தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபாவளி உண்மை

Go down

தீபாவளி உண்மை Empty தீபாவளி உண்மை

Post  meenu Thu Mar 07, 2013 2:43 pm

பண்டிகைகளும் விழாக்களும் நிறைந்தது நம் நாடு. இந்த பண்டிகைகள் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதமான உணர்வை நமக்குள் தூண்டி, ஓர் அற்புதமான வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகின்றன. அந்த வகையில் தீபாவளியில் ஓர் அழுத்தமான அடிப்படை உண்மை அமைந்துள்ளது.

அது என்ன?

ஏதோ நரகாசுரனை அழித்த நாள்தான் தீபாவளி என்றால் சூரபத்மன், துரியோதனன், மகிஷாசுரன், பண்டாசுரன், ராவணன் முதலானோரை அழித்ததெல்லாம் திருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும் அல்லவா? ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே! ஆகவே நரகாசுரன் கதையில் ஏதோவொரு தனித்தன்மை இருக்க வேண்டும்.

அது என்ன?

மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன்தான் நரகாசுரன். அப்போதே பூமாதேவி “சுவாமி! என் பிள்ளையான நரகாசுரனுக்கு மரணம் என்பதே வரக்கூடாது. அப்படிப்பட்ட வரத்தைத் தாருங்கள்’’ என வேண்டினாள்.

உடனே, மகாவிஷ்ணு அதை மறுத்தார். “தேவி, உன் வேண்டுகோளின்படி பார்த்தால், அதாவது ஒவ்வொரு தாயும் இவ்வாறே கேட்டால் பூமி முழுவதும் மனிதர்கள் நிரம்பி வழிவார்களே! விளைவு என்னவாகும்? நீயே யோசித்துப்பார்! ஆகையால் நீ கேட்ட வரத்தை நான் கொடுக்கக் கூடாது. வருத்தப்படாதே. உன் பிள்ளையை என்னைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது. அவன் என் கையால்தான் சம்ஹாரம் செய்யப்படுவான். வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது. நரகாசுரன் வதம் செய்யப்படும்போது, நீயும் என் அருகில் இருப்பாய்’’ என்றார் மகாவிஷ்ணு. (அந்த பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா)

நரகாசுரன் பிரம்ம தேவரை நோக்கிக் கடுமையாக தவம் செய்தான். தவத்தின் முடிவில் பிரம்ம தேவர் எதிரில் நின்றார். அவரை வணங்கிய நரகாசுரன், “நான்முகனே! எனக்கு மரணம் என்பது வரக்கூடாது. அந்த வரத்தைக் கொடுங்கள்’’ எனக் கேட்டான்.

அதைக் கேட்ட பிரம்ம தேவர், “நரகாசுரா, தோன்றியவை எல்லாம் மறையத்தான் வேண்டும் என்பது விதி. இவ்வளவு ஏன்? படைக்கும் கடவுளான எனக்கும், ஒருநாள் முடிவு என்பது உண்டு. ஆகவே, வேறு வரம் கேள்’’ என்றார்.

சில விநாடிகள் யோசனை செய்தான் நரகாசுரன். பளிச்சென்று, “பிரம்ம தேவா! நான் என் தகப்பன் கைகளால் மரணமடைய வேண்டும். அப்போது என் தாயும் அருகில் இருக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.

பிரம்ம தேவர், ‘‘சரி அப்படியே ஆகட்டும்’’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

எந்தவொரு தந்தையும் மகனைக் கொல்ல மாட்டார். ஒருவேளை தந்தை கொல்ல முயன்றாலும் அருகிலிருக்கும் தாய் விடமாட்டாள் என்று எண்ணியே நரகாசுரன் அவ்வாறு வரம் கேட்டான்.

பிரம்ம தேவரிடமிருந்து வரம் வாங்கிய பிறகு, நரகாசுரனைக் கையில் பிடிக்க முடியவில்லை. தலை கால் புரியாமல் ஆடினான். நரகாசுரன் ஆடிய ஆட்டத்தில், தேவர்களும் அடங்கிப் போனார்கள். தேவலோகம் நரகாசுரனின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அதன்பிறகும் அவன் சும்மா இருக்கவில்லை. தேவேந்திரனின் தாயான அதிதி என்பவளின் குண்டலங்கள், வருண பகவானின் குடை, மற்ற தேவர்களின் உடைமைகள் என பலவற்றையும் பலாத்காரமாகக் கவர்ந்தான். நரகாசுரனின் கொடுங்கோல் ஆட்சி பூமியிலும் பரவியது.

நல்லவர்களுக்குக் கூட்டம் சேர்கிறதோ இல்லையோ; நல்லவர்கள் இடையே ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ, கெட்டவர்களிடம் அவை அதிகமாகவே இருக்கும். கெட்டவர்களைச் சுற்றிக் கும்பலும் இருக்கும். அவர்களிடையே ஒற்றுமையும் மேலோங்கியிருக்கும். அப்படித்தான் நரகாசுரனின் புகழ் தீயவர்களிடத்தில் அதிவிரைவாகப் பரவியது. அவனது மந்திரிகளான ஹயக்கிரீவன், பஞ்சகன், நிசும்பன், பிராப்ணன், முரன் முதலானோர் நரகாசுரனுக்கு உதவி செய்தார்கள். எல்லாவிதமான தீய செயல்களுக்கும் உறுதுணையாக நின்று ஊக்கம் கொடுத்தார்கள்.
நரகாசுரன் பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்து வந்தான். நரகாசுரனின் கொடுமையிலிருந்து தப்பிக்க வழி தெரியாத தேவேந்திரன், கண்ணனிடம் போனான். “கண்ணா! நல்லது எதுவும் தலை எடுக்க முடியவில்லை. தீமையோ தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணமான நரகாசுரனை அழித்து, எங்கள் துயரங்களை நீக்க வேண்டும்’’ என வேண்டி நின்றான்.

அவனுக்கு ஆறுதல் சொன்னார் கண்ணன். “தேவேந்திரா, கவலைப்படாதே, தீயவன் தீர்க்கப்படுவான்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவைத் தனக்குத் தேரோட்டியாகக் கொண்டு உடனேயே நரகாசுரனின் நகரமான பிரக்ஜோதிஷபுரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

நரகாசுரனின் நகரத்தை அடைந்த கண்ணன் அந்த நகரத்திற்கு அரணாக இருந்த கிரி துர்கம் (மலைகளால் ஆன கோட்டை), ஜலதுர்கம் (தண்ணீரால் ஆன கோட்டை), வாயு துர்கம் காற்றினால் ஆன கோட்டை) என்னும் கோட்டைகளை எல்லாம் அழித்தார். அதன்பிறகு சங்கை முழக்கினார். ஓசை கேட்டு நரகாசுரன் சீறினான். அரண்மனையை விட்டுப் படைகளுடன் வெளியே பாய்ந்தான். கடும்போர் மூண்டது. அம்புகளும் ஆயுதங்களும் போர்க்களம் எங்கும் பறந்தன. நரகாசுரனின் படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. அதைப் பார்த்ததும் நரகாசுரன் கடுங்கோபம் கொண்டான். ஆத்திரத்துடன் ஆயுதங்களைத் தாறுமாறாக வீசி இறைத்தான். அவன் வீசிய ஆயுதங்கள் அனைத்தையும் அழித்த கண்ணன் தன் கையில் இருந்த சக்கராயுதத்தை ஏவினார்.

நரகாசுரன் கீழே விழுந்தான். அப்போது பூமாதேவி அங்கு வந்து, “சுவாமி, நீங்கள் வராக அவதாரம் எடுத்தபோது, நமக்குப் பிறந்தவன்தான் இந்த நரகாசுரன். நீங்கள் ஞான உபதேசம் செய்து அருள்புரிய வேண்டும்’’ என வேண்டினாள்.

நரகாசுரன் கவர்ந்து வைத்திருந்த அதிதி தேவியின் ரத்தின குண்டலங்கள், வருணனின் குடை, மற்ற தேவர்களின் உடைமைகள் அனைத்தையும் பூமாதேவி கண்ணனிடம் சமர்ப்பித்தாள். கண்ணன் நரகாசுரனுக்கு அருள் புரியத் தீர்மானித்தார். அந்தத் தீர்மானமே தீயவனின் உள்ளத்தைத் திருத்தியது போலும். நரகாசுரன் கண்களில் நீர் மல்க, “கண்ணா! கொடியவனான எனக்கும் அருள் புரிய வேண்டும் என்பதற்காக என் எதிரில் கருணையோடு காட்சி தரும் கடவுளே! நான் இறக்கும் இந்த நாளை, எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும். அன்று தண்ணீரில் கங்காதேவியும் எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் புரிய வேண்டும். எல்லா மக்களும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புது ஆடைகள் அணிந்து விளக்குகளை ஏற்றிவைத்து வழிபட வேண்டும். உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்தளித்து உண்ண வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு தாங்கள் எல்லாவிதமான மங்கலங்களையும் அருள வேண்டும்’’ என வேண்டினான்.

“உன் வேண்டுதல்படியே நடக்கும்’’ என அவனுக்குக் கண்ணன் அருள்புரிந்தார்.

நரகாசுரன் கவர்ந்துகொண்டுபோன தேவர்களின் உடைமைகள் முதலானவற்றுடன் புறப்பட்ட கண்ணன், நரகாசுரனின் மகனான பகதத்தனுக்கு முடி சூட்டிவிட்டு தன் நாடு திரும்பினார். நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி’ என்று கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், ‘நரக சதுர்த்தசி’ என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட பிரக்ஜோதிஷபுரம் என்பது, அஸ்ஸாமில் உள்ளது. நரகாசுர சம்ஹாரம் என்பது, நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கி, கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே குறிக்கும்.

கண்ணன் நரகாசுரனின் கோட்டைகளை தாக்கி உடைத்து உள்ளே புகுந்ததாகப் பார்த்தோமல்லவா? அது, பஞ்ச பூதங்களால் ஆன நமது உடம்பின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி நமக்கு அருள்புரிகிறார் கண்ணன் என்பதையே குறிக்கிறது. அக்கோட்டைகளின் விவரங்களை பார்ப்போமா?

கிரி துர்கம் என்பது மண்ணையும், அக்னி துர்கம் என்பது தீயையும், ஜல துர்கம் என்பது நீரையும், வாயு துர்கம் என்பது காற்றையும் குறிக்கின்றன. பஞ்சபூதங்களில் இந்த நான்கையும் சொல்லியிருப்பதால் முறைப்படி மற்றொரு பூதமான ஆகாயமும் இதில் சேரும். பஞ்ச பூதங்களாலான நம் உடம்பில் இறைவனைக் குடியேற்ற வேண்டும். இறைவனுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நம் உள்ளத்திலுள்ள அறியாமையைப் பிடுங்குவான் என்பதே தீபாவளியின் உட்பொருள். இதைத்தான் ரமண மகரிஷி, தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் வீடுதான் நம் உடம்பு. அந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி எனக் கூறுகிறார்.

கண்ணனால் நரகாசுரன் சம்ஹரிக்கப்பட்டதை கண்ட நரகாசுரனின் தாய்க்கு துக்கம் மேலிட்டது. ‘‘என் பிள்ளை போன துக்கம் எனக்கு இருந்தாலும், உலகில் உள்ளவர்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக் கூடாது. அன்று எல்லோரும் மங்கல நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்’’ என்று அவள் வேண்டிக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.

அதாவது, ‘‘நாம் துன்பப்பட்டாலும் உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் இந்த தீபாவளியைக் கொண்டாடுவதன் பயன்’’ என்பது காஞ்சி மகாசுவாமிகள் வாக்கு.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum