தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜ யோகம் தருவாள் ராஜராஜேஸ்வரி

Go down

 ராஜ யோகம் தருவாள் ராஜராஜேஸ்வரி Empty ராஜ யோகம் தருவாள் ராஜராஜேஸ்வரி

Post  meenu Fri Mar 08, 2013 6:12 pm

நவராத்திரியின் நாயகியாய் ராஜராஜேஸ்வரி தேவி அருள்கிறாள். தினம் ஒரு அலங்காரம், தினம் ஒரு நைவேத்தியம் என ஒன்பது நாளும் திருவிழாக்கோலம் கொள்ளும் நவராத்திரி நாட்கள் அம்பிகையை உபாசிக்க உகந்த நாட்களாகும். துன்பங்களை துரத்துவதால் துர்க்கா என்று பெயர் பெற்ற தேவி அருளும் சில தலங்களை நவராத்திரியில் தரிசித்து பேறு பெறுவோம். மகேசனின் மீது மலர்க்கணை எய்தான் மன்மதன். சிவன் சினம் கொண்டார். அரனின் கோபக்கனல் மன்மதனை பொசுக்கி சாம்பலாக்கியது. குவிந்து கிடந்த அந்த சாம்பலைக் கண்டு குதூகலித்த குட்டி விநாயகன், அதை அழகிய சிலையாக்கினான். பார்த்தவரை பரவசப்படுத்தும் அழகோடு இருந்த சிலையை அன்னை பார்வதியிடம் கொண்டு சென்றான். சிலையின் அழகைக் கண்டு வியந்த அன்னை பார்வதி,
இந்தச் சிலைக்கு உயிர் கொடுத்தால் விநாயகனுக்கு விளையாட்டுத் துணையாய் இருக்குமே என்று நினைத்தாள்.

பார்வதியின் மனதைப் படித்த பரமனின் உதடுகளில் புன்னகை பூத்தது. முக்காலமும் அறிந்த முக்கண்ணன் சிலையை தன் தாமரைக் கண்களால் நோக்கினார். அரனின் அமுதமயமான பார்வை பட்டு சிலை சிலிர்த்து உயிர் கொண்டது. தன் கோபத்தால் உண்டான சாம்பல் அல்லவா, ஆகவே உயிர் பெற்ற அந்த சிலைக்கு பண்டாசுரன் என்று பெயரிட்டார் ஈசன். பண்டாசுரன் விநாயகனின் விளையாட்டுத் தோழனானான். ஒரு சமயம் தேவர்கள் பலர் பனிமலைக்கு வந்து பரமனை பணிந்து வணங்கினார்கள். அப்போது அங்கிருந்த பண்டாசுரன் தேவர்களின் வலிமையையும் வளத்தையும் கண்டு வியந்தான். தனது வியப்பை தோழன் வேழமுகத்தானிடம் பகிர்ந்து கொண்டான். தன் சக்தியால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பரமனின் மனம் குளிர தவமியற்றினால் வேண்டும் வரம் யாவும் கிட்டும் என்று சக்தி பெறும் சூத்திரத்தை பண்டாசுரனுக்கு சொன்னான் விநாயகன்.

கடுந்தவமிருந்தான் பண்டாசுரன். பரமன் மகிழ்ந்து, ‘‘வேண்டும் வரம் கேள்’’ என்றார். ‘‘பிரபஞ்சம் என் வசமாக வேண்டும். தேவர்கள், அசுரர்கள், ஆயுதங்கள், அஸ்திரங்கள் ஆகிய அனைத்தையும் நான் உருவாக்க வேண்டும். எனக்கு அச்சமில்லாத, மரணமில்லாத வாழ்வு வேண்டும்’’ என்று கேட்டான். ‘‘இத்தகைய வரம் பெறும் தகுதி உனக்கு இல்லை’’ என்று சொல்லி மறைந்தார் மகேசன். பண்டாசுரன் மனம் தளரவில்லை. மீண்டும் தவமிருந்தான். தவத்தில் கடுமையைக் கூட்டினான். பரமன் பண்டாசுரனுக்கு மீண்டும் காட்சி தந்தார். இம்முறை மும்மூர்த்திகள் தன் வசமாவது, சாகாவரம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்.

பண்டாசுரன் திருப்தியடையவில்லை. அந்த இரண்டு வரங்களையும் தன் கைக்கு வரவழைக்க, தவத்தினை மேலும் உக்கிரமாக்கினான். இவனை இவன் போக்கிலேயே போய் சரிகட்ட வேண்டும் என்று நினைத்த சங்கரர், ‘‘தேவர்களாலோ, அசுரர்களாலோ, தாய் வயிற்றில் பிறந்தவர்களாலோ, பறவைகளாலோ, புழுக்களாலோ மற்றும் அஸ்திரங்களாலோ உனக்கு மரணம் நிகழாது’’ என்று வரம் தந்து மறைந்தார். தனது லட்சியத்தில் வென்ற ஆனந்தத்தில் அன்னை பார்வதி தேவியிடம் சென்று நடந்ததை எல்லாம் சொன்னான், பண்டாசுரன். அதைக் கேட்டு கலக்கமடைந்த உமை, தேவர்களோடு அவன் எப்போதும் பகை கொள்ளக் கூடாது என்று அறிவுரை கூறினாள். அதன்பின் பண்டாசுரன் பாதாள லோகத்திற்கு அரசனானான்.

ஆனால், பாதாள லோகத்து அசுரர்கள் அவனைத் தூண்டி விட்டார்கள். மூவுலகையும் ஆளப் பிறந்தவன் நீ என்று கர்வத்தீயை வளர்த்து விட்டார்கள். மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் போர் துவங்கினான் பண்டாசுரன். போரை உக்கிரமாக்கினான். தேவர்களை அடிமையாக்கி வதைத்தான். அவனுடைய பராக்கிரமங்களை கண்ட தாரகாசுரன் தனது நான்கு தங்கைகளை அவனுக்கு பரிசாகத் தாரை வார்த்துத் தந்தான். பரிசும் பாராட்டுகளும் பெற்ற மோகம் பண்டாசுரனை மேலும் உசுப்பேற்றியது. கொடுமைக்கு சற்றும் தயங்காத எட்டு அரக்கர்களை திசைகளுக்கு அதிபதியாக்கினான். பிரம்ம லோகத்தின் மீது படையெடுத்துச் சென்றான். நடக்கவிருப்பதை யூகித்த பிரம்ம தேவன் அவனை புகழ்ந்து போற்ற, அங்கிருந்து வைகுண்டம் நோக்கி விரைந்தான்.

விஷ்ணுவும் பிரம்மனைப் போன்றே சாதுர்யமாக நடந்து கொண்டார். அடுத்து கயிலாயம் சென்றான் அசுரன். நண்பனென்றும் பாராமல் விநாயகரையும் விரட்ட ஆரம்பித்தான். வெகுண்டெழுந்த வேழமுகன் பண்டாசுரனின் படையை சிதறடித்தார். அவனை கதையால் தாக்கினார். மகனுக்கு உதவ அன்னையும் உக்கிரமாய் போர் தொடுத்தாள். பண்டாசுரன் கணேசனைத் தாக்கினான். அதைக் கண்ட அன்னையோ ஆவேசம் கொண்டவளாய் பண்டாசுரனின் கதையை முடிக்க தயாரானாள். அப்போது பிரம்மா சங்கரன் கொடுத்த வரத்தை அன்னைக்கு ஞாபகப்படுத்தினார். ‘‘பிழைத்துப் போ. இனி இங்கே வந்தால் அழிந்து போவாய்’’ என்று கூறி பண்டாசுரனை விரட்டியடித்தாள், அன்னை.

இந்நிலையில் பண்டாசுரனுக்கு அடிமையான தேவர்கள் விடுதலை வேண்டி காத்திருந்தனர். தேவேந்திரனின் தலைமையில் ஒன்றுகூடி குரு ஆங்கிரஸரின் பாதம் பணிந்து வழி கேட்டனர். ராஜராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி ஆங்கிரஸர் கூற, மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தந்திர முறைப்படி மகாயாகம் செய்தார்கள். தேவர்களின் யாகத்தின் பயனாய் கொழுந்து விட்டெறியும் யாகத்தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றினாள். பண்டாசுரனின் கணக்கை முடித்து தேவர்களின் துயர் துடைத்தாள் அன்னை. தேவர்களின் யாகத்தீயிலிருந்து எழுந்ததைப் போலவே இந்த கலியுகத்திலும் அன்னை யாகத்திலிருந்து தோன்றி ராஜராஜேஸ்வரியாக கோயில் கொண்டுள்ளாள்.

எங்கே? சென்னை- நங்கநல்லூரில், தில்லை கங்காநகர் 16வது தெருவில், ஸர்வ மங்கள ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டுள்ளாள் அன்னை. பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில் ஒரு ஆஸ்ரமமாகவே திகழ்கிறது. தன் பால வயதிலிருந்தே ஸ்ரீவித்யா உபாசகராக விளங்கிய ராஜகோபால சுவாமிகள் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் ஹோமம் செய்தார். அப்போது அங்கே சுமார் ஆயிரம் பேர் குழுமியிருந்தனர். ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது, தகதகவென்று தீயிலிருந்து தோன்றினாள், அன்னை. ஊரார் வியந்து நின்ற போது ராஜகோபால சுவாமிகள் அதை தாம்பாளத் தட்டில் ஏந்தியெடுத்துக் கொண்டார்.

அதனை காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு சென்றார். அவரோ ‘‘இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள் சித்துகள்’’ என்று சொன்னார். அதன் பிறகு ராஜகோபால சுவாமிகள் தீயிலிருந்து தோன்றிய தேவியை வழிபடத் தொடங்கினார். அன்னையின் உத்தரவுப்படி ஆஸ்ரமம் அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் ராஜகோபால சுவாமிகளை சந்தித்து அவருடைய ஆசியுடன் அன்னையின் தரிசனம் பெற செல்கிறார்கள். இது இத்தலத்தில் கடைபிடிக்கப்படும் நியமம். நுழைவாயிலை கடந்து உள்ளே செல்கையில் பைரவரையும் தத்தாத்ரேயரையும் தரிசிக்கிறோம். அருகில் கோயில் அலுவலகம். இங்கே குங்குமமும் வழிபாட்டுக்குத் தேவையான கற்கண்டும் விற்பனைக்கு உள்ளன. இந்தக் கோயிலுக்கு வெளியிலிருந்து பழம், தேங்காய், குங்குமம் என்று எந்த பொருளையும் வாங்கி வரக்கூடாது.

ஏனென்றால் இங்கே அம்பாளின் அர்ச்சனைக்கு இக்கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு அர்ப்பணிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் முன்னரே அம்பாள் உத்தரவுப்படி மந்திர சுத்தி செய்ய வேண்டியிருப்பதனாலேயே வெளியிலிருந்து எடுத்துவரும் பொருட்களை கோயிலினுள் அனுமதிப்பதில்லை. அடுத்து நாம் தரிசிப்பது மகா கணபதியை. அவருக்கருகில் துர்க்கை. அங்கிருந்து சென்று தன்வந்திரி பகவானையும், தன்வந்திரி தீர்த்தத்தையும் தரிசிக்கிறோம். இந்த தீர்த்தம் தீராத நோய் தீர்க்கும் மாமருந்து என்கிறார்கள் பலனடைந்தவர்கள். தன்வந்திரி பகவானுக்கு அடுத்து நாம் காண்பது கொடிமரம். அடுத்து பலிபீடம், சிம்மம். பக்கத்தில் தங்கமென தகதகவென மின்னுகின்றன பதினாறு படிகள். இங்கே ஒரு பெட்டி இருக்கிறது.

இதில் அன்றைய திதி மற்றும் திதி தேவியின் பெயரைச் சொல்லி, கோயிலில் பணம் செலுத்தி வாங்கி வந்த குங்குமப் பொட்டலத்தைப் போட வேண்டும். அன்று நள்ளிரவு ராஜகோபால சுவாமிகள் இந்த குங்குமத்தை பயன்படுத்தி அன்னைக்கு அர்ச்சனை செய்வார். அதனால் பக்தர்களின் தோஷங்கள் அனைத்தும் தீரும் என்கிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே அர்ச்சனையாகச் செய்யாமல், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே செய்யவேண்டும் என்கிறார்கள். பதினாறு படிகள் எதற்காக? ஒவ்வொரு படியும் ஒரு திதியைக் குறிக்கிறது. முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த திதியின் தேவதையாக காமேஸ்வரி நித்யா கொலுவிருக்கிறாள்.

இவளைப் பற்றி அகத்திய மாமுனிவர் எழுதிய பாட்டை கல்லில் பொறித்து சுவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திருவுருவங்களும் படிக்கு இருபுறங்களிலும் சுவரில் எழுந்தருளச் செய்ய வைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங்களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு. இதேபோல இரண்டாம் படியில் சுக்ல த்விதீயைக்கும், கிருஷ்ண சதுர்த்தசிக்கும், பகமாலிநீ, நித்யா கொலுவீற்றிருக்கிறாள். மூன்றாம் படியில் நித்யக்லின்னாநித்யா. நான்காம் படியில் பேருண்டா, ஐந்தில் வஹ்னிவாசினீ ஆறில் மஹாவஜ்ரேஸ்வரி, ஏழில் சிவதூதீ அடுத்தடுத்து த்வரிதா, குலசுந்தரி, நித்யா, நீலபதாகா, விஜயா, சர்வமங்களா, ஜ்வாலாமாலினீ, நிறைவாக சுக்ல பஞ்சதசீயிலும், கிருஷ்ண பிரதமையிலும் சித்ரா நித்யா பதினைந்தாவது படியில் கொலுவிருக்கிறாள்.

பதினாறாவது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி வீற்றிருக்கிறாள். அன்னை மரகத பச்சை நிறத்தில் அழகாய் அமர்ந்திருக்கிறாள். அன்னை அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான், தீயில் பிறந்த தெய்வம். இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அன்னையின் அழகு முகத்தைக் காணும் போதே மனம் குதூகலமடைகிறது. அன்னையின் திருமுகம் அப்படியே மனதில் பதிகிறது. சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நதி கொண்டருள்கின்றனர். நாம் இடப்பக்கமாக ஏறும் போது பிறை நிலவில் தொடங்கி முழுநிலவாய் அன்னையை தரிசித்த திருப்தியும் இறங்கும்போது துயரமெல்லாம் மெல்ல கரைந்து காணாமல் போவது போன்ற உணர்வும் மேலோங்குகிறது.

அன்னையின் உத்தரவுப்படி ஆலயத்தின் அருகே சத்யநாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவரையும் வணங்கி வர பல நலன்கள் விளையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேவர்களின் துயரைத் துடைத்து ராஜ வாழ்வை மீட்டுத் தந்த அன்னை ராஜராஜேஸ்வரி, தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அனைத்து வளங்களையும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum