தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை

Go down

 வரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை Empty வரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை

Post  ishwarya Sat Feb 16, 2013 5:25 pm

முன்ஜென்ம கர்ம பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பல பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும்.

‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும், நலனும், ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷண தேவி பூஜை மிகவும் சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.

லட்சுமி பூஜை பற்றிய புராண கதை

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.

லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..? மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.

பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

எப்படி பூஜை செய்வது?

ஒரு மனையில் கோலம் போட்டு லட்சுமி அல்லது அஷ்டலட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால், கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய் பச்சை கற்பூரம், வாசனாதி திரவியங்களை சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி, அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும், வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழுத் தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும் ஆயுள், ஆரோக்யம், மாங்கல்யபலம் கிட்டும். கன்னிப் பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடிவரும்.

குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum