தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யம் அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர விரதம்

Go down

ஐஸ்வர்யம் அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர விரதம் Empty ஐஸ்வர்யம் அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர விரதம்

Post  meenu Fri Mar 08, 2013 6:00 pm

மாதத் துவக்கம் என்றாலே வங்கிகளில் கூட்டம்தான். இத்தனைக்கும் ஏ.டி.எம். வசதிகள் வந்த பிறகும் வங்கிகளில் எத்தனையோ பரிவர்த்தனைகளுக்காகக் கூட்டம் குறையாமல்தான் இருந்தது. டோக்கனை வாங்கிக் கொண்டு, வசதியாகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பவானி மாமி.
‘‘உங்க டோக்கன் நம்பர் என்ன மாமி?’’ கேட்டுக் கொண்டே பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள், புவனேஸ்வரி. ‘‘வா புவனா, இன்னிக்கு வார நாள். உன் பெண்கள் ஆபீசுக்கும் காலேஜுக்கும் போயிருப்பாங்க..’’மாமி விசாரித்தாள். ‘‘ஆமாம் மாமி. வீட்ல ஃப்ரீயா இருக்கும் போதுதான் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் பார்க்க முடிகிறது,’’ புவனேஸ்வரி சொன்னாள்.

‘‘பேங்க்குங்கறது லக்ஷ்மியின் இருப்பிடம்தான். இல்லையா? லக்ஷ்மி கடாட்சங்கறதே கரன்ஸியும் நகைகளும்தானே..’’ மாமி ஆரம்பித்தாள்.
‘‘நானே கேட்கணும்னு இருந்தேன் மாமி. லக்ஷ்மி குபேரவிரதம்னு கேள்விப்பட்டேன். அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்..’’ ‘‘அதுக்கும் முன்னால எல்லா செல்வங்களுக்கும் குபேரன் எப்படி அதிபதியானான் என்ற கதையைச் சொல்லிடறேன்’’ மாமி சொன்னாள். ‘‘ஒரு மகரிஷி இருந்தார். அவர் பேர் விச்ரவசு. அவர் எப்போ பார்த்தாலும் சிவனை நினைச்சே தவம் பண்ணிகிட்டிருந்தார். யாகங்கள் செய்யணும்னு ஆசைப்பட்டார். ஆனா, பிரம்மச்சாரிகள் யாகங்கள் செய்யக்கூடாதுன்னு அப்போ ஒரு விதி இருந்தது.

அதனால் யாகங்கள் பண்ணி இறைவனுக்கு சேவை செய்யணுங்கற விருப்பத்திலே இருந்த விச்ரவசு, பரத்வாஜ மகரிஷியோட மகளைத் திருமணம் செய்து கொண்டார். உரிய காலத்திலே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.’’ ‘‘அப்புறம்..?’’ குழந்தைக்கு வைஸ்ரவணன்னு பேர் வெச்சார். குழந்தையை ரெண்டுபேரும் ரொம்ப செல்லமா வளர்த்தாங்க. பையனும் அப்பாவுக்குத் தப்பாமத்தான் பிறந்திருந்தான். ஆமாம். மழலை வயசிலிருந்தே எப்பவும் பூஜை, இறைநாம ஜபம்னு நல்ல பக்திமானாக இருந்தான். ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சப்புறம், அவன் அப்பாகிட்ட ஒரு விண்ணப்பத்தை வெச்சான். அதாவது, தான் பிரம்மனை நோக்கித் தவம் செய்யப்போவதாகவும் அதுக்கு அவங்களோட ஆசிர்வாதம் வேணும்னும் கேட்டான். முனிவர் விச்ரவசுவுக்கு அதைவிட வேறு என்ன சந்தோஷம் வேணும்? உடனே ரொம்ப உற்சாகமாக அவனுக்கு ஆசி சொல்லி அனுப்பி வெச்சார்.’’

‘‘அந்த வயசிலே எப்படி தவம் பண்ணணும்னு தோணுது?’’ ‘‘முனிவரோட பையனில்லையா, அதனாலதான் அதே பக்தி உணர்வு அவனுக்கும் இருந்தது. ஆனா இவன் தவம் இருந்த முறை ரொம்பவும் கடுமையாக இருந்தது. ஆமாம். ஆரம்பத்திலே ஆகாரம் எதையும் எடுத்துக்காம வெறும் தண்ணியை மட்டும் குடிச்சுட்டு தவம் இருந்தான். நாளாக ஆக தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திட்டான். இப்ப வெறும் காற்றுதான் அவனோட ஆகாரம்..’’ ‘‘அடக் கடவுளே, ஏன் இப்படி ஒரு தவம்!’’ ‘‘மனசிலே அவ்வளவு வைராக்கியம். அதுவும் ஒரு மாசம் ரெண்டு மாசமில்ல. பல வருஷங்கள். பிரம்மாவும் மனமிரங்கினார். உடனே தன்னோட சகல தேவர்களையும் அழைத்து வந்து வைஸ்ரவணனுக்கு தரிசனம் தந்தார். ரொம்ப சந்தோஷப்பட்டான் வைஸ்ரவணன். அவன்கிட்ட பிரம்மா, ‘‘உனக்கு என்ன வரம் வேணும்’’னு கேட்டார். ‘‘உங்களை தரிசிச்சதை விட வேறே என்ன பாக்கியம் எனக்கு வேணும்? இதைவிட நான் வரமாக எதைக் கேட்கறது?’’னு சொன்னான், வைஸ்ரவணன்.

‘‘அட, இந்த வயசிலே என்ன பக்குவம்!’’ வியந்தாள் புவனேஸ்வரி. ‘‘இதே வியப்புதான் பிரம்மனுக்கும். அவரும் சரி, அவர்கூட வந்திருந்த தேவர்களுக்கும் சரி, வைஸ்ரவணனுடைய அடக்கமான குணம் ரொம்பப் பிடிச்சிருந்தது. இத்தனை சின்ன வயசிலே எதிலேயும் பற்று இல்லாம தீவிரமான பக்தியோட இருக்கானே இந்தப் பிள்ளை, இவன் எந்தப் பெரிய பதவியையும் வகிக்கத் தகுந்தவன்தான். அதனால இவனுக்குப் பொருத்தமான ஒரு பதவியைத் தரணும்னு யோசிச்சுகிட்டாங்க. உடனே பிரம்மன், ‘‘அப்படியானா, இவனை அஷ்டதிக் பாலகர்கள்ல ஒருவனாக நியமிக்கலாம். இவனை எல்லா செல்வங்களையும் பாதுகாக்கற அதிபதியாக ஆக்கிடலாம்னார். எல்லோரும் அதுக்கு சம்மதிச்சாங்க...’’ ‘‘அடேயப்பா, எவ்ளோ பெரிய பொறுப்பு!’’

‘‘ஆமாம். பிரம்மன் அப்படி ஒரு வரத்தை அதாவது பொறுப்பை அவன்கிட்ட ஒப்படைச்சார். அப்போதிலிருந்தே எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானான், வைஸ்ரவணன். அஷ்டதிக் பாலகர்கள்ல ஒருவனானான். அப்போதிலேர்ந்து அவன் பேரு குபேரன்னு ஆச்சு.’’ ‘‘ஓஹோ.. இதுதான் குபேரன் கதையா? குபேரனோட எல்லா செல்வங்களும் சேர்ந்ததனால, அவன் லக்ஷ்மி குபேரன் ஆனானா?’’ ‘‘ஆமாம்.. கவுன்டர்ல என்ன நம்பர் போகுது.. ஓ.. பதினஞ்சா.. என்னோடது முப்பத்திரெண்டு. இன்னும் நிறைய நேரம் ஆகும். சரி.. லட்சுமி குபேர விரதத்தைப் பத்திச் சொல்றேன். கேட்டுக்கோ.’’ ‘‘சொல்லுங்க மாமி..’’
‘‘வைஸ்ரவணன் மாதிரி கடுமையான தவமோ, விரதமோ நம்மாலல்லாம் இருக்கமுடியாதுதான். ஆனா எளிமையாக லக்ஷ்மி குபேர விரதத்தைக் கடைப்பிடிச்சா போதும். நிம்மதியாக வாழவும் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துக்கவும், போதுமான செல்வம் கிடைக்கவும் வழி கிடைக்கும்.’’

‘‘வேற என்ன வேணும் மாமி? சரி, எப்படி விரதம் செய்யறது?’’ ‘‘ஒரு வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கோங்க. அந்த நாள்ல அஷ்டமி, நவமின்னு திதி இல்லாம இருக்கறது நல்லது. அதோட அன்னிக்கு அமிர்த யோகம் அல்லது சித்தயோகம்னு இருந்தா ரொம்ப விசேஷம்..’’ ‘‘ஓஹோ, இவ்வளவு பார்க்கணுமா?’’ ‘‘ஒரு சில விரதங்களுக்கு இப்படி பார்க்கறது நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆச்சா, இப்படி ஒரு வெள்ளிக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டதுக்கு அப்புறம், அதுக்கு முந்தின நாளே சில பூஜைப் பொருட்களை ரெடி பண்ணி வெச்சுக்கணும். லக்ஷ்மி படம், குபேரன் படம், குபேர யந்திரம், லக்ஷ்மி குபேரன் இணைந்த படம் அப்படின்னு லக்ஷ்மி, குபேரன் சம்பந்தப்பட்டதை எடுத்து சுத்தமா துடைச்சு வெச்சுக்கணும்.’’
‘‘நீங்க சொன்ன எல்லாத்தையும் தயார் பண்ணிக்கணுமா?’’

‘‘அப்படியில்லே.. அந்த பட்டியல்ல ஏதாவது ஒண்ணு இருந்தாலே போதும். படமா இல்லாம விக்ரகமாக இருந்தாலும் ரொம்ப விசேஷம்தான்..’’
‘‘சரி, அப்புறம்?’’ ‘‘மஞ்சள்தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழையிலை எல்லாத்தையும் வாங்கி வெச்சுக்கறது நல்லது. அவங்கவங்க சக்திக்கேற்றபடி முடிஞ்ச அளவிலே அந்தப் பொருட்களை வாங்கி வெச்சுக்கலாம்.’’
‘‘முந்தின நாளே இதையெல்லாம் தயார் பண்ணிக்கறதால மறுநாள், அதான் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே விரதத்தை ஆரம்பிச்சுடலாம், இல்லையா மாமி?’’ ‘‘ஆமாம். அன்னிக்கு விடியற்காலையிலேயே எழுந்து, குளிச்சுட்டு, சுத்தமான உடைகளை அணிசுகிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக்கணும். அன்னிக்கு சௌகரியமாக பத்தரை-பன்னிரண்டு மணி ராகு காலம்ங்கறதனால, பத்தரை மணிக்கு முன்னால பூஜையை முடிக்கறா மாதிரி திட்டமிட்டுக்கலாம்.

அந்த அதிகாலை நேரத்திலே, லக்ஷ்மி குபேரன் படத்தை எடுத்து, அதுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜையறையிலே வைச்சுக்கணும். படத்துக்கு முன்னால தலை வாழையிலையை வெச்சு, அதுக்கு மேலே நவதானியங்களையும் தனித்தனியாக, சுற்றிவர பரப்பி வைக்கணும். அதுக்கு நடுவிலே, சுத்தமான தண்ணீர் நிரப்பின ஒரு சொம்பை வைச்சுக்கணும். இந்தத் தண்ணீருக்குள்ள கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டுக் கலந்துக்கணும். சொம்பு வாய்க்குள்ள ஒரு மாவிலைக் கொத்தைச் செருகி அது நடுவிலே ஒரு தேங்காய்ல மஞ்சள் பூசி நிறுத்தினா மாதிரி வைக்கணும். வெற்றிலை, பாக்கு, பழம்...’’ ‘‘என்ன பழம் மாமி?’’
‘‘வாழைப்பழம் வைக்கறது நல்லது. இப்படி வாழைப்பழத்தை பூஜைக்காக வைக்கறதிலே ஒரு தத்துவம் இருக்கு தெரியுமோ?’’ ‘‘வாழைப்பழத்திலே தத்துவமா?’’
‘‘பொதுவாக எந்தப் பழத்திற்கும் விதை உண்டு.

பழத்தை சாப்பிட்டுட்டு அந்த விதையை நிலத்திலே எறிஞ்சோம்னா அது, அந்தப் பழம் தர்ற செடியோ மரமோ மறுபடி முளைக்கும். ஆனா வாழைப்பழத்திலே மட்டும் அப்படி இல்லே. தூக்கிப் போடறது தோலைத்தான். அதனால வாழை மரத்துக்கு மட்டும் விதை, கிதைன்னு எதுவும் கிடையாது. வாழைக்கன்றுதான். அந்தக் கன்றை நட்டு வெச்சா அது மரமாக வளரும். அதுக்குக் கீழே இன்னொரு வாழை வளரும். அதாவது வாழைப்பழத்திலேர்ந்து இன்னொரு வாழை மரம் வளராதுங்கறது, மறுபிறவி இல்லாத ஒரு நிலைமையை மனிதன் அடையணும்ங்கற தத்துவம்தான் வாழைப்பழத்தை நிவேதனம் செய்யற நடைமுறை.’’
‘‘அட.. இந்த விளக்கம் வித்தியாசமா இருக்கே, சரி, அப்புறம் என்ன பண்ணணும்?’’

‘‘ஆச்சா, இந்த நிவேதனப் பொருட்களோட, தட்சணையா ஏதாவது காசு வைக்கணும். ஒரே ஒரு ரூபாயாக இருந்தாலும் பரவாயில்ல. அவங்கவங்க வசதிக்கேத்தபடி வைக்கலாம். இந்த பொருட்களையெல்லாம் கலசத்துக்கு முன்னால வெச்சுக்கலாம்..’’ ‘‘பொதுவா இந்த மாதிரி பூஜைகள்ல எல்லாம் மஞ்சப் பிள்ளையார்னு வைப்பாங்களாமே, அது என்ன மாமி?’’ ‘‘அது மஞ்சள் பொடியால செய்யறது. இது மாதிரி பூஜைகள்ல விநாயகர் விக்ரகத்தை முன்னே வெச்சு அவரோட ஆசிர்வாதத்தால பூஜை நல்லபடியா நடந்து முடியணுமேன்னு வேண்டிக்கறது வழக்கம். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு நாம் வாங்கி பூஜை பண்ற பிள்ளையார் சிலையை மறுநாள் கிணற்றிலோ, கடல்லேயோ கொண்டுபோய் போட்டுடறோம் இல்லையா, அதனால விநாயகரை இதுமாதிரி ஒவ்வொரு பூஜையிலேயும் மஞ்சள் பொடியில பிடிச்சு வெச்சுக்கறோம்.’’

‘‘மஞ்சள் பொடியில எப்படி பிடிக்கறது?’’ ‘‘மஞ்சள் தூள்ல கொஞ்சமா தண்ணீர் விட்டு ஒரு கூம்பாகப் பிடிச்சுக்கலாம். பிள்ளையார் மாதிரி தும்பிக்கை, தந்தம்னு பண்ணிக்க முடியாட்டாலும் ஒரு ஊகமாக பிள்ளையாரைப் பிடிச்சு வெச்சுக்கறது வழக்கம். இந்தப் பிள்ளையாரை வாழையிலையின் வலதுபக்கம் மேலே ஓரமாக வைக்கணும். இதுக்கும் குங்குமம் இட்டுவிடணும். படம், கலசத்துக்கு சாத்தர பூச்சரத்திலேர்ந்து கொஞ்சம் கிள்ளியோ அல்லது உதிரிப் பூவாகவோ இந்த மஞ்சள் பிள்ளையாருக்கும் வைக்கணும். ஊதுவத்தி கொளுத்தி வைக்கணும்.’’ ‘‘ஆஹா, சொல்லும்போதே பூஜை மணம் தெரியறதே.’’ ‘‘இந்த பூஜையமைப்பை மேற்கு பார்த்தா மாதிரி வெச்சுக்கிட்டா கிழக்கு பார்த்து பூஜை பண்ண வசதியாக இருக்கும். கிழக்கு-மேற்கு திசை உங்க வீட்டமைப்புக்கு வசதியாக இல்லேன்னா, வடக்கு திசை பார்த்து பூஜை பண்றா மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாம்.

ஆனா பூஜைக்கான படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருக்கறதுதான் நல்லது. ஆச்சா, இப்ப உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையார் பாடல் எதையாவது சொல்லுங்க. பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம்னு எது தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம்.’’ ‘‘ஓஹோ, முதல்ல பிள்ளையாரை வணங்கி அவரோட ஆதரவை சம்பாதிச்சுக்கணுமாக்கும்.’’ ‘‘ஆமாம். இப்படி பிள்ளையார் மந்திரங்களைச் சொன்னப்புறம், அடுத்ததாக உங்களுக்குத் தெரிஞ்ச லக்ஷ்மி ஸ்லோகம், பாட்டுன்னு ஏதாவது சொல்லலாம். கையிலே அந்த ஸ்தோத்திர புத்தகங்கள் இருந்தா அதைப் பார்த்தும் படிக்கலாம். எந்த சுவாமியைப் பத்தியும் ஸ்லோகமோ பாட்டோ தெரியாதே, வீட்ல ஸ்லோக புத்தகம்கூட இல்லியேன்னு யோசிக்க வேண்டாம். ஆனைமுகனே போற்றி, விநாயகா போற்றின்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

அடுத்து அஷ்ட லக்ஷ்மியே போற்றி, குபேர லக்ஷ்மியே போற்றி, தன லக்ஷ்மியே போற்றின்னு கூட சொல்லிக்கிட்டே இருக்கலாம். குபேர ஸ்துதி தெரிஞ்சா அதையும் சொல்லலாம். தெரியலேன்னா, ‘குபேராய நமஹ, வைஸ்ரவணாய நமஹ, தனபதியே நமஹ’ன்னு சொல்லி அர்ச்சனையை முடிக்கலாம்.’’
‘‘உதிரிப் பூக்களால இப்படி அர்ச்சனை பண்ணினப்புறம் என்ன பண்ணணும் மாமி?’’ ‘‘சாம்பிராணி போடணும். அந்தப் புகையை வீடு முழுக்க எடுத்துகிட்டுப் போய்க் காட்டலாம். வாழைப்பழம், காய்ச்சின பசும்பால், பாயசம்னு முடிஞ்ச பொருட்களை லக்ஷ்மி குபேரனுக்கு நைவேத்யமாகக் காட்டுங்க. அப்புறமா கற்பூரம் காட்டி மணியடிச்சு பூஜையை நிறைவு செய்யலாம், வெற்றிலைபாக்கு, பழங்களையும் தட்சணை காசையும் யாராவது ஏழை சுமங்கலிப் பெண்ணுக்குத் தரலாம். அப்புறம் பொதுவான ஒரு வேண்டுதலையும் குபேரன் முன்னால வைக்கணும்.’’

‘‘என்ன மாமி அது?’’ ‘‘ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள போதுமான செல்வத்தையும் நிரந்தரமான சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் தரவேண்டும் குபேரனே! அப்படீன்னு பொதுவாக வேண்டிக்கறது ரொம்பவும் நல்லது. குறிப்பாக உங்களுக்குத் தெரிஞ்ச ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இருந்தா, அவங்க எந்த சாதி, மதமாக இருந்தாலும் பரவாயில்லே, அவங்களுக்காக வேண்டிக்கறது ரொம்பவும் உத்தமம். இந்த விரதத்தை யார் வேணாலும் கடைப்பிடிக்கலாம். பெண்கள்தான் செய்யணும்னு இல்லே. ஆண்களும் சிறுவர்களும் கூட மேற்கொள்ளலாம்.’’
‘‘அப்படியே செய்யறேன் மாமி. லக்ஷ்மி குபேர பூஜை பண்றவங்களுக்கு மட்டுமில்லாம நாம சம்பந்தப்படாதவங்களுக்கும் நல்லது நடக்கணும்னு நினைச்சு பண்ண சொல்றீங்களே.. அதுதான் கிரேட்..’’

‘‘உன்னோட வாழ்க்கையிலே வரக்கூடிய சங்கடங்கள், கசப்புகள் எல்லாத்தையும் போக்கி, தடைகள் எல்லாத்தையும் நீக்கி, உன் குடும்பம் எல்லா சுபிட்சங்களும் பெற குபேரன் ஆசி தருவான்.’’ ‘‘ரொம்ப தேங்க்ஸ் மாமி.. அதோ பாங்க் குபேரன். அதான் கேஷியர் கூப்பிடறார். போய் பணம் வாங்கிட்டு வந்துடறேன்.’’ என்று சொல்லிவிட்டு புவனேஸ்வரி எழுந்துகொண்டாள். மாமியும் அடுத்து அங்கே தன் வேலையை முடித்துக் கொண்டு புறப்படத் தயாரானாள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum