தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மத நல்லிணக்கமே மனித ஒற்றுமைக்கு அடிப்படை!

Go down

மத நல்லிணக்கமே மனித ஒற்றுமைக்கு அடிப்படை! Empty மத நல்லிணக்கமே மனித ஒற்றுமைக்கு அடிப்படை!

Post  meenu Fri Mar 08, 2013 6:12 pm

நமது பாரத தேசத்தில் பெற்றோர்-மகன் உறவுக்கு இணையானதுதான், குரு-சிஷ்ய பாரம்பரியமும். அன்றிலிருந்து இன்று வரை கோயிலில் கோத்திரம் சொல்லி நம் ஆதி குருவான ரிஷிகளை நினைவு கூர்கிறோம். ஞானிகளின் பாடல்களில், ‘ஆயிரம் தாயன்பிற்கு ஈடாகுமா, என் குருவின் கருணை!’ என்று நெகிழ்ந்திருக்கிறார்கள். சந்த் கபீர்தாசர், ‘‘இந்த உலகிலுள்ள எல்லா மரங்களையும் வெட்டி, கூழாக்கி, காகிதம் தயாரித்தாலும் என் குருவின் பெருமையை எழுத அவை போதுமா என்று தெரியவில்லை’’ என்று தன் குருவின் மேன்மையை விளக்கியிருக்கிறார். தெய்வத்தை இகழ்ந்து பேசினாலும் மன்னிப்பு உண்டு. ஆனால், குரு நிந்தனையை அந்த தெய்வமே பொறுத்துக்கொள்ளாது என்கிற அளவிற்கு குருவின் மதிப்பு நம் பாரத தேசத்தில் உணரப்படுகிறது.


குரு எனும் தத்துவத்தின் அருமையை அகிலமெங்கும் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர். ‘‘எனக்கு வெளிநாடுகளில் கிடைத்த புகழில், பாராட்டுதலில், மற்றும் பிற உன்னத விஷயங்களில் நூறில் ஒரு சதவீதம் இங்கிருப்போருக்கு கிடைத்திருந்தால் அதிலேயே அழுந்திப்போய் காணாமல் போயிருப்பர். ஆனால், என் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் என் முன்னே வந்து என்னை, அவை எல்லாவற்றையும் அலட்சியம் கொள்ள வைத்தார். என்னைக் கட்டி காப்பாற்றி, இவற்றிற்கெல்லாம் அப்பால் தூக்கிச் சென்றதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்’’ என்று குருவருளின் நிதர்சனத்தை காட்டுகிறார். ஆதியில் கிருஷ்ணரும் அர்ஜுனரும் போல கலியுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் திகழ்ந்தனர் எனில் அது மிகையில்லை.

மதங்களைக் கடந்து நின்ற மகத்தான சக்தியை தரிசித்தவர் விவேகானந்தர். சகல சாஸ்திரங்கள் மற்றும் மதங்களின் உள்ளீடாக உள்ள பெரும் சக்தியை கண்டு வணங்கிய விவேகி இவர். ஏனெனில், குருதேவர் அடிக்கடி, ‘‘நரேன்.. இங்கு பார். ஒரே ஆறு. பல துறைகள்’’ என்பார். அந்த குருவின் வாக்குதான் விவேகானந்தரின் ‘மத நல்லிணக்கத்தின் மூலம் மனித குல ஒற்றுமை’ என்ற முழக்கமாக ஒலித்தது. சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் வைபவங்களின் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகர், பசுல்லா சாலையிலுள்ள ராமகிருஷ்ணமிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சர்வமத சபை எனும் பேரரங்கத்தின் மூலம் சென்ற மாதம், பல்வேறு சமயத் தலைவர்களின் சிறப்புரைகளைக் கேட்க முடிந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலரான தவத்திரு சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ் அவர்கள் விழாவைத் தொடங்கி ஆசியுரை நல்கினார். பிறகு வெவ்வேறு மதங்களிலிருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் அவரவர் மதம் சார்ந்த விஷயங்களையும் விவேகானந்தரின் பன்முகப் பார்வையையும் பற்றிப் பேசினர். சுவாமி விவேகானந்தரின் நோக்கு ஒவ்வொரு மதத்தையும் பொறுத்தவரை எப்படி இருந்தது? அவரின் உள்ளார்ந்த தத்துவ தரிசனம் எப்படிப்பட்டது?
இந்து மதத்தின் பெருமையை சிகாகோவில் எடுத்துரைத்து, பாரதத்தை நோக்கி எல்லோரின் பார்வையை திருப்பியவர் விவேகானந்தர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடைமுறை வேதாந்தம் முதல் பதஞ்சலியின் யோகம், ராஜயோகம் என்று நம் பண்டைய பொக்கிஷங்களை நமக்கும் எடுத்துக் கொடுத்தவர் சுவாமிஜி. அதேசமயம் சுவாமிஜிக்கு மற்ற மதங்களை பற்றி ஆழமான பார்வையும் உள்ளார்ந்த வணக்கமும் இருந்தன.

புத்தரின் மீது மாபெரும் மதிப்பு கொண்டிருந்ததை அவரின் எல்லா சொற்பொழிவுகளிலும் காணலாம். ‘‘பழமையான நூல் ஒன்றை ஆதாரமாகக் காட்டுவதனால் எதையும் நம்பிவிடாதீர்கள். உங்கள் தந்தை கூறியதற்காக எதையும் நம்பி விடாதீர்கள். ஒவ்வொன்றையும் சோதித்துப் பாருங்கள். முயன்று பாருங்கள். பின்னர் அதை நம்புங்கள். அது நன்மை பயக்கும் என்று நீங்கள் கண்டால் அனைவருக்கும் அதனை அளியுங்கள்’’ என்ற வார்த்தைகளுடன் புத்தர் உயிர் நீத்ததை விவேகானந்தர், கண்களில் நீர் மல்கக் கூறுவாராம். சுவாமிஜியின் ஆரம்ப கால, மத்திய வாழ்க்கை முழுவதுமே புத்தரின் இந்த உபதேசங்கள் கட்டமைத்ததாகவே இருந்தன.

ஏசுநாதரின் எளிமை அவரை வசீகரித்தது. ‘‘ஆன்மா உருவங்களில் இல்லை. ஆன்மாவை அறிவதற்கு எரிச்சலூட்டுகின்ற சிக்கலான தத்துவப் பிரச்னைகள் தேவையில்லை. நீங்கள் கற்றறிவில்லாமல் இருப்பது நல்லது. வாழ்நாளில் ஒரு நூலைக்கூட படித்திருக்காவிட்டாலும் நல்லதே. தேவையானது ஒன்றே ஒன்றுதான் - தூய்மை. இதய தூய்மை உடையவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் தூய்மையே ஆன்மாவின் இயல்பு. வேறு எப்படி இருக்க முடியும்? தூய இருதயத்தை உடையோர் தேவனை தரிசிப்பார்கள். பரலோக அரசு உங்களுள் இருக்கிறது. அதைத் தேட எங்கே போகிறீர்கள்? நீங்கள் அமரத்துவத்தின் வாரிசுகள். என்றுமுள்ள தந்தையின் குழந்தைகள். இதுதான் ஏசுவின் மாபெரும் போதனை. பிறவற்றைப் போலவே மதமும் அலையலையாக முன்னேறுகிறது. ஒவ்வொரு பேரலையின் உச்சியிலும் ஒரு மகான், ஒரு மாபெரும் ஆன்மிகத் தலைவர், மனித குலத்தின் குரு உள்ளார்.

நசரேத்தில் பிறந்த ஏசுநாதர், அத்தகையோருள் ஒருவர்’’ என்றும் சொல்லி, ஏசுவைப் பற்றி பெருமிதப்படுகிறார். இஸ்லாமிய மதத்தின் சமத்துவம் விவேகானந்தரை அதிகம் கவர்ந்தது. இதை தன் நூலிலே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘‘முகமதிய மதத்தின் முதல் செய்தி சமத்துவம். ஒரு மதம்தான் உள்ளது. அதுதான் அன்பு. இனம், நிறம் என்று எதைப் பற்றியும் கேள்வி கிடையாது. இந்த செயல்முறை பண்பு வெற்றி கண்டது. அந்தப் பெரிய செய்தி முற்றிலும் எளிமையாக இருந்தது. மண்ணையும் விண்ணையும் படைத்த ஒரே கடவுளை நம்புங்கள்’’ எனும் இந்த எளிமையான செய்தி விவேகானந்தரை ஈர்த்ததை பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதேபோல சீக்கிய மதமும் மகாவீரரின் ஜைன மதத்தை பற்றியும் கூட அவரின் பார்வை விசாலமானது.

‘‘எப்பாதையில் சென்றாலும் இறைவனை அடைவதே நமது குறிக்கோள். அதேசமயம், எடுத்த பாதையில் தடுமாறாமல் முழு நம்பிக்கையுடன் செல்வதும் முக்கியமாகும்’’ என்றார். சிகாகோவில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று அவர் விளித்தது, சாதாரண சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல. அந்த இரு சொற்களுக்குள்தான் மனித நேயம், மத நல்லிணக்கம் பொதிந்துள்ளது. மனித குல ஒற்றுமையை உள்ளத்திற்குள் கொண்டு சென்றது. இத்தனை நெருக்கமாக வேறெந்த வார்த்தைகளாவது அன்பையும் இணக்கத்தையும் உருவாக்குமா என்று தெரியவில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum