தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கப் பல்லக்கில் வந்த சமயபுரத்தாள்

Go down

தங்கப் பல்லக்கில் வந்த சமயபுரத்தாள் Empty தங்கப் பல்லக்கில் வந்த சமயபுரத்தாள்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:17 pm

வைணவி என்ற திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கொலுவிருந்த சிலை அது. அந்த சிலையில் உக்கிரம் தெரிந்தது. அதனால் ஆலயத்திற்கே ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆகவே, அச்சிலையை எடுத்துச் சென்று தென்மேற்காக கண்ணனூர் கோட்டை இருந்த இடத்தில் ஒரு மேட்டில் வைத்தார்கள். ஆலயத்திலிருந்த விக்ரகம், அரண்மனை பகுதிக்கே வந்தது. ஆனால், அரண்மனை என்னவாயிற்று? அது சோழ மன்னனின் படைப்பு. தன் தங்கையை கங்க நாட்டு மன்னனுக்கு விவாகம் செய்து கொடுத்த சோழன், திருமண சீதனமாக கண்ணனூரில் ஒரு கோட்டையைக் கட்டி, அதனுள் ஒரு நகரத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்.

ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டியர் படையெடுப்பால் அந்தக் கோட்டையும் நகரமும் முற்றிலுமாக அழிந்து, வேம்பு காடாகிவிட்டது. இந்த வேம்புக் காட்டில்தான் அம்மன் விக்ரகம் வைக்கப்பட்டது. நாளடைவில், அந்த வழியாக வந்த வழிப்போக்கர்கள், அந்த விக்ரகத்தை வழிபட ஆரம்பித்தார்கள். அம்மனுக்கு கண்ணனூர் மாரியம்மன் என்று பெயரிட்டு தமது பக்தியை சமர்ப்பித்தார்கள். இந்தப் பகுதிக்கு வடக்கே இருந்து விஜய நகரத்து அரசர் வந்தார். தென்னாட்டின் மீது படையெடுக்கும் நோக்கத்தில் வந்த அவர், இந்த அம்மனை தரிசித்தார். தான் போரில் வெற்றி பெற்றால், இந்த அம்மனுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார். அதேபோல போரில் வெற்றிவாகை சூடியபின், மறக்காமல் இத்தலம் வந்து அழகியதோர் ஆலயம் உருவாக்கினார்.

அவரைப் பின்பற்றி, பரிவார தேவதைகளாக பிள்ளையாரையும் கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தி அம்பாளுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர் ஊர் மக்கள். கோயிலில் உள்ள மாரியம்மன் உற்சவர் சிலை, விஜய நகரத்து மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டது. ஒரு முறை விஜய நகர பேரரசிற்கு பெரிய சோதனை ஏற்பட்டது. அதற்குக் காரணம் அந்த உற்சவர் சிலையாக இருக்கலாமோ என்ற எண்ணத்தில், கோயிலிலிருந்து அதனை அப்புறப்படுத்த தீர்மானித்தார்கள். அதே சமயம் அதை அப்புறப்படுத்தி எங்கே கொண்டுபோய் வைப்பது என்றும் யோசனையாக இருந்தது. அதனால், தங்கப் பல்லக்கில் அச்சிலையை வைத்து எடுத்து வந்தார்கள். சமயபுரத்தில் தாம் உணவு அருந்தும் பொருட்டு, பல்லக்கைக் கீழே இறக்கி வைத்துவிட்டு உணவு எடுத்துக் கொண்டனர்.

ஓய்வெடுத்தபின், பல்லக்கைத் தூக்க முயன்றால், அந்த மனித முயற்சியை கேலி செய்வதுபோல, சிலை சிறிதும் நகராமல் அப்படியே தரையில் அசைக்க முடியாதபடி ஊன்றிவிட்டது. தங்கள் முயற்சியில் தோல்வி கண்டவர்கள், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அதன் பின்னர், விஜயரங்க சொக்கநாதர் காலத்தில், அம்மனுக்குத் தனிக்கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தார்கள் என்று வரலாறு தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளியில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம். அங்கு காவிரி ஆற்றின் வடகரையில் கண்ணனூர் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில், மகாசக்தி பீடமாக அமர்ந்து மக்களின் குறைகளை போக்கி வருகிறாள் சமயபுரத்து மாரியம்மன்.

தமிழ்நாட்டிலுள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலையாயது இந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் என்கிறார்கள். மக்களின் பிணிகளை போக்கி, தீராத வினைகளை தீர்த்து, கண்ணொளி அற்றோருக்கு கண்ணொளி வழங்கி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் அன்னை.
சமயபுரம் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தை மாதத்தில் 13 நாட்கள் இங்கே உற்சாகம் பொங்கும் விழா நாட்கள்தான். தைப்பூசத்தன்று அம்பாள் ஸ்ரீரங்கம் வட திருக்காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி மேற்கொள்கிறாள். அடுத்து மாசி மாத பூச்சொரிதல் திருவிழா. மகிஷாசுரன் என்ற அரக்கன், ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்து வரம் பெற்றவன்.

ஈஸ்வர வரமே கிடைத்துவிட்ட ஆணவத்தில் கர்வம் கொண்டு தேவர்கள் மற்றும் முனிவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். இவர்களின் துயரத்தை போக்க அம்பாள் துர்க்கையாக மாறி சிம்ம வாகனத்தில் ஏறி, மகிஷாசுரனை வதம் செய்தாள். சூரனை வதம் செய்த பாவம் தீரவும் தன் கோபம் தணியவும் 28 நாட்கள் உடல் முழுதும் வாசனை பூ மாலைகளை அணிந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு, அம்மன் தன் கோபத்தை தணித்து கொண்டதாக ஐதீகம். இதனைக் கொண்டாடும் வகையில், மாசி மாத கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் அம்மனுக்கு மலர் தூவி வழிபாடு செய்வார்கள். இந்த திருநாளுக்கு முன் 28 நாட்களும் அம்பாளுக்கு எந்த நைவேத்யமும் படைப்பதில்லை.

அம்பாள் முற்றிலும் பட்டினி இருப்பதால், மாவிளக்கு, இளநீர், கரும்பு, பானகம், நீர்மோர் ஆகியவை மட்டுமே நைவேத்யமாக படைக்கப்படுகின்றன. மூன்றாவது, பங்குனி சித்திரை திருவிழா. சித்திரை மாதம், முதல் செவ்வாய்க் கிழமையன்று தேரோட்டம்; வெள்ளியன்று தெப்பம். பதிமூன்று நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது முடி, ஆடு, மாடு, கோழி காணிக்கைகளை பக்தர்கள் சமர்ப்பிக்கிறார்கள். அக்கினி சட்டி எடுத்தல் போன்ற வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நிறைவாக வைகாசி மாதம் பஞ்சப்பிராகார திருவிழா. இதில் வைகாசி மாதம் முதல் தேதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. எட்டு கைகளுடன், ஐந்து தலை சர்ப்பம் குடை பிடிக்க, அசுரத் தலைகளை காலால் மிதித்தபடி, சமயபுரத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கி வந்தால் சகல துன்பங்களும் தீரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்
»  விஜய் தந்த ‘தங்கப் பரிசு’!
» இனி மும்பையிலேயே தங்கப் போகிறாராம் பிரபு தேவா.. நயன்தாரா காரணமா?
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» ஓடி வந்த பையன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum