தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரவை எதிர்பார்த்தவளின் மறைவை எதிர்பார்ப்பவன்...

Go down

 வரவை எதிர்பார்த்தவளின் மறைவை எதிர்பார்ப்பவன்... Empty வரவை எதிர்பார்த்தவளின் மறைவை எதிர்பார்ப்பவன்...

Post  meenu Thu Mar 07, 2013 2:26 pm

பாபநாசத்திலிருந்து திருமதி பாலாம்பாள் என்ற பெண்மணி அண்மையில் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் பார்த்த ஒரு சம்பவத்தையும் அதன் பாதிப்பில் அவர் எழுதிய கவிதையும் அதில் பதிவு செய்திருந்தார். பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அம்மாவிற்கு ரொம்ப உடம்பு சரியில்லை என்று 15 நாள் லீவில் வந்தான். அம்மாவின் உடம்பு அப்படியே இருந்தது. பையன் உள்ளேயும் வெளியேயும் அலைந்தான். ‘என்னடா இது... ரொம்ப உடம்பு சரியில்லை என்று வரவழைத்தார்கள். பார்த்தால் ஒன்றும் ஆகவில்லையே’ என்று நினைப்பது போல இருந்ததாம் அவனது நடவடிக்கை! பாலாம்பாள் எழுதிய கவிதை இதுதான்:

‘பத்து மாதமாக சுமந்து கொண்டு குழந்தையின் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறாள் தாய் & பத்து நாட்களாகக் கிடக்கும் தாயின் மறைவை ஆவலோடு எதிர்பார்க்கிறான் மகன்!’
கொஞ்சம் கடுமையான கவிதைதான். ஆனால் உண்மைக்கு மிக நெருங்கி வருகிற கவிதை. இன்றைய நடுத்தர மற்றும் மேல் தட்டு வீடுகள் தோறும் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் பெருகி விட்டார்கள். தன்னுடைய நாற்பது வயதுகளில் தன் மகன்கள் அமெரிக்கா போக வேண்டும் என்று மிக ஆவலோடு இருக்கும் பெற்றோர் எழுபதுகளை தொடத் துவங்கும்போது பிள்ளைகள் திரும்ப மாட்டார்களா என்று தவிக்கும் துயரங்கள் பெருகி வருகின்றன. கொஞ்ச நாள் போய் மகனுடன் வசிக்கிறார்கள். தொடர்ந்து அங்கே இருக்க முடியாத நிர்பந்தங்கள்; இங்கே வந்தால் தனிமை என்னும் துன்பக் கேணி. அங்கேயும் ஒட்டாமல் இங்கேயும் பிடிக்காமல் புலம்பும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு கட்டத்தில் முதியோரின் உடல்நலம் குறைய ஆரம்பிக்கும்போது பிரச்னை பெரிதாகி விடுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் மகன் வருவதா? சிங்கப்பூரில் வசிக்கும் மகன் வருவதா? இங்கேயே இருக்கும் மகள் பார்ப்பதா?

பிரளய காலத்தில் எறும்புகள் பந்தாக ஒன்றை ஒன்று பற்றியபடியே கடலில் மிதக்குமாம். அதுபோல முதுமை என்னும் பிரளயத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு பயணிக்கும் தம்பதியரில் ஒருவர் முன்னால் விடை பெற்றுக் கொண்டால், மற்றவரின் நிலை மிகக் கஷ்டமாகி விடுகிறது. வசதி படைத்த மகன்கள் இப்போது இதற்காகவே இருக்கும் முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். என்.ஆர்.ஐ. ஓல்ட் ஏஜ் ஹோம்! அங்கே சேர்த்துப் பணம் அனுப்பினால் போதும். உடம்பு சரியில்லை என்றால் கூட தொந்தரவு செய்ய மாட்டார்கள். இல்லப் பணியாளரே மருத்துவ
மனையில் சேர்த்து விடுவார். ஒருவேளை ஏதாவது ஆகிவிட்டாலும் இன்டர்நெட்டில் படத்தை காட்டிவிட்டு காரியங்கள் அங்கேயே முடிந்து விடும்.

மிகப் பெரிய பிரச்னையின் தலைவாயிலில் இன்றைய சமூகம் நிற்கிறது & முதியோரின் தனிமை! அவர்களோடு சேர்ந்து வாழும் வீடுகளிலும் அவர்களுக்கான மரியாதைகள் குறைந்தே வருவது கண்கூடு. ‘வயசானா பேச்சைக் குறைக்கணும்’ என்று வீடுகளிலும் ‘என்னா, பெரிசு, வூட்ல சொல்லினு வந்துட்டியா?’ என்று வீதிகளிலும் முதியோர் நாளும் சிறுமைப் படுத்தப்படுகின்றனர்.
காலம் ஒரு சருகு போல அவர்களை உலரச் செய்கிறது. ஒரு துளி பிரியத்தையும் கருணையையும் மரியாதையையும் எதிர்பார்த்து இந்தச் சருகுகள் அலைகின்றன.

அமரர் சுஜாதாவின் அருமையான சிறுகதை ஒன்று நினைவில் நிற்கிறது. அண்ணன் ஆறு மாசம், தம்பி ஆறு மாசம் அம்மாவை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கிறார்கள். தம்பி ஆறு மாசம் வைத்துக்கொண்ட பிறகு, அம்மாவுக்கு ரெயில் டிக்கெட் எடுத்து விடுகிறான், அண்ணன் வீட்டிற்கு அனுப்ப. அண்ணன் ஓயாமல் ஃபோன் செய்து, தான் வெளிநாட்டுக்கு டெபுடேஷனில் போகப் போவதாகவும் இப்போதைக்கு அம்மாவை வைத்துக்கொள்ள முடியாது என்றும் சொல்கிறான். தம்பி மனைவியோ பத்ரகாளி ஆகிவிட்டாள். ‘‘ஒருநாள் கூட அதிகம் வைத்துக்கொள்ள முடியாது’’ என்கிறாள். ‘‘என்னை ஒரு இடமா வைச்சிருங்கப்பா’’ என்ற அம்மாவின் கிழட்டுப் புலம்பல் எடுபடவில்லை. இருந்திருந்தால் போல செய்தி வருகிறது & ஏகப்பட்ட வருஷங்களாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த ஒரு வழக்கு தீர்ப்பாகி அம்மாவின் பூர்வீக சொத்து ஒன்று & பல லட்சம் மதிப்புடையது & அவளுக்குக் கிடைக்கப் போகிறது என்று. தம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு அந்தக் கணமே போய் டிக்கெட்டை கான்சல் செய்து வரும் வழியில், அண்ணனுக்கு தகவல் அனுப்புகிறான், அம்மா இங்கேயே இருக்கட்டும் என்று. வீட்டிற்கு வந்தால் அண்ணனிடம் இருந்து தகவல் வந்திருக்கிறது. ‘டெபுடேஷன் கான்சல். நானே வந்து அம்மாவைக் கூப்பிட்டுப்போகிறேன்.’

இந்த தேசத்தில்தான் ஸ்ரவணனின் கதையும் நடந்தது. கண் தெரியாத பெற்றோரை கூடைகளில் வைத்துச் சுமந்த ஸ்ரவணனின் கதையே இந்த தேசப் பிதாவின் வாழ்க்கையில் ஆதர்சமான கதையாக இருந்தது. மகாராஷ்டிரத்தில் பண்டரீபுரத்தில் வழங்கப்படும் மெய் சிலிர்க்கும் கதை ஒன்று உண்டு. முத்தாபாய் & சனாதேவன் தம்பதிக்கு புண்டரீகன் என்ற மகன் இருந்தான். பாண்டுரங்கனின் பரம பக்தன். ஆகவே, புண்டரீகனைச் சந்திக்க அவனது சிறு குடிசைக்கே வந்து விட்டார் பாண்டுரங்கன். குடிசையின் வெளியே பெரும் சகதி. வாயிலில் நின்று புண்டரீகனை அழைத்தார் பெருமாள். தாய், தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த புண்டரீகன், லேசாக வெளியே எட்டிப்பார்த்து, ஒரு கல்லை குடிசைக்கு வெளியே தூக்கிப்போட்டு, ‘கொஞ்சம் இந்தக் கல்லில் கால் வைத்து நில்லுங்கள் சுவாமி. அம்மா, அப்பாவை கவனித்து விட்டு பிறகு வந்து உங்களைச் சந்திக்கிறேன்’ என்றானாம். ஒரு காலால் மண்ணையும் இன்னொரு காலால் விண்ணையும் அளந்த பரந்தாமன், அந்தச் சிறு கல்லில் இரு கால்களையும் பாலன்ஸ் செய்து கொண்டு சமர்த்தாக காத்திருந்தாராம். தன் பக்தன் வெளியே வர, புண்டரீகனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட பாண்டுரங்கனுக்கு ‘புண்டரீக வரதன்’ என்றே பெயர் வழங்கலாயிற்று. ஆண்டவனே வந்து ‘கொஞ்சம் அர்ஜென்ட்’ என்று கூப்பிட்டும் அம்மா, அப்பாவின் பணிவிடையைக் கவனித்த கதை நம் புராணத்தில் நிலைபெற்று விட்டது.

நம் கலாசாரத்தில் எந்த மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே கொண்டாட்டமும் கிடையாது. ஒரு நாளை ஒதுக்கி, பூச்செண்டு அனுப்புவதல்ல; ஒவ்வொரு நாளும் அவர்களின் ஆசியையும் அன்பையும் பெறுவதே நம் கலாசாரத்தின் விரிவும் பொருளும். இன்றைய முதுமை கேட்பது கொஞ்சம் மரியாதை, நம் வேலைகளுக்கு இடையில் ஒரு விசாரிப்பு. ‘‘சாப்பிட்டீங்களா?’’ என்ற ஒற்றை வார்த்தை. ‘‘எங்க... காலத்திலே...’’ என்று அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது ‘‘இதை இதோட ஏழு முறை சொல்லியாச்சு’’ என்று சிடுசிடுக்காத சிறு பொறுமை, அவர்களின் கோபங்களைக் கூட ‘‘ஏதோ பெரியவங்க’’ என்று விட்டுத்தள்ளும் பெருந்தன்மை. இவ்வளவே!என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான் & முதிர்ந்த மரத்தின் வேர்களைப் போல் மண்ணில் ஊன்றவும் பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்...’ என்று சொல்கிறது ஒரு ஆப்பிரிக்க பழங்குடிப் பாடல். நம் எல்லோரும் நம் பெற்றோரிடம் கற்றது இதைத்தான். நிலத்தில் கால் ஊன்றவும் கனவுகளில் சிறகடிக்கவும் அவர்களே நம்மைப் பயிற்றுவித்தார்கள். இன்று அவர்கள் தடுமாறும்போது தோள் கொடுப்பது, அதையும் கொஞ்சம் சிடுசிடுக்காமல் செய்வது கடமை மட்டுமல்ல; அதுவே நமக்கான நாளைய பாதுகாப்பு. ஏனெனில் தன் தகப்பன் தன் தாத்தாவிற்குத் தோள் கொடுப்பதை பார்த்த மகனே அதை பிற்காலத்தில் தானும் செய்கிறான். நிலத்தில் நடக்கும் போது பறவையின் சிறகுகளை அதன் கால்கள்தான் சுமக்கின்றன; அந்தப் பறவை வானில் பறக்கும்போது, அதன் கால்களையும் சேர்த்து சிறகே சுமக்கிறது. ஒரு பருவத்தில் பிள்ளையைப் பெற்றவர் தாங்குவதும் இன்னொரு பருவத்தில் பெற்றவரை பிள்ளைகள் தாங்குவதும் தான் இயற்கையின் அழகான விதி. இல்லையா?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum