தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகன்

Go down

நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகன் Empty நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகன்

Post  ishwarya Sat Feb 16, 2013 12:47 pm

அழகன், அருளாளன், அன்பர்க்கு இனியன், உருகுவோர் உள்ளங்களில் குடியிருக்கும் மால்மருகன், யாவர்க்கும் எளியன், அறுபடை வீடுகளில் அரசா ளும் பேரெழிலன், சினம்கொண்டாலும் சிரித்த முகம் மாறாத பாலகன் முருகப்பெருமானுக்கு, அகிலமெங்கும் எண்ணற்ற திருத்தலங்கள் உள்ளன. மலைகளெல்லாம் அவனது திருமாளிகைகள்தான். ஆனாலும் அவற்றிலெல்லாம் வேறுபட்டு, தனித்தன்மைமிக்க திருத்தலமாக நட்சத்திர கிரி சுப்ரமணி யசுவாமி கோயில் உள்ளது. வளத்தாலும் வனத்தாலும் எழில்பொங்கும் ஜவ்வாது மலையில் பிரவாகமாகி, வங்கத்தில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இக்கோயில் அமைந்திருக்கிறது.

மலையே மகேசனாக அருள்தரும் திருவருணையின் ஆன்மிகப் பெருமைகள் ஏராளம். பருவதமலை, கனககிரீஸ்வரர் மலை, குன்றத்தூர் மலை, வெண்குன்றம் மலை, போளூர் சம்பத்கிரி என இறைவன் குடியிருக்கும் கிரிவல மாவட்டத்தில், கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திரகிரியின் நடுமலையின் நாயகராக வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருகின்றனர். இருபத்தேழு நட்சத்திரங்களும் சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த ஆலயத்தைத் தவிர வேறெங்கும் இல்லை.

வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவே. எனவேதான், இத்தி ருத்தலத்துக்கு நட்சத்திரகிரி கோயில் எனும் சிறப்புப் பெயரும் வந்தது. இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் விளங்கு கிறது. இப்படி தனித்தன்மைமிக்க இந்த ஆலயம், 1,200 ஆண்டுகள் பழமை வாயந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் ஆகியன இக்கோயி லின் ஆன்மிக வரலாற்றை அழகுற விளக்குகின்றன. முன்பொரு சமயம் வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலைமீது பாய்ந்தது. அப்போது, அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடுத்து மலையில் இருந்து வழிந் தோடியது. (உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு.) சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்திதோஷம் பிடித்தது. எனவே, செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.

அன்னையின் அருளையேற்ற முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோயில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபட்டுவந்தனர். ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப் பெருமானையும் வழிபடுவர். ஒரு வருடம், ஆடிக்கிருத்திகைக்கு அவர்களாள் திருத்தணிக்குச் செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், ‘திருத்தணிக்கு செல்ல இயலவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாகக் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து சேருங்கள்’ என எனக்கூறி அருள்புரிந்தார்.

திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே, சப்பாத்திக்கள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார். இத்தலத்தில் சித்திரை வருடப் பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை விழா, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விழாக்கள் விசேஷமானவை. கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலின் ஸ்தல விருட்சமான வில்வமரத்தில்
தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவோருக்கு, குழந்தைப்பேறு கிடைக்கிறது; திருமணத் தடை நீங்கும்; துயரம் தீரும்.

ஆயிரம் ஆண்டு பழமை மிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 14.6.2012ல் நடந்தது. அப்போது, அமைக்கப்பட்ட பிரமாண்டமான மலேசிய முருகர் சிலை வழிபடுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது. நட்சத்திரகிரி மலையில் நடுநாயமாக அமைந்திருக்கும் முருகன் சந்நதிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 227 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்நதிவரை வாகனங்கள் செல்லவும் சரிவுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், செல்வவிநாயகர், நவகிரக சந்நதி, இடும்பன் சந்நதிகளும் இக்கோயிலில் அமைந்திருக்கின்றன. வில்வாரணி, திருவண்ணாமலை-வேலூர் சாலையில் கலசப்பாக்கத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் போளூரில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum