தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்மொழி அறியாமல் பிறமொழி கைகூடுமோ?

Go down

 தாய்மொழி அறியாமல் பிறமொழி கைகூடுமோ? Empty தாய்மொழி அறியாமல் பிறமொழி கைகூடுமோ?

Post  meenu Thu Mar 07, 2013 2:10 pm

அவர் ஒரு நவீன எழுத்தாளர். கவிதை உலகில் பெரிதும் மதிக்கப்படும் பிதாமகர். சிறு வயதில் ஹிந்தி மொழிப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். சில வருடங்களுக்கு முன் வட இந்தியாவில் ஒரு பயணத்தை மேற்கொண்டார். பயணம் என்றால், ஒரு பெருநகரத்திலிருந்து கிளம்பி, விமானத்தில் பறந்து இன்னொரு பெரு நகரத்திற்குப் போய், விமான நிலைய வாயிலில் வாடகைக் கார் பிடித்து, ஏதோ ஒரு கான்கிரீட் கட்டடத்தில் போய் புகுந்து கொள்ளும் பயணம் அல்ல. ஊர் ஊராக, ரயில், பஸ், கார் என கிடைத்த வாகனத்தில் ஏறிச் சென்று, போட்ட இடங்களில் சாப்பிட்டு, ஏரிகளிலும், நதிகளிலும், குடமேந்திப் போகும் யாரோ ஒரு பெண் சாய்க்கும் நீர்த்தாரையிலும் தண்ணீர் குடித்து பறவைகள் பறப்பது போலச்
செய்யப்படும் நிஜமான பயணம். கோயில்களை நோக்கிய பயணம்.

கூட நண்பர்கள் உறவினர்கள் வந்திருந்தனர். குஜராத்தில் ஏதோ முகம் தெரியாத ஊரில் ஒரு அம்மாள் இவர்களுக்குச் சோறு போட்டு, இவர் வயதானவர் என்பதால் தனிப் பிரியத்துடன் குஜராத்தின் ஸ்பெஷல் மோரான ‘ச்சால்’ கொடுத்து உபசரித்தாள். எழுத்தாளர் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். கண்ணில் இருந்து தாரை தாரையாய் நீர் கொட்டியது. ‘க்யா? க்யா?’ என்று அம்மாள் பதறினார். கூட வந்தவர்களும் கேட்டார்கள். ‘இந்த அன்புக்கும் கருணைக்கும் நன்றி என்ற ஒரு சொல்லை ஹிந்தியில் சொல்லத் தெரியவில்லையே எனக்கு. வாழ்நாளெல்லாம் இப்படியே கழிந்து
விட்டதே...’ என்று எழுத்தாளர் வருத்தப்பட்டாராம்.

மொழிப்போராட்டம் நம் மாநிலத்தின் வீர வரலாறு. திணிக்கப்பட்ட எதையும் மறுப்போம் என்று திமிறிய மன உணர்ச்சியின் பதிவு. சிறை சென்ற எத்தனையோ தியாகிகளின் ஆத்ம சமர்ப்பணம். போராட்டம் முடிந்து சிறையிலிருந்து வெளி வந்த பலரும் அப்போது பிறந்த நம் குழந்தைகளுக்கு தேன்மொழி, மலர்விழி, செந்தமிழ் அரசு, மாறவர்மன் என்றெல்லாம் அழகுத் தமிழிப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்து, நெகிழ்ந்த சரித்திரத் தருணம்.

ஆனால் வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! தம் குழந்தைகளுக்கு தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிய இவர்களின் பேரன், பேத்திகளின் பெயர்கள் தமிழில் அமையாதது விசித்திரமானதுதான். அதை விட விசித்திரம், அந்தக் குழந்தைகளில் பலர் தமிழ் படிக்கவும், எழுதவும் அறியாதவர் களாய் இருப்பது!

நாம் நடத்திய போராட்டம் நம் தாய்மொழியைக் காப்பாற்ற. ஆனால் இன்று நாம் இரண்டு தலைமுறைகளாக ஹிந்தியையும் படிக்கவில்லை. தமிழை நேசிக்க நம் பிள்ளைகளுக்குச் சொல்லியும் தரவில்லை. நாம் பிற மொழிகளைப் படிக்காததனால் அம்மொழிகளுக்கு ஒன்றும் இழப்பில்லை. நமக்குத்தான் இழப்பு. அதுசரி, நம் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்வதிலேயே பெருமைப்படும் சமூகமாக நாம் உயர்ந்து விட்டபின் வேறு பாஷைகள் தெரியாததைப் பற்றிவருத்தப்பட முடியுமா என்ன?

‘மொழிப்பாடங்கள் வாழ்க்கைக்கு உதவாது. ஆங்கிலம் ஒன்று தெரிந்தால் போதுமானது’ என்ற நம் அசட்டு நம்பிக்கை இன்று ‘பூமராங்’ போல நம்மையே திருப்பித் தாக்குகிறது. பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களில் பாதிப்பேருக்கு மேல், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். காரணத்தை விசாரித்தால், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளை விட தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவு என்கிறார்கள். சரியாகப் பேசவும் வரவில்லை - ஆங்கிலத்தில் சொல்வதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இவர்கள் எழுதினால், ஆங்கிலத் தாய் ( தமிழ்த் தாய் இருக்கும்போது ஆங்கிலத்தாய் இருக்கக் கூடாதா என்ன?) கதறி அழுவாள் என்கிறார்கள். சரி, பொறியியல் கல்லூரிகளில் கூடவே ஆங்கிலம் கற்பிக்கக்கூடாதா என்று விசாரித்தேன். அதையும் செய்து பார்த்தார்களாம். அப்படிக் கற்பிக்கும் ஒரு பேராசிரியையிடம் பேசியபோது, ‘‘இவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பது மிகக் கடினம் - ஏன் தெரியுமா? இவர்களுக்குத் தமிழே சரியாகத் தெரியவில்லை. ஒரு பக்கம் பிழையில்லாமல் தமிழ் எழுதத் தெரியாத ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கவே முடியாது’’ என்றார் அவர்!

உண்மைதான். தாய்மொழியில் தடையின்றிப் பேச எழுதத் தெரியாதவர்களுக்கு மிக அடிப்படையான மொழி இலக்கணம் கல்லாதவர்களுக்கு, தாய் மொழியில் வார்த்தை வளம் இல்லாதவர்களுக்கு இன்னொரு மொழி எப்படித் தெரியும்?

எந்த மொழியையும் எதிரியாக நினைக்காமல் எத்தனை மொழிகளைக் கற்க முடியுமோ அத்தனையையும் கற்கின்ற குழந்தைகளுக்கு இயல்பான தொடர்பு கொள்ளும் திறன் (சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ sளீவீறீறீ) அதிகரிக்கிறது. இத்தகையவர்களே இன்றைய உலகில் வெற்றி பெறுகிறவர்கள். ஒரு வகுப்பில் எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை என்றால் ‘பேசாமல் இருக்கற பிள்ளை’ என்ற காலங்கள் மலையேறிவிட்டன. பேசும் பிள்ளைகள் மட்டுமே ஜெயிக்கிற காலம் இது.

குமரகுருபரர் காசியை அடைந்த நிகழ்வு இலக்கிய உலகிலும் ஆன்மிக உலகிலும் ஒரு மைல்கல் சம்பவம். தமிழ் மட்டுமே அறிந்திருந்த அவர், காசியை அடைந்ததும் ஹிந்துஸ்தானி மொழியை அறியவில்லையே என வருந்தினாராம். கலைவாணியை வணங்கி சகலகலாவல்லி மாலை பாடினாராம்.

வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்க நின் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்கு தகாது கொலோ- சகமேழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!

- என்று தொடங்கும் பாடல்களில் நனைந்த சரஸ்வதி தேவி உடனே அவருக்கு ஹிந்துஸ்தானி மொழி அறிவை அளித்து விட்டாளாம். அவர் பாடிய காசிக் கலம்பகத்தையும், சகலகலாவல்லி மாலையையும் ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்த அவரை அன்றைய காசிமாநகரமே கொண்டாடியதாம். அங்கே, கம்பராமாயணத்தை தமிழிலும், ஹிந்தியிலும் மாறி மாறிப் பேசி சொற்பொழிவு செய்வாராம் குமரகுருபரர். அந்த சொற்பொழிவுகளுக்கு வந்த துளசிதாசர், குமரகுருபரரின் ஆசி பெற்றே தன்னுடைய புகழ்பெற்ற துளசி ராமாயணத்தை எழுதி அரங்கேற்றினாராம். கம்பனும் துளசியும் பல இடங்களில் ஒன்று போல் காட்சி தருவதற்கு குமரகுருபரரே காரணம்.

சுவாரஸ்யமான இந்தக் கதையைக் கேட்டால் நமக்கும் ஆசையாக இருக்கிறது. படிக்காமல் இத்தனை நாள் விட்டுவிட்டோமே, இனி எங்கு போய் ஹிந்தியோ பிற மொழிகளோ படிப்பது? கலைமகள் நம் முன்னாலும் வந்து புதுமொழியை மூளையின் செல்களில் இன்ஜெக்ஷன் போட்டு விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்! உண்மையிலேயே குமரகுருபரருக்கு கலைவாணி வரம் கொடுத்தாளா என்ற கேள்வி எழுமானால், என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கலாம். குமரகுருபரர் தமிழ் மொழியில் மகத்தான புலமை பெற்றவர். தமிழ்ப்பாடல்களில் தளையே தட்டாமல் கவி எழுதும் அபார ஆற்றல் படைத்த மிகச் சிலரில் ஒருவர். ஒரு மொழியில் அவருக்குள் பொலிந்த பூரண ஞானத்தினால், காசிக்குப் போனதும் இன்னொரு மொழியைக் கற்பது அவருக்கு மிக மிக எளிதான செயலாக இருந்திருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் விற்பன்னர்களைக் கேளுங்கள், ஒரு கம்ப்யூட்டர் லாங்குவேஜ் தெரிந்தவர்கள் இன்னொன்றை அறிவது மிகச் சுலபம் என்பார்கள். குருபரர் பெற்ற வரம் என்பதே மிக விரைவில் அவரால் ஹிந்தியைக் கற்க முடிந்த வெற்றியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மொழி என்பது பல பிரமாண்டமான வாயில்கள் கொண்ட மாளிகை போன்றது. வாயில்களை இறுக்க மூடி நாம் இருட்டில் தவித்தது போதும்; ஜன்னல்களையும் கதவுகளையும் காலம் என்னும் காற்று தட்டுகிறது. திறந்து விட நமக்கென்ன தயக்கம்?
உண்மையில் ஒரு மொழியைப் படிப்பது ஒரு வேலையைப் பெறும் வாய்ப்பிற்காக மட்டுமா? அது அந்த மொழி பேசும் ஏதோ ஒரு சக மனிதனின் ஆன்மாவை அறியும் ஒரு எளிய முயற்சி அல்லவா!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum