தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால் வலிக்கும், ஆடியது போதும் ஆண்டவனே!

Go down

 கால் வலிக்கும், ஆடியது போதும் ஆண்டவனே!  Empty கால் வலிக்கும், ஆடியது போதும் ஆண்டவனே!

Post  meenu Thu Mar 07, 2013 2:05 pm

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டுமே உண்டு. வெற்றி, தோல்வியும் சம அளவில் உண்டு. ஓயாத கடல் அலைபோல இவை மாறி மாறி நம்மை அலைக்கழிக்கின்றன. அதனால்தான், வாழ்வை ‘சம்சார சாகரம்’ என்று அழைக்கிறார்கள். இந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தும்கூட, விரும்பாத விஷயங்கள் நடக்கும்போது நம் மனம் சோர்வடைகிறது. துவண்டு போய் மூலையில் உட்கார்ந்துவிடுகிறோம். அதுமாதிரி நேரங்களில், இழந்த தன்னம்பிக்கையைத் திரும்பப் பெறுவதற்குப் பல வழிகள் உண்டு. சிலர் சுய முன்னேற்றப் புத்தகங்களைப் படிப்பார்கள். தங்களுடைய அப்பா, அம்மா, நண்பர்கள், வழிகாட்டிகள் போன்றோரிடம் பேசுவார்கள். கோயிலுக்குச் சென்று தெய்வத்திடம் முறையிடுவார்கள்.

ஒரு பேச்சுக்கு, அந்தத் தெய்வத்துக்கே இப்படி ஒரு மனச்சோர்வு ஏற்பட்டால்...? மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற அவரே தன்னம்பிக்கையை இழந்துவிட்டால் என்ன ஆகும்?

இப்படி ஒரு காட்சி, ராமாயணத்தில் வருகிறது. ராவணன் சீதையைக் கடத்திச் சென்றுவிடுகிறான். அவளைக் காணாமல் தவிக்கும் ராமர், தம்பி லட்சுமணனுடன் சேர்ந்து காடு முழுவதும் தேடுகிறார். சீதையைக் காணவில்லை. அப்போது, ராமர் ஜடாயுவைச் சந்திக்கிறார். ஆனால் அவரோ ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.

ராமருடைய தந்தை தசரதனின் நண்பர் ஜடாயு. ஆகவே, ராமருக்கு அவர் தந்தை போன்றவர். மருமகளான சீதையிடமும் ஜடாயுவுக்கு பாசம் அதிகம். அப்பேர்ப்பட்ட ஜடாயுவை இந்த நிலைமையில் பார்க்கும் ராமர் துடித்துப் போகிறார். ‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’ என்று பதற்றத்துடன் விசாரிக்கிறார்.
‘‘அது ஒன்றுமில்லை ராமா, இந்த ராவணன் சீதையைக் கடத்திச் சென்றான். நான் அவனைத் தடுத்து நிறுத்திச் சண்டை போட்டேன். கோபப்பட்ட அவன் என்னுடைய சிறகுகளை வெட்டி, இப்படி என்னை வீழ்த்திவிட்டான்’’ என்கிறார், ஜடாயு.

உடனே, ராமர் வேதனையுடன் புலம்பத் தொடங்குகிறார். ‘‘முதலில் நான் என் மனைவியை இழந்தேன். இப்போது தந்தை ஸ்தானத்தில் இருக்கும் உங்களையும் இழக்கப்போகிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான். இனிமேல் நான் யாருக்காக வாழவேண்டும்?’’

இதைப் பார்த்த ஜடாயு, ராமருக்கு நம்பிக்கை தரும்விதமாகப் பேசுகிறார், ‘‘நேராகப் போய் ராவணனை வென்று வா’’ என்று அவருக்குத் தெம்பூட்டுகிறார். இந்தக் காட்சி, சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராம நாடகக் கீர்த்தனைகள்’ நூலில் இடம் பெற்றுள்ளது. அற்புதமான அந்தப் பாடல், இதோ:
இன்பம் வருவதும், துன்பம் வருவது

எடுத்த உடற்கு நிலவரம்தானே?
சம்புவான சிவன் தானும் தலை ஓட்டைத்
தன் கையில் ஏந்திக்கொண்டு இரந்தானே,
அம் புவி படைத்த பிரம்ம தேவனும்
அறுப்புண்டானே ஒரு சிரம் தானே,
நம்பும் சந்திரனும் சூரியனும் பாம்பாலே
நடுங்குகின்றார் இன்னம் நிரந்தரம்தானே,
உன் பிழையும் இந்த வகை ஒத்தது அல்ல, ஆகையாலே
அம்பினால் ராவணன் தலை அறுப்பாய்
பனங்குலை போலே
தம்பிள்ளை பெண்களோடே தாழ்ந்து நின்று ஒருகாலே
வெம் பதராம் அரக்கர்க்கு வேலை செயும் தேவர் மேலே

- ராமா, இந்த உலகில் பிறந்த எவருக்கும் இன்பம் வரும், துன்பமும் வரும். இதுதானே நிரந்தரமான உண்மை? பிறகு ஏன் கலங்குகிறாய்? துன்பப்படாதவர்கள் யாரேனும் உண்டா? அப்பேர்ப்பட்ட சிவன்கூட, கையில் திருவோட்டை ஏந்திக்கொண்டு பிச்சை கேட்கவில்லையா? அழகிய இந்த உலகத்தைப் படைத்த பிரம்ம தேவன் ஒரு தலையை இழந்து சிரமப்படவில்லையா? எல்லாரும் நம்புகிற சூரியனும் சந்திரனும் ராகு, கேது எனும் பாம்புகளைப் பார்த்தாலே நடுங்குகிறார்கள், இல்லையா? இதையெல்லாம் பார்க்கும்போது, நீ படும் சிரமம் ஒன்றும் பெரியது அல்ல, எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதே.

கொடிய ராவணன் என்ன செய்கிறான் தெரியுமா? தேவர்களைத் தன் அடிமைகளாக்கிக்கொண்டு அவர்களை அரக்கர்களுக்கு ஏவல் வேலை செய்யச் சொல்லி அவமானப்படுத்துகிறான். அப்படிப்பட்ட ராவணனை நீ உன்னுடைய பலத்தால் வெல்ல வேண்டும், ஒரே அம்பால் அவனுடைய தலைகளைப் பனங்குலைபோல் வீழ்த்தி எறியவேண்டும்!

இந்த வாசகங்களைக் கேட்ட பின்னர், ராமருக்குப் புது வேகம் பிறக்கிறது. நம்பிக்கையுடன் சீதையைத் தேடிப் புறப்படுகிறார். அப்புறம் நடந்ததுதான் எல்லோருக்கும் நன்றாகத் தெரியுமே!

சிதம்பரம், தில்லை, பொற்சபை, ஆகாயத்தலம் என்று பல பெயர்களால் புகழப்படும் திருத்தலம். அங்கே நடராஜராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அழகையும் ஆடல் சிறப்பையும் பல பெரும் புலவர்கள் விதவிதமாக வர்ணித்துப் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் திருநாவுக்கரசு சுவாமிகள் மட்டும் இந்த விஷயத்தில் கொஞ்சம் மாறுபடுகிறார். தில்லை நடராஜனைப் பாடத் தொடங்கும்போதே, ‘‘நான் உண்மையான பக்தன் இல்லை’’ என்று ஆரம்பிக்கிறார். ஏன்?

பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ
எத்தினால் பத்தி செய்கேன், என்னைநீ இகழவேண்டா!
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே

- பரம்பொருளே, பரமயோகியே, முத்தனே, முதல்வனே, தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற அத்தனே, சிவபெருமானே, பொதுவாகப் பக்தர்கள் ஆண்டவனை வணங்கும்போது, தங்களுக்கென்று எதையும் கேட்கமாட்டார்கள். அவனைத் தொழுவது மட்டுமே அவர்கள் மனத்தில் இருக்கும். ஆனால் நான் அப்படியில்லை. நிஜமான பக்தனாக அல்லாமல், மனத்தில் ஓர் ஆசையுடன்தான் நான் உன்னை வணங்குகிறேன். அதைக் காரணமாக வைத்து என்னை நீ இகழ்ந்துவிடாமல், காப்பாற்று. உன்னுடைய திருநடனக் காட்சியைப் பார்ப்பதற்காகவே நான் வந்திருக்கிறேன். அதைக் காண்பித்து அருள் செய்.

முதல் பாட்டுகூடக் கொஞ்சம் பரவாயில்லை, இரண்டாவது பாட்டு இன்னும் மோசம், ‘‘நான் பக்தன் இல்லை, உன்னுடைய கருத்தை அறிந்து பாடுகிறவனும் இல்லை, ஏதோ எனக்குத் தோன்றியதை மட்டுமே பாடுகிறேன்’’ என்று தன்னை இன்னும் தாழ்த்திப் பேசுகிறார், திருநாவுக்கரசர்.

கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம் பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடை சோதீ
திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தநான் காணவேண்டி நேர்பட வந்தவாறே

மென்மையான தோள் கொண்ட பார்வதியைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவனே, யாராலும் அறிந்துகொள்ள முடியாத திருவுருவத்தைக் கொண்ட ஜோதியே, உன்னுடைய உள்ளத்தை அறிந்து அதற்கு ஏற்பப்பாடும் திறமை எனக்கு இல்லை. ஆனாலும் குறைகளை நீக்கித் தெளிவினைக் கொடுக்கின்ற தில்லை நகரத்தில், இந்தச் சிற்றம்பலத்தில் உன்னுடைய திருநடனத்தைக் காணும் ஆர்வத்துடன் வந்திருக்கிறேன். இந்த இரண்டு பாட்டுகளையும் தொகுத்துப் படித்தால் நமக்கு ஒரு குழப்பம் வரும். திருநாவுக்கரசர் தன்னை ‘உண்மையான பக்தன் இல்லை’ என்று சொல்லிக்கொள்கிறார். ‘கருத்து உணர்ந்து பாடுகிறவனும் இல்லை’ என்கிறார், அப்புறம் ஏன் சிவன் அவருக்கு அருள் புரிய வேண்டும்? இவரிடம் என்ன விசேஷம்?

இதற்கான பதில், இன்னொரு பாட்டில் கிடைக்கிறது:

சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய என்னை நீ அருளிச் செய்யா யாது நான்
செய்வது என்னே? செந்தீயார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட, அடி இணை
அலசும் கொல்லோ!

-வேள்வி செய்கிறவர்கள் செம்மை தரும் நெருப்பை ஓய்வில்லாமல் தொடர்ந்து வளர்க்கின்ற சிதம்பரத்தில் அருள் செய்யும் சிவபெருமானே, உன் அடிமையாக நான் காத்திருக்கிறேன், உன்னை வாழ்த்திப் பாட, சேவை செய்ய விரும்புகிறேன், என்னை இனிமேலும் காக்க வைக்காதே. நீ அருள் செய்யாவிட்டால் என்னால் என்ன பெரிதாகச் சாதித்துவிட முடியும்? நிறைவாக, அந்த அற்புதமான வரி வந்து விழுகிறது: ‘‘அது சரி, இந்தத் தில்லைச் சிற்றம்பலத்தில், நீ ராத்திரி பகலாகத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறாயே, அடடா, உனக்குக் கால் வலிக்காதோ?’’

ஆக, ஒருவர் உண்மையான பக்தரா, விஷயம் தெரிந்தவரா, முட்டாளா, சிறப்பாகப் பாட்டு எழுதுகிறவரா, வீரரா, கோழையா, தன்னுடைய சொந்த முயற்சியில் எதையும் சாதிக்கக்கூடியவரா, எல்லாவற்றுக்கும் அடுத்தவர்களை எதிர்பார்க்கிறவரா... இவை எதுவும் முக்கியம் இல்லை. திருநாவுக்கரசர் வேண்டுமென்றே தன்னைத் தாழ்த்திக்கொண்டு பேசினாலும்கூட, அவரையும் மீறிப் பொங்குகிற அந்த அன்பு, குதித்து விளையாடும் குழந்தையைப் பார்த்து, ‘‘கால் வலிக்கும்யா, போதும்’’ என்று சொல்லும் அன்னையைப்போல், ‘‘ஐயா, எந்நேரமும் நடனம் ஆடுகிற உன் கால்கள் வலிக்காதா?’’ என்று விசாரிக்கிற அந்த அக்கறை, ‘‘நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளக்கூடாதா?

உன் அடிமையாக என்னை ஏற்றுக்கொள்ளேன், அவ்வப்போது உன் கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு இங்கேயே கிடக்கிறேன்’’ என்கிற பாசம், சரணாகதி... அதுதான் பக்தியின் முதல் அடையாளம், முதன்மையான அடையாளமும்கூட! கடவுளின் மீதும், சக உயிர்களின் மீதும் அன்பும் அக்கறையும் செலுத்துகிறவர்கள்தான் உண்மையான பக்தர்கள். அதுமட்டும் இருந்துவிட்டால், மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம்தான். அதுமட்டும் இல்லாவிட்டால், மற்ற எது இருந்தும் பலன் இல்லை! குழந்தைக் கண்ணனின் லீலைகளில் ஒன்று, பக்கத்து வீடுகளில் இருந்து வெண்ணெய் திருடுவது, பால், தயிர் போன்றவற்றை அள்ளிக் குடித்துவிடுவது. இதனால் ஆயர் குலப் பெண்கள் கோபப்பட்டு யசோதையிடம் புகார் சொல்ல வந்ததாகப் பல கதைகள் சொல்கின்றன.

இதைப் பற்றி விவரிக்கும் ஓர் அழகான பாட்டு. திருமங்கை ஆழ்வார் இயற்றியது:

ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிர் உண்டான், காண், ஏடீ!
தாழ்குழலார் வைத்ததயிர் உண்ட பொன்வயிறு, இவ்
ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்து ஆல் சாழலே!

கண்ணன் ஆயர்பாடியில் வாழ்கிறான். அங்கே தாழ்ந்த, அதாவது தரையைத் தொடும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்ட பெண்கள் பலர் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பானை நிறையத் தயிரை நிறைத்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பானைகளையெல்லாம், இந்தக் கண்ணன் உடைக்கிறான், தயிரைக் குடிக்கிறான், இதற்காக, ஆழமான கடலினால் சூழப்பட்ட இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரும் அவனைத் திட்டுகிறார்கள். ஆனாலும் அவன் தன் போக்கை மாற்றிக்கொள்வதில்லை.

‘‘இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கண்ணன், அதாவது திருமாலுடைய பொன்வயிறு, முன்பு ஒரு காலத்தில் ஏழு உலகங்களையும் உட்கொண்டது. அங்கே இன்னும் எக்ஸ்ட்ராவாக இந்தப் பாலுக்கும் தயிருக்கும் வெண்ணெய்க்கும்கூட இடம் இருக்கிறதா என்ன?’’ என்று கேட்டு வியக்கிறார் திருமங்கைஆழ்வார்.
அது சரி, கண்ணன் ஏன் மெனக்கெட்டு பால், தயிர், வெண்ணெயைத் திருட வேண்டும்? மிட்டாயோ மிக்ஸரோ திருடக் கூடாதா? இதன் பின்னணியில் ஒரு தத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள்.

பாலைக் காய்ச்சி உறை ஊற்றுகிறோம். அது தயிராக மாறுகிறது. தயிரைக் கடைகிறோம், அது மோராக மாறுகிறது, வெண்ணெயும் வெளியேறுகிறது, வெண்ணெயைக் காய்ச்சுகிறோம், அது நெய்யாக மாறுகிறது. ஆக, பாலுக்குள் தயிர் ஒளிந்திருக்கிறது, தயிருக்குள் மோர், வெண்ணெய், நெய் மூன்றும் ஒளிந்திருக்கின்றன. அந்த நெய்யைப் பயன்படுத்திச் செய்கிற பாதுஷாவும், பாதாம் அல்வாவும்கூட, பாலில் இருந்து விளையும் தின்பண்டங்கள்தான்.
இப்போது யாரிடமாவது பாலைக் காண்பித்து ‘இதற்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய், பாதாம் அல்வா எல்லாமே இருக்கிறது’ என்று சொன்னால் அவர்கள் நம்புவார்களா?

ஆனால் உண்மை அதுதான். மேலோட்டமாகப் பார்க்கும்போது பால் வெறும் பாலாகவே தெரிந்தாலும், அதனைச் சரியான முறையில் பக்குவப்படுத்தினால், அதிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று சகலமும் வரும், சந்தேகமே இல்லை. அதுபோல, நாம் வெளித் தோற்றத்தில் எப்படித் தெரிந்தாலும் பரவாயில்லை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். ஆனால் நாம் அவனைக் காண்பதற்குப் பக்குவமான மனம் வேண்டும்.

கண்ணன் இடையர் குலத்தில் பிறந்தது, வெண்ணெய் திருடியது, பால், தயிர்ப் பானைகளை உடைத்துக் குடித்தது என்று எல்லாமே, இந்தத் தத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் என்று நம்பிக்கை. இதை உறுதிப்படுத்துவதுபோல், பல ஆழ்வார்கள் இறைவனைப் பால், நெய், தயிர் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்கள். உதாரணமாக, ‘ஆனில் மேய ஐந்தும் நீ’ என்கிறார் திருமழிசை ஆழ்வார். இதன் அர்த்தம், ‘பசுவினால் கிடைக்கும் ஐந்து பொருள்களான பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் நீதான்.’

அதுமட்டுமில்லை. இதே பாடலின் நான்காவது வரியில், ‘யானும் நீ, அதன்றி எம்பிரானும் நீ’ என்று தெளிவாகச் சொல்கிறார். அதாவது, நானும் நீயும் ஒன்றுதான், எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்.
இன்னொரு பாடல், இதை அருளியவர் நம்மாழ்வார்:

கறந்த பால் நெய்யே, நெய்யின் இன் சுவையே,
கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்த இன் சுவையே, சுவையது பயனே,
பின்னை தோள் மணந்த பேர் ஆயா!

நப்பின்னையின் தோள்களை அணைத்து மணந்த கண்ணனே, ஆயர்குலத்தில் பிறந்த பெரிய தலைவனே, கறந்த பால் நீ, அதிலிருந்து வரும் நெய் நீ! (இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள ‘தயிர், மோர், வெண்ணெய் போன்றவையும் நீதான்’ என்பதை நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்) அதுமட்டுமா? அந்த நெய் தரும் இனிமையான சுவையும் நீதான். கடலில் கிடைக்கும் அமுதம் நீ, அந்த அமுதத்தைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை நீ, அந்தச் சுவையால் கிடைக்கும் பயன், அதுவும் நீயே, எல்லாம் நீயே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum