தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்

Go down

கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம் Empty கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்

Post  meenu Thu Mar 07, 2013 2:32 pm

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் எழுந்தருள்வதை சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்தின் மனக் கண்களில் நிறுத்தினார்.

‘‘என் பிரிய ராஜனே, அப்போது கிருஷ்ணரின் தேகம் புகை சூழா அக்கினிபோல ஜொலித்தது. தேகத்திலிருந்து பரவிய ஒளி, எண் திக்கையும் பிரகாசப்படுத்தியது. பவழம் போன்ற சிவந்த உள்ளங்கால். முத்துகளைப் பதித்தாற்போல நகங்கள். அழகுக்கு அழகு செய்யும் பீதாம்பரம். மேகலை எனும் ரத்தின ஆபரணங்கள் கோர்த்த தங்க அரைஞாண் இடுப்பை அலங்கரித்தது. மெல்லிய ஓடையாக, ஆலிலைபோல மென்மையான திருவயிறு.

விசாலமான மார்பு, அதில் உறைந்த தாயார். பஞ்சவர்ண புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட வைஜெயந்தி எனும் மாலை, பகவானின் கழுத்திலிருந்து மேனியில் படர்ந்து அசைந்தாடியது. பச்சைப் பசேலென்று துளசி மாலையின் சுகந்தமும் மார்புச் சந்தனம் பரப்பிய நறுமணமும் அந்தப் பகுதியையே கமழ வைத்தன.

கழுத்தில் தொங்கும் கௌஸ்துபம் என்ற சிறு மணியும் தோள் வளையங்களும் திண்மையான புஜங்களிலே கங்கணங்களும் கம்பீரத்தை கூட்டின. நீண்ட விரல்களுக்கு மெருகூட்டின மோதிரங்கள். சுருண்ட கேசங்கள் தோளில் புரள, பிரகாசமான முகத்தையும் அங்கும் இங்கும் அலையும் தாமரை போன்ற கண்களையும் அவை பொழிவிக்கும் கருணையையும் விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை! தீர்க்கமான நாசியும் கோவைப் பழ உதடுகளும் விசாலமான நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகமும் காதுகளில் கிணுகிணுக்கும் மகர குண்டலங்களும் சிரசில் ஜொலிக்கும் ரத்தின கிரீடங்களும் வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எழில் கோலம் காட்டின. சதுர் புஜங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை என ஏந்தி நிற்கும் கம்பீர தோற்றத்தை, அந்த மங்கள மூர்த்தியை, ஜரன் எனும் வேடன் கைகூப்பி தரிசித்து, திகைத்து கிடந்தான். மாபெரும் போர்களில் அநாயசமாக எதிரிகளை துவம்சம் செய்த பகவான் இங்கு என் சிறு அம்புக்கு கட்டுப்படுகிறாரே என்று கருணையின் விந்தையை எண்ணி கண்ணீர் விட்டான்.

பகவான் அவனுக்கு பாகவத தர்மங்கள் அனைத்தையும் உபதேசித்தார். நிறைவாக, ‘‘ஒன்றும் கவலைப்படாதே ஜரா. நான் விரும்பியதைத்தான் நீ செய்திருக்கிறாய். மகா புண்ணியசாலிகள் சென்று சேரும் சொர்க்க லோகத்திற்கு நீ போவாய்’’ என்று ஆசி அளித்தார்.

ஜரன் விண்ணுலகம் ஏகினான். அங்கே பிரம்மா, சிவன், பார்வதி, இந்திரன் மற்றும் தேவர்கள், மாமுனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யட்சகர்கள், கின்னரர்கள் என அனைவரும் குழுமியிருந்தனர். பகவான் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் திவ்ய காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தனர். யோகிகள் யோக தாரணையாக தம் சரீரத்தை, தாமே எரித்து விடுவர். ஆனால், பகவானோ மங்களமான திருமேனியோடே வைகுண்டத்திற்கு புறப்பட்டார். வானத்தில் துந்துபிகள் முழங்கின. மலர்கள் மாரியாகப் பொழிந்தன. சத்தியம், தர்மம், தைரியம், கீர்த்தி, ஸ்ரீதேவி ஆகிய பெருஞ் சக்திகள் பகவானை தொடர்ந்தன. பிரம்மாவும் ஈசனும் பகவானின் இந்த யோகப் பிரபாவத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பிறகு அவரவர் லோகங்களுக்குச் சென்றனர்.

ஒரு நடிகன் பற்பல வேஷங்களை போட்டுக் கொண்டு நடித்தாலும் தான் யார் என்பதை மறக்காதிருப்பான். அதுபோல ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தது முதல் வைகுண்டத்திற்கு எழுந்தருளியது வரை எல்லாவற்றையுமே லீலைகளாக நிகழ்த்தி விட்டார். இன்னொரு முக்கிய விஷயம். ஆத்ம நிஷ்டர்களான ஞானிகளுக்கு அவர் முன் உதாரணமாக திகழ்ந்தார். அதாவது, தான் எந்த உடலை எடுத்தாலும் இந்த உடல் தான் அல்ல; தான் என்பது அந்த ஆத்மாவே என்று உடலின் மீது பற்றை அறுத்தல் வேண்டும் என்று ஞானிகளுக்கு காட்டிவிட்டுச் சென்றார்.

கிருஷ்ணர் வைகுண்டத்திற்குச் சென்றார் என்று கேள்வியுற்றதும் துவாரகை நகரமே கண்ணீர் விட்டு அழுதது. தேவகி, ரோகிணி, வசுதேவர் போன்றோர் மூர்ச்சையுற்றனர். கிருஷ்ணரின் பட்டத்தரசிகள் தியானத்தில் ஆழ்ந்தனர். பலர் யோகாக்னி மூட்டி, அக்கினியில் பிரவேசித்தார்கள். பாண்டவர்கள் இந்தத் துக்கம் தாங்காமல் அலறித் துடித்தார்கள்.

அர்ஜுனன் பைத்தியம் பிடித்தவன்போல் அலைந்தான். ‘‘இருக்கவே இருக்காது. என் நண்பன் கிருஷ்ணன் எங்கேயும் போகவில்லை. நாளையே வந்து விடுவான்’’ என்று அரற்றினான். மற்ற சகோதரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அவனைத் தேற்றினர். அர்ஜுனனுக்கு கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் நினைவிற்கு வந்தது. மெல்ல அவனுக்குள் தெளிவு பிறந்தது.

வேறொரு பக்கம் துவாரகையை ஆழிப் பேரலைகள் சூழ்ந்து நொடிப் பொழுதில் மூழ்கடித்தது. அர்ஜுனன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு இந்திர பிரஸ்தம் என்று அழைக்கப்பட்ட பாரத தலைநகருக்கு வந்தான். எல்லோருடைய நீத்தார் கடன்களையும் பாண்டவர்கள் முன்நின்று முடித்து வைத்தனர். பகவான் வைகுண்டம் சென்ற அந்தக் கணத்தில் கலியுகம் தொடங்கியது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்துக்கு கலி காலத்தினுடைய ஆரம்பம் முதல் முடிவு வரை அதன் தன்மைகளை எடுத்துக் கூறினார்.
கலியில் எத்தனை மன்னர்கள் ஆள்வார்கள் என்றும் அதர்மம் எப்படி தழைத்தோங்கும் என்றும் ஆணித்தரமாக கூறினார். கலிகால மனிதர்களின் சுபாவத்தை அங்குலம் அங்குலமாக விவரித்தார். தோஷங்களின் மொத்த உருவமே கலிகாலம் என்றும் தயவு தாட்சண்யத்துக்கு சற்றும் இடம் கொடுக்காத வகையில் கலி வளரும். பொய், சோம்பல், தூக்கம், ஹிம்சை, துக்கம், பயம் போன்ற சகல தமோ குணங்களையும் கலி புருஷன் பிரதானமாகக் கொண்டு செயல்படுவான். வேத மார்க்கங்களை சீர்குலைக்க பல்வேறு பாஷண்ட மதங்கள் தோன்றும். பிரம்மச்சர்யம், கிரகஸ்த தர்மம், சந்யாச தர்மம் போன்றவை தலைகீழாகும்.

பரீட்சித் மகாராஜனே, கலி வேண்டுமானால் தோஷங்களின் மொத்த உருவமாக இருக்கலாம். மனிதர்கள் மிருகங்கள் ஆகலாம். கிரகஸ்தர்கள் கருமியாகலாம். பிரம்மச்சாரிகளை காமம் பீடிக்கலாம். சந்யாசிகள் பெரும் செல்வத்தைத் தேடி ஓடலாம். ஆனால், கலியுகம் தன்னிடத்தே மிகப்பெரிய குணம் ஒன்றை கொண்டிருக்கிறது. அதுதான், பகவானின் நாமங்களைச் சொல்வது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திவ்ய ரூபத்தை தரிசிக்காது கூட இருக்கலாம். ஆனால் பகவானின் திவ்ய நாமங்களை கலியுகத்தில் உச்சரிப்பவன் உத்தம கதியை அடைந்து விடுகிறான். நாவினால் நாமங்களை சொல்லச் சொல்ல கிருஷ்ணர் ஓடிவந்து விடுகிறார். எல்லா யுகத்தையும் விட, கலியுகம் பகவானை அடைய எளிய மார்க்கத்தைக் கொண்டிருக்கிறது’’ என்று சுகாச்சாரியார் பரீட்சித்துக்கு கலியுகத்தின் பெருமைகளை ஆனந்தமாக உபதேசித்தார்.

இங்கு பாகவதத்தின் தொடக்கமான சில விஷயங்களை நினைவுகூற வேண்டும். சமீகர் என்கிற முனிவர், பரீட்சித்தை தட்சகன் என்கிற நாகம் தீண்டி இறக்கட்டும் என்று சாபமிட்டார். ஏனெனில், சமீகர் தியானம் செய்யும்பொழுது விளையாட்டாக பாம்பை மாலையாகப் போட்டவன் அவன். அது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். சாப விமோசனத்தைத் தேடி அவன் அலையவில்லை. தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’
» நாமம் போடுதல்
» கலியுகத்தில் பலன் தரும் ஸ்ரீசத்தியநாராயண விரதம்
» கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல்
» கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum