரதம் இருந்ததன் பலனா அவ ஆசைப்பட்டாமாதிரியே கயிலைநாதனைக் கைப்பிடிச்சா..’’

‘‘அப்பாடா..!’’

‘‘விநாயகர், ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர் அவர். பிரம்மா, விஷ்ணு, சிவன்னு எல்லோரையும் உருவாக்கினவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததினால பலவித அவதாரங்களை அவர் எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவனோட மகனாக அவர் தோன்றியது..’’
‘‘அட.. அப்படியா?’’ ‘‘அவர், அற்பத் தாவரமான புல்லையும் ஏத்துக்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட இனிய உள்ளத்தோட ஏத்துக்கறார். அவரைப் பொறுத்தவரை புல்லால் ஆன மாலை போட்டவனும் அவருக்கு ஒண்ணுதான்; ரோஜா மாலை போட்டவனும் ஒண்ணுதான். அவர் அவங்கள்ல வித்தியாசம் பார்க்கமாட்டார்.
தன்னைக் கும்பிட வர்றவங்களோட மனசு சுத்தமா இருக்கா. அந்த மனசிலே தனக்கு எத்தகைய இடம் இருக்குன்னுதான் பார்க்கறார்.’’ ‘‘மாமி, நீங்க புல்லுன்னு சொல்றது அறுகம்புல்லைத்தானே? பொதுவா பிள்ளையாருக்கு அறுகம்புல் ரொம்ப விசேஷம்னு சொல்வாங்க இல்லே?’’ ‘‘ஆமாம். அந்த அறுகம்புல்லுக்கு ஒரு விசேஷம் இருக்கு. அதை ஒரு கதையாகவே சொல்லியிருக்காங்க. யமனுக்கு அனலாசுரன்னு ஒரு மகன் இருந்தான். காலனோட மகன்ங்கறதாலே, அவன் தேவர்களையும் முனிவர்களையும் ரொம்பவும் கொடுமைப்படுத்தினான். அவஸ்தைப்பட்ட அவங்க, விநாயகர் கிட்ட போய் முறையிட்டாங்க. ஆனா, அவனோ அவரையும் ரொம்ப சாதாரணமா நினைச்சான். அதனால அவர்கிட்டேயே போய் சீண்ட ஆரம்பிச்சான். அவ்வளவுதான்.
அவனை அப்படியே தன்னோட தும்பிக்கையால தூக்கி அப்படியே வாய்க்குள்ள போட்டு லபக்குனு முழுங்கிட்டார்.’’

‘‘ஐயோ!.. அப்புறம்?’’

‘‘அவனோ அனலாசுரன். அதனால அவர் உடம்பிலே ஏகப்பட்ட உஷ்ணம் உண்டாயிடுச்சு. அதனால உலகமே தகிச்சுது. அவரோட வெப்பத்தைத் தணிக்க ஆளுக்கு இருபத்தோரு அறுகம்புல்லை எடுத்துக்கிட்டு எண்பதாயிரம் முனிவர்கள் விநாயகரோட உச்சி முதல் பாதம் வரை நீவி விட்டாங்க..’’
‘‘அது என்ன கணக்கு, இருபத்தொண்ணுன்னு?’’

‘‘அது மூலிகை மருத்துவக் கணக்கு. விநாயகர்ங்கறதால உலகத்து முனிவர்களெல்லாம் அவரை அறுகம்புல்லால் நீவி விட்டாங்க. அவரோட வெப்பம் தணிஞ்சுது. அன்னியிலேர்ந்துதான் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை பண்றதுன்னு வழக்கம் வந்தது. சிலபேர் அருகம்புல்னு எழுதுவாங்க; ஆனா அறுகம்புல்ங்கறதுதான் சரி. அறுத்து எடுக்கப்படற புல் அது.’’

‘‘ஓஹோ, விரத நடைமுறைகள் என்ன மாமி?’’

‘‘விடியற்காலையிலேயே எழுந்திடணும். சுத்தமா குளிச்சுட்டு, வீட்டையும் பெருக்கி, மெழுகி சுத்தமாக்கிக்கணும். வாசல்ல மாவிலைத் தோரணம் கட்டிக்கலாம். விருப்பப்பட்டா, இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசல்ல இரு புறங்கள்லேயும் கட்டி வைக்கலாம். அப்புறம் பூஜையறையிலே சுத்தம் பண்ணின ஒரு மணையை வெச்சுக்கோ. அதுக்கு மேல ஒரு கோலம் போடு. இந்த கோலத்து மேல ஒரு தலைவாழையிலையை வை. இலையின் நுனி வடக்கு பார்த்தாமாதிரி இருக்கறது நல்லது. இந்த இலை மேலே பச்சரிசியைப் பரப்பி வை. பரப்பின அரிசிக்கு நடுவிலே களிமண்ணால ஆன பிள்ளையாரை வைக்கணும்....’’
‘‘களிமண் பிள்ளையாரா?’’

‘‘ஆமாம். பூமியிலேர்ந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகணும்ங்கற தத்துவம்தான் அது. களி மண்ணுன்னு இல்ல, உலோகம், கற்சிலைன்னு எதைவேண்டுமானாலும் வைக்கலாம். அப்புறம் பத்ர புஷ்பம்...’’

‘‘ஆமாம். விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமா வாங்குவோமே அதுதானே?’’

‘‘அதேதான். அந்தப் பல்வகை பூங்கொத்து, எருக்கம்பூ மாலை, அறுகம்புல், சாமந்தி, மல்லின்னு எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேமாதிரி முடிஞ்ச அளவுக்கு, சிலவகை பழங்களையும் வாங்கிக்கலாம். இது எல்லாத்தையும் விட விநாயகருக்கு ரொம்பவும் பிடிச்ச மோதகத்தைத் தயார் பண்ணிக்கலாம்.’’

‘‘மோதகம்னா?’’

‘‘கொழுக்கட்டைதான். தேங்காய் பூர்ணம் வெச்சு செய்யற கொழுக்கட்டை. இதிலேயும் ஒரு தத்துவம் இருக்கு. மேலே இருக்கே மாவுப் பொருள். அதுதான் அண்டம். உள்ளே இருக்கற வெல்லப்பூரணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள்ளே இருக்கற இனிய குணங்களை மாயை மறைக்குது. இந்த மாயையை உடைச்சால் அதாவது வெள்ளை மாவுப்பொருளை உடைச்சால் உள்ளே இனிய குணமான வெல்லப்பூரணம் நமக்குத் தெரியும்...’’
‘‘அட.... விளக்கம் நல்லாயிருக்கே!’’

‘‘அதுசரி, விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் பண்ணினது வசிஷ்டரோட மனைவியான அருந்ததிதான்...’’
‘‘யாரு.. கல்யாணத்தின்போது பார்க்கச் சொல்வாங்களே! அந்த அருந்ததியா?’’

‘‘அதே அருந்ததிதான். பிள்ளையாருக்குப் பூக்களால அலங்காரம் பண்ணிட்டு, அப்புறமா விநாயகர் பாடல்கள் எதை வேணும்னாலும் பாடலாம். ஔவையார் தந்த விநாயகர் அகவல் பாடல் தொகுப்பு, காரியசித்தி மாலைன்னு படிக்கறதும் விசேஷமான பலன்களைத் தரும்...’’
‘‘விநாயகர் பாட்டுக்கா பஞ்சம்? நூத்துக்கணக்கிலே இருக்கே. நல்லா மனம் நிறைய எவ்வளவோ பாடலாமே?’’

‘‘உண்மைதான். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாம அவரவர் வசதிக்கேற்ப, எள்ளுருண்டை, பாயசம்னும் நிவேதனம் பண்ணலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல்னு எல்லாத்லேயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒண்ணாக் கலந்து நைவேத்யம் பண்ணலாம்...’’

‘‘ஔவையாரே பாடியிருக்காங்களே, ‘பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன். கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ அப்படின்னு...’’

‘‘சரியாச் சொன்னே, நிவேதனப் பொருட்கள்ல ஒவ்வொண்ணிலேயும் 21ங்கற கணக்கில வைக்கறது சிலர் வழக்கம். எண்ணிக்கை முக்கியமில்லே. அவரவர்
ஈடுபாடுதான் முக்கியம். ஆச்சா, நிவேதனம் பண்ணி கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்...’’

‘‘அவ்வளவுதானா?’’

‘‘ஆமாம். இந்த விரதத்தை காலையிலேர்ந்தே எதுவும் சாப்பிடாம அனுஷ்டிக்கறது ரொம்ப விசேஷம். குறிப்பிட்ட விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு நல்ல நேரம் எதுன்னு பஞ்சாங்கத்திலேயோ அல்லது பெரியவங்க மூலமாகவோ தெரிஞ்சுகிட்டு அந்த நேரத்திலே பூஜையை வெச்சுக்கலாம். அந்த நேரம் வரைக்கும் பட்டினியா இருந்து படைப்பது சிறப்பு. ரொம்ப சம்பிரதாயம் பார்க்கறவங்க, இந்த விநாயகர் சதுர்த்திக்கு அப்புறமும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பாங்க. அப்படித் தொடர்ந்துகிட்டே போய் பௌர்ணமிக்கு அப்புறம் வர்ற சதுர்த்தி தினத்தோட முடிப்பாங்க.

இத்தன நாள் விரதத்துக்கு அப்புறம்தான் அவங்க பிள்ளையாரை கிணற்றிலோ, நீர் நிலையிலோ கொண்டு போய் போடுவாங்க. பதினஞ்சு நாள் அனுசரிச்சாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் அனுசரிச்சாலும் சரி, மேற்கொள்ளற விரதத்தை உளப்பூர்வமா நாம் கடைப்பிடிக்கணும். அதுதான் முக்கியம்...’’

‘‘மாமி! சங்கடஹர சதுர்த்தின்னு சொல்றாங்களே அது என்ன?’’

‘‘அது மாசா மாசம் வர்றது. ஒவ்வொரு மாசமும் பௌர்ணமிக்கு கழிச்சு வர்ற சதுர்த்தி தினத்தில வர்றது. இந்த நாளன்னிக்கும், விரதம் இருக்கறது சிலரோட வழக்கம். அன்னிக்கு பூராவும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால தீபமேற்றி, நாள்பூரா விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களைப் பாடிகிட்டு, சாயங்காலம் கொழுக்கட்டை நைவேத்யம் பண்ணி, அப்புறமா சந்திர தரிசனம் பண்ணிட்டு எளிமையான சாப்பாடு சாப்பிட்டு விரதத்தை முடிப்பாங்க..’’

‘‘அட.. இவ்ளோ இருக்கா இதிலே..?’’

‘‘ஆமாம். விநாயகர் சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு விரதம் இருக்கறதால மனநலம் மேன்மையடையும். உடல் ஆரோக்கியம் வளரும். எல்லா
வளங்களும் நிறையும். இது விரதம் இருக்கறவங்களுக்கு மட்டுமில்லே. அவங்க குடும்பத்தினருக்கு, அவங்களைச் சார்ந்தவங்களுக்கும்தான்.’’ ‘‘ரொம்ப சந்தோஷம் மாமி. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திலே விரதமும் இருக்க முடியும்னு தெரிஞ்சுகிட்டேன்...’’
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum