தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்

Go down

கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன் Empty கால சர்ப்ப தோஷம் போக்கும் கரிவரதன்

Post  meenu Fri Mar 08, 2013 2:17 pm

கொஞ்சு தமிழ் பேசும் கொங்குநாட்டின் குறிப்பிடத் தகுந்த தலம், நன்செய் புளியம்பட்டி. இங்கு நடு நாயகமாகத் திகழ்கின்றது, கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில். 110 ஆண்டுகள் தொன்மையானது. 1902ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் மூலவர், 600 ஆண்டுகள் பழமையானவர். இவ்வூரின் வயல் நடுவே ஒரு கருட கம்பம் மட்டும் தனித்து நின்றிருந்த இடத்தில்தான், பெருமாளின் திருக்கோயில் இருந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த மழை பெய்து பவானி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஊரும் கோயிலும் அடித்துச் செல்லப்பட்டன. கருட கம்பமும் சுயம்பு மூலவரும் மட்டும் நிலைத்து நின்றன. இந்த வயல்வெளிப் பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்பட்டது. கோயில் கட்டுவது சம்பந்தமாக ஊர்மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் வேகமாக அங்கே வந்தார். ‘‘ஐயா, இந்த உச்சி வெயில் நேரத்தில் ஒரு வெள்ளை நாகம், நான் வரும் வழியில் மண்டலமிட்டுப் படுத்திருக்கிறது. நான் பயந்து ஓடிவந்து விட்டேன். வந்து பாருங்கள்’’ என்று பதற்றத்துடன் சொன்னார்.

எல்லோரும் சென்று பார்த்தார்கள். அவர் சொன்னபடியே இருந்தது. இவர்களைப் பார்த்த நாகம் படமெடுத்துச் சில விநாடிகள் ஆடியது. பிறகு மூன்று முறை நிலத்தில் முத்தமிட்டு விட்டு, மளமளவென்று ஊர்ந்து சென்று மறைந்தது. தம் குலதெய்வமான ‘கருத்திருமராய சுவாமி’யே கோயில் கட்ட இந்த இடத்தை நாக உருவில் வந்து காட்டியிருக்கிறார் என்று நம்பினார்கள். அதன்படிதான் அங்கே கரிவரதராஜப் பெருமாளின் கருவறையுடன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் 21 நாகங்களின் புடைப்புச் சிற்பங்களும் வெளிச் சுவர்களில் நாக சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆலய ராஜகோபுரம் பேரழகு வாய்ந்தது. இங்கு கருவறை வெளிச் சுவரில், ராமாயணத்தின் சுந்தரகாண்டக் காட்சி புடைப்புச் சிற்பமாக, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதாதேவிக்கு அனுமன், ராமபிரானின் கணையாழியைக் கொடுக்கும் காட்சி அது.

ஜாதகத்தில் தசாபுக்தி கோளாறு உள்ள தம் குழந்தையை இந்தப் பெருமாளுக்கு தத்துக் கொடுத்து, பெருமாளிடமிருந்து தவிடு வாங்கி, பிறகு தவிட்டைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பிரார்த்தனையால் குழந்தை பாதிப்பில்லாமல் வளர்கிறது என்கிறார்கள். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை இந்தப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடத்துகிறார்கள். பிறகு அலங்காரம், சிறப்பு பூஜை, நைவேத்யம், சமபந்தி போஜனம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இந்த கரிவரதராஜப் பெருமாளைப் பிரார்த்தித்தால், தாங்கள் எண்ணிய காரியம் நல்ல முறையில் நிறைவேறுகிறது என்பது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவம். கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் அச்ச உணர்வைப் போக்கி, சுகப் பிரசவம் அடையச் செய்பவர் இவர்.
இவ்வாலயத்தில் ராமருக்குத் தனி சந்நதி உள்ளது.

அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நவகிரகங்கள், அனுமன், கருடாழ்வார், விஷ்வக்சேனர் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். ராகு-கேது, நாகர் சிறப்பு பீடங்கள் இவ்வாலயத்தின் கூடுதல் சிறப்புகள். செல்வங்களுக்கு அதிபதியான ஸ்ரீதேவியையும் நிலங்களுக்கு அதிபதியான பூமிதேவியையும் தன்னருகே கொண்டு, கரிவரதராஜப் பெருமாள் அருளாசி புரிந்து வருகிறார். அபய ஹஸ்தத்தால் ஆசீர்வாதத்தையும் கடிஹஸ்தத்தால் நல்ல வைராக்கியத்தையும் நல்கி, சங்கு-சக்கரங்களால் துன்பத்தையும் தீமையையும் விலக்குகிறார். அர்த்த மண்டபத்தின் முன்னால் தல விருட்சமான வில்வ மரத்தின் அடியில், காளிங்க நர்த்தன நாகச் சிற்பங்கள் காட்சி தருகின்றன. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி
பெறுகிறார்கள்.

இவ்வாலயத்தில் காணப்படும் கருட கம்பமும் கருடாழ்வார் சிலையும் மிக உன்னதமானவை. தன்னை வணங்குவோர்க்கு, தன் தலைவராகிய ஸ்ரீமந் நாராயணனிடம் எடுத்துச் சொல்லி வரம் தர வைப்பவர் இவர். இவருக்கு மிளகு சாதம் நைவேத்யமாகப் படைத்தால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
தான் விரும்பும் மணமகனை அல்லது மணமகளைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்கள் இவ்வாலயம் வந்து இங்குள்ள சீதாதேவிக்கு சந்தனக் காப்பும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, நறுமண தூபங்கள் இட்டு, வேண்டிக் கொண்டால், மனவிருப்பம் நிறைவேறுகிறது. பிரிந்திருக்கும் கணவன்-மனைவி, கருவறை வெளிச் சுவரில் காட்சிதரும் சுந்தர காண்ட சிற்பங்களை வணங்கி, பூஜித்தால் மனமுறிவு நீங்கி ஒன்றாவார்கள்.

இவ்வாலயத்தின் முன்புறம் உள்ள வன்னி மரத்தைச் சுற்றி வந்து வணங்குவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி, மழலைச் செல்வம் கிடைக்கும். கிரக தோஷம் உள்ளவர்கள், நவகிரக சந்நதிக்கு வந்து, தோஷம் ஏற்படுத்திய கிரகத்துக்குரிய உரிய வஸ்திரம், தானியம், மலர் சமர்ப்பித்தால், தோஷம் நிவர்த்தியாகிறது.
முக்கியமாக, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, நாகம் இடம் காட்டிக் கொடுத்த இந்தக் கோயில் மிகச் சரியான பரிகாரத் தலம் என்றே சொல்லலாம். மூலவரை வணங்கி, தோஷ பரிகாரம் செய்துகொண்டால், கால சர்ப்ப தோஷம் நீங்கி விடும்.

கோயில் தினசரி காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலையில் 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமை, பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மதியம் 12:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். ‘கரி’ - என்றால் யானை. ‘வரதர்’- என்பது முதலையால் துன்பப்பட்ட அந்த யானையை விடுவித்து வைகுண்டப் பதவியை அளித்த எம்பெருமான் என்று பொருள். வரம் அளிக்கும் தெய்வங்களில் முதன்மையானவர் இந்தக் கரிவரதர். கோபிச் செட்டிப்பாளையம்-பங்களாப் புதூர் பேருந்துப் பாதையில் உள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்தும் வரலாம். கோபியிலிருந்து 18 கி.மீ. தொலைவு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum