தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி

Go down

மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி Empty மங்கள வாழ்வளிக்கும் மங்கள நாயகி

Post  ishwarya Sat Feb 16, 2013 2:23 pm

நவகிரகங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு மனித வாழ்வும் அமைகின்றது என்கிறது ஜோதிட வேதம். இந்த நவகிரக நாயகர்களின் வினையையே தவிடுபொடியாக்கிய புண்ணிய க்ஷேத்திரம், பிராணநாதேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் தலம். சூரிய பகவான் உள்ளிட்ட நவகிரகங்களும் பத்து அவதாரங்களின் நாயகரான மகாவிஷ்ணுவும் படைக்கும் தொழிலை கொண்ட பிரம்மதேவரும் மாந்த்ரீக வல்லமையுடையோர் ஆராதிக்கும் காளிதேவியும் அகத்தியர் போன்ற எண்ணற்ற சித்தர்களும் அடிதொழுது நின்ற பூவுலக கயிலாயம், திருமங்கலக்குடியுடை பிராணநாதேஸ்வரர் ஆலயம்.

‘‘புவியிலொரு கயிலாயமுண்டு
கண்டேத்த வல்லார் தம்
நவகோள் பீடையகலுமே
நவநாயகர் தம்பீடை யறுத்தான்
தடை தொழுவார் பீடையுமறுப்பன்
அய்யமேது யியம்பு’’

-என்ற அகத்தியர் வாக்கால் இதனை அறியலாம். முதலாம் குலோத்துங்க மன்னனின் அரசவை அமைச்சர், ஆலைவாணர். மாணிக்கவாசகரைப் போல் பக்தி நிறைந்த அருளாளர். அவர் மனைவியும் சிவபக்தை. அரசு கருவூலப் பணத்தை எடுத்து இடிபாடுகளாய்த் திகழ்ந்த சிவனின் கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்து செவ்வனே முடித்தார். அரசுப் பணத்தை விரயம் செய்த இந்த விவரம் அறிந்த அரசன் வெகுண்டான். தனது ஊழியர் வழியாக அரசன் கோபத்தை உணர்ந்த ஆலைவாணன் அரசனின் முகத்தில் எப்படி விழிப்பது என எண்ணி நஞ்சுண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். பதிவிரதையான பத்தினி துடித்து, துவண்டு, ஒருவாறு தேறி அவனுக்கு எரியூட்ட மயானம் சென்றாள். பேயோடு நடமாடும் பிரானை எண்ணி தொழுது, கணவன் சிதையிலேயே தானும் புக எண்ணி நிற்க, மாண்ட கணவன், ஆலைவாணன் மீண்டும் சிவபெருமான் அருளால் பிராணன் பெற்று உயிரோடு எழுந்தான். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். பிராணனை மீண்டும் தந்து உயிர்ப்பித்தமையால், இப்பெருமானுக்கு பிராணநாத ஈஸ்வரன் என்ற பெயர் வழங்கலாயிற்று.

‘‘ஆண்டாண்டு காலம் அழுது
புரண்டாலும் வாரா உயிர்
வள்ளல் தன்னால் வந்தமை
கண்டு
அயனும் ‘பிரணநாத’ என்ன,
அதுவே
ஈசனுக்கு நாமமானதே கண்டு
நின்ற அயன் சேத்திரமிதே’

-என்று புலம்புகின்றார், கோரக்கர் என்ற சித்தர். எத்தனை காலம் அழுதாலும் செத்தவர்கள் எழுவதில்லை. இதை இந்த பிராணநாதன் பொய்யாக்கியதை பிரம்மனே கண்டு வியக்கின்றான் என்று பொருள். நமது குடும்பத்தில், நஞ்சு வழி மரணம் நேராது இருக்க, இந்த நாதனை தொழுவது நன்று. ஒருமுறை காலவமுனி என்ற சித்தர் ஒருவர், தனது தவவலிமையால், நவகிரக சஞ்சாரத்தினால் ‘குஷ்டரோகம்’ என்ற கொடிய நோய் தன்னைத் தாக்கும் என முன்னமேயே அறிந்தார். இதிலிருந்து தப்புவதற்கு பல இடங்களில் உள்ள நவநாயகர்களை தொழுதார். ஆனால், அவரது பொன்னான மேனியை குஷ்டரோகம் தாக்கியது. மிகவும் துயருற்ற காலவ சித்தர், தாம்பட்ட துயர் நவநாயகர்களும் பட சபித்தார்.

நவநாயகர்களையும் அந்த கொடிய நோய் தாக்கவே, சூரிய பகவானின் யோசனைப்படி, மங்கலக்குடியுறை பிராணநாதேஸ்வரனை ஆராதனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பீடையை போக்கி அருளினார். மேலும் கோயிலுக்கு அருகாமையிலேயே வீற்றிருந்து, கலியுகத்தில் மனிதர்கள் படும் துயரை துடையுங்கள் என்றும் ஆணையிட, இன்றளவும் அந்த நவநாயகர்கள், திருமங்கலக்குடியை சுற்றி தவம் பண்ணுகின்றனர். தம்மை நாடிவரும் பக்தர்களின் துயரையும் துடைக்கின்றனர். இதனையே புலிப்பாணித் தேவர்,

‘‘குட்டமகற்றினான் நவக்கோளர்
தமக்கே - வாட்டும் வினை
தமை மாந்தருக்கு கறுக்க
ப்ராணயீசனை சுற்றி தவஞ் செய்ய
கண்டோமே நவநாயகரைத்
தொழாமுன் ஆவிதந்தரனை தொழ
சித்திக்குங் கருமமிது சத்யமே’’

-என்றார். எனவே, நவகிரக கோயில்களை வலம் வருவதற்கு முன், கண்டிப்பாக திருமங்கலக்குடி சென்று பிராணநாதனைத் தொழவேண்டும் என அறிக.
ஒருமுறை பார்வதிதேவியார் கிளி வடிவம் எடுத்து சிவனைத் தொழுது வந்தார். கிளி ரூபம் மறைந்து சிவனை மங்களகரமான மகர சங்கராந்தி அன்று கைத்தலம் பற்றியமையால், அன்னை பார்வதி தேவியாரை மங்களநாயகி என்றும் மங்களாம்பிகா என்றும் கோரக்கர் என்னும் சித்தர் போற்றுகின்றார்.

‘‘பருதியவன் மகரமது யேறுங்
காலை பிராணனீந்தானை
மாலை சூட்டினாளன்னை -
யவளே மங்கள நாயகி...’’

பஞ்சமங்கள க்ஷேத்திரத்தில் மிகவும் முக்கியமானது இந்த க்ஷேத்திரம். அன்னை மங்களநாயகியின் பிராணநாதன் இந்த ஈசன். எனவே, போகர் என்னும் சித்தர்,
‘‘பிராணநாத சுவாமி தம்மை
தொழுவார் தன் பிணிபோம் -
அல்லல் போம் - யறுவினையும்
போம்’’

என்றார். மங்களநாயகியையே பூஜித்து, பின் சிவபூஜை செய்யும் இங்குறை கணபதி, சர்வ வல்லமை கொண்டவர். நஞ்சு தீண்டாது வாழவும், உணவில் நஞ்சு கலக்காது தடுக்கவும் இந்த கணபதி வல்லவர். சர்வ மங்களத்தையும் அருள்பவர். கல்வி, நீண்ட ஆயுள், அழகு, சோர்வின்மை அருளி, தோல் சம்பந்தப்பட்ட ரோகங்களையும் விலக்க வல்லவர். எனவே, இவரை மகாவிஷ்ணு, மங்கள கஜன் என்றார். இவரே இன்று மங்கள விநாயகராய் திகழ்கின்றார். இங்குள்ள தீர்த்தம் அகஸ்தியரால் நிறுவப்பட்டது. மங்கள தீர்த்தம் என்று பெயர். இங்கு நீராடி இறைவனை தொழுதால், மந்த பாக்யம் என்பது அந்த குடும்பத்தில் இல்லை. எல்லாமே சௌபாக்யமாக அமையும் என்கின்றார், பாம்பாட்டி சித்தர்.

‘‘மங்கள தீர்த்த மாடி
னார்க்கு கிட்டாததேது
மில்லை சொன்னோம் -
மாளாத செல்வமும் வற்றாத
வனப்பும்
தாளாத கொடையும்
தளர்வில்லா
வாழ்வும் வசந்தமென வாழ்வி
லென்றுந் நின்றாடுமே’’.

கோபுரத்திற்கு ஏற்ற விமானம். இதனையும் மங்கள விமானம் என்றனர் சித்தர். கோயிலும் மங்களம். தீர்த்தமும் மங்களம். விமானமும் மங்களம். அன்னையும் மங்களம். ஊரின் பெயரும் மங்களம். இப்படி மங்களங்கள் குடிகொண்டிருக்கும் மங்களாம்பிகை மணாளனை -பிராணநாதனை விரைந்து தொழுது பிறவி பயனை அடைவோமே! கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் உள்ள ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum