தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால்கள் பாதிப்புகள் கால்கள் பாதிப்புகள்

Go down

கால்கள் பாதிப்புகள் கால்கள் பாதிப்புகள் Empty கால்கள் பாதிப்புகள் கால்கள் பாதிப்புகள்

Post  meenu Thu Feb 28, 2013 2:52 pm

மற்றெல்லா வியாதிகளையும் விட, சர்க்கரை நோயாளிகள் தான் கால்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். கால்கள் இழப்பு மற்ற வியாதிஸ்தர்களை விட, சர்க்கரை நோயாளிகளுக்கு 15 மடங்கு அதிகம் நேருகிறது.

காரணம் – இஸ்கேமியா ( ரத்த நாள அடைப்புகளால் உடலின் ஒரு பாகத்திற்கு சரியாக, தேவையான அளவு ரத்தம் போகாதது), நியூரோபதி ( உடலின் புற எல்லை நரம்புகளின் பாதிப்பு), தொற்று நோய்கள் மற்றும் காயங்கள் ஆறாத தன்மை.

சர்க்கரை வியாதி, சிறிய, பெரிய ரத்த நாளங்களை பாதிக்கிறது. அதிக சர்க்கரையால் ரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்படும், தவிர ரத்த நாளங்கள் சுருங்கி, கால்களுக்கு ரத்தம் பாயாது. கால்கள் இதயத்திலிருந்து, மற்ற அவயங்களை விட தூரத்தில் இருப்பதால் அவற்றுக்கு முழுமையான ரத்தம் கிடைப்பதில்லை. கால், பாதங்கள் சர்க்கரை வியாதியால் பலத்த சேதமடைவது மட்டுமில்லாமல் கால் செல்கள் நாசமடைந்து விடுகின்றன.

டயாபடிக் கால் இரண்டு விதம் – நரம்பு பாதிப்பால் ஏற்படுவது ஒன்று. நியூரோ இஸ்கெமிக் மற்றொன்று. இதில் இரத்த குழாய்கள் பாதிப்பு அதிகமிருக்கும். தவிர வேய்னர் வகைப்படித்தியது என்ற பல நிலைகளின் விவரிப்பு கீழே கொடுக்கப்படுகிறது.

தரம் 0 ……. கால்களில் புண்கள் இல்லாமை

1 …….. மேலெழுந்த வாரியான புண்

2 …….. உள் எலும்பு, தசை நார் வரை ஆழமான புண்

3 …….. மிக ஆழமான சீழுடன் புண்

4 …….. ஈரமான / உலர்ந்த அழுகல் நோய் – உடலின் மாமிசத்தை தின்று விடும் புண் (Gangrene)

5 …….. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலை. அறுவை சிகிச்சையால் கால் எடுக்கப்படும்.

மேற்சொன்ன நிலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைவில் ஏற்பட்டு விடும்.

காயம்பட்ட இடத்தில் அதிக சர்க்கரை இருந்தாலும், செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இருக்காது. சர்க்கரையால் கிருமிகளை கொல்லும் வெள்ளை அணுக்கள் சரிவர செயல்படாது. காயம் ஆறுவது தாமதமாகும்.

இரத்த ஓட்டம் தொடர்ந்து பாதிக்கப்படுகின்ற போது புண்கள் ஆறுவது தடைப்படுவதுடன் நுண்மத் தொற்றும் எளிதாக ஏற்பட வாய்ப்பாகி விடுகிறது. இதுவுமின்றி நீரிழிவினால் நரம்புகளும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதில் மிகச் சாதாரணமாக ஏற்படக் கூடியது பெரிபெரல் பாலிநியூரோபதி (Peripheral Polyneuropathy) எனப்படும் புறப்பரப்பு நரம்புகளில் ஏற்படும். மத மதப்பும், உணர்வின்மையும், பலவீனமும் ஆகும்.

இது பெரும்பாலும் கால் பகுதியைப் பெரிதும் பாதிக்கலாம். இதன் விளைவாகக் கால் பகுதியில் ஏற்படக்கூடிய வெப்ப ஏற்றத்தாழ்வோ, புண்களோ அதிக வலியோ, வேதனையோ தராமற் போகத் தொடங்குகின்றன. பலம் குன்றிய கால்களில் கால் தசை இழப்பும் சேர்ந்து கொள்கிறது. இந்நிலையில் கால்களில் ஏற்படும் காயங்கள் கவனிக்காமல் விடப்படுகின்றன. பல நேரங்களில் கால்களில் ஏற்படும் சிறு காயங்களும், சிராய்ப்புக்களும், சிறு கொப்புளங்களும் நோயாளியின் கவனத்திற்கு வராமலே போகக் கூடும்.

மேற்கண்ட காயங்களில் தொற்றுகின்ற நுண்மத் தொற்றுகள் நோயாளிகளின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன. பார்ப்பதற்கு மிக அற்பமாகத் தோன்றக் கூடிய சிறு விஷயங்கள், எடுத்துக்காட்டாக, செருப்பு கடித்த சிறுபுண், கட்டை விரலில் கல் தடுக்கிய காயம், விரலில் இருந்து நகத்தைப் பிய்த்து எடுக்கின்ற போது நேர்ந்த சிறு கீறல், கால் ஆணி போன்றவைகள் அலட்சியப்படுத்தப்படுகின்ற போது அங்கு பாக்டீரியாக்கள் குடியேற வழி ஏற்படுத்துகிறது. குளுகோஸ் நிறைந்த திசுச் சூழலில் உட்புகுகின்ற பாக்டீரியாக்கள் விரைந்து பல்கிப் பெருக வசதியாகிறது. புண்கள் ஆறுவதற்குத் தாமதமாகிறது. நுண்மத் தொற்றைக் கட்டுப்படுத்தக் கொடுக்கப்படுகின்ற ஆன்ட்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகள் இரத்தக் குழாய்க் குறுக்கத்தால் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைய முடியாது செயலற்றுப் போகின்றன. தடுப்பு ஏதும் இல்லாத இந்நிலையில் பாக்டீரியாக்கள் கணக்கின்றிப் பெருகுகின்றன.

அற்பமான ஒரு சின்னக் காயம் ஆறாத ரணமாக உருவெடுக்கிறது. இதில் நுண்மத் தொற்றும் சேருகின்ற போது அதை எதிர்க்க முடியாத நிலையில் இருக்கின்ற திசுக்கள் தொற்று மேலும் தொடர வழிவகுக்கின்றன. முதலில் இணைப்புத் திசுக்கள், அடுத்துத் தசை நார்கள் அதையடுத்துத் தசைகள் என்று அடுத்தடுத்து விரவிப் படர்ந்து டயாபெடிக் கேங்கிரீன் ( Diabetic Gangrene) என்னும் நீரிழிவுத் தசை அழுகலாக உருவெடுக்கிறது. பெரும்பாலும் இந்தத் தசை அழுகல் காலங்கடந்த பின்னரே மருத்துவரிடம் கொண்டு வரப்படுகின்றது. பாதிக்கப்பட்ட காலை மீட்பதற்கும், அழுகல் மேலும் பரவாமல் தடுப்பதற்கும் பெரு முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட உறுப்புக்கு இரத்தம் செல்ல வகை செய்து நுண்மத் தொற்றைக் கட்டுப்படுத்தத் திறன் மிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் தரப்பட வேண்டும். இறந்த திசுக்களை நீக்கி, சீழை அகற்றி, புண் ஆறுவதற்கு வகை செய்ய வேண்டும். நீடித்த மருத்துவ சேவையும், ஆர்வமிக்க மருத்துவப் பணியாளர்களும் தேவைப்படலாம்.

இவ்வளவு முயற்சிகளும் சில நேரங்களில் பயனளிக்காது போய் விடக் கூடும். காலை மீட்கின்ற முயற்சி கைவிடப்பட வேண்டி வரலாம். காலை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடலாம்.

கால் பாதிப்பு அறிகுறிகள்

காலின் நுனிப் பகுதிகள், விரல்களில் எரிவது போல் உணர்ச்சி.

ஊசி குத்துவது போன்ற உணர்வு, கால் குடைச்சல்.

மரத்துப் போதல்.

நடக்கும் போது பஞ்சுமேல் நடப்பது போன்ற உணர்வு.

சிறிது தூரம் நடந்தால் கால்களில் வலி.

தசை திசுக்கள் கருமையாதல்.

காலில் நரம்புகள் புடைத்து கொள்ளும்.

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய விஷயம் – நரம்புகளின் பாதிப்பால் அவர்களுக்கு வலி போன்ற உணர்வுகள் ஏற்படாமல் போகும். காயம் படுவதை கூட உணராமல் போகலாம். நடக்கும் போது கூட சரிவர பாதங்கள் தரையில் படிந்து சீராக நடக்க முடியாது. உடல் எடை பாதங்களின் சில பகுதிகள் மட்டுமே தாங்கி கொள்ளும். இந்தப் பகுதிகள் மரத்து, காய்ந்து போய் கடினமாகி விடும்.

அழுகல் நோய் ( Gangrene)

டயாபடீஸ், கால்களில் வரும் அழுகல் நோய்க்கு காரணம். கால் ரத்த ஓட்டம் இல்லாமல், சில பகுதிகள் ‘இறந்து’ அழுக ஆரம்பித்து விடும். இறந்த செல்களை உண்ணும் நுண்ணுயிர், டயாபடீஸால் குணம் மாறி, நல்ல செல்களையும் சாப்பிட்டு விடும். இதனால் அழுகல் நோய் பரவும். வெறும் ரத்தக் குறைவால், அதாவது ரத்தம் சரிவர கிடைக்காததால் செல்கள் அழிவது, உலர் அழுகல் நோய். ரத்தக் குறைவுடன் பாக்டீரிய தாக்குதல்களும் சேர்ந்து கொண்டால் அது ஈர அழுகல் நோய் எனப்படும். கிளாஸ்ட்ரிடியம் பர்ஃபிரின்ஜென்ஸ் – வெல்ச் பாசிலஸ் (Clostridium perfringens – Welch’s bacillus) என்னும் மண்ணில் இருக்கும் பாக்டீரியா காயங்கள் வழியே ஊடுருவி, தசை வீக்கம், வலிகளை உண்டாக்கும் இதை காற்றுப் புகும் அழுகல் அல்லது கேஸ் காங்க்ரீன் (Gas Gangrene) என்பார்கள். தசைக் காயம் அழுகி, சீழ்பிடித்து, நாற்றத்துடன் கூடிய சீழ், காற்றுக் குமிழிகளுடன் வெளியேறும். காய்ச்சல் ஏற்படலாம். இந்த நிலையில் தீவிர சிகிச்சை இல்லாவிட்டால் நோயாளிகளை காப்பாற்றுவது கடினம். அழுகல் நோய் அறிகுறிகள் தோல் கருமை நிறமாதல், தொட்டால் தெரியாத உணர்ச்சி, காயங்களின் ஓரங்களில் வலி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum